தொழிற்சாலைகளின் வன்முறை

ஜுலை 18, 2012 அன்று மாருதி தொழிற்சாலையின் கலவரத்தில் இறந்த மனிதவள மேலாளரின் மரணத்தை கொலை என மாருதி நிர்வாகமும், அரசும், ஊடகங்களும் வர்ணித்துள்ளன. அரசுத் துறைகள் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து, அவர்களின் மேல் பல குற்றங்களை சுமத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பலத் தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மரணம் கொலையா அல்லது விபத்தா என்ற கேள்வியை இந்த தருணத்தில் நாம் கேட்கவேண்டியுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் நடக்கும் வன்முறைகளை எப்பொழுது விபத்தாக அல்லது கொலையாக கணிக்கப்படுகிறது என ஆராய வேண்டியுள்ளது.

 

31, அக்டோபர் 2011 அன்று நோகியா தொழிற்சாலையில், அம்பிகா எனும் தொழிலாளர் இயந்திரத்தில் மாட்டிய ஒரு உபகரணத்தை நீக்கும் போது இயந்திரம் நசுக்கி இறந்தார் i. ஆகஸ்;ட் 7, 2012ல் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் கிரேண் உடைந்து தொழிலாளர்கள் மேல் விழுந்ததில் ஒருவர் இறந்து மேலும் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர் ii. அதற்கு 2 நாட்கள் முன்னர், காஞ்சிபுரத்தின் அருகே அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் ஒரு மைதானச் சுவர் இடிந்ததில் 12 இடம் பெயர் தொழிலாளர்கள் இறந்தனர். ஆகஸ்ட் 14,2012 அன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் அனல்மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் கருகி இறந்தனர் 6 பேர் படுகாயமடைந்தனர். காஃபிலா இணையதளத்தில் இது குறித்து எழுதப்பட்ட தொழிற்சாலைகளும் மரணங்களும் எனும் கட்டுரையில் தோழர் சுத்தப்ரதா சென்குப்தா கூறுகிறார்: ‘தொழிற்சாலைகள் மனிதர்களை கொல்லுகின்றன. சில நேரங்களில் இறப்பவர்கள் நிர்வாகிகளாகிறார்கள். பெரும்பாலும் இறப்பவர்கள் தொழிலாளர்கள்iii.

 

தொழிற்சாலைகளில் சரியான பாதுகாப்பு அரண்கள் இல்லாமையே மேலே கூறப்பட்ட அனைத்து இறப்புகளுக்கு காரணம் ஆகும். முதலாளிகளின் லாபத்திற்காக பாதுகாப்பு முறைகள் தொழிற்சாலைகளில் கைவிடப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் விபத்திற்கு பின்னர், அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கிரேண்கள் சில பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியபட்டது iv. ஆனால் விபத்திற்கு பலிகடாக்கப்பட்டது கிரேண் ஆபரேட்டராகும். அம்பிகாவின் மரணத்திற்கு அவரின் கவனக்குறைவே காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது தான் சில விபத்துகளுக்கு நிர்வாகிகள் கைது செய்ய்பபட்டு வருகின்றனர். (ஜேப்பியார் கல்லூரியில் நடந்த விபத்திற்கு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார்). பெரும்பான்மை விபத்துகளில் இவை நடப்பதில்லை. ஆகஸ்ட் 2009 ல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் கசிந்த வாயுவினால் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கபட்டு மயங்கிய போது தொழிலாளர்கள் ஒரு இந்து பண்டிகையின் விரதத்தினால் மயங்கினர் என ஒரு புதுவகையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்தின் காரணம் கண்டுபிடிக்கப் படாமலேயே தொழிற்சாலை மறுபடியும் திறப்பதற்கு தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் அனுமதி வழங்கத் தயங்கவில்லை.

 

இவ்வாறு நடக்கும் பல விபத்துகள் எங்கேயும் பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நடக்கும் விபத்துகளுக்கு முதன்மை முதலாளிகள் பொறுப்பு எடுப்பதி;ல்லை. கட்டுமான இடங்களில் இடம் பெயர் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகும் போது உடனேயே அவர்கள் தனது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப் படுகின்றனர். தொழிலாளர்களும் மரணங்களும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள படி ‘2009ல் இந்திய அரசாங்க பதிவுசெய்யப்பட்ட கணக்குப்படி வேலையிடத்தில் 668 மரணங்கள் நடந்துள்ளன. உலகத்திலேயே மிகவும் அதிகமான தொழிற்சாலை மரணங்கள் குறித்த உண்மைகள் இந்திய அரசாங்கத்தால் மறைக்கப்படுகிறது என உலகத் தொழிலாளர்கள் அமைப்பு ஐ.எல்.ஓ கூறியுள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 40000 மரணங்கள் தொழிற்சாலை விபத்துகளால் ஏற்படுகின்றன என 2005ல் வெளியிடப்பட்ட அவர்களின் அறிக்கை கணிக்கின்றது.’

 

தொழிலாளர்களின் தற்கொலைகள் இந்த கணக்கெடுப்பில் வருவதி;ல்லை. சில மாதங்களுக்கு முன்னர் பாஹ்ரேனில் தமிழ்நாட்டு தொழிலாளர் பசுபதி மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டார்v. தனது குடும்ப மேம்பாட்டிற்காக நாடு விட்டு நாடு சென்று தனது வாழ்வைத் தொலைத்தவர் இந்த தொழிலாளர். நாஸ் கட்டுமானம் எனும் பெரும்பணக்கார நிறுவனத்தில் வேலை செய்து தனக்கு சரியான ஊதியம் தரவில்லை என 100க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் முறையிட்ட போது, நாஸ் நிறுவனம் பாஹ்ரேன் கோர்ட்டுகள் மூலம் இந்த தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு தடை விதித்தது. சொந்த நாட்டிற்கு கூட திரும்ப முடியாமல வேறு வேலையும் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்களில் 26வது நபர் பசுபதி ஆவார். சுத்தப்ரதா சென்குப்தா கூறுகிறார் தொழிலாளர்களின் தற்கொலைகள் அரபு நாடுகளில் மட்டும் நடப்பதில்லை. திருப்பூரின் நெசவு ஆலைகளிலும், குஜராத்தின் வைரத் தொழில்களிலும், மேற்கு வங்காளத்தின் ஜுட் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. மத்திய இந்தியாவில் நகரங்களில் உள்ள தொழிலாளர்களின் தற்கொலைகள் விவசாயத் தற்கொலைகளுக்கு சமம் என மனித இன நூலர் ஜொனாத்தன் பெர்ரி கூறியுள்ளார்.’

 

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கோரும் போதும் அவர்கள் மேல் வன்முறை அவிழ்த்து விடப்படுகிறது. கடந்த ஆகஸ்;ட் 16ம் தேதியில் சுங்குவார்சத்திரத்தின் அருகே எல் அன்ட் டி தொழிற்சாலையின் முன் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறை நடத்திய தடியடியில் 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். தொழிற்சங்கம் அமைத்ததற்காகவும் தங்கள் உரிமைகளை கோரியதற்காகவும், ஹுண்டாய், ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டு தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் மட்டும் நேரவில்லை. இந்தியாவில் இன்றைய நவீன தாராளமயத்தின் சின்னங்களான குர்காவ், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்களின் உரிமைகளை ஓடுக்கப்படுவது புதுவகை யதார்த்தமாகும். அக்டோபர் 2009ல் குர்காவ் பகுதியில் உள்ள கியர் மற்றும் பிரேக் தயார் செய்யும் நிறுவனத்தில் நடந்த போராட்டத்தில் அஜித் எனும் தொழிலாளர் இறந்தார். ஜுலை 2005ல் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவ் பகுதியில் உள்ள ஹோண்டா வாகனத் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி பிரயோகம் செய்தது vi. பல தொழிற்சங்கவாதிகளும் தொழிலாளர் நலன்களுக்கு போராடிய காரணங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தை சார்நத சுனில் பால், சஃப்தார் ஹஷ்மி, ராம் பகாதுர், தத்தா சமாந்த், சங்கர் குஹா நியோகி ஆகியோர் ஆவர் (தொழிற்சாலைகளும் மரணங்களும்)

 

வேலையிடங்களில் நடக்கும் வன்முறைகள் பன்முகங்களை கொண்டவை. பெரும்பாலும் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் கைகளை கொண்டு தொழிலாளர்கள் மேல் செலுத்தப்படுபவை. லாபத்திற்காக பாதுகாப்பு முறைகளை கைவிடப்படும்போதும், தொழிலாளர்களின் சட்டரீதியான உரிமைகள் கூட பறிபோகும் போதும், தொழிலாளர்களை துன்புறுத்தும்போதும், அவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படும் போதும் தொழிலாளர்களின் மேல் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வன்முறைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. இந்த செயல்களின் மூலம் அரசும், நிறுவனங்களும் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்துவதில்லை எனும் கூற்றை தொடர்ந்து நிரூபித்துவருகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் மேல் சட்டங்களை பாய்ச்சுவது மட்டுமல்லாமல்(சட்டரீதியான உரிமைகளைக் கோரும் பொழுதும்) தொழிலாளர்களால் சட்டத்தின் வரம்புகளை மீறமுடிவதில்லை.

 

தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து நசுக்கிவந்த மாருதி நிர்வாகத்தை அரசு கட்டுப்படுத்தாமல் விட்ட காயத்தின் எதிரொலியே மாநேசர் மாருதி தொழிற்சாலையில் நடந்த கலவரம். அரசின் மேலும், நிர்வாகத்தின் மேலும் தங்கள் நம்பிக்கையை இழந்த தொழிலாளர்களின் கோபம் கலவரமாக வெடித்தது. ஆனால் இந்த படிப்பினையை அரசும் நிர்வாகமும் கற்றமாதிரி தெரியவில்லை. அவர்கள் பழைய முறைகளையே கையாண்டுவருகின்றனர். கலவரம் குறித்து நிர்வாகமும், தொழிலாளர் தலைவர்களும் வேறு விளக்கங்களை கொடுத்துள்ளனர். அரசோ நிர்வாகத் தரப்பு வாதத்தை மற்றும் வைத்து தொழிலாளர்களின் மேல் வழக்குகளை தொடுத்து வருகின்றனது. இதுவரை நடந்த மற்றப் பிரச்சனைகளும் கணக்கில் எடுக்கப்படவில்லை.

 

மேலாளர் திரு அவினாஷ் தேவ் அவர்களின் மரணம் அசம்பாவிதமானதே ஆனால் முதலாளித்துவத்தின் அநீதியினால் கொல்லப்பட்ட, வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீதி எங்கே? நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டும், 500 தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் போபால் விஷவாயு சம்பவத்தில் ஆயிரக்கணக்கான பேர் இறந்தும் யூனியன் கார்பைட் நிர்வாக அதிகாரி வாரன் ஆண்டரசன் இதுவரை கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவின் சோஷலிஸ்ட் எழுத்தாளர் உப்டன் சிங்க்லேர் எழுதியபடி குற்றவாளியோ நிரபராதியோ, சமூகம் ஒரு தொழிலாளருக்கு செய்த கொடுமையில் பத்தில் ஒரு பங்குகூட அவர் சமூகத்திற்கு திரும்ப செய்ததில்லை. அவர்களின் மேல் சட்டத்தைப் பாய்ச்சிய அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு உள்ள குற்ற உணர்வில் பத்தில் ஒரு பங்குகூட தொழிலாளருக்கு இல்லை.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.