மாருதி மாநேசர் தொழிலாளர்கள் மோதல்களின் வரலாறு

தாராளமயத்தின் பிண்ணனியில் நடைபெறும் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள மோதல்களை ஆராய்வதற்கு மாருதி நிறுவனம் சிறந்த உதாரணமாக உள்ளது. 1983ல் தொடங்கப்பட்ட மாருதி வாகனத் தயாரிப்பு நிறுவனம் திறமையாக செயல்பட்டு வந்த ஒரு பொது நிறுவனமாகும். 1991ற்கு பிறகு நடந்த இந்தியப் பொருளாதார மாற்றத்தில் இந்திய அரசு கடைபிடித்தக் கொள்கைகளில் ஒன்று பொது நிறுவனங்களை தனியார்களுக்கு விற்பது. ஏற்கனவே இதில் சிறுபான்மை முதலீடுதாரராக இருந்த ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் சுசுகி 2002ல் 54.2% முதலீடு செய்து பெரும்பான்மை முதலீடுதாரராகவும் தொழிற்சாலையின் நிர்வாகத்தையும் கைபற்றியதுi. மற்ற பங்குகள் நிதி நிறுவனங்களின் கையில் உள்ளதுi. 2000த்திலிருந்து மாருதியின் தொழிற்சங்கங்கள் நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுவதையும், ஊதிய உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமைகளுக்காகவும் போராடி வருகின்றன.

2007ல் தொடங்கப்பட்ட மாருதி மாநேசர் தொழிற்சாலை அமைப்பதற்கு சுமார் 600-3000 ஏக்கர் நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியுள்ளதுii(மாருதி தொழிற்சாலை தனது இணையதளத்தில் 600 ஏக்கர் எனக் குறிப்பிட்டுள்ளது. ஃபர்ஸ்ட்போஸ்ட் இணையதளப் பத்திரிக்கையில் உள்ளுர் மக்கள் 3000 ஏக்கர் எனக் குறிப்பிட்டுள்ளனர்). இதற்கு அன்று அவர்கள் கொடுத்த விலை ஏக்கருக்கு 2.25 லட்ச ரூபாய். இன்று இதற்கு அருகாண்மையில் உள்ள நிலங்கள் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வரை போவதாக விவசாயிகள் மேலும் நிலக் கையகப்படுத்தலை எதிர்த்து போராடி வருகின்றனர். மாருதி கலவரத்திற்கு அடுத்த நாள் உச்சநீதி மன்றம் மாருதி நிர்வாகத்தை விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடாக ரூ235 கோடியை செலுத்த தீர்;ப்பளித்துள்ளது. அருகில் உள்ள குர்காவ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால், உள்ளுர் தொழிலாளர்களை பணிநியமனம் செய்ய மாருதி நிர்வாகம் மறுத்துவிட்டது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இடம் பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தொழிற்சாலையில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களே. மாருதி நிர்வாகம் இதற்காக 80 ஒப்பந்ததாரர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மாருதியின் நிரந்தரத் தொழிலாளர் ரூ25000 வாங்குகிறார். பெரும்பான்மையான தொழிலாளர்கள்(1500க்கும் மேலே) ஒப்பந்த அடிப்படையில் இதில் பாதிக்கும் குறைவாகவே ஊதியம் வாங்குகின்றனர். கலவரத்திற்கு முன்னர் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் தொழிற்சங்கம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று வருட காலத்தில் மாதம் 15000 ரூபாய் உயர்வதற்கு கோரி வந்ததுiii . ஊதிய உயர்வு கோரிக்கைகளை பல ஊடகங்கள் மிகையானவை மற்றும் நியாயமற்றவை என எழுதியுள்ளனர். ஏப்ரல் 2012ல் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தங்களுடைய தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டதால் ஊக்கமடைந்த தொழிலாளர்கள் அடிப்படை ஊதியத்தில் ஐந்து மடங்கு உயர்வு கோரியுள்ளனர்எனக் கூறியுள்ளதுiv. எ கலவரத்திற்கு பின்னர் ஆங்கிலப் பத்திரிக்கை இந்து தனது தலையங்கத்தில் தொழிலாளர்கள் (குறைவான ஊதியத்தால்) மிகவும் வெறுத்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் நுகர்வோர் கலாச்சாரத்தின் சூழலில் இதை (ஊதிய உயர்வு கோரிக்கையை) நாம் காணவேண்டியுள்ளதுஎனக் கருதியுள்ளது.

ஆனால் நடைமுiயில் உள்ள பணவீக்கத்தை ஈடுகட்டவே தொழிலாளர்கள் ஊதிய உயர்வை கோருகின்றனர். கடந்த வருடத்தில் ஆய்வாளர்கள் பிரசஞ்சித் போஸ், சௌரீந்த்ரா கோஷ் மாருதி ஆண்டறிக்கைகளை ஆய்ந்து கண்டுபிடித்துள்ளபடிv, ‘2007 முதல் 2011 வரை மாருதி தொழிலாளர்களின் ஊதியம் வருடத்திற்கு 5.5% உயர்ந்துள்ளது. அதே சமயம் அந்தப் பகுதியில் நுகர்வோர் மதிப்பு குறியீடு (பொருட்களின் மதிப்பீடு) 50% உயர்ந்துள்ளது. 2001ல் இருந்து கணக்கெடுத்தால் மாருதியின் லாபம் (வரிக்கு பின்னர்) 2200% உயர்ந்துள்ளது.’. இந்த லாபங்கள் தொழிலாளர்களின் உண்மையான ஊதியத்தை குறைப்பதனால் ஏற்படுத்தப்பட்டவை என போஸ், கோஷ் அவர்கள் கூறுகின்றனர். இதற்கு மாறாக மாருதியின் முதன்மை நிர்வாக அதிகாரி (சி..) யின் ஆண்டு ஊதியம் 47.3 லட்சத்திலிருந்து 2.45 கோடி ரூபாய் அதாவது 419% உயர்ந்துள்ளது. மாருதியின் தலைவர் ஊதியம் 91.4% உயர்ந்துள்ளது. மாருதியின் உற்பத்தியில் உயர்ந்துள்ள லாபங்கள் எவ்வாறு நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதை இவை கோடிட்டு காட்டுகின்றன. இந்தியாவில் உள்ள வாகனத் தொழற்சாலைகளில் அனைத்திலும் நிறுவன விற்பனை பணத்தில் தொழிலாளர்களின் செலவுகளின் பங்கை எடுத்து கொண்டால் மாருதி நிறுவனமே மிகவும் குறைவாக தொழிலாளர்களுக்காக செலவு செய்கின்றது என என்.டி.டி.வி ப்ராஃபிட் கூறியுள்ளதுvi.

தொழிலாளர்களின் பிரச்சனைகள் ஊதிய உயர்வை மட்டும் கொண்டதல்ல. ஒரு கட்டத்தில் வாகனங்களுக்கு கிராக்கி அதிகரித்ததால் மாருதி நிர்வாகம் தன்னுடைய உற்பத்தி திறனை கூட்டாமல் இருக்கும் தொழிற்சாலைகளிலேயே உற்பத்தியை கூட்டியது. வருடம் 250000 செய்யக்கூடிய தொழிற்சாலைகளில் 350000 வாகனங்கள் செய்வதற்கு நிர்வாகம் முனைந்தது. இதனால் அசம்பளி நேரம் குறைக்கப்பட்டு தொழிலாளர்களின் வேலை பளு அதிகரிக்கப்பட்டன. தொழிலாளர்கள் தேநீர் குடிப்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் கொடுக்கப்பட்ட இடைவேளை நேரம் 7.5 நிமிடங்கள் அதாவது 450 வினாடிகளே! இவ்வளவு பளுவை ஏற்றும் எந்த தொழிற்சாலையும் போராட்டத்திற்கு கொண்டு செல்லும் என எவருமே அறிந்தது.

இப்பிரச்சனைகளை உள்ளடக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கம் வாயிலாக தொழிலாளர்கள் கோரிய போது, நிர்வாகம் அதை ஒடுக்கியது. பணிநீக்கம், ஒப்பந்த தொழிலாளர்களை நீக்குதல், தொழிற்சங்கத்தில் சேரமாட்டோம் எனத் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்குதல் எனப் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளை நிர்வாகம் கையாண்டது. 2011ல் தொழிலாளர்கள் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வலுப்பெற்றன. மூன்று முறை மொத்தம் 72 நாட்களுக்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாருதி நிர்வாகம் கூறிய தொழிற்சங்கத்தை எதிர்த்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தும் தொழிற்சங்கத்தின் உரிமைக்காக போரடினர். நிரந்தரத் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு இசைந்த நிர்வாகம் உடனடியாக போராடியத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனால் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் விலகியது. ஒரு உள்ளுர் பத்தரிக்கையில் இதுபற்றி பேசிய ஒரு தொழிலாளர் கூறியது “நிர்வாகம் இங்கு இருக்கும் நிலைமையை புரிந்து கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களில் தொழிலாளர்களை கட்டுப்படுத்தக்கூடிய சில தொழிலாளர் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். அவர்களை நீக்குவது மூலம் தங்கள் கையில் உள்ள நல்ல ஆயுதத்தை நிர்வாகம் இழந்து விட்டது”.

இன்றைய சிக்கலான தொழில் சூழலில் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்குவதற்கு செலவுகளை முக்கியமாக தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கின்றனர். கடந்த 30 வருடங்களில் நிர்வாக உற்பத்தி வருவாயில் தொழிலாளர்களின் ஊதியத்தின் பங்கு 30.3சதத்தில் இருந்து 11.6சதமாக குறைந்துள்ளது. ஆனால் லாபத்தின் பங்கோ 23.4சதத்தில் இருந்து 56.2சதமாக உயர்ந்துள்ளது. இதிலிருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்தியும் அதற்கேற்றவாறு தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் ஈடுகட்டவில்லை எனத் தெரிகிறது. இன்றைய தொழில் நிறுவனங்களின் தாரக மந்திரம் சமூகப் பாதுகாப்பற்ற ஊதியம் குறைவான ஒப்பந்த வேலை என்பதே. 2011-12ல் லோக்சபாவின் அறிக்கைபடி இந்தியத் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பாக்கி வைத்துள்ள ஊதியம் 711 கோடி ரூபாயாகும். இவை வெறும் தொழிலாளர் நீதிமன்றங்களின் முன் வந்த வழக்குகளின் நிலுவை. பல வழக்குகள் இங்கு வருவது கூட இல்லை. இதனால் இந்தியா முழுதும் தொழிலாளரகளுக்கு மத்தியில் அதிருப்தி அதிகமாகி உள்ளது. பிரபலத் தொழிலாதிபர் அசீம் பிரேம்ஜி மாருதி கலவரத்தை சமூகத்தில் இன்று நிலவும் அதிருப்தியின் எதிரொலிஎன வர்ணித்துள்ளார். தொழிற்சங்க உரிமைகளை மறுக்கும் தொழில் நிறுவனங்களின் போக்கு தொழிலாளர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. மாருதி மாநேசரில் நடந்த கலவரமும், மற்ற பகுதிகளில் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், பங்களுர், புனா, யானம் ஆகிய இடங்களில் நடந்துள்ள மோதல்களும் இந்த அதிருப்திகளின் எதிரொலியே. தொழிலாளர்களின் அதிருப்தியின் காரணங்களையும் அதைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

 Brendan Donegan(Translation: Chandrika)

i http://en.wikipedia.org/wiki/Maruti_Suzuki

ii http://www.firstpost.com/business/factory-people-how-manesars-fortunes-swing-with-marutis-390707.htm

iii http://profit.ndtv.com/News/Article/maruti-likely-to-sack-workers-with-manesar-violence-charges-ten-facts-309414

iv http://profit.ndtv.com/News/Article/maruti-likely-to-sack-workers-with-manesar-violence-charges-ten-facts-309414

v http://www.thehindu.com/opinion/op-ed/article2490903.ece

vi http://profit.ndtv.com/News/Article/maruti-likely-to-sack-workers-with-manesar-violence-charges-ten-facts-309414

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.

One Response to மாருதி மாநேசர் தொழிலாளர்கள் மோதல்களின் வரலாறு

  1. Pingback: தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam) » An Appeal to Workers and Masses from Maruti Suzuki Workers Union

Comments are closed.