மீண்டும் வேலை கோரி க்ரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள் போராட்டம்

ஆகஸ்ட் 8 அன்று க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தைச் சார்ந்த சுமார் 70 தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்னர் போராட்டம் நடத்தினர். கும்மிடிபூண்டியில் உள்ள தொழிற்சாலையை நிறுவனம் மூடியதனால் சுமார் 100 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். 30-35 வயதுள்ள இந்த தொழிலாளர்கள் 8-10 வருடங்கள் வேலை செய்த போதிலும், நிர்வாகம் வேலை தர மறுத்து விருப்ப ஓய்வு திட்டத்தை தொழிலாளர்கள் மீது திணித்து வருகிறது. தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது ராணிப்பேட்டை தொழிற்சாலையில் வேலை வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் செய்கின்றனர்.

greaves_aug8

தொழிலாளர் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல், நிர்வாகம் தொழிற்சாலையை மூடியுள்ளது. தொழிற்சாலையை நிர்வாகம் சட்ட விரோதமாக மூடியதனால், தமிழ்நாடு அரசு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. ஆனாலும் தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளதாக தொழிலாளர்களின் டிடியுசி சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இது குறித்து 11 ஆகஸ்ட் அன்று சட்டசபையில் கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால், நிர்வாகப் பிரதிநிதிகளையும் சங்கப் பிரதிநிதிகளையும் பேச்சு வார்த்தைக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அழைத்துள்ளார்.

தொழிற்சாலையை மூடியதை குறித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில், தொழிற்சாலையை உற்பத்தி செய்யப்படும் விவசாய இயந்திரங்களுக்கு சந்தை தேவை குறைந்துள்ளதாகவும் அதனால் தொழிற்சாலையை மூடுவதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் 2015-16ல் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 199 கோடி ரூபாய் இலாபம் சம்பாதித்து உள்ளது. ராணிப்பேட்டை தொழிற்சாலையில் இது வரை ஆட்டோ பாகங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இப்போது விவசாய இயந்திரங்களும் தயாரிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் 2013ல் இருந்து சங்கம் அமைத்து தொழிலாளர்களின் உரிமைகளை கோரியதற்காக இந்த பழிவாங்கல் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தொழிற்சாலை சட்டவிரோதமாக மூடப்பட்டதை எதிர்க்காத தமிழக அரசு, அதே சமயம் தொழிலாளர்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. அவர்கள் தொழிற்சாலைக்கு முன் போராட்டங்களை நடத்துவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் கும்மடிப்பூண்டியில் இருந்து வட சென்னை தொழிற் பேட்டை பகுதி வழியாக சென்னை தலைமைச் செயலகம் வரை போராட்டப் பேரணிக்காக அனுமதி கோரியதாகவும், ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுத்து போராட்டத்திற்கு 4 மணி நேரம் மட்டும் ஒதுக்கியதாகவும் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நிர்வாகம் வெளியேற்றக் கூடாது என்ற தடையுத்தரவு இருந்தும் தொழிற்சாலையில் இருந்து பொருட்களை வெளியேற்ற காவல் துறை உதவி செய்துள்ளது.

போராட்டத்தை சங்கத் தலைவர் தோழர் ஆறுமுகச்செல்வம் மற்றும் சிபிஎம்எல் மக்கள் விடுதலை தலைவர் தோழர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினர்.MRF, KPL, NVH இந்தியா, BMW இந்தியா, FITE மற்றும் DTUC சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

This entry was posted in Agriculture, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.