தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும், மாருதி மாநேசரும்

 

கடந்த பிப்ரவரி 2012ல் புதுதில்லியில் நடந்த 44வது இந்திய தொழிலாளர் கருத்தரங்கத்தில் பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களும் கொள்கைகளும் வேலையில் உள்ள தொழிலாளர்களை மிகையாக பாதுகாப்பதாகவும், இதனால் புது வேலை வாய்ப்புகள் ஏற்படுவதற்கு தடையாக உள்ளதாகவும்கூறினார் . ‘இந்தியாவின் நிறுவனங்கள், தொழில்கள், மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள தொழிலாளர் சட்டப்பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் இவை தொழிலாளர் நலன்களுக்கு உறுதுணையாக இல்லாதவை எனவும் புதிய தொழிலளார் சட்டத்திற்கான வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியிறுத்தினார். தொழிலாளர்களின் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் நடைமுறைக்கு ஏற்றவாறு தங்கள் அணுகுமுறைகளை கையாலுவதை பாராட்டிய பிரதமர், தொழிற்சாலை சட்டம் 1948ஐ மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.i

இதுகுறித்து வெளியிட்ட செய்திகளில் சில பத்திரிக்கைகள் தொழிலாளர் சட்டங்களை வலுப்படுத்த மன்மோகன் சிங் உறுதியாக உள்ளதாகபறைசாற்றின. சில பத்திரிக்கைகள் தொழிலாளர் சட்டங்கள் குறித்த வாதங்களை பிரதமர் மீண்டும் புதுப்பித்துள்ளாதாக கூறியுள்ளன. மாருதி மாநேசரில் நடந்த தொழிலாளர்கள்நிறுவன மேலாளர்களின் கலவரத்தின் பின்புலமாகவும், எதிரொலியாகவும் இந்திய பிரதமரின் இந்தக் கூற்றை நாம் கவனத்துடன் ஆராய வேண்டியுள்ளது. தொழிலாளர் சட்டங்களை வலுப்படுத்துவது என்றால் என்ன? இது யாருக்காக செயல்படுத்தப்படுகறது? யார் இதனால் பயனடைவார்? இதனால் தொழிலாளர் நலன்களுக்கு என்ன பாதிப்பு? என்ற கேள்விகள் தொழிலாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படவேண்டியவை

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கான காரணங்கள்

அரசாலும், முதலாளிகளாலும், சர்வதேச சந்தைகளாலும் கோரப்படுகின்ற தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்என்பது தொழிலாளர்களையும் மற்ற வளங்களைப் போல தாராளமயச் சந்தையின் கீழ் கொண்டு வருவதுதான். இதில் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியும் அவர்கள் உருவாக்கும் பொருட்களைப் போல் பொருளாதாரச் சந்தையில் விற்கப்படும் ஒரு பொருள். இந்த சந்தை சூத்ரதாரிகளின் கூற்றுப்படி சந்தையில் விற்கப்படும் பொருள்களின் விலை அந்த பொருளின் சரியான உபயோகத்திற்கு தகுந்தவாறு நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் சந்தையை சரியாக செயல்படவிடாமல் தடுக்கிறது. இந்த தடைகள் நீதி, சமத்துவம் என்ற சந்தைக்கு வேண்டாத நியமங்களை உள்நிறுத்துவதுடன், இதனால் அவர்களின்(தொழிலாளர்களின் உழைப்புசக்திக்கான) விலையை அதிகரிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், முதலாளிகள் தங்கள் தேவைக்கேற்ப தொழிலாளர்களை குறைப்பதையும் அதிகரிப்பதையும் தடுக்கின்றன. தேவைக்கேற்றபடி தொழிலாளர்களை குறைப்பதற்கு சட்டங்கள் வழி செய்யவில்லை என்றால் வேலைவாய்ப்புகளையும் எற்படுத்தமுடியாது என சந்தை நிறுவனங்களும் அதைச் சார்ந்த வல்லுனர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.ii இவர்களின் கூற்றுப்படி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஒரே வழி தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தி இந்த தடைகளை நீக்குவது.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் மாருதி கலவரமும்

தொழிலாளர் சட்ட சீர்திருத்த கொள்கைகள் எவ்வாறு மாருதி கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது என சமூக ஆர்வலர்கள் அன்னவாஹ்ஜுலா மற்றும் பிரதாப் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.iii மாருதி வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒரு பொதுநிறுவனமாக ஆரம்பித்து பின்னர் தனியார்மயமாக்கப்பட்ட தொழிலாகும். இதில் ஜப்பானின் சுசுகி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 2000த்திலிருந்து மாருதி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடந்து வருகிறது. 2000ல் ஊதிய உயர்வு, தொழிலாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாதம் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் போது நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உற்பத்தியை தொடர்ந்தது. தொழிலாளர்களை கதவை சார்த்தி வேலை செய்ய கட்டாயப் படுத்தியதனால், 2 தொழிலாளர்கள் வேலை பளுவினால் இறந்துள்ளதாக மாருதி உத்யோக் தொழிலாளர் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசும் தன் பங்கிற்கு காவல்துறையை வைத்து தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பங்களை மிரட்டியது. தொழிற்சாலைக்கு பகலிலும் இரவிலும் காவல்துறையின் பாதுகாப்பு போடப்பட்டது.

2001ல் மாருதி உத்யோக் தொழிலாளர் தொழிற்சங்கத்தை ஏற்க நிர்வாகமும் அரசும் மறுத்துவிட்டன. இதனால் தொழிலாளர்களின் போராட்டங்களில் தொழிற்சங்க உரிமை மற்றும் கூட்டு பேர உரிமைகளை பாதுகாக்க கோரிக்கை வலுத்தது. நான்கு மாத போரட்டம் முடிவில் தொழிற்சங்க பிரதிநிதி தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அனைத்து தொழிலாளர்களையும் போராட்டங்களில் ஈடுபடமாட்டோம் என நிர்வாகம் கையெழுத்து வாங்கியது நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வேலைச் சுமையை அதிகரித்து தன்னிச்சையான ஓய்வுபெறுவதற்கு நிர்பந்தித்தது. எதிர்த்த அனைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் 2004ல் நிரந்தரத் தொழிலாளர்கள் 50% குறைக்கப்பட்டனர் முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தமான 9% ஊதிய உயர்வை 3.5% ஆக குறைக்கப்பட்டது.

2007ல் ஆரம்பிக்கப்பட்டபோது மாருதி மாநேசர் தொழிற்சாலையில் 85% தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இதற்காக மாருதி நிறுவனத்துடன் 80 ஒப்பந்ததாரர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலத் தொழிலாளர் தலைவர்கள் இல்லாத நிலையில் இளம் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களின் உதவியுடன் 2011ல் திரும்பவும் போராட்டத்தில் இறங்கினர். ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர் முறை, நீண்ட நேர கடினமான பணி நிலைமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியிறுத்தினர். நிர்வாகம் இந்த போராட்டத்திலும் தன்னுடைய தொழிலாளர் விரோத போக்கை கைவிடவில்லை. ஜுலை 18 அன்று நடந்த கலவரம் இதன் எதிரொலியே.

பாதாளத்திற்கு கொண்டு செல்லும் சட்ட சீர்திருத்தங்கள்

குறைந்த ஊதியம், ஒப்பந்த தொழிலாளர் முறை, நீண்ட நேர கடினமான பணி நிலைமைகள் அதை எதிர்த்து தொழிலாளர் போராட்டங்களும் அதை முறியடிக்க கையாளும் நிர்வாகத்தின் நடைமுறைகளையும் அதற்கு துணைபோகும் அரசின் நடவடிக்கைகளும் மாருதி தொழிற்சாலையில் மட்டும் நடக்கவில்லை. இது இந்தியாவில் இன்றைய அனைத்து தொழிற்சாலைகளில் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு என்ற போர்வையில் அரசு இன்று நிலம், நீர், கனிமம் எனப் பல்வேறு வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வந்துள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையே தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள். இன்றைய இன்றைய பொருளாதார கட்டமைப்பில் தொழிலாளர்கள் மனிதர்கள் அல்ல பொருளாதாரச் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தங்கள் உழைப்புசக்தியை விற்கும் உற்பத்திக்கு வேண்டிய ஒரு உட்பொருளே.

இதை எதிர் கொள்ளும் சக்திகளும் பொருளாதார வல்லுனர்களும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு(.எல்.)வின் ஆய்வு போன்ற பல ஆய்வுகளை முன் வைக்கின்றனர்.iv 162 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி தரமான தொழிலாளர்கள் சட்டங்களும், தொழிற்சங்கங்கள் முறையாக செயல்படுகின்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. ச்ந்தையை முதன்மையாக கொண்ட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள தொடரும் வேலைவாய்ப்பின்மையும் கோடிட்டு காட்டப்படுகிறது. மற்றும் குறைந்த ஊதியம் கொடுத்தால், உற்பத்தியை பெருக்கும் புதிய வழிகளை கண்டுபிடிப்பதற்கு இந்த நிறுவனங்களுக்கு இல்லை எந்த தேவையும் இல்லை என இந்த ஆய்வு கூறுகிறது.

தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதனால், தொழில்ரீதியான பொருளாதாரம் குறைந்த ஊதியம் கொண்டதாகவும், குறைந்த உற்பத்தி திறனாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. 2002ல் தொழிலாளர் குறித்த தேசியக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட வேண்டிய போது தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவது அல்லது நீக்குவது‘, தனியார்மயமாக்கம், ஒப்பந்த தொழிலாளர்கள் முறை போன்ற தொழிலாளர் விரோதக் கொள்ககைகளினால், வளர்ச்சி குறைவாக இருக்கும் என சென் மற்றும் தாஸ்குப்தா தங்கள் கருத்துகளை முன் வைக்கின்றனர். v இந்த தொழிலாளர்களை சந்தை பொருளாக்கி, அவரகளை மனிதத்தை அழிக்கும் சீர்திருத்தங்கள் இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தை அதல பாதாளத்துக்கு கொண்டு செல்லும் என சென், தாஸ்குப்தா குறிப்பிட்டுள்ளனர்.

 மேற்கோள்கள்

i http://articles.timesofindia.indiatimes.com/2012-02-15/india/31062855_1_labour-laws-labour-reforms-labour-ministry

 iiSharma, Alakh, N. 2006. Flexibility, Employment and Labour Market Reforms in India Economic and Political Weekly May 27, 2006.

iii Annavajhula J C B, Surendra Pratap. 2012. Worker Voices in an Auto Production Chain – Notes from the Pits of a Low Road-II. Economic & Political Weekly, August 25, 2012 Vol. Xlvii, no 34.

iv Blanchflower D and Andrew J Oswald (1994): The Wage Curve, MIT Press, Cambridge, MA.

vSen, Sunanda; Dasgupta, B. 2009. Unfreedem and Waged Work: Labour in India’s Manufacturing Industry. Sage Publications, New Delhi.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.

One Response to தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும், மாருதி மாநேசரும்

  1. S.Kannan says:

    Good article.

Comments are closed.