சத்திஸ்கர் தொழிலாளர்கள் தடைக்கற்களை எப்படி மீறி வந்தனர் ?

This article is translated from How Chhatisgarh’s Contract Workers Overcame the Odds that appeared in Sabrang.

கூட்டு உரிமைகளுக்காக உறுதியாக போராட துணிந்த சங்கம், ஆதரவு கூட்டமைப்புகள், உறுதியுடன் நின்ற ஒப்பந்த தொழிலாளர்களின் விடா முயற்சியால் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டும் ஒப்பந்தத்தை பற்றிய குறிப்பு

cement_factory

Source: Sabrang

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ஏ.சி.சி.ஜமுல் சிமெண்ட் வொர்க்ஸ் (தற்பொழுது லாவார்ஜ் ஹோல்சிம் (Lafarge Holcim) என்றழைக்கபடும்) தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் 25 வருட போராட்ட வரலாற்றில் ஜனவரி 22, 2016 ஒரு மைற்கல் தினமாகும். ஜனவரி 22, 2016ல் பி.சி.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் அவர்களது தொழிற்சங்கம் ஏ.சி.சி யுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவ்வொப்பந்தம் பல்வேறு வகைகளில் ஒப்பற்றது.

சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா (மஸ்டூர் கார்யாக்தா கமிட்டி)வை சார்ந்த தொழிற்சங்கமான பி.சி.எஸ்.எஸ் கடந்த 25 வருடங்களாக தெருமுனைகளிலும், நீதிமன்றகளிலும் தங்கள் போராட்டத்தை எடுத்துச் சென்றனர். தொழிற்சாலையில் நிலவும் கடினமான பணி நிலைமையை பி.சி.எஸ்.எஸ். தொழிற்சங்கம் கண்டனங்கள் மூலமாகவும் சட்டரீதியாகவும் எதிர்த்து வந்தனர். சிமென்ட் தொழில் துறை ஊதிய வாரிய ஒப்பந்தத்திற்கு புறம்பாக ஏ.சி.சி.ஜமுல் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்களை, படுமோசமானநிலையில் வைத்திருந்தது.

பி.சி.எஸ்.எஸ் தொழிற்சங்கம் 2006ம் ஆண்டில் நூற்றுக்கும் மேலான ஒப்பந்தத் தொழிலார்களின் பணியினை நிரந்தரப்படுத்தும் தீர்ப்பினை நீதிமன்றத்தில் பெற்றது. இத்தீர்ப்பை 2011ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் ஓரளவு உறுதி செய்தது. அதாவது, இன்னும் பணியில் இருந்த 120 தொழிளார்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயினும் இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தபடவில்லை. இதற்கு காரணங்கள் பல. பி.சி.எஸ்.எஸ் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ ஏ.சி.சி. நிறுவனம் மறுத்துவிட்டது. ஏ.சி.சி. நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களான ஹோல்சிம் மற்றும் லாவார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்துடன் இணைந்த பின் மேலும் வலிமையடைந்தது. பல்லிழந்த தொழிலாளர் துறையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான வலதுசாரி அரசும் இரு முக்கிய காரணங்களாகும்.

மீண்டும் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு செல்லும் வரை வேலை நிறுத்தங்களும், தர்ணா போராட்டங்களும் தொடர்ந்தன. இவ்வழக்கு சத்திஸ்கர் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சின் முன் நிலுவையில் உள்ளது.

2012ம் ஆண்டில் இரு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. முதலில் குளோபல் பெடரேசன் இண்டஸ்ட்ரியால் (Global Federation IndustriALL), சோலிபோண்ட்ஸ் (Solifonds) மற்றும் யூ.என்.ஐ.ஏ. (Unia)  போன்றகூட்டமைபுகளின் ஆதரவை பி.சி.எஸ்.எஸ். தொழிற்சங்கம் பெற்றது. இந்த ஆதரவு கூட்டமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட அகில உலக கூட்டமைப்புகளாகும். இக்கூட்டமைப்புகள் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் நகரில் அமைந்திருக்கும் ஒ.இ.சி.டி.(OECD)யைச் சார்ந்த சுவிஸ் நேஷனல் காண்டக்ட் பாயிண்டின்(NCP) முன் ஹோல்சிம் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்தனர். பன்னாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்திய தொழிலாளர் உரிமைகளை ஹோல்சிம் நிறுவனம் நிலைநாட்டவில்லை , நிறுவனம் மேலும் நீதிமன்றத் தீர்ப்பினை மீறுவதாக, கூட்டுபேரப் பேச்சுவார்த்தை மறுப்பதாக, சுற்றியுள்ள விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் சமூகங்களின் உரிமையைப் பறிப்பதாக கூட்டமைப்புகள்புகாரில் தெரிவித்தனர்.

அதே வேளை, ஹோல்சிம் நிறுவனம் ஜமுல் நகரில் முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, நவீன, இதற்கு முன் இருந்தத் தொழிற்சாலையை விட பன் மடங்கு பெரிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டது. பழைய தொழிற்சாலையை மூடிவிட்டு, அங்கு பணியாற்றிய 1200க்கும் மேலான தொழிலாளர்களை நீக்கிவிட்டு, வெளியில் இருந்து பணியமர்த்தப்பட்ட மிகவும் பயிற்சி பெற்ற வெறும் 90 தொழிலாளர்களைக் கொண்டு புதிய ஆலையை இயக்கிவிடலாம் என்று கற்பனை செய்தது. இந்த ஆலையின் தொடக்கம் முதலே, உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை தர வேண்டும் என்று பி.சி.எஸ்.எஸ். போராட்டம் நடத்தி வந்தது.

பல காலதாமதத்திற்குப் பின் சுவிஸ் நேஷனல் காண்டக்ட் பாயிண்டின் வலியுறுத்தலுக்கு இணங்க லாவார்ஜ் ஹோல்சிம் நிர்வாகக் குழுவிற்கும், பி.சி.எஸ்.எஸ். தொழிற்சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமானது. முதலில் பெர்ன் (சுவிட்சர்லாந்து) நகரிலும், பின் இந்தியாவிலும் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேரப்பேச்சு தொழிற்சங்கத்தை இக்கட்டான சூழலில் தள்ளியது. உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சில பணியாற்றும் தொழிலாளர்களின் பணியினை மட்டும் நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை பெற வேண்டி பேச்சுவார்த்தையை கொண்டு செல்வதா இல்லை புதிய தொழிற்சாலையின் வரவால் பறிபோகப்போகும் வேலையிடங்களை குறைத்திட பேச்சுவார்த்தையில்
வலியுறுத்துவதா? இந்த இரண்டு சூழலில் எதை தேர்ந்தெடுப்பது என்ற இக்கட்டான சூழலுக்கு பி.சி.எஸ்.எஸ். தள்ளப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் படி பயனடையப் போகும் தொழிலாளர்கள் குறிப்பிடதக்கும்படி தொழிலாளர் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக தங்களுக்கு கிடைக்கப்போகும் பலன்களுக்குப் பதில் புதிய மற்றும் பழைய ஆலைகளில் இருந்து நீக்கப்படப்போகும் தொழிலார்களின் நலனைக் காக்கும் விதமாக, ஆலைகளில் நிலவும் உழைக்கும் நிலையினை மேம்படுத்தும் விதமாக, வேலையினை இழக்கும் தொழிலாளரின் மறுவாழ்விற்கு அதிகபட்ச இழப்பீடை பெற்றிடும் விதமாக பேச்சுவார்த்தையை கொண்டு செல்ல தொழிற்சங்கத்திடம் வலியுறுத்தினர்.

சோர்வடையச் செய்யும் காரசாரமான விவாதங்கள் கொண்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளைக் கடந்து பி.சி.எஸ்.எஸ். குழுவிற்கும், நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. பி.சி.எஸ்.எஸ்.குழுவிற்கு என்.டி.யூ.ஐ. (NTUI) யைச் சார்ந்த அஷிம் ராயும், நிர்வாகத் தரப்பில் பெஹ்ரம் ஷிர்தேவளாவும் தலைமை தாங்கினர். இந்த உடன்படிக்கை உள்ளூர் அரசியல் வர்க்கத்தின் தன்னல லாபநோக்கிலான எதிர்ப்பையும் மீறி ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த உடன்படிக்கையால் தங்களுக்கு எந்த உபயோகம் இல்லை என்பதனால் 22 காண்ட்ராக்டர்கள் மற்றும் 60 மேற்பார்வையாளர்கள் இந்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தனர்.

இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு பின்வருவனவற்றை வழங்குகிறது.

1) 932 ஒப்பந்தத் தொழிலாளர்களில். 536 தொழிலாளர்கள் புதிய மற்றும் பழைய ஆலைகளில் பணி அமர்த்தப்படுவர்.

— 212 பேர்களின் ஊதியம் சிமென்ட் கூலி வாரியத்தின் கூலி வீதத்தில் ( குறைந்தபட்ச ஊதியத்தை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்) வழங்கப்படும்.

—- 196 பேர்களின் ஊதியம் சிமென்ட் கூலி வாரியத்தின் கூலி வீதத்தில் 50 சதவீதம் ( குறைந்தபட்ச ஊதியத்தில் இரு மடங்கு) வழங்கப்படும்.இவர்களின் ஊதியம் இரண்டாண்டுகளுக்குப் பின் முழு வாரிய கூலி வீதத்திற்கு ஏற்றப்படும்.

—— மீதமுள்ள தொழிலாளர்ககளின் ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தில் 25% கூடுதலாக வழங்கப்படும். இது ஓராண்டிற்கு பின் 30 சதவவீதமாக ஏற்றப்படும்.

இந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தால் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். இத்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டது பி.சி.எஸ்.எஸ். தொழிற்சங்கம்.

2) மீதமுள்ள தேவைக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்களது பணிக்கொடை போக, ஒவ்வொருவருக்கும் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 3 மாத ஊதியம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓராண்டு பணியாற்றியவர்கள் 20000 ரூபாயும், பல ஆண்டுகள் பணியாற்றிவர்கள் சுமார் நான்கரை லட்சம் ரூபாயும் பெற்றனர்.

3) இவர்களில் சுமார் 200 தொழிலாளர்கள் 5 வருடத்திற்கு குறைவாக பணியாற்றியவர்கள். சுமார் 75 பேர் 55 வயதைக் கடந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை நிர்வாகத்தின் பயிற்சி மையத்தில் இருந்து தொழிற்பயிற்சி பெற (வேலை வாய்ப்பில் உதவி பெற) நியமிக்கலாம்.

இது போன்றதொரு உடன்படிக்கை ஒப்பந்தத் தொழிளாலர்களின் போராட்ட வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒன்று.

வேலை இழப்பினால் தொழிலாளர்களோ, தொழிற்சங்கமோ மகிழ்ச்சி அடையப் போவதில்லை. குறிப்பாக வேலை இழப்பினால் பாதுகாப்பான தொழிற்சங்கக் பாதுகாப்பில் இருந்து நீங்கி தொழிலாளர்கள் சந்தையில் வேலை தேடும் நிலைக்கு தள்ளப்படுவர். இன்றைய சந்தையில் சராசரி உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த இந்திய குடிமகனுக்கு, குறிப்பாக தொழிற்சாலைப் பகுதிகளில் நிலவும் தொழிலாளர் சட்ட விதிமீறல்களைக் கருத்தில் கொண்டால், தன்மானமுள்ள வேலை வாய்ப்பு என்பது வெறும் கானல் நீர் தான்.

அவர்கள் வேலையை விட்டு நீக்கும் பட்சத்தில் நிர்வாகம் ஒரு மாத ஊதியமே நிவாரணமாக தரக் கடமைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நெடிய போராட்டத்திற்கு பின்னர் அவர்களுக்கு இந்த உடன்படிக்கை மேலாக இருந்தது.

தொழிலாளர்களை புறம் தள்ளும் தொழில்நுட்பத்தின் தேவையை, முதன்மையை முன்னிறுத்தும் அரசியலை பன் மடங்கு பெரிய உழைக்கும் வர்க்க இயக்கத்தின் மூலமே எதிர்க்க இயலும். உழைக்கும் வர்க்க இயக்கத்தில் இத்தொழிற்சங்கம் ஒரு சிறிய அங்கம் மட்டுமே மற்றும் மேலே குறிப்பிட்ட அரசியலை எதிர்த்திட இதன் வலிமை மட்டுமே போதாது.

பி.சி.எஸ்.எஸ். தொழிற்சங்கத்திற்கு இது மற்றுமொரு சுற்றுக்கான போராட்டத்தின் தொடக்கமே. பல்வேறு சிமென்ட் தொழிற்சாலைகளில், பல்வேறு தொழில் பகுதிகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தல், இத்தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு (குடிசையிலிருந்து வெளியேற்றல், வேளாண்மை சிக்கல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், இன வன்முறை) ஆளாகும் போது, ஒன்றுபட, ஒற்றுமையை நிறுவ ஒரு இடம் அமைத்துக் கொடுத்தல், அரசியல் கல்வியை பயிற்றுவிக்க ஒரு மையத்தை ஏற்படுத்துதல், இவைகளைக் காட்டிலும் முக்கியமாக வட்டித் தொழில் செய்வோரின் கரங்களில் இருந்து தொழிலாளர்களைக் காத்திட கூட்டுறவுச் சங்கத்தை நிறுவுதல் —- இவைகள் நாம் செய்ய வேண்டிய கடினமான பணிகளாகும்.

இத்தருணத்தில் நமக்கு பல ஆண்டுகள் உறுதுணையாய் இருந்த அனைவரையும் நினைவு கூறுவது அவசியமாகும். இப்போராட்டம் நம்முடையுது மட்டுமன்று. பிலாய், ராய்பூர் மற்றும் பலோடா பசாரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சார்ந்த, லத்தியடிகளைப் பொருட்படுத்தாது, சிறைவாச தனிமையினை நம்முடன் பகிர்ந்து கொண்ட, உழைக்கும் வர்க்கத்து ஆண்கள், பெண்களுக்கும், தொழிற்சங்க, வழக்கறிங்க, பத்திரிக்கை, மாணவ, சமூக சேவக, திரைத்துறைத் நண்பர்களுக்கும், தார்மீக, பொருளியல் ஆதரவைத் தந்த சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலத்தில் உள்ள அறிஞர்களுக்கும், அகில உலக கூட்டொருமைப்பாட்டின் மூலம் பேச்சுவார்த்தையினை சாத்தியபடித்திய இண்டஸ்ட்ரியால் ல்(IndustriALL) என்.டி.யூ.ஐ. (NTUI), சோலிபோன்ட்ஸ் (Solifonds) யைச் சார்ந்த தோழர்களுக்கும் மிகப் பெரிய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

மறைந்த தோழர் சங்கர் குஹா நியோகி மற்றும் உயிர் நீத்த தியாகிகளான பிலாய் தொழிலாளர்ககளையும் பணிவுடன் நினைவு கூறுகிறோம். குறிப்பாக, இன்னும் நெடுந்தொலைவில் இருக்கும், நமக்கு அவர்கள் சுட்டிக் காட்டிய  பரந்த அரசியல் இலக்கையும், கனவுகளையும் நினைவு கொள்வோம். இன்று நாம் அடைந்திருக்கும் பலன்கள் இவ்விலக்கை அடைய , குறுகிய பலனை மட்டும் நோக்கமாக கொண்ட இன்றைய பொருளாதாரச் சித்தாந்தத்தை எதிர்க்க தேவைப்படும்  நம் மனத்துணிவினை மேம்படுத்தும் என்று நம்புகிறோம்.

இன்குலாப் ஜிந்தாபாத்,
சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா (மஸ்டூர் கார்யாக்தா கமிட்டி)

This entry was posted in Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.