தொழிலாளர் வர்க்கத்திற்கும் மாணவர் இயக்கங்களுக்கும் இடையே ஒற்றுமை சாத்தியமா?

மொழி பெயர்ப்பு : சாரு நிவேதா

தொழிலாளர் வர்க்க இயக்கங்களும், மாணவர் இயக்கங்களும் கடு;ம் நெருக்கடியில் உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ வைச் சார்ந்த வளர்ச்சி திட்டங்களும், அதற்கான தொழிலாளர் சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பரித்து வரும் நிலையில் தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து தொழிலாளர்கள் ஒருங்கிணைவது கடினமாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கல்லூரிகளில் பரப்பி வர முயற்சிக்கும் இந்துத்துவா சக்திகளாலும்;, புது கல்வி திட்டம் மூலம் அன்னிய முதலீடை அதிகரித்து கல்வியை தனியார்மயமக்கத் துடிக்கும் நவீன தாராளமயவாத சக்திகளாலும் மாணவர் இயக்கம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இம்முயற்சிகளை வீழ்த்துவதற்கு தொழிலாளர் இயக்கங்களும் மாணவர் இயக்கங்களும் ஒன்று சேர்வது சாத்தியமா? இவ்விரண்டு இயக்கங்களின் பொது எதிரிகளை எதிர் கொள்ள ஒன்றிணைவதில் என்ன தடைகள் உள்ளன? இவை குறித்து தில்லியில் உள்ள இரண்டு இளம் அரசியல் மாணவர் போராளிகளிடம் கேள்விகள் எமுப்பினோம். அமித் ஜெ.என்.யூவின் பொருளாதாரத் துறையில் பிஎச்.டி ஆய்வு செய்து வருகிறார் மற்றும் குர்காவின் தொழிலாளர் ஒற்றுமை மையத்தின் அமைப்பு செயலாளராகவுமம் உள்ளார். தில்லி பல்கலைகழகத்தில் சமூக மானுடவியலில் ஆய்வு மாணவராக உள்ள நயன், கடந்த பல வருடங்களாக மாணவர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் இடையே ஒற்றுமையை வளர்க்கும் கிராந்திகாரி நவஜவான் சபாவில் உறுப்பினராக உள்ளார்.

கே: கடந்த 10 வருடங்களில் தொழிலாளர் போராட்டங்களில் மாணவர் இயக்கங்களின் ஈடுபாடு குறித்து சொல்ல முடியுமா?

ப: 2005இல் குர்கான்-மானேசர் ஹோண்டா தொழிலாளர் போராட்டங்களில் தான் மாணவர்களின் ஆரம்பகட்ட பங்கேற்பு தொடங்கியது. ஆனால் மாருதி போராட்டத்தின் போது தான் ஒரு முறையான பங்கேற்பாக அது வடிவம் பெற்றது . 2011-2012 காலகட்டத்தில் மாருதி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபொழுது நாங்கள் KNS (க்ரந்திகாரி நவ்ஜவான் சபா) எனும் உருவாக்க நிலையில் இருந்த இளைஞர் அமைப்பில் இருந்தோம். KNS பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல மாணவர்களை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக இருந்தபோதிலும் அதன் நோக்கம் கல்வி வளாகங்களுக்குள் நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக மட்டுமல்லாமல், வளாகங்களுக்கு வெளியே பரவலாக நிலவும் சமூக பொருளாதார மற்றும் கலாச்சாரப் பிரச்சனைகளைச் சார்ந்து இயங்குவதாகவும் இருந்தது. போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டும், அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், KNSஇன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மாருதி போராட்டத்தைச் சுற்றி இயங்குவதாக இருந்தது.

2011 2012 இடைப்பட்ட காலத்தில் மாருதி-சுசுகி மானேசர் ஆலையில் நடைபெற்ற 3 வேலை நிறுத்தங்களில் பல்வேறு தீவிர இடது மாணவர் குழுக்களைச் சார்ந்த ஜெ.என்.யூ மாணவர்களின் வலுவான பங்கேற்பு இருந்தது. தில்லிப் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழங்களைச் சார்ந்த மாணவர்கள் கூட இப்போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஜெ.என்.யூ வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாருதி ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் போராட்டங்களைக் குறித்துப் பேசினர். இந்த கட்டத்தில், மாருதி தொழிலார்களுக்கும், (அரசியல் விழிப்புணர்வுடைய ஒரு பகுதி) தில்லி மாணவர்களுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் இத்தொடர்பு அதன்பிறகு குறைந்துவிட்டது. தொழிலாளர் பிரச்சனைகளில் அக்கறை கொண்ட சில மாணவர்கள் அவ்வப்போது, அஸ்டி நிறுவனம், பக்ஸ்டர் போராட்டம், ஸ்ரீராம் பிஸ்டன் முதலிய மானேசர்-பிவாடி மற்றும் வாசிர்பூர்,தில்லி பகுதிகளைச் சார்ந்த நிறுவங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்களின், பெரும்பாலும் பெண்களின் போராட்டங்களில் தொடர்ந்து பங்குகொண்டனர்.

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் ஹோண்டா தபுகரா, பெல்சோனிகா, டைகின் தொழிலாளர்களின் போராட்டங்களில் சில மாணவர் குழுக்களின் பங்கேற்பும் ஆதரவும் உள்ளது. கடந்த சில வருடங்களாக குர்கானின் ஆடைத்துறையில் அக்கறையுள்ள மாணவர்கள் உண்மை அறியும் நடவடிக்கைகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவை எதுவும் தொழிலாளர் இயக்கங்களில் நேரடியாக ஈடுபடும் ‘மாணவர் இயக்கங்கள்’ அல்ல. மாருதி போராட்டம் அல்லாது, ‘மாணவர் இயக்கங்கள்’ தொழிலாளர் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டது, ஜெ.என்.யூ.வில் 2007இலும் பின்பு 2009-இலும் குறைந்தபட்ச ஊதியத்திற்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராடியபொழுதுதான். அனைத்து தீவிர இடதுசார்புடைய மாணவர் இயக்கங்களும் அதில் பங்கு கொண்டன, அதில் சில மாணவர் தலைவர்கள் போராட்டத்தின் போது இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கே: மாருதி – சுசுகி போராட்டத்தைப் பற்றி மேலும் விவரிக்க முடியுமா? இப்போராட்டம் மற்றவற்றில் இருந்து வேறுபடக் காரணமாகவும், பின்னாட்களில் வர்க்க ஒற்றுமையையும் வர்க்கங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் வளர்த்த அம்சங்களாகவும் இருந்தவை எவை?

ப: இதற்குப் பின்னால் நெடும் வரலாறு ஒன்று உண்டு. உழைக்கும் வர்க்கம், மாணவச் சமுதாயம், விவசாயச் சமூகங்களிடையே நிலவும் வர்க்கங்களுக்கிடையிலான கூட்டைப் பற்றிக் கேள்வி எழுப்பும் முன், தொழிலாளர்கள் ஒப்பந்தங்களுக்குள்ளாக்குவதால் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் பாதிப்புக்குள்ளாவதைக் கவனித்தல் முக்கியமாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் பங்கு கொள்ளாத நிலையில் உழைக்கும் வர்க்க இயக்கங்கள் பிளவுபட்டுள்ளன. முதற்கட்டமாக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களுக்கும் இடையிலும், மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் இடையிலான கூட்டணியை வளர்த்ததே மாருதி தொழிலாளர்கள் போராட்டத்தின் முக்கியக் கூறு ஆகும்.

2005இல் ஹோண்டாவில் தொழிற்சங்கம் உருவான பிறகு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. ஏனென்றால், நிரந்தரத் தொழிலாளர்களின் நிலை சில வகையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட மேலானதாக இருந்தது. ஹோண்டா ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் பங்கேற்பு குறைந்த அளவிலோ இல்லாமலோ தான் இருந்தன. மாருதி ஆலையிலும் கூட, நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே பிரிவைக் கொண்டு வரவே நிர்வாகம் முயன்றது. நவம்பர் 2011இல், நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் தொழிற்சாலைக்குள்ளே அனுமதித்தது, ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. இது நடந்தது நவம்பர் 8, 2011. ஒப்பந்தப் பணியாளர்களையும் அனுமதிக்குமாறு கோரி தொழிற்சாலைக்குள்ளேயே நிரந்தரப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 7 நாட்களுக்குத் தொழிற்சாலையைக் ஆக்கிரமித்திருந்த அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னரே வளாகத்தை விட்டு வெளியேறினர்.

இப்புதிய தலைமுறை தொழிலாளர்கள் தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்றிருப்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுக்க அவர்கள் பல்வேறு தளங்களை உபயோகப்படுத்தியுள்ளனர். முதல் வேலை நிறுத்தத்திற்கு முன்பு, அனைத்து நிரந்தரப் பணியாளர்களுக்கும் நிர்வாகம் ஸ்மார்ட் ஃபோன் கொடுத்திருந்தது. தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளையும், போராட்டத்தின் போது எதிர்கொண்ட அடக்குமுறைகளையும் வீடியோவாகப் பதிவுசெய்து, பல்வேறு மாணவர் அமைப்புகளுக்கும் மனித உரிமை போராளிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.

2012இல் பொது மேலாளரின் மரணத்தைத் தொடர்ந்து 147 பேர் கைது செய்யப்பட்டதாலும், 546 நிரந்தரத் தொழிலாளர்களுட்பட 2300 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதாலும் ஆலைக்குள்ளேயும் வெளியேயும் போராட்டத்தைத் தொடர்வது கடினமாயிற்று. அதன்பிறகு மற்ற தொழிலாளர்களுடனும், மாணவர்களுடனும், குறுவிவசாயிகளுடனும் சமூகத்தின் மற்ற பிரிவினருடனும் பரவலான வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுக்க தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். டிசம்பர் 2012 ஆட்டோமொபைல் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து,குர்கான்-மானேசர் பகுதியில் சில ஆயிரம் போஸ்டர்களை ஒட்டியும் ,சுமார் 40,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் சார்பாக கோரிக்கைகளைப் பரப்பினர். 2012 ஜனவரி பிப்ரவரியில் பொது மக்களிடம் தங்கள் பிரச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் ஹரியாணாவின் பல மாவட்டங்களில் சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். பல்வேறு ஆலைத் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் குழுக்கள், தொழிலாளர்களுக்காக இயங்கும் முற்போக்கு சக்திகள் ஆகியவற்றின் உதவியோடு பிப்ரவரி 5, 2013 அன்று தேசிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது 32 மாநகரங்களிலும் 14 மாநிலங்களிலும் வெற்றியடைந்தது.

மானேசரில் போராட்டத்தைத் தொடர முடியாததால் ஹரியாணாவிலுள்ள கைத்தல் என்னும் தளத்திற்கு மார்ச் 2013இல் மாறி, உள்ளூர் கிராமவாசிகளையும், தொழிலாளர்களின் குடும்பங்களையும், கிராமப் பஞ்சாயத்துகளையும் தமக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றனர். மே 18-19 இல் லத்தியால் அடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர், ஜூலை 18,2013 அன்று குர்கானில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தில்லியைச் சேர்ந்த 250-300 மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் பங்குபெற்றனர். ஜனவரி 2014 இல் கைத்தலில் இருந்து குர்கான் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வழியாக தில்லியிலுள்ள ஜந்தர் மந்தருக்கு 15 நாள் பேரணி ஒன்றை நடத்தினர். அதன்பொழுது பல்வேறு இடங்களில் பலமற்ற தொழிலாளர் போரட்டங்களை நசுக்கும், மாருதி-சுசுகி-அரசு-நிர்வாகம் ஆகிய பலம்பொருந்திய எதிராளிகளுக்கெதிரான, வர்க்கங்களுக்கிடையிலான கூட்டணியை(சீரற்ற நிலையிலும் பிளவுபட்டும் இருந்தபோதிலும்) ஏற்படுத்திக்கொள்ள முயன்றனர்.

கே: தற்போதைய நிலவரம் என்ன? தில்லியில் உள்ள முற்போக்கு மாணவர் இயக்கங்கள் இன்னும் உழைக்கும் வர்க்கப் பிரச்சனைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனவா?

ப: தேசிய அரசியலின் மையப் புள்ளியாக தில்லி விளங்குவதால்,நாட்டின் மற்ற இடங்களைக் காட்டிலும் தில்லி நல்ல நிலையில் உள்ளது. அதனால் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் மாணவ குழுக்களிடையே கருத்துக்கள் மேம்படுவதற்கு ஏதுவாக உள்ளது. சில உழைக்கும் வர்க்க பிரச்சனைகளில் ஜெ.என்.யூ மாணவர்கள் ஈடுபாட்டுடன் பங்கெடுத்தனர். உதாரணத்திற்கு, நினைவில் வருவது, ஜெ.என்.யூ. வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் JNUSU(மாணவர் சங்கம்)தம்மை ஈடுபடுத்திக்கொண்டது. இது குறிப்பிட்ட வளாகத்தை மட்டும் சார்ந்த பிரச்சனையாக இருப்பினும், 2007 முதல் 2009 வரை அது தொடர்ந்தது. குறைந்தபட்ச ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு முதலிய பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டனர். ஜெ.என்.யூ. வைச் சுற்றியுள்ள பகுதிகள் முதலிய தில்லியின் பல்வேறு பகுதிகளிலுள்ள சேரிகளை அப்புறப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டங்களில் கூட மாணவர்கள் அவ்வப்போது இணைந்துகொண்டனர்.

தில்லியில் தொழிலாளர் இயக்கங்கள் பலவீனமாக உள்ளது. தில்லியின் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியவர வாய்ப்பில்லாத குர்கான்-மானேசர்-பாவல் முதலிய தொழிற்துறை பகுதிகளில் தான் இவ்வியக்கங்கள் பலமாக உள்ளன. பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழிலாளர் போராட்டங்களைக் குறித்து ஊடங்கள் மிக குறைந்த அளவிலோ, பெரும்பான்மையான சமயங்களில் போராட்டங்களைக் குறித்த செய்திகளை வெளியிடாமலும் இருக்கும் சூழலில், மாணவர்களுக்கு இப்பிரச்சனைகள் குறித்து தெரிவதில்லை. அரசியலில் மிகவும் ஈடுபாடுடைய மாணவர்களின் முகநூல் பதிவுகளில் கூட தொழிலாளர் போராட்டங்கள் குறித்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

கே: ஹோண்டா போராட்டம் போன்ற தற்போதைய போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால், தில்லி மாணவர்களிடையே போதுமான விழிப்புணர்வும் பங்கேற்பும் உள்ளதா?

ப: அப்படி எடுத்துக்கொண்டால், ஜெ.என்.யூ போன்ற வளாகங்களில் தொழிலாளர்களுக்கு என்றுமே ஆதரவு இருந்துள்ளது. சமீபத்தில், ஜெ.என்.யூ மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் ஹோண்டா போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வுகள் நடந்தபொழுது சில தொழிலாளர்கள் அங்கே பேசினர். அத்தகைய நிகழ்வுகளோ அதைத் தொடர்ந்து போராட்டங்களோ நடைபெற்றால், அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும், ஆனால் அவை தொடர்ந்து கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அது சாதாரண ஆதரவு தெரிவிக்கும் நிலையைத் தாண்டிச் செல்வதில்லை.

கே: வரலாறைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மாணவர் அமைப்புகள் தங்கள் போராட்டங்களையும் தொழிலாளர் போராட்டங்களையும் ஒரே நேரத்தில் இணைத்துப் பார்ப்பது போலத் தானே இருக்கிறது? இது நம்பிக்கை தரக் கூடியது அல்லவா

ப: சில முற்போக்கு மாணவர் இயக்கங்கள் முழுமையான சமூகப் பார்வையோடு விளங்குகின்றன, எனவே சமுதாயத்தில் தொழிலாளர் போராட்டங்களின் மையத்தை அவை புரிந்துகொள்கின்றன. எனினும், மாணவர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தை நோக்கிய திட்டவட்டமான வரையறை இல்லை. ஒரு மாணவ ஆன்மாவின் மையமாக உழைக்கும் வர்க்கம் இருக்குமா இருக்காதா என்பதைக் கேட்டால், சமூகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உடைய சராசரிக்கும் மேலான மாணவர் பிரிவுகளுக்குக் கூட இல்லை என்பதே உண்மை. வளாகங்களில் ‘லால் சலாம்” போன்ற முழக்கங்களைக் கேட்கலாம், ஆனால் இடது சார்புடைய மாணவர் மத்தியில் கூட தொழிலாளர் போராட்டங்கள் மையப் பங்கு வகிப்பதில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம், தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளே மாணவர்களைச் செயல்பட வைக்கின்றன. தற்போது உள்ள தொழிலாளர் போராட்டங்களுக்கு முற்போக்கு மாணவ அறிவாளிகளைத் தமது பக்கம் திரட்டும் பலமோ தீவிரமோ இல்லை. எப்பொழுதெல்லாம் தொழிலாளர் போராட்டங்கள் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியதோ அப்போதெல்லாம் அது மாணவர்கள் சிலரை தம் பக்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

முற்போக்கு அரசியலில் தொழிலாளர் பிரச்சனைகள் மையப் பாத்திரம் வகிக்கும் மேற்கு வங்காளத்தில் 1990 இல் கனோரியா சணல் ஆலை, ஹிந்துஸ்தான் லீவர், பஹர்பூர் கூலிங்க் டவர் போராட்டங்கள், 2007 இல் ஹிந்துஸ்தான் மோட்டார், கடந்த வருடம் நடந்த ஹுமுக்சந்த் சணல் ஆலை போராட்டங்கள் வரை முற்போக்கு மாணவர் இயக்கங்கள் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றதை நாம் பார்த்தோம். ஏகாதிபத்திய நிலச் சுரண்டலால் விவசாயக் கூலிகள் அவதியுற்ற சிங்கூர் மற்றும் நந்திகிராமம் போன்ற பரவலான தாக்கத்தையுடைய மக்கள் திரள் போராட்டங்களில் சில மாணவப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டனர். மும்பையில் 1990கள் வரை தொழிலாளர் போராட்டங்கள் உச்ச நிலையில் இருந்தபொழுது தீவிர மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஒரு பிணைப்பு இருந்தது. ஆனால் இன்று பிரபல அரசியல் தளத்தில் தொழிலாளர் போராட்டங்கள் மறைக்கப்பட்டுவிட்டதால் ,தொழிலாளர்கள் சார்புடைய அரசியல் பேசும் விழிப்புணர்வுகொண்ட சில மாணவர்கள் மட்டுமே இப்போராட்டங்களின் தொடர்பில் உள்ளனர்.

கே: இதுவரை, உழைக்கும் வர்க்கப் போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு(பங்களிப்பு போதாமை) குறித்து பேசினோம். ஆனால் மறுபக்கம் பார்த்தால்,மைய தொழிற்சங்கங்கள் வாயிலாகவோ, ஆலை சார்ந்த தொழிற்சங்கங்கள் மூலமாகவோ, தொழிலாளர்கள், கல்வி நிலையங்களின்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா? எந்த அளவிற்கு அவர்களது பங்கேற்பு உள்ளது?

ப: மாணவர் பிரச்சனைகளில் உழைக்கும் வர்க்கம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாததற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. சங்கம் அமைத்தல், 8 மணி நேர வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம் முதலிய தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு நேரம் போதுவதில்லை. மாணவர் பிரச்சனைகளைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் நேரங்களில் கூட வேண்டுமென்றே அவர்கள் மாணவர்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்காமல் இல்லை. உதாரணத்திற்கு, சமீபத்தில் எழுந்த தேசியவாதம் குறித்த விவாதத்தின் போது, இரண்டு தரப்பிலும் தொழிலாளர்கள் இருந்தனர். குர்கானில் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் தொழிலாளர்கள் இதைப் பற்றித் தொடர்ந்து விவாதித்தனர். அவர்களது கருத்துக்களிடையே ஒரு பிளவு இருந்தது. இரண்டு இயக்கங்களும் ஒரே இலக்கை நோக்கித் தான் பயணிக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகப் புலப்படாத நிலையில், தொழிலாளர்களும் மாணவர்களும் ஒரே சக்தியை எதிர்த்துத் தான் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

மானேசரில் உள்ள மாருதி, ஜெய்ப்பூரில் உள்ள மிகோ போஸ்ச், நீம்ரனாவில் டைகின், பக்ஸ்டர், ஆட்டோஃபிட், பெல்சோனிகா, ஹோண்டா தாபுகாரா, ரிகோ தாருஹெரா முதலிய ஜெ.என்.யூ உள்பட பல்வேறு மாணவர்களின் ஆதரவைப் பெற்ற தொழிலாளர்களும் தொழிலாளர் சங்கங்களும் இச்சூழலை நன்றாகப் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர். AICCTU, IFTU, IMK, WSC போன்ற மைய தொழிற்சங்கங்களும், தொழிற்சாலைகளைச் சார்ந்த் முற்போக்கு சிந்தனை கொண்ட தொழிலாளர்களும் ஜெ.என்.யூ மாணவர்களின் பிரச்சனைகளின் போதும், ரோஹித் வெமுலா, தத்ரி கொலை முதலிய சம்பவங்களின் போது மாணவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்து கொண்டனர். இது குறியீட்டளவிலான முக்கியத்துவம் வாய்ந்ததே அன்றி, உண்மையான ஒன்றுபடுதலுக்கு மேலும் உழைக்க வேண்டி உள்ளது.

கே: மாருதி-சுசுகி முதலிய தொழிலாளார்களின் போராட்டத்தின் போது ஜென்.என்.யூ போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனரா? தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான புரிதல் எப்படி இருந்தது?

ப: 2005 ஹோண்டா போராட்டங்களுக்குப் பிறகு குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியில் நடந்த குறிப்பிடத்தக்க தொழிலாளப் போராளிகளின் போராட்டம் ரிகோவில் நடைபெற்றது. 45 நாள் நடந்த போராளிகள் வேலை நிறுத்தத்தில் 3000 ரிகோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். மற்ற பகுதி தொழிலாளர்களின் ஆதரவும் இவ்வேலை நிறுத்தத்திற்குக் கிடைத்தது. குறிப்பிட்ட ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒன்றில் அப்பகுதிலிருந்த 100000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவ்வேளையில் KNS-ஐச் சேர்ந்த நாங்கள் ரிகோ தொழிலாளர்களின் பிரச்சனைகளில் ஈடுபடத் தொடங்கினோம். ஆரம்பத்தில் எங்களை சந்தேகத்தோடு தான் பார்த்தார்கள். ஏனென்றால், பல்கலைக்கழக மாணவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது அவர்களுக்கு மிகவும் புதுமையான ஒன்று. ஆரம்ப கட்டத்தில் எங்கள் அடையாள அட்டைகளைப் பரிசோக்கக் கூடச் செய்தார்கள். இருப்பினும், தொடர் பங்கேற்பால், நம்பிக்கை அதிகரித்தது.

2010/2011 இல் மாருதி சுசுகி போராட்டம் தொடங்கியபொழுது, KNS மாணவர்களுடனான பரிச்சயம் அவர்களுக்கு இருந்தது. முதற்கட்ட வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, அதாவது இரண்டாவது கட்ட வேலை நிறுத்தத்தின் போது, ஜெ.என்.யூ மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 100 மாணவர்கள் ஆலையின் வாயிலுக்குச் சென்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தொழிலாளர்கள் பரிதாபத்துக்குரியவர்களாகத் தம்மை முன்னிறுத்தி உதவிக்கு நாடியதால், சமுதாயத்தின் ஒரு பகுதியான மாணவர்கள் தமது விழிப்புணர்வால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.தொழிலாளார்கள் போராடிக்கொண்டிருந்தபோது, மாணவர்களும் அவர்களுடன் இணைந்து போராடினர். இப்போராட்டங்கள், அவற்றில் ஈடுபட்ட மாணவர்களின்மீது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை உண்டாக்கியது. இப்போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்தில், மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து தீவிரமாகப் போராட ஏதுவான ஒரு தளத்தை அது ஏற்படுத்தித் தந்தது. இது மாருதி இயக்கத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தது. பின்னாளில், பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற அஸ்டி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களில், மாணவப் போராளிகள் பலர் சாலையோர கூடாரங்களில் தம் இரவுகளை அவர்களுடன் கழித்தனர். ஆனால் துர்நிகழ்வாக இந்த கூட்டணி மேலும் வலுப்பெற்று நீண்ட நாள் நீடிக்கச் செய்யுமாறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியிலும் தில்லி பல்கலைக்கழகங்களிலும் தொழிலாளர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளும் (அதிகாரப்பூர்வ/அதிகாரப்பூர்வமற்ற) கூட்டங்களை சீரான இடைவெளியில் ஏற்பாடு செய்ய முயல்கிறோம்.

கே: தொழிற்துறை பகுதிகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களோடு ஹரியாணா மாணவர்களின் ஈடுபாடு எத்தகையது? அருகிலேயே இருப்பதால் இம்மாணவர்கள் குர்கான்-மானேசர் தொழிலாளர்களுடன் ஈடுபடுவது எளிது என்று ஒருவர் எண்ணக்கூடுமல்லவா..

ப: ஹரியாணாவில் மாணவர் இயக்கங்கள் பலவீனமாகவே உள்ளன. எனக்குத் தெரிந்தவரை அதற்கு நீண்ட வரலாறு எல்லாம் கிடையாது. ITI மாணவர்களைப் பொருத்தவரை, அவர்களது எதிர்காலம் இத்தொழிற்சாலைச் சார்ந்து உள்ளது என்ற விழிப்புணர்வு உண்டு என்றாலும், தொழிலாளர் போராட்டங்களில் ITI மாணவர்களின் பங்கேற்பு உள்ளதா என்பதைப் பற்றிய போதிய தகவல் எங்களிடம் இல்லை. மற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, பல்வேறு ITI நிறுவனங்களில்,ஹோண்டா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹோண்டா தபுகாரா தொழிலாளர்கள் நடத்திய தீவிரப் பிரச்சாரம் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது

கே:லால் சலாம், ஜெய் பீம் பற்றிய உங்களது பார்வை என்ன? இது பாட்டாளி வர்க்கத்தையும் சாதி எதிர்ப்பு சக்திகளையும் ஒன்றிணைக்கும் வர்க்கங்களுக்கிடையிலான கூட்டணியை உணர்த்துகிறதா?

ப: இது, ஒரு சில மாணவர்களாலும் சமூக ஆர்வலர்களாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு முழக்கம் ஆகும். அம்முழக்கத்தை எதனோடும் வலுவாக தொடர்புபடுத்த முடியாது என்றே நினைக்கிறோம். கல்வி வளாகங்களில் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்து விவாதங்கள் நிகழும்பொழுதுகூட உழைக்கும் வர்க்கம் பற்றிய உரையாடல் மையப்பொருளுக்கு அருகில் கூட நெருங்குவதில்லை. குர்கான்-மானேசர் போன்ற தொழிலாளர் போராட்டங்கள் வடிவம் பெற்றுக்கொண்டிருக்கும் இடங்களில், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு உந்துதல் அளிக்கும் வகையில் இல்லாமல், தலித் இயக்கங்களோ வலுவற்ற நிலையில் உள்ளன. தொடர் முயற்சிகள் மூலமாக மட்டுமே இக்கூட்டணியை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரோஹித் வெமுலாவின் நிறுவனக் கொலைக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றபொழுது சில தொழிலாளர் வர்க்க அமைப்புகள் அதில் பங்கேற்றன. அதே போல,இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ப்ரிகால் தொழிலாளர்களைப் பற்றி AICCTU முதலிய தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் ரோஹித் வெமுலாவைப் பற்றிப் பேசப்பட்டது. மாருதி-மானேசர் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒரு தலித் தொழிலாளர். பிப்ரவரி 18,2016 அன்று கன்னையா குமாருக்கு ஆதரவாக தில்லியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் AITUCயைச் சார்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இன்றுவரை இவை வெறும் குறியீட்டளவிள் மட்டுமே உள்ளன. ஆங்காங்கே தொழிலாளர்-மாணவர் இயக்கங்களின் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்படுகின்றன. ஆனால் இதை வைத்து மட்டுமே லால் சலாம்/ஜெய் பீம் முதலியவை தம்மை ஒரு இயக்கமாக மறுதலித்துக் கொண்டன என்று கூற இயலாது.

கே: தற்போது பல வகையான மாணவர் இயக்கங்கள் RSSஉடன் நேரடியாக முரண்படுகின்றன. இத்தகை ஃபாஸிச எதிர்ப்புப் போராட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: தொழிலாளர் போராட்டங்கள் மூன்று மட்டங்களில் நடைபெறுகின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பரவலான தளத்தில், போராட்டங்களை மையத் தொழிற்சங்கங்களே நடத்துகின்றன. இவர்களின் போராட்டங்கள் சமூக அரசியல் தளங்களில் இருந்து விலகி பொருளாதார கோரிக்கைகளை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளன. பொருளாதார சிக்கல்களைத் தாண்டி, எதையும் கண்டுகொள்ளாதவையாகவே மைய தொழிற்சங்கங்கள் விளங்குகின்றன. பெரும்பாலும் இப்போராட்டங்களே கூட குறியீட்டளவிலான மேம்போக்கான போராட்டங்களாகவே உள்ளன. தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மேல்மட்ட அளவிலான போராட்டம் சில தொழிலாளர்களிடம் பாஜக எதிர்ப்பு (ஆளும் கட்சி எதிர்ப்பு) தேர்தல் நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தால் கூட,பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்திய போராட்டமாக அது இருப்பதால் ஃபாசிச எதிர்ப்பு அரசியல் பார்வை அற்றதாகவே உள்ளது.

இன்னும் ஊடுருவிப் பார்த்தால், பரவலான தொழிலாளர் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட ஆலை சார்ந்துதான் நடைபெறுகின்றன, எனவே பெரும்பாலும் அவை ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு எதிராகவோ நிறுவனருக்கு எதிராகவோ தான் உள்ளன. வேலை நேரம், போக்குவரத்து, உணவு இடைவேளை சார்ந்த கோரிக்கைகள் தொழிலாளரின் வட்டத்துக்குள்ளான போராட்டங்களாக, தமது மேலாளாரின் ஒடுக்குமுறைக்கெதிரான தொடர் போராட்டமாகவே உள்ளன.

மூன்றாவது மட்டத்தில், வர்க்கப்போராட்டங்கள் பொதுமைப்படுத்தப்பட்டு ஏதோ ஒரு துறை சார்ந்தும் பிரிவு சார்ந்தும் மட்டுமே எதிர்ப்புகளும் அமைப்புகளும் தோன்றுகின்றன. நவீன தாராளவாதத்தையும் இந்துத்துவ அரசியலையும் களத்தில் இருந்து அகற்ற வர்க்கப் போராளிகளின் அரசியல் வெளிப்பாடை ஒன்றுதிரட்ட வேண்டும். தொழிற்சங்க இயக்கங்கள் தொழிலாளர்களின் அரசியல் இயக்கங்கள் ஆகிய இரண்டின் பணிகளுமே தமது இரட்டை எதிரிகளான நவதாராளவாத, இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வதே ஆகும்.

பழைய தொழிற்சங்கங்களை நொறுக்கி, மும்பையில் சிவசேனா பதவிக்கு வந்ததைப் பார்த்தோம். எப்படி ஜெர்மனியில் கம்யூனிஸ்ட்டுகளையும் வர்க்க அமைப்புகளையும் ஹிட்லர் முதல் வேலையாய் ஒடுக்கினார் என்பதைப் பார்த்தோம். தத்ரி கொலைக்குப் பின்னர், நொய்டாவில் உள்ள டென்ஸோ நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளரான முகம்மது அக்லக்கின் சகோதரரை IFTU தொழிற்சங்கத் தலைவர்கள் சந்தித்ததால் எப்படி நொய்டாவில் உள்ள அவர்களது அலுவலகம் எறிக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். ஹரியாணாவில் உள்ள தொழிலாளர்கள் இடையே எப்படி “பசு அரசியல்” ஊக்குவிக்கப்பட்டு, மதம் சார்ந்த பிரிவினையை உருவாக்கும் வண்ணம் அவர்களுக்குள்ளேயே கண்காணிகள் உருவாக்கப்படுகின்றனர் என்பதைப் பார்த்தோம். இந்துத்துவ சக்திகளையும் நவதாராளவாதத்தையும் எதிர்த்து, தமது தொழிற்சங்க அமைப்புகளையும் வர்க்க அமைப்புகளையும் வளர்த்தெடுக்கும் விதத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மட்ட போராட்டங்கள் முன்னேற்றம் அடையவேண்டி உள்ள தேவையை நாங்கள் வலியுறுத்துகிறோம்

This entry was posted in Analysis & Opinions, Education Sector, Factory Workers, Featured, Working class against communalism, Working Class Vision, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.