கானல் நீராகும் “குறைந்த பட்ச ஊதிய உயர்வு” – எஸ்.சம்பத்

ப்பந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் என்பதை ரூ.10,000 என உயர்த்தியைமப்பதாக உத்தேசித்திருந்த முடிவை முதலாளிகள் தரப்பிலிருந்து சுமார் 40 ஆட்சேபணைகள் பெறப்பட்டுள்ளது என்ற காரணம் காண்பித்து மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வந்துள்ளது (21/07/2016 THE HINDU) அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வருடந்தோறும் நடைபெறும் தேசிய அளவிலான அகில இந்திய வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்பதில் துவங்கி தற்போது குறைந்த பட்சம் ரூ.18,000 வழங்கு என்பதில் வந்து நிற்கிறது.

10 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று வலியுறுத்திய கோரிக்கையை பரிசீலனை செய்ய அரசிற்கு நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 2016ல் மத்திய அமைச்சரவை ஒப்பந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் என்பதை ரூ.10,000 என உயர்த்தலாம் என முடிவு செய்து அதை அமுல்படுத்து வதற்கு முன்பாக கார்ப்பரேட் முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடி என்பதோடு, சுமார் 40 ஆட்சேபணைகள் பெறப்பட்டது என்பதை வைத்து செயல்படுத்துவதற்கான அடுத்த முடிவை அரசு நிறுத்தி வைக்கிறது என்றால் தேர்ந்தெடுத்த மக்களுக்கான அரசு என்பதைவிட கார்ப்பொரேட் முதலாளிகளால் ஆட்டுவிக்கப்படும் அரசு என்பதை இந்த முடிவு மெய்ப்பித்திருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம்

குறைந்த பட்ச ஊதியம் என்பதைப் பொறுத்தமட்டில் ஒரு நீண்டகால வரலாறு உள்ளது என்பதோடு, தொழிலாளர்களின் தொடர்ந்த போராட்ட வரலாறோடு தொடர்புடைய ஒன்றாகும்.

1928சர்வதேச தொழிலாளர் மாநாடு ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியது, ஆனால் இந்திய அரசியலமைப்பில் அது சேர்க்கப்படவில்லை.

1943இந்திய தொழிலாளர் மாநாட்டினை தொடர்ந்து தொழிலாளர்களின் பணி நிலைகள், ஊதியம், விடுப்புகள் போன்றவற்றை தீர்மானிக்க நிலைக்குழு தனது பரிந்துரைகளை முன்வைத்தது

1945இந்திய தொழிலாளர் மாநாட்டில் முதல் குறைந்த பட்ச சம்பளத்திற்கான வரைவு மசோதாவை தயாரித்தது

1947நிர்ணயிக்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் என்பது அந்த தொழிலாளி வாழ்வாதாரத்திற்கான தொகையாக மட்டும் இருக்காமல், மருத்துவ தேவை, குழந்தைகள் கல்வி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

1948 – குறைந்தபட்ச சம்பள நிர்ணயத்திற்காக ஒரு முத்தரப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.

1988தொழிலாளர் துறை அமைச்சர்களின் மாநாட்டில் விலைவாசி உயர்வினை ஈடுகட்ட மாறும் அகவிலைப்படி என்ற பெயரில் படி வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

1988வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் குறித்து பதிவு மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. முன்னதாக இவர்களின் பணி நிபந்தனை மற்றும் ஊதியம் போன்றவற்றை நெறிப்படுத்த ஒரு மசோதா 1959, 1989, 1990 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டு நிறைவேறாமலே நின்றுவிட்டது.

1991இந்திய உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் என்பதில் 25 சதவீதம் குழந்தைகளின் கல்வி, குடும்பத்தினரின் மருத்துவ செலவினம் ஆகியவற்றிற்கு ஒதுக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்றது

2011தேசிய ஊரக வேலை வாய்ப்பு – 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்காக நிர்ணயிக்கப்படும் ஊதியம் என்பது நாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியுடன் ஒத்துப் போகும் வகையில் இருக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்திரவை பிறப்பித்தது.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொழில்துறை சார்ந்த திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை மோடி அரசு ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போதெல்லாம் தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகத் தோன்றியவைதான் கீழ்க்கண்ட சட்டங்கள்: தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்-1923, இந்தியத் தொழிற்சங்கச் சட்டம்-1926, சம்பளப் பட்டுவாடாச் சட்டம்-1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு மற்றும் நிலையாணைச் சட்டம்-1946, தொழிற்தாவாச் சட்டம்-1947, தொழிற்சாலைச் சட்டம்-1948, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம்-1961, பணிக்கொடைச் சட்டம்-1972. இது தவிர, போனஸ் பட்டுவாடாச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் அமல்படுத்தாதபோது, அவற்றைக் களஆய்வு செய்து, தட்டிக்கேட்கத் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. விரைவான தொழில் வளர்ச்சிக்கு அது இடையூறாக இருக்கிறது என்ற பெயரில், அத்தகைய ஆய்வுகள்குறித்த பிரிவுகளைத் தற்போது மத்திய அரசு நீக்கியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது

19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாகப் பொருள் உற்பத்தி பன்மடங்கானது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டதால் உற்பத்தி வேகம் கூடி, உற்பத்தியின் அளவும் கூடியது. உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், உற்பத்தி அளவுக்கேற்ப ஊதியம் உயர வேண்டும் என்று குரல்கொடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் ஊதிய உயர்வு கோரிக் குரல் எழுப்ப ஆரம்பித்தது.

இந்தியாவில் தொழிலாளர்கள் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. 1823-ல் பல்லக்கு தூக்குவோர் வேலைநிறுத்தம், 1862-ல் கல்கத்தா மாட்டு வண்டி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், 1866-ல் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷ‌ன் இறைச்சி விற்பவர் வேலைநிறுத்தம், 1891-ல் கோவை நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1895-ல் வங்கத்தில் பட்ஜ்பட்ஜ் சணல் ஆலையில் வேலைநிறுத்தம் (மிகப் பெரிய கலவரத்தில் முடிந்தது), 1907-ல் கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், 1921-ல் நவம்பர் 17 முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை இந்தியா கண்டிருக்கிறது.

சம்பளப் பட்டுவாடாச் சட்டம்

இத்தகைய பல எழுச்சி மிக்க போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு, வேலைக்கேற்ற ஊதியமும், முறைப்படி குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் வழங்கப்படாத முறைகேட்டைப் பற்றியும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்க  1929-ல் ராயல் கமிஷ‌ன் ஒன்றை அமைத்தது. அந்த கமிஷ‌ன் தனது அறிக்கையை 1933-ல் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து 1936-ல் சம்பளப் பட்டுவாடாச் சட்டம் இயற்றப்பட்டது. இன்றளவும் மாவட்டந்தோறும் சம்பளப் பட்டுவாடாச் சட்டப்படி நிர்வாகம் செயல்பட வில்லை என்கிற தாவாக்கள் தொழிலாளர் துறை அலுவலர்களிடம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து, இயற்றப்பட்ட 1947-ம் வருடத்திய தொழில் தாவாச் சட்டம்தான் இன்றளவும் நிரந்தரப் பணிநீக்கத்திலிருந்து சிறிதள வாவது தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவிக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இத்தகைய தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்கள் நலனும், முதலாளிகள் நலனும் சம அளவில் கருத்தில் கொள்ளப்பட்டு ஷ‌ரத்துக்கள் அமைந்திருந்தன. ஆனால், சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்திய முதலாளிகள் வர்க்கம் இத்தகைய சட்டங்களைப் பின்பற்றாத நிலை தொடர்வதும், சட்டங்களையே ஒட்டு மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என வேண்டுகோள் வைப்பதும் வேதனைக்குரியது.

முக்கிய கோரிக்கைகள்

கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 15 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இடதுசாரிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி சார்ந்து செயல்பட்டுவரும் ஐ.என்.டி.யு.சி., பாஜக சார்ந்து செயல்பட்டுவரும் பி.எம்.எஸ். உள்ளிட்டவையும் பங்கெடுத்திருக்கின்றன. ஏறக்குறைய 15 வேலை நிறுத்தங்களின் போதும் முன்வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகளில் குறிப்பாக பின்வருவனவற்றை கூறலாம் (1) தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது. (2) தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது (3) அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் (4) ஒப்பந்த தொழிலாளர் முறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தி தொடர்ந்து பணி செய்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகியவை.

பணிநிரந்தரம் எனும் எட்டாக்கனி

தொழிற்சாலைகள் பலவற்றில் ஒப்பந்த முறை என்பது அதிகரித்து, தொழிலாளர்கள் பணிநிரந்தரம் என்பதே எட்டாக் கனியாக மாறியிருக்கிறது. பலமுறை நீதிமன்றங்கள் தலையிட்ட பின்னரும், நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவசாயத்தற்கொலை, வறட்சி, வறுமை காரணமாகப் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் நலம் பேணுவதற்காகத் தனியாகச் சட்டம் இருந்தபோதிலும் அதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு யாரென்று அறியாமல் இவர்களின் உழைப்பு சுரண்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, மருத்துவ சலுகை போன்றவற்றை வழங்க வேண்டியதில்லை என்பதால் அனைத்து தொழில்களிலும் ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக நெய்வேலி நிலக்கரி தொழிலில் தொடர்ந்து ஒரே பணி பார்த்து வருகிற பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீதிமன்ற தலையீடுகளுக்கு பின்னரும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நிரந்தர பணியாளர்கள் பார்க்கும் அதே பணியை தொடர்ந்து பார்த்து வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் என்கிற நிர்ணயமும் நிறுத்தி வைக்கப்பட்டால், அவர்களின் நிலை இன்னும் மோசமாகும்.

மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றின் வாயிலாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 30 சதவீத தொழிலாளர்கள் என்றும், அரசு சார்ந்த பொதுத்துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 32 சதவீதம் என்றும் தெரிவிப்பது அதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கிறது. அசோசெம் என்கின்ற இந்திய முதலாளிகள் சங்கம், இந்திய தொழில்துறை முழுவதும் நடத்திய தனது ஆய்வின் முடிவுகளை பிப் 5, 2014-ல் வெளியிட்டுள்ளது. 2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் கூறும் அவ்வறிக்கை, துறை வாரியாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. தொலைதொடர்புத் துறையில் 60%, ஆட்டோமொபைல் துறையில் 56%, கல்வித்துறையில் 54%, உற்பத்தித் துறையில் 52%, நுகர்பொருள் விற்பனைத் துறையில் 51%, .டி துறையில் 42%, ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் 35%, மருத்துவத்துறையில் 32% – என ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருபுறம் ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு) என சட்டமும் இயற்றிக் கொண்டு, மறுபுறம் அரசே நிரந்தர தொழிலாளர் முறையை படிப்படியாக அகற்றும் முயற்சியில் இருப்பது தொழிற்சங்கங்களின் முன் உள்ள மிகப் பெரும் சவாலாகும்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும், முக்கியமாக குறைந்தபட்ச சம்பளம் அனைவருக்கும் 15000 என நிர்ணயம் செய் என எதிர்வரும் 2 செப் 2016 அகில இந்திய வேலைநிறுத்தம் நோக்கி போராட்ட களத்தை தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துணிச்சலாக ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப அரசு முடிவு மேற்கொள்வது அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்களின் போராட்ட அறிவிப்பை கேலி செய்வது போல் அமையும் என்பதில் ஐயமில்லை. அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் அரசியல் கட்சி சார்ந்த தொழிற்சங்க சம்மேளனங்களை மட்டும் கருத்தில் கொள்ளாது, துறை வாரியாக தொழிலாளர்களோடு ஐக்கியப்பட்டு போராட்ட களத்தில் தொடர்ந்து நிற்கிற சுயாதீன சங்க / சம்மேளனங்களையும் போராட்ட களத்தில் ஒருங்கிணைக்க முனையவேண்டும் என்பதோடு, வருடத்திற்கு ஒரு நாள் சம்பிரதாய வேலை நிறுத்தம் என்கிற போக்கை கைவிட்டு, துறை கடந்த தொழிலாளர் ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த திட்டமிடுவதே பொருத்தமாக இருக்கும்.

(எஸ்.சம்பத், மாநில பொருளாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம், மதுரை)

குறிப்புகள் :

http://www.thehindu.com/business/Industry/centre-puts-wage-plan-for-contract-workers-on-hold/article8876802.ece?w=alauto

http://assocham.org/newsdetail.php?id=4379

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, Factory Workers, labour reforms, தமிழ் and tagged , . Bookmark the permalink.