மே தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – தேர்தல் என்ற பெயரில் காவல்துறை ஒடுக்குமுறை

தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்து வரும் கிரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையை கண்டித்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளை எதிரத்தும் சுமார் 100 DTUC தொழிலாளர்களும் மற்றும் சங்கப் பிரதிநிதிகளும் சென்னை ரெட்டேரியில் பேரணி நடத்தினர். பேரணி 5.30 மணிக்கு துவங்க திட்டமிடப்பட்டு காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து பின் அரைமணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சரியாக ஆறு மணிக்கு பேரணி துவங்கியது. ஆறரை மணிக்கு பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு தொழிற்சங்கத்தின் கொடி மற்றும் பெயர் பலகையை தோழர் அண்ணாதுரை அவர்கள் திறந்து வைத்தார். தோழர் மணிவண்ணன் இரண்டு புரட்சிகர பாடல்களை பாட பொதுக்கூட்டம் ஆரம்பம் ஆனது. தோழர்  ஜோதி அறிமுக உரையை நிகழ்த்தினார்.

DTUC_May_Day_Redhills

தலைமை உரையாக தோழர் கருணாகரன் பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல தொழிலாளர்களின் உயிர் தியாகங்களுக்கு பிறகு தான் வரைமுறையற்ற வேலை நேரம் என்ற நிலை மாறி 8 மணிநேர வேலை, 8 மணிநேர தூக்கம், 8 மணிநேர ஓய்வு போன்ற அடிப்படை உரிமைகள் உலகம் முழுவதும் சாத்தியமானது.

மத்தியில் இப்போது இருக்கும் மோடி அரசோ, இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசோ மாநிலத்திலேயே மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக அரசுகளோ நாம் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை தீர்த்து போக மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மாற்றம் செய்து எப்போதும் தொழிலாளர்கள் விரோத போக்கையே கடைபிடிக்கிறார்கள். இப்போது 100 பேர் இருந்தால் மட்டுமே யுனியன் ஆரம்பிக்க முடியும் போன்ற தொழிலாளர்கள் விரோத சட்டத் திருத்தங்கள் செய்யபட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் ஏதோதோ பொய்யான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஆளும் அதிமுக அரசும் ஆள துடிக்கும் திமுகவும் தொழிலாளர் உரிமைக்காக, தொழிலாளர் நலன் காக்கும் வகையில் சட்டங்கள் இயற்றுவோம் என்றோ தொழிலாளர் விரோத சட்ட திருத்தத்தை அனுமதிக்க மாட்டோம் என்று மறந்தும் சொல்வதில்லை.

இந்த கூட்டத்திற்கு கூட ஒரு மாத காலம் அலைந்து அனுமதி பெற்றோம். கடைசியாக பேரணி துவங்கும் முன் போலிசார் அனுமதி அளிக்க முடியாது. நீங்கள் தேர்தல் ஆணையரிடம் அனுமதி பெற்ற சான்றை காண்பித்தால் தான் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தார்கள். அதன் பிறகு அரைமணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. ஆட்சியாளர்கள் எப்போதும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகவே செயல்படுவார்கள். Greaves Cotton கம்பெனியை எந்தவித முன்னறிவிப்புயின்றி மூடிவிட்டார்கள். லாக் அவுட் அறிவிக்கப்பட்டதென்றால் மூன்று மாதம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இவர்கள் மூன்று நாட்கள் கூட முன்னறிவிப்பு செய்ய வில்லை. 29ஆம் தேதி பணி முடித்து 30-ஆம் தேதி வேலைக்கு சென்றவர்களுக்கு கம்பெனி மூடி விட்டதாக சொல்லப்பட்டுள்ளது. சுமார் 150 பேரின் குடும்பம் இப்போது நடு தெருவில் செய்வதறியாது நிற்கிறார்கள். இதை தடுக்க வேண்டிய அரசோ, காவல் துறையோ, கம்பெனிக்கு ஆதரவாக போராடும் மக்களை ஒடுக்க பார்க்கிறது.

இந்த அரசியலையமைப்பே தவறானது. இந்த அரசியலையமைப்பையே மாற்ற வேண்டும். நாங்கள் தேர்தலுக்கு எதிரானவர்கள் அல்ல இந்த தேர்தல் முறைக்கு எதிரானவர்கள். விகிதாசார தேர்தல் முறையே உண்மையாக ஜனநாயக தேரதல் முறையாக இருக்கும். முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்க தொழிலாளர் வர்க்கம் ஆட்சியினை கைப்பற்ற வேண்டும். தொழிலாளர்கள, சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.

ஆறுமுக செல்வம் : இப்போது தேர்தல் நேரம் எல்லா கட்சிக்காரர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டியிருக்கிறார்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம். எந்த அரசியல் கட்சியாவது ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை செருப்பாலேயே அடிக்க போகிறோம். Greaves Cotton கம்பெனியில் நாங்கள் 150 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும், அதுபோக பயிற்சி தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று சுமார் 400 போர் வேலை செய்கிறோம் 3 நாட்கள் முன்பு கம்பெனியை மூடிவிட்டு உங்களுக்கெல்லாம் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் ஆனால் காவல்துறையோ, எங்களை மிரட்டி அங்கிருந்து கலைந்து போக சொன்னார்கள். நாங்கள் மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம். நாங்க சுமார் 20 வழக்குகள் போட்டியிருக்கிறோம் எதற்கும் பதில் வரவில்லை. தலைமை செயலாளருக்கும் வேலூர் தலைமை செயலாளருக்கும் மனுக்களை நேரிலும், தபால் மூலமாகவும் அளித்திருக்கிறோம். இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

கம்பெனி மூடுவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கம்பெனி 3 வருடங்களாக நட்டத்தில் செயல்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக 35% நஷ்டத்தை சந்திக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் கம்பெனியின்  பேலன்ஸ் சீட்டை புரட்டி புரட்டி பார்த்தாலும் அங்கே நட்டம் என்று சொல்வதற்க்கு ஒன்றுமே இல்லை மாறாக லாபம் அதிகரித்தும் உற்பத்தி அதிகரித்தும் தான் காணப்படுகிறது. இது முழுக்க முழுக்க எங்களை பழிவாங்க வேண்டும என்பதற்காகவே நிர்வாகம் லாக் அவுட்டை அறிவித்துள்ளார்கள். அப்படி நாங்கள் என்ன குற்றம் செய்தோம். ஓன்றும் இல்லை நாங்கள் யூனியன் ஆரம்பித்தோம். யூனியன் ஆரம்பிப்பது குற்றமா? அது எங்களின் உரிமை இல்லையா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த கம்பெனி நிர்வாகம் எங்களை Staff என்று சொல்லி வந்தது. Staff என்றால் யூனியன் ஆரம்பிக்க முடியாதாம் என்று சொன்னார்கள். எங்களை புரொடக்ஷன் அசோசியேட் என்று அழைக்கிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அந்த கம்பெனியின் சேர்மனுக்கு கூட விளக்கம் தெரியவில்லை. ஆனால் தோழர் து சிதம்பரநாதனை சந்தித்ததற்கு பிறகுதான் நீங்க எல்லாம் Staff இல்லை நேரடி உற்பத்தியில் ஈடுபடுகிறீர்கள் அதனால் நீங்கள் யுனியன் ஆரம்பிக்கலாம என்றார். பிறகு நாங்கள் யூனியன் ஆரம்பித்த பொழுதே முன்னாள் ஜெனரல் மேனேஜர் நீங்கள் யூனியன் ஆரம்பித்துவிட்டீர்கள் எப்படியும் இந்த கம்பெனியை மூடிவிடுவார்கள் என்று சொன்னார் இப்போது இருக்கும் மேலாளர் அதை செய்து முடித்திருக்கிறார்.

யூனியன் தொடங்கிய சிறிது காலத்திலேயே இங்குள்ள உபகாரணங்களை கொஞ்சம் கொஞ்சமாக ராணிப்பேட்டைக்கு இடம் மாற்றி இப்போது அங்கேயே உற்பத்தியை முழுவதுமாக துவக்கிவிட்டார்கள். கடந்த 30ஆம் தேதி எங்களுக்கு இழப்பீடு காசோலை கொடுத்தார்கள் அதிலேயே ஒரு மாத சம்பளத்தை சேர்த்து கொடுத்திருந்தார்கள். எங்களில் 8000 – 9000 சம்பளம் பெறுகிறவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் 5000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து இப்போது 15000 வாங்கும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் சம்பளம ஒரு நாள் தாமதம் ஆனாலும் சமாளிப்பது ரொம்ப கடினம் அதனால் தான் அவர்கள் இந்த நெருக்கடியில் அந்த காசோலையை நாங்கள் வாங்கிவிடுவோம் என்று கருதுகிறார்கள். அப்படி நாங்கள் அந்த காசோலையை பெற்றுக் கொண்டால். நாங்கள் லாக் அவுட்டை ஒப்புக்கொண்டதாக அர்த்தம் ஆகி விடுமாம். நாங்கள் ஒரு வருடமானாலும் அந்த தொகையை வாங்க மாட்டோம். போராடத்தை தொடர்வோம் என்று உறுதிபட கூறினார்

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.