சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 2016 ஜுன் 21 அன்று இறந்த இரண்டு தொழிலாளர்களின் சம்பவம் குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை சுருக்கம்

Anna University Image3ஜுன் 21, 2016 அன்று, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இரு இளம் தொழிலாளர்களின் மரணம் குறித்து, பல ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ரப்பர் சாதனங்கள் என்ற ரப்பர் மோல்டிங் மற்றும் இதர சாதனங்கள் உற்பத்தி செய்யும் கவிமீனா என்ற சிறிய நிறுவனத்தின் ஊழியர்களான தீபன் மற்றும் ரமேஷ் சங்கர், காற்றமுக்க தொட்டி ஒன்றில் ரப்பர் லைனிங் பொருத்திட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதலாளிகளோ அரசு துறைகளோ இப்படியான துர்நிகழ்வுகளில் இருந்து எந்த பாடமும் கற்காத சூழலில், பிரச்சனைக்கான தீர்வுகளையும் கண்டறியாமல் இருக்க, இப்படியான விபத்துகளும் மரணங்களும் சென்னை மற்றும் பிற இடங்களில் பரவலாகி வருகின்றன. இதன் அடிப்படையில், அக்கறை கொண்ட குடிமக்கள் சிலர் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து , சம்பவத்திற்கான காரணிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையையும் உறுதிப்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.

கல்வியாளர்கள், தொழிலாளர் நல ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களை கொண்ட இக்குழு, மூன்று நாட்கள் இடைவெளியில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடனும் சந்தித்து (இதில் கவிமீனா தரப்பு மட்டும் பேச மறுத்துவிட்டனர்), நிகழ்வின் பின்னணி மற்றும் முக்கியமாக சம்பவத்திற்கு பிறகு அரசு இயந்திரங்களின் பாத்திரத்தையும் தவற விட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் விசாரித்தனர். குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளதன் படி, இரு இளம் தொழிலாளர்களின் மரணங்களும் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவை என்பதோடு, நிறுவன ரீதியான கவனக்குறைவு என்ற குற்றத்தால்ஏற்பட்ட இரு மரணங்களுக்கும் பிரதான முதலாளியான அண்ணா பல்கலைக்கழகமும் நேரடி முதலாளியான கவிமீனாவுமே பொறுப்பு.இந்த சம்பவத்தின் பின்னணியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மத்திய அமைச்சரகத்தால் (Ministry of Renewable Energy) துவக்கப்பட்ட ஆய்வு திட்டத்தின் அங்கமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆராய்ச்சிகளுக்கான மையம் (Centre of Energy Studies) காற்றமுக்கு தொழில்நுட்பத்தின் ஊடாக மின்சாரம் தயாரிக்கும் கள சோதனையில் ஈடுபட்டிருந்தது.இச்சோதனையில். காற்றமுக்கு பாதாள தொட்டியின் சுவர்களை ரப்பர் லைனிங் கொண்டு பொருத்தி சீல் செய்ய,அத்துறையின் சார்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலரை அணுகியுள்ளனர். முதன்மை ஒப்பந்ததாரரான அத்தகைய பணியில் தேர்ச்சி பெற்றில்லாததால், ஆய்வு திட்டத்தை தலைமை தாங்கும் பேராசிரியர் கவிமீனா ரப்பர் சாதனங்கள் நிறுவனத்தை இரண்டாம் கட்ட ஒப்பந்ததாரராக நியமித்துள்ளார். சிறிய நிறுவனமான கவிமீனா, இந்தியா ரப்பர் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, சென்னையில் அம்பத்தூர் அருகே ஒரு சிறிய அளவு உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. இறந்துபோன இரு தொழிலாளர்களில், தீபன் என்பவர் 7க்கும் மேற்பட்டஆண்டுகால வேலை அனுபவம் உடையவர் என்றிருக்க, ரமேஷ் சங்கர் என்பவர் 3 மாத அனுபவம் மட்டுமே உடையவர் ஆவார். தொடர்புடைய கட்டிட பணி தொடங்கப்பட்ட தேதியில், கவிமீனாவில் மேற்பார்வையாளரான தினேஷ் குமாரோ, ஆய்வுத்திட்டத்தின் பொறுப்பாளரான பேரா.வேல்ராஜோ வளாகத்தில் இல்லை. இரு தொழிலாளர்களையும் சந்தித்த இளம் உதவி ஆய்வாளரே சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டார்.

உண்மையறியும் முயற்சியில் பல அரசு அதிகாரிகளை சந்தித்து பேசிய குழுவிடம், ஊழியர் இழப்பீட்டிற்கான துணை தொழிலாளர் ஆணையர் டொலுவீன் (Toluene) என்ற மிக எளிதில் ஆவியாகிற நச்சுப்பொருளை தொழிலாளர்கள் பயன்படுத்தியதாக தெரிவித்தார். IPC பிரிவு 304A கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவம் வெளிவந்த உடனேயே தலைமறைவாகி இருந்த கவிமீனா நிறுவனர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். உண்மையறியும் குழு சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட போது, ரப்பர் கரைப்பொருள் கலக்கப்பட்ட வாலியும், பிரஷ்ஷும், காற்றை வெளியேற்றும் மின்விசிறியும் காண முடிந்தது. முற்பகல் 11 மணியில் இருந்து, பிற்பகல் 4 மணி அளவில் உதவி ஆய்வாளர் கைபேசியில் அழைக்க முயற்சிக்கும் வரை யாரும் அவ்விரு தொழிலாளர்களுடன் தொடர்பில் இல்லாததால் (தொழிலாளர்களின் கைபேசி காவல்துறையால் மீட்கப்படவில்லை), நடந்த நிகழ்வுகளின் துல்லியமான அணிவகுப்பு தெளிவற்றே இருக்கிறது. கைபேசியில் தொடர்புக்கொள்ள இயலாததை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் கட்டிட இடத்திற்கு சென்று பார்க்க, இரு தொழிலாளர்களும் மயங்கிய நிலையில் பாதாள தொட்டியில் கிடந்துள்ளனர். அருகில் இருந்த சில இடம்பெயர் தொழிலாளர்களால் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தீபனும் ரமேஷும் பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி வந்து பரிசோதிக்கும் போது, உயிரோடு இல்லை.

கோட்டூர்புரம் காவல்துறை மேலாளர், தான் அக்கட்டிட இடத்திற்கு சென்றபோதே பயன்படுத்தப்பட்ட டொலுவீனின் துர்வாசம் காற்றில் நிலவியதாக தெரிவித்தார். DISH என்ற தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான இயக்குனரகம் (தொழிற்சாலைகளின் ஆய்வுத்துறை என முன்பு அறியப்பட்டது) என்ற அரசு பிரிவே பணி இடத்தில் பாதுகாப்பு விதிகளை செயல்படுத்தி, விபத்துகளை விசாரிக்கும் கடமையும் கொண்டது. இந்த சம்பவத்தில், தொழிற்சாலைகள் சட்டமோ (1948) கட்டிட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் சட்டமோ செல்லாது என்று அவர்கள் கூறிவிட்டனர். அண்ணா பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தளமாக இல்லாததாலும், கட்டிட பணியில் 10 தொழிலாளர்களுக்கு குறைவாகத்தான் ஈடுபட்டதாலும், எந்த ஒரு சட்டமும் பொருந்தாது என்று DISH துறை முடிவெடுத்து மேற்கொண்டு விசாரிக்க எந்த சட்டபூர்வ அடிப்படையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் காவல்துறையிடமும் தொழிலாளர் துறையிடமும் மட்டுமே தண்டனை நடவடிக்கைக்கான பொறுப்பு மிஞ்சி உள்ளது.

ஊழியர் இழப்பீட்டிற்கான துணை தொழிலாளர் ஆணையர் தாமாக முன்வந்து சட்டரீதியாக சம்பவத்தை விசாரித்து இழப்பீட்டு தொகையையும் முதலாளிகளின் பொறுப்பையும் தீர்மானிக்க, இரு முதலாளிகளையும் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களையும் ஆஜராக அழைப்பு விடுத்துள்ளார் துணை ஆணையர். இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.8.66 லட்சம் என்ற அளவில் மட்டுமே இழப்பீடு கிடைக்க வாய்ப்பிருக்கையில், நன்று உழைக்கும் திறன் கொண்ட குறைந்தபட்சம் 35 ஆண்டுகள் பணி வாழ்வை இழந்த இளம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இத்தொகை கண்டிப்பாக போதுமானது அல்ல.

இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை பணியிடங்களின் பாதுகாப்பின்மையை முன்னிறுத்தியுள்ளது.முழுமையான அனைவருக்குமான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான சட்டம் இல்லாத நிலையில், ஏராளமான சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் ஒவ்வொன்றும் உள்ளடக்கி இருக்கும் விலக்குகள் காரணமாக இத்தகைய கவனமின்மைகளை பிடிக்க எந்த வலையும் இல்லை. இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகையின் கிட்டத்தட்ட 92% அமைப்புசாரா துறைகளிலேயே ஈடுபட்டிருக்க, இத்தகைய விபத்துகளும் இறப்புகளும் கட்டுப்பாடில்லாமல் தொடரக்கூடிய ஆபத்தான சூழலே நிலவுகிறது. இதில் மேற்கொண்டு தொழிற்சாலைகள் சட்டம் உட்பட பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களின் அமலாக்கத்தை தளர்த்து போகச்செய்யும் இந்திய அரசின் சீர்திருத்தங்கள்“, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை எவ்வித சட்ட பாதுகாப்பின் கீழும் காக்காமல் பேராபத்தில் சிக்கவைக்கும் நடவடிக்கையாகவே அமையும். இது போன்ற சம்பவங்களில், முதன்மை ஊதியம் பெறும் உறுப்பினர்களை இழந்துவிடும் தொழிலாளர்களின் குடும்பங்கள், மேலும் ஏழ்மை மற்றும் பரிதவிப்பிற்கு ஆளாக்கப்படும் நிலையில், சிறிதும் போதாத இழப்பீட்டு தொகையை வழங்கும் ஊழியர் இழப்பீட்டு சட்டத்தின் விதிகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

எல்லோருக்கும் பொருந்தும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான சட்டத்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்வது போக, டொலுவீன் போன்ற நச்சு இரசாயனங்களை கையாளும் போது அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களோ போதுமான மேல்பார்வையோ கூட அளிக்காத முதலாளிகளின் அலட்சியத்தை இக்குழு சுட்டிக் காட்டுகிறது.இழப்பீடு என்பது நீதி பெறுவதில் அத்தியாவசிய அம்சமாக இருந்தாலும், அரசு துறைகளையும் (தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான இயக்குனரகம்) முதலாளிகளையும் (அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கவிமீனா ரப்பர் சாதனங்கள்) மேம்படுத்தப்பட்ட தண்டனைக்கு உள்ளாக்குவதும் கடமைகளுக்கு பொறுப்பேற்க வைப்பதுமே தொடர் அத்துமீறல்களை தடுக்க கூடிய ஆற்றல் கொண்டது. இவ்வறிக்கை, நாட்டின் பெரும்பான்மை தொழில்படையின் பாதுகாப்பை பறிக்கும் நடைமுறையில் உள்ள சட்டங்களின் ஓட்டைகள் மீதும் அவை எதிர்கொள்ளும் பின்னோக்கிய சீர்திருத்தங்கள் மீதும் வெளிச்சம் தூவும் என நம்புகிறோம். ரசாயனங்களை கையாளுவதில் மருத்துவ மேதமையின் தேவையையும் இது போல் நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான மையங்கள் அமைத்து, அரசு மருத்துவமனைகளோடு அதனை இணைத்து டில்லி AIIMS மருத்துவமனையில் உள்ள தேசிய நஞ்சு குறித்தான தகவல் மையத்துடன் (National Poison Information Centre) ஒருங்கிணைக்கும் பரிந்துரையை மாநில அரசாங்கம் பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

இறுதியாக, தீபன் மற்றும் ரமேஷ் சங்கரின் குடும்பத்தினர் சட்டவழியில் நியாயமான இழப்பீடும் மாநில அரசிடம் இருந்து உடனடி நிவாரண தொகையும் பெறுவார்கள் என கோருகிறோம்.எங்களது இவ்வறிக்கையில் உள்ள படிப்பினைகளும் பரிந்துரைகளும், அனைத்து தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பான பணியிட உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய பாதையில் சிறு அடியாக அமையும் என நம்புகிறோம்.

உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்:

1. முதலாளிகள் மீது தற்போது போடப்பட்டுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்(304) என்ற தண்டனை அதிகரிக்கப்பட்டு கொலையில்லாத குற்றவியல் மரணம்(304) ஆக அதிகரிக்கப்படவேண்டும். பாதுகாப்பு முறைகள் தெரியாது என்ற முதலாளிகளின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல.

2. இந்திய அரசு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கையை அறிவிக்க வேண்டும். இது குறித்த உலகத் தொழிலாளர் நிறுவனம்(.எல்.) சாசனம் 62ஐ உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இதற்கான சட்டங்களை இயற்றி செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளை தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டங்களை செயல்படுத்த நிர்பந்திக்க வேண்டும்.

3. தமிழ்நாடு அரசு உடனடியாக தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கையையும், அதற்கான சட்டத்தையும் உடனடியாக இயக்க வேண்டும். அமைப்புசார்ந்த, அமைப்புசாராத, உள்ளுர் தொழிலாளர்கள், இடம் பெயரும் தொழிலாளர்கள், சிறிய, பெரிய நிறுவனங்கள், பதிவு பெற்ற, பதிவு பெறாத நிறுவனங்கள் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

4. தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பொறுப்புகள் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த இயக்ககத்தை முக்கிய பொறுப்பில் வைக்க வேண்டும். பாதுகாப்பிற்கான முறைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவதிலும் விபத்துகளை தடுப்பதற்கும் இயக்ககம் தானாக முன்வந்து செயல்பட வேண்டும். தற்போது விபத்துகள் ஏற்பட்ட பின்னர் தான் இயக்ககம் நடவடிக்கை எடுக்கின்றது. விபத்துகளை தடுப்பதற்கான பொறுப்பு இயக்ககத்திற்கு தரப்பட வேண்டும்.

5. அரசு மருத்துவமனைகளிலும், ஊரக சுகாதார திட்டத்திலும், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை மாநில அரசு உருவாக்க வேண்டும். இதில் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் உதவியாளர்களும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் தற்போது உள்ள தேசிய விஷ தகவல் மையங்களுடன் இந்த சுகாதார மையங்கள் இணைந்து வேலை செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.

6. தொழிலாளர் துறையின் பொறுப்புகள் அனைத்து வேலையிடங்களிலும் எத்தனை தொழிலாளர்கள் இருந்தாலும் அவர்களை பதிவு செய்து நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். விபத்து நேரும் போது தொழிலாளர் துறை இழப்பீட்டை நிர்ணயம் செய்யும் வேலை மற்றும் அவற்றை பெற்றுதரும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. இதையும் தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.

7. பொதுத் ஆய்வு நிறுவனங்களில் பாதுகாப்பு முறைகள் அண்ணா பல்கலைகழகம் போன்ற ஆய்வு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் முறையான பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய வேண்டும். இங்கு நடக்கும் ஆய்வுகளில் பலவகையான தொழில்நுட்பங்களும் பொறியியல் வேலைகளும் கண்டுபிடிப்பகளும் உபயோகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கான பொருத்துதல், கட்டுமானம், பராமரித்தல் வேலைகள் அதிகம் இருக்கும். இதனால் பல்கலைகழகத்திலும், ஆய்வு மையங்களிலும், தனியார் மையங்களிலும் சரியான பாதுகாப்புகளை உறுதிசெய்ய பாதுகாப்பு அலுவலகர் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் பொருட்களை கையாளுவது, ரசாயனங்களை கையாளுவது, வேலை நேரம், மேற்பார்வை, பாதுகாப்பு விதிகளை மீறினால் அதற்கான தண்டனை ஆகியவ்றை உறுதி செய்ய வேண்டும்.

8. தொழிலாளர் ஒருவர் இறந்து விட்டால், தற்போது தொழிலாளர் இழப்பீட்டு சட்டம் 1923(2010ல் திருத்தம் செய்யப்பட்டது)ன் கீழ் பெறக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ9.12 தொழிலாளரை இழந்த குடும்பத்தினருக்கு மிகவும் குறைவான நிவாரணம் ஆகும். இவ்வாறு செய்யப்படும் இழப்பீடு வெறும் பண விஷயமாகக் கருதப்படாமல், முதலாளிகள் மற்றும் சமூகத்தின் மேல் உள்ள குற்றச்சாட்டிற்கான மதிப்பீடாகக் கருதப்பட வேண்டும். அதனால் சட்டத்தின் கீழ் உள்ள இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். இது குறித்து அரசு, தொழிற்சங்கங்கள், மற்றும் முதலாளிகள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, சட்டத்தின் கீழ் இழப்பீடை மதிப்பீடு செய்யும் முறையை பரிசீலிக்க வேண்டும். வேலையிடங்களில் நடக்கும் உயிரிழப்புகளுக்கு குறைந்த பட்சம் 30 லட்ச ரூபாய் உறுதிபடுத்த வேண்டும். மேலும் அரசு இழப்பீட்டின் 50 சதத்தை விசாரணை என்று தாமதப்படுத்தாமல் உடனடியாக கொடுக்க வேண்டும்.

9. தொழிலாளர் வேலை பாதுகாப்பின்றி இறக்கும் போது, தமிழ்நாடு அரசு அவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 5 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில் இருந்து இந்த நிவாரணத்தை கழிக்கக் கூடாது.

Dr.Madhumita Dutta 
Meghna Sukumar
G.Selva 
K. Sudhir 
V.Srinivasan

Download (PDF, 686KB)

This entry was posted in Construction Workers, Factory Workers, Labour Laws, labour reforms, News, Resources, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.