தேசிய பொது வேலை நிறுத்தம் – சென்னையில் நடைபெற்றப் போராட்டங்கள்

செப்டம்பர் 2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் தேசிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தத்தை ஆதரித்து போரட்டங்கள் நடைபெற்றன. மத்திய தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி கட்சி சார்பற்ற இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சி சார்ந்த மாநிலத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்து போராட்டங்கள் நடத்தின.

rippon_small

வேலை நிறுத்தங்கள்

திருவொற்றியூர் பகுதியில் பால்மர்லாரி நிறுவனத்தின் 95 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் நிர்வாகம் விடுமுறை அளித்தது. அஷோக் லேலன்ட் மற்றும் எண்ணூர் பவுண்ட்ரீஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அம்பத்தூர் சுமார் 600 தொழிலாளர்கள் வேலை செய்யும் டிஐடிசி தொழிற்சாலையில் முழு அடைப்பு ஏற்பட்டது. டிகே என்ஜினியரிங் மற்றும் திருவொற்றியூர் மாடல் ஏஜ் மெட்டல் தொழிற்சாலைகளில் பல நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. தேசிய வேலை நிறுத்தத்தின் போது கார்மென்ட்ஸ் தொழிற்சாலைகள் சில தொழிலாளர்களுக்கு விடுமுறை விட்டுள்ளதாகவும் கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுஜாதா மோடி தெரிவித்தார்.

போராட்டங்கள்

காலை 10:30 மணியளவில் சென்னை கிண்டி ரயில் நிலையம், புரசைவாக்கம், அண்ணா சாலை மன்ரோ சிலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவொற்றியூர், செங்கல்பட்டு பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டிடிஎஸ்எப், டபிள்யுபிடியுசி, எல்பிஎஃப், ஐஎன்டியுசி தொழிற்சங்கங்களைச் சார்ந்த 500-2000 தொழிலாளர்களும் சங்கப் பிரதிநிதிகளும் சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யபட்டனர். இப்போராட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், பேக்டரித் தொழிலாளர்கள், ஆட்டோத் தொழிலாளர்கள், பொதுத்துறைத் தொழிலாளர்கள் குறிப்பாக பிஎஸ்என்எல், அஞ்சல், கல்பாக்க அணுமின் நிலையத் தொழிலாளர்கள், குடிநீர் வாரியத் தொழிலாளர்கள், செயின்ட் தாமஸ் மவுண்ட் கண்டோன்மன்ட் வாரியத் தொழிலாளர்கள், துப்புரவு போன்றத் தொழிலாளர்கள், ஏர்போர்ட் கார்கோ சேவைத் தொழிலாளர்கள்,கட்டுமானத் தொழிலாளர்கள்; எனப் பல்வேறுத் துறை தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். போராட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பங்கு பெற்றது குறிப்படத்தக்கது. அஷோக் லேலன்ட், கார்பரண்டம், எண்ணூர் பவுண்ட்ரீஸ், தமிழ்நாடு மின்சார வாரியம், பிஎஸ்என்எல், மணலி பெர்டிலைசர்ஸ், எம்டிசி எண்ணூர் அனல்மின் நிலையம், சென்டரல் வேர்ஹவுஸ் கார்ப்பரேஷன், டிஐடிசி இந்தியா, டிகே என்ஜினியரிங், ஹுண்டாய், பென்னர், நிப்பான், இன்டெக், டிஎன்எஃப் ஆட்டோ ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்.

காலை 11:30 மணியளவில் ரெட் ப்ளாக் சங்கத்தைச் சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ரிப்பன் பில்டிங் வாயிலில் போராட்டம் நடத்தினர். காலை 8 மணி அளவில் தாம்பரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான மெப்ஸ் கேட்டை மறித்ததை அடுத்து கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பெண் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக சுமார் 50 தொழிலாளர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யபட்டனர். இருசக்கர வாகன பராமரிப்பு சங்கத்தைச் சார்ந்த 1000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சென்னை துறைமுகத்தின் அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணியளவில் சுமார் 40 டிடியுசி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தை நடத்தினர்.

கோரிக்கைகள்

அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியமான ரூ18000 என்பது இந்த போராட்டத்தில் முக்கியமான கோரிக்கையாக எழுந்துள்ளது. ஏர்போர்ட் கார்கோ ஒப்பந்ததாரர் தொழிலாளர், டிகே என்ஜினியரிங் தொழிலாளர், மற்றும் மாநகராட்சி துப்புரவத் தொழிலாளர்கள் என்று பல தரபட்டத் தொழிலாளர்கள் இன்றும் 8 முதல் 12 மணி நேர வேலைக்காக ரூ6500-10000 ஊதியமாக வாங்குகின்றனர். நெடிய போராட்டத்திற்கு பின்னர் 2014 டிசம்பரில் கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு தொழிலாளருக்கு மாதம் ரூ7000-8000 மாத வருமானம் கிடைக்க வேண்டும். இதை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட முதலாளிகள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் 2016 ஜுலை 15 அன்று உயர்நீதி மன்றம் வழக்கை நிராகரித்து கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து 2014ல் இருந்து நிலுவைத் தொகையையும் உறுதி செய்தது. தொழிற்சங்கத்தின் துணைத் தலைவரும், மெப்சில் ஆப்பரேட்டராக வேலை செய்யும் தில்லி நிறுவனங்கள் நிலுவைத் தொகையை தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். சில நிறுவனங்கள் குறைந்த பட்ச ஊதியத்தை செயல்படுத்தியதாக காட்டுகின்றன ஆனால் பல காரணங்களை சொல்லி ஊதியத்தில் இருந்து பணத்தை கழித்து விடுகின்றன. இதன் மூலம் அவர்கள் ஊதியத்தை முன்னர் இருந்த படியே தான் கொடுத்து வருகின்றன.

2011-12ல் சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட போது மற்ற நகராட்சிகளில் இருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை மஸ்டர் ரோலில் மாநகராட்சி இணைக்கவில்லை என்று சீனிவாசுலு கூறினார். 400 தொழிலாளர்கள் மாநகரக் குடிநீர் துறையில் வேலையில் சேர்த்து கொள்ளப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட மாநகராட்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ600 தரப்படவேண்டும் என்றும் இதுகுறித்து அமைக்கப்பட்ட குழு ஒன்று நாள் ஒன்றுக்கு ரூ500 பரிந்துரை செய்துள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகம் தொழிலாளர்களுக்கு ரூ320 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இன்றும் கூட பல்வேறு பிடித்தங்கள் போகத் தொழிலாளர்கள் ரூ240 என்று குறைவான ஊதியமே பெருகின்றனர்.

வேலை நிறுத்தத்திற்கு முன்னர் மத்திய அரசு விவசாயத்தில் வேலை செய்யாத மற்றத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை ரூ350 ஆக உயர்த்துவதாகக் கூறியது. போராட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்று கூறிய ஏஐசிசிடியுவின் தலைவர் ஏ.எஸ் குமார், அரசுத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குழு ரூ18000த்தை குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்துள்ளதாகவும், அதே ஊதியத்தை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000மாக அறிவித்ததையும் ஆனால் கார்ப்பரேட் நிர்பந்தத்தினால் சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வாபஸ் வாங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ22000த்தை வலியுறுத்தி டிடியுசி தொழிற்சங்கப் பிரதிநிதி சதிஷ் டிடியுசியின் விளக்கக்கூட்டத்தில் உரையாடினார்.

மோட்டர் வாகனப் பராமரிப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் மெக்கானிக் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு நாடுகளின் விதிமுறைகளை சட்டத்தில் அப்படியே திணித்திருப்பதாகவும் இந்திய சாலைகளுக்கு பொருத்தமில்லாத இருப்பதாகவும் தொழிலாளர்கள் கருதினர். போக்குவரத்து துறையை தனியார்மயப்படுத்தும் முயற்சியும், விதிக்கப்படும் அபராதத் தொகைகளும், உதிரி பாகங்களை விற்பதும் மாற்றுவதும் பெரிய நிறுவனங்களின் டீலர்களுக்கும் மட்டும் அனுமதிப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஏஐடியுசியின் ஆட்டோத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேசாஷயியானம், 80சத ஆட்டோக்கள் ஓடவில்லை என்று கூறினார் (பல செய்திகளும் 90சத ஆட்;டோக்கள் ஓடவில்லை என்று குறிப்பிட்டன).

பொதுத்துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஒப்பந்ததாரர் முறையை நீக்குதல், காலியிடங்களை நிரப்புதல், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தல், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் செய்து பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் குரல் கொடுத்தனர். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழித்துகட்ட டாக்டர் அம்பேத்கர் கோரியதை நினைவு கோரியும் இன்றும் அது தொடரும் அவலம் குறித்தும் துப்புரவு தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர்.

போராட்டத்திற்கு அரசின் எதிர்வினை

மத்திய தொழிற்சங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை தடுப்பதற்கு அரசு நெடிய ஷிஃப்டுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தத் தயார் செய்திருந்தது. அதனால் மாநகரப் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு இல்லை. மேலும் போராட்டங்களை தடுப்பதற்கு பேருந்து நிலையங்களில் காவல் துறை நிறுவப்பட்டிருந்தனர்.

Protesters being led to police van for detention

Protesters being led to police van for detention

போராட்டம் நடந்த பல இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டு இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே அவர்கள் போராட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஊடகங்கள் தலைவர்களை அணுகி பேசுவதற்கு அனுமதித்தனர். போராட்டம் நடந்த பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் கைது செய்யபட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

மன்ரோ சாலையில் தொழிலாளர்கள் சேர்ந்தவுடன் தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர். அங்குப் போடபட்டிருந்த தடுப்புகளை நீக்கி தொழிலாளர்களையும் தலைவர்களையும் காவல்துறை வண்டிக்குள் ஏற்றினர். ஆனால் பின்னிருந்த சில தொழிலாளர்கள் மீறி சென்ட்ரல் செல்லும் சாலையை மறித்தனர். இதனால் சில நிமிடங்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. காவல் துறையும் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தலைவர்களிடம் இருந்து சரியான ஆதரவு வெளிப்படாததால் காவல்துறை துரிதமாக தொழிலாளர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

Workers block road towards Central Station

Workers block road towards Central Station

போராட்ட உறுப்பினர்கள் மோட்சம் தியேட்டர் அருகே ஒருங்கிணைந்த போது, காவல் துறை அங்கு வந்து தலைவர்களிடம் பேசினர். பின்னர் போராட்ட உறுப்பினர்கள் மில்லர்ஸ் சாலை – புரசைவாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில் கூடி போராட்;டத்தை நடத்தினர். அவர்கள் அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு தயாராக இருந்த காவல் துறை தடுப்புகளை வைத்து போராட்ட மக்களை தடுத்து நிறுத்தியது. உடனே தொழிலாளர்களும் சங்கப் பிரதிநிதிகளும் சாலையில் உட்கார்ந்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் 11 மணியளவில் காவல் துறை அவர்களை கைது செய்து ஒருநாள் காவலில் வைத்தது. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மில்லர்ஸ் சாலை போக்குவரத்து வேறுவழியாக மாற்றிவிடப் பட்டது.

தொழிலாளர்கள் மெப்ஸ் கேட் முன்னர் பிரச்சாரங்களை விநியோகிக்க ஆரம்பத்தவுடன் அங்கிருந்த செக்யூரிட்டி தொழிலாளர்கள் அவர்களை ஒரு ஓரத்தில் இருந்து விநியோகிக்க கோரினர். மேலும் தொழிலாளர்களின் பேனரை ஏற்றவும் அனுமதிக்கவில்லை. அதனால் தொழிலாளர்கள் கேட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நிமிடங்களுக்கு கேட் வழியாக எந்த வாகனங்களும் போகாமல் அவர்கள் மறித்தினர். அவர்கள் காவல்துறையால் கைது செய்யபட்டு ஒருநாள் காவலில் வைக்கப்பட்டனர்.

garment2

ரிப்பன் பில்டிங் வாயிலில் மாகராட்சியின் உத்தரவால் கேட் மூடப்பட்டதனால் தொழிலாளர்கள் கேட் உள்ளேயும் வெளியேயும் உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து 15 நாட்கள் முன்னரே நோட்டிஸ் கொடுக்கப்பட்டதாக ரெட் பிளாக் சங்கத் தலைவர் சீனிவாசுலு கூறினார். ஆனாலும் தொழிலாளர்கள் உள்ளே நுழையும் உரிமைகளை பலவந்தமாக அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் கைது செய்யப்பட வரவில்லை என்றும் போராட்டம் நடத்த வந்துள்ளதாகவும் தானாக கைது செய்ய தயாரில்லை என்றும் காவல்துறை அவர்களை பலவந்தமாகவே கைது செது செய்ய நேரிடும் என்று அவர் கூறினார்.

Conservancy Workers at the Protest

Conservancy Workers at the Protest

தொழிலாளர்களை கைது செய்வதற்கு 4 காவல் வாகனங்களை காவல் துறை கொண்டு வந்த போதிலும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதில் காட்டிய தீவிரத்தினாலும், பெருவாரியான பெண் தொழிலாளர்கள் இருந்ததனாலும், காவல் துறை தங்களை கைது செய்வதை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினாலும், மாநகர அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கேட்டை திறந்து விட்டனர். பல வேறு இடங்களில் போராட்டம் ஆரம்பித்த உடனேயே தங்களை கைது செய்ய அனுமதித்த தொழிற்சங்க தலைமையின் முடிவுகளில் இருந்து வேறுபட்டு மாநகராட்சி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் தாக்கம் குறித்து

பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்திய தொழிற்சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது என்று சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் கூறினார். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான ஒரு நாள் வேலை நிறுத்தம் போதுமா என்ற குழப்பம் தொழிலாளர்கள் மத்தியில் தென்பட்டது. ஒரு நாள் போராட்டம் எந்த பிரச்சனைகளையும் தீர்க்காது என்றும் தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனைகளைச் சார்ந்து நடக்கும் போராட்டமே முக்கியம் என்று போராட்டத்தில் பங்கு பெற்ற பிஎஸ்என்எல் தொழிலாளர் ஒருவர் கருதினார்.

தொழிலாளர்களின் மத்தியில் கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறினார். கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிலாளர் சங்கம் மற்றும் டிடியுசி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு கொடுப்பதற்காக கூட்டங்களை நடத்தினர். குறிப்பாக மத்திய தொழிற்சங்கங்கள் கட்சி சார்பற்ற அல்லது பல இ;டதுசாரிகளின் சங்கங்களை புறக்கணிப்பது குறித்து டிடியுசி தொழிற்சங்கப் பிரதிநிதி செங்கொடி அப்பு விமரிசித்தார்.

ஒருநாள் வேலை நிறுத்தத்தால் நாட்டுக்கு ரூ8000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அசோகாம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதை டிடியுசி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். ஊதியம் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கு தொழிலாளர்கள் குரல் கொடுப்பது ஓங்கியது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்த அசோகாம் அறிக்கை ஆளும் வர்க்கம் இப்போராட்டங்களை எவ்வாறாக காண்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

This entry was posted in Factory Workers, Informal sector, labour reforms, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.