கடும் எதிர்ப்பிற்கு பின்னர் பிஎப் தொகையை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு வாபஸ்

தொழிலாளர்களின் பி.எஃப் கணக்கில் இருக்கும் சேமிப்பு தொகையை தொழிலாளர்கள் எடுப்பதற்கு மத்திய அரசு எந்த முன்னறிவிப்பும் இன்றி பிப்ரவரி 10 அன்று கட்டுப்பாடு விதித்தது. இதன் வழியாக தொழிலாளர்கள் கணக்கில் நிர்வாகத் தரப்பில் இருந்து செலுத்தப்படும் தொகையை 59 வயதிற்கு முன்னர் தொழிலாளர் கோர முடியாது. இதை எதிர்த்து change.org இணையதளத்தில் எழுப்பப்பட்ட மனுவை ஏற்கனவே இங்கு பதிவு செய்திருந்தோம். 1.22 லட்சம் பேருக்கு மேல் மனு வழியாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை எதிர்த்து கடந்த ஏப்ரல் 18 மற்றும் 19 அன்று பெங்களுரில், 30000க்கும் மேற்பட்ட கார்மெண்ட் தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். பெண் தொழிலாளர்கள் இரண்டு நாளும் பெங்களுர் ஹோசூர் ரோடில் மறியல் செய்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். முதல் நாள் தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதனால் பல தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். ஆனாலும் போராட்டத்தை கைவிடாமல் இரண்டாவது நாளும் தொழிலாளர்கள் பிஎப் வளாகத்தை முற்றுகையிட்டனர். இந்த வீரமிக்க போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு அறிவிப்பை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, பிஎஃப் தொகையின் 60 சதத்தில் வரி விதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. கடுமையான எதிர்ப்பிற்கு பின்னர் மத்திய அரசு அறிவிப்பை வாபஸ் வாங்கியது. இந்த எதிர்ப்புகள் மூலம் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுக்கு தொழிலாளர் வர்க்கம் பாடம் கற்று கொடுத்துள்ளது.

This entry was posted in Factory Workers, Garment Industry, IT Workers, labour reforms, News, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.