வேலை நிறுத்தம் குறித்த பொதுவான மதிப்பீடு

செப்டம்பர் 2 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய வேலை நிறுத்தம் இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்திய அரசு 1991ல் தாராளமயக் கொள்கைகளை பின்பற்றியதில் இருந்து, இது தொழிலாளர் வர்க்கத்தின் 17வது தேசிய வேலை நிறுத்தம் ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 2ல் நடைபெற்ற தேசிய வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அதே நாளில் இந்த ஆண்டும் மத்திய தொழிற்சங்கங்கள் தேசிய வேலை நிறுத்தத்தை நடத்தின. பிஎம்எஸ் தொழிற்சங்கத்தை தவிர 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. இதில் 12 கோடி முதல் 18 கோடி மக்கள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேலை நிறுத்தத்தால் ரூ 18000 கோடி வரை இழப்பு என்று அசோகாம் அறிவித்துள்ளது.

Conservancy Workers at the Protest

Conservancy Workers at the Protest

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தேசிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து மத்திய தொழிற்சங்கங்களின் மாநில அமைப்புகள் ஜுலை 12 அன்று வேலை நிறுத்த ஆயுத்த மாநாடுகள் நடத்தினர். ஆகஸ்ட் மாதங்களில் பொதுக் கூட்டங்கள், விளக்கக் கூட்டங்கள் மற்றும் துண்டறிக்கை விநியோகித்தல் என்று பல வேலைகள் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் வேலை நிறுத்தங்கள் குறித்து பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக பொதுத் துறை தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் மாநாடுகள் நடத்தப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்கள் சில கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்களையும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கோரினர்.

தேசிய பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயுத்த வேலைகள் குறித்தும் வேலை நிறுத்தப் பேராட்டங்கள் குறித்தும் ஏற்கனவே இணையதளத்தில் விரிவாக பதிவு செய்துள்ளோம். மேலும் இரண்டு வாரங்கள் முன்னர், தொழிலாளர்களின் மத்தியில் வேலை நிறுத்தத்தைப் பற்றிய புரிதல் மற்றும் எண்ணங்கள் குறித்து கள ஆய்வு செய்துள்ளோம். இப்பதிவுகள் மூலம் வேலை நிறுத்தத்தின் தாக்கத்தைக் குறித்தும், தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் எங்களின் கருத்துகளை பதிவு செய்கிறோம். கடந்த ஆண்டு 2015ன் தேசிய வேலை நிறுத்தத்தைக் குறித்தும் இது போன்ற கருத்துகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் என்பதையும் நினைவு கூர்கிறோம்.

கள ஆய்வு சுருக்கம்
சென்னை அம்பத்தூர், திருவொற்றியூர் எம்ஆர்எஃப், பூந்தமல்லி, கண்ணகி நகர் மற்றும் கிரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் வேலை நிறுத்தத்தின் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரையிலும் வேலை நிறுத்தம் பற்றிய செய்திகள் தொழிலாளர்களை சென்றடையவில்லை என்று நாங்கள் அறிந்தோம். தொழிற்சாலை தொழிலாளர்கள் உட்பட பலத் தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. சில தொழிலாளர்கள் 2015 பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருந்ததால், கோரிக்கைகள் பற்றிய விவரங்கள் அறிந்திருப்பினும் வரப்போகும் வேலை நிறுத்தம் பற்றி தெரியவில்லை. தேசிய வேலை நிறுத்தக் கோரிக்கைகள் அனைத்துமே தொழிலாளர்களின் விருப்பத்தை ஒத்ததாகவே அமைந்திருந்தன. ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம், சமூகப் பாதுகாப்பு என்று அனைத்து கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் வரவேற்றனர். ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இந்த கோரிக்கைகள் நிறைவேறுமா என்பது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகள் இருந்தன. ஆயினும் கோரிக்கைகளுககான போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தன.

கோரிக்கைகள்
குறைந்த பட்ச ஊதியம், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், தொழிலாளர் விரோத சட்ட சீர்திருத்தங்களை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்துதல், பொதுத்துறைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதை நிறுத்துதல் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன. இதனுடன் மாநில தொழிற்சங்கங்கள் துறை சார்ந்த மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்துள்ளன. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியப் பயன்களை முறைப்படுத்துதல், மோட்டர் வாகனப் பராமரிப்பு சட்ட திருத்தங்களை கைவிடுதல், பொதுத் துறை மற்றுமிதரத் தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அடியோடு நீக்குதல் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

ஏற்கனவே முன்னர் கூறியபடி தொழிலாளர்கள் மத்தியில் இக்கோரிக்கைகளுக்கு வரவேற்பு மிகுந்து உள்ளது. தொழிலாளர்கள் இக்கோரிக்கைகளை தங்கள் நிலைமைகளுடன் ஒப்பிட்டு இக்கோரிக்கைகள் ஏன் தங்கள் நிலைமைகளை சரியாக கணித்துள்ளன என்பதை விளக்கினர். குறிப்பாக ஒப்பந்த முறையில் உள்ள சமநிலையற்ற ஊதியம், முறைசாரா சிறிய தொழிற்சாலைகள் மூலம் தங்கள் ஊதியங்களை குறைக்கும் முதலாளித்துவ நிலை, போக்குவரத்து தொழிலாளர்களின் மத்தியில் உள்ள பிரச்சனைகள், வரக்கூடிய சட்டஙகளால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து தொழிலாளர்கள் தொழிற்சங்க நிலைபாடுகளை வழிமொழிந்தனர்.

இன்றைய விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் மாதம் ரூ18000க்கான குறைந்த பட்ச ஊதியக் கோரிக்கை முக்கிய கோரிக்கையாக எழுந்துள்ளது. இன்று முதலாளிகள் கொடுக்கும் குறைந்த கூலி தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை என்றும் வாழ்க்கைக்கான ஊதியம் தேவை என்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட பலத் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால் தான் வேலை நிறுத்தத்திற்கு ஒரு நாள் முன்னர் விவசாயமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்து வேலை நிறுத்தத்தைக் கட்டுப்படுத்த முனைந்தது. ஆனாலும், அவர்கள் அறிவித்த குறைந்த பட்ச தின ஊதியமான ரூ350 தொழிற்சங்கங்கள் கோருவதை விட குறைவாக உள்ளது. மேலும் மத்திய அரசு முன்னர் இதுபோல ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ10000 மாத ஊதியமாக அறிவித்து முதலாளிகளின் நிர்ப்பந்தத்தினால் 90 நாட்களிலேயே திரும்பப் பெற்றது. குறைந்த பட்ச ஊதியம் என்பது வெறும் அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்த வேண்டிய ஒன்று என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் நிர்வாகங்கள் பலத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது குறித்து ஏற்கனவே எழுதியுள்ளோம்.

வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு
சங்கங்களில் அங்கம் பெற்றுள்ள உறுப்பினர்கள் மறறும் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மத்தியிலும் கோரிக்கைகளுக்கான வரவேற்பு இருந்தும், அதற்கான பங்கேற்பு போராட்ட களத்திலும் வேலை நிறுத்தத்திலும் தென்படவில்லை. தங்களுடைய பிரச்சனைகளை அறிந்து அதற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது, தொழிற்சங்கங்களின் நடைமுறை வேலைகளில் உள்ள பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. குறிப்பாக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை எவ்வாறு அணுகுகின்றனர் என்பது குறித்த பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

நாங்கள் ஆய்வு மேற்கொண்ட போது எங்களிடம் ஒரு தொழிலாளர் கூறியதை இங்கு நினைவு கூர்கிறோம்: ‘கடந்த வேலை நிறுத்தத்தில் நாங்கள் பங்கேற்றோம். இந்த வேலை நிறுத்தத்தை பற்றி தெரியாது. நீங்கள் கூறும் (ஆகஸ்ட் 9 விளக்கக்) கூட்டத்திற்கு தலைவர்கள் மட்டும் சென்றிருப்பார்கள். இந்த மாதிரிக் கூட்டங்களில் தலைவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்கள் போராட்டங்கள், தர்ணா என்று கூப்பிடும் போது மட்டுமே நாங்கள் செல்வோம். அவர்கள் இதைப்பற்றி எங்களுக்கு இன்னும் கூறவில்லை. ஒரு வேளை இனிமேல் கூறினால் நாங்கள் செல்வோம்’. தொழிலாளர்களின் இந்த கூற்று ஒன்றை தெளிவாக்குகிறது. தேசிய வேலை நிறுத்த முடிவுகளிலோ அது குறித்த பிரச்சாரங்களிலோ, விவாதங்களிலோ தொழிலாளர்கள் ஈடுபடுவதில்லை. இதுகுறித்தான தளங்களை தொழிற்சங்க தலைவர்களிடம் விட்டு விடுகின்றனர்.

தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினுடைய தொடர்பை பயன்-செலவு என்ற கணக்கின் அடிப்படையிலேயே பார்க்கின்றனர். இதற்காக தாங்கள் சில வேலைகளில் ஈடுபடவேண்டும் அதனால் தங்களுக்கு நன்மை வரும் என்ற பார்வை, ஒரு தொழிலாளர்-முதலாளியின் மத்தியில் உள்ள உறவினைப் போன்றதாகும். தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுவதை உணர்ந்தாலும், சில பயன்களுக்காக வேலை செய்யும் நிலைமையை சங்க உறவிலும் பிரதிபலிப்பது தொழிற்சங்கம் சரியான பாதையில் செல்ல வழி வகுக்காது. மேலும் சில தொழிலாளர்கள் தங்களுக்கு இ;வ்வாறான ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர். தொழிலாளர்களின் இவ்வாறான கருத்துகளை சுதந்திரமாக வெளியிட்டு சரியான புரிதலுக்கான தளமாக தொழிற்சங்கம் செயல்பட வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாத பட்சத்தில் அவர்கள் தங்கள் பயனை ஒட்டியே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். 17 தேசிய வேலை நிறுத்தங்கள் நடத்தியும் தொழிலாளர்களுக்கு தேசிய வேலை நிறுத்தத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்பது தொழிலாளர்களுக்கும் சங்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பின் இடைவெளியையே வெளிக்காட்டுகிறது. தொழிலாளர்கள் பங்கேற்கும் கிளைக் கூட்டங்கள் தொழிலாளர்கள் பேசுவதற்கும் முடிவுகள் எடுப்பதற்குமான ஜனநாயக தளமாக அமைய வேண்டும் என்பது சங்கத்தின் அடிப்படை பண்பாகும். இவ்வாறான தளங்கள் செயல்படும்போது வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் பங்கு மேன்மையாக உள்ளது குறித்து ராஜஸ்தான் நீம்ரானா தொழிலாளர்களின் கட்டுரை எடுத்துரைக்கின்றது.

அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் நிலையற்ற தொழிலாளர்கள் மத்தியில் வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளில் உள்ள சில கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்களின் மத்தியில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரியதன் காரணமாக அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும் தொழிற்சங்கங்களுடனும் இதே மாதிரியான தொடர்பு ஏற்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு வேலை நிறுத்தங்களில் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், கண்ணகி நகரில் கள ஆய்வின் போது போராட்டங்கள் குறித்து துண்டறிக்கைகள், கூட்டங்கள், சுவரொட்டிகள் காணப்படவில்லை. தொழிலாளர்கள் பெருவாரியாக வாழும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, கல்குட்டை மற்றும் பிற சென்னை குடிசைப் பகுதிகளில் தொழிலாளர்களை தேசிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான கட்டமைப்பு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நிலையற்ற தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு தேசிய வேலை நிறுத்தம் முக்கிய வழியாகும்.

தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கைகளுக்கான உள்ள வரவேற்பை தொழிற்சாலைகளில் நிலவும் முரண்பாடுகளோடு இணைத்து அதற்கேற்ற போராட்டங்களை உருவாக்குவது முக்கிய பணியாகும். மத்திய தொழிற்சங்கங்களின் கோரி;க்கைகள் இன்றையத் தொழில் நிலைமைகளையும் வாழ்வு நிலைமைகளையும் பிரதிபலிக்கையில், இக்கோரிக்கைகளையும், அதற்கான போராட்டங்களையும் தேசிய வேலை நிறுத்தத்தின் தாக்கத்தையும் மீண்டும் தொழிற்சாலையில் நடக்கும் சங்கப் பணிகளில் மீண்டும் இணைக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு தேசிய வேலை நிறுத்தங்களில் உள்ள நம்பிக்கை பொய்த்து விடும்.

வேலை நிறுத்தப் போராட்டங்களின் செயலாக்கம்
தொழிற்சங்கங்கள் தங்கள் ஆயத்த வேலைகளாக, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பொதுக் கூட்டத்தை ஆகஸ்ட் 23, 24 அன்று சிறப்பாக நடத்தி முடித்தனர். இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேறபட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட 29 அன்று பல்லவன் மாளிகை முன்பு ஓய்வு பெற்றப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். இதை அடுத்து மாநில அரசு கவனத்துடன் பல பேருந்து நிலையங்களில் காவல் துறையை நிறுத்தினர். ஆனால் செப்டம்பர் 2 அன்று சென்னை மாநகரப் போக்குவரத்து எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. சில இடங்களில் நடந்த சாலை மறியல்கள் தவிர போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. கடந்த வருடம் இது குறித்து மாநிலப் போக்குவரத்து சங்கத் தலைவர்கள் மாநில அரசு ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து போக்குவரத்தை சீரமைத்ததாக கூறினர். தற்போது அதே நிலைமைதான் என்ற நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநில அரசின் முயற்சிகளை முறியடிக்கும் வேலைகளில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. குறிப்பாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் கூட்டு பேர நடடிவடிக்கைகளில் தொழிலாளர்களின் பல பிரச்சனைகள் களையப்படாத நிலையில் போக்குவரத்து துறையில் உள்ள தொழிற்சங்க பலவீனம் தேசிய வேலை நிறுத்தத்திலும் வெளிப்படுகிறது.

பல இடங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தீவிரச் செயல்பாடுகளை காவல்துறை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். புரசைவாக்கம், மன்ரோ சிலை, செங்கல்பட்டு, திருவொற்றியூர் போன்ற இடங்களில், காவல்துறையினர் வாகனங்கள் மற்றும் தடுப்புகளை ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்தனர். தொழிற்சங்கங்கள் முற்றுகை செய்யப்பட வேண்டியப் பொதுத்துறை அலுவலகங்கள் முன்னர் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்கள் போராட்டத்தைத் துவங்கிய சில நிமிடங்களிலேயே அவர்களை காவல்துறை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இரண்டு இடங்களில் மட்டுமே போராட்டங்களின் தன்மை மாறுபட்டது. ரிப்பன் வளாகத்தில், மாநகராட்சி நிர்வாகிகள் கேட்களை மூடியதனால், தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் காவல் வாகனங்களில் ஏற மறுத்தனர். மாறாக கேட்டுகளை திறந்து விட வேண்டும் என்றும் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறிய நிலையில் காவல் துறை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி கேட்டுகளை திறந்தனர். கார்மெண்ட் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும் கார்மென்ட் மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கம், தாம்பரம் மெப்ஸ் வாயில்களில் போராட்டம் நடத்தினர். இது குறித்து அரசுக்கு முன்கூட்டி தகவல் கொடுக்கப்படவில்லை. அனைத்து போராட்டங்களும் வேலை நிறுத்தத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றாலும், போராடுவதும் தொழிலாளர்களின் வர்க்கக் கல்விக்கு ஒரு வழியாகும் என்பதை கருத்தில் கொண்டு போராட்ட வடிவங்கள் திட்டமிடப்பட வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் அடையாளமாகவே கருதப்படும்.

முடிவுரை
தொழிலாளர்களின் மீது முதலாளித்துவம் மற்றும் அதற்கு ஒத்து ஊதுகிற மத்திய மாநில அரசுகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்புகளை காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பொது வேலை நிறுத்தம் தொழிலாளர் அரசு மற்றும் ஆலை முதலாளிகளுக்குத தங்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாகும். தொழிலாளர்களை பொருத்தவரையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டமுடியவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கட்டமைப்பாகவும் ஒரு மாற்று சிந்தனைக்கான தளமாகவும் தொழிற்சங்கங்களை அணுகுவதில்லை. இதற்கான கட்டமைப்பை உறுதி செய்ய இயலாத நிலையில் வேலை நிறுத்தத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். ஒப்பந்த தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள், இ;டம் பெயரும் தொழிலாளர்கள் முதலாளித்துவ தொழில் நிலைமைகளால் உருவானாலும் அவர்களின் ஈடுபாடுகளை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. தேசிய பொது வேலை நிறுத்தங்களின் தேவையும் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் வேளையில் அதன் தாக்கத்தை அதிகரிப்பது அவசியமாகும்.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Garment Industry, Informal sector, labour reforms, Public Sector workers, Sanitation Workers, Strikes, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged . Bookmark the permalink.