சிஎம்ஆர் டயோட்சு தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் – தொழிலாளர்களுக்கு உள்ளுர் மக்கள் ஆதரவு

நிர்வாகத்தின் விரோதப் போக்கை எதிர்த்து, சிஎம்ஆர் டயோட்சு நிறுவனத்தின் 19 நிரந்தரத் தொழிலாளர்கள் அக்டோபர் 31 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டதை அடுத்து, 5 தொழிலாளர்களை வடமாநிலத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி தொழிலாளர் விரோதப் போக்குகளை கடைபிடித்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருகில் உள்ள தங்கள் கிராமத்தை தொழிற்சாலை மாசுபடுத்தி வருவதாக கூறிய பிள்ளைப்பாளைய கிராம மக்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Workers and locals protest against unfair labour practicies in CMR Toyotsu

Workers and locals protest against unfair labour practicies in CMR Toyotsu

சிஎம்ஆர் டயோட்சு நிறுவனம் இந்திய நிறுவனமான செஞ்சுரி மெட்டல் ரீசைக்லிங் மற்றும் ஜப்பானிய நிறுவனம் டயோட்ட ட்சுசு நிறுவனமும் சேர்ந்து நிறுவிய தொழிற்சாலையாகும். செஞ்சுரி மெட்டல் ரீசைக்லிங் நிறுவனத்திற்கு மாநேசர், தாபுகேரா மற்றும் ஹரித்வார் பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளன. அவர்கள் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு அலுமினிய உலோகங்களை தயாரிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிற்சாலை 2012ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு முதலில் 48 திறன் தொழிலாளர்கள் பயிற்சியாளர்களாக வேலையில் சேர்ந்தனர். அவர்களுக்கு ரூ9500 ஊதியம்(நெட் ரூ8600) கொடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து சுமார் 28 பயிற்சித் தொழிலாளர்களை பல்வேறு காரணங்கள் கூறி வேலையை விட்டு நீக்கியள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். மீதியுள்ள 20 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலையில் தொடர்ந்துள்ளனர். பயிற்சியாளராக சேர்ந்தபோது அவர்களுக்கு எந்த ஆவணங்களும் தரப்படவில்லை என்றும் 2014 டிசம்பர் 1 அன்றே அவர்களுக்கு நியமனக் கடிதம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு தற்போது ஊதியமாக ரூ10700(நெட் ரூ9500) தரப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் தவிர சுமார் 200-300 ஒப்பந்தத் தொழிலாளர்களாக பெண் தொழிலாளர்களும் வட மாநிலத் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர்.

தொழிற்சாலையில் காண்டீன், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற கட்டமைப்புகளை சரியாக செய்து தரவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டி இருந்தாலும், அதற்கு ஓட்டுனர் இல்லை என்றும் விபத்து ஏற்படும்போது தொழிலாளர்களே அதை ஓட்டிச் செல்ல வேண்டியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையில் தூசுக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்சனைகள் குறித்த தங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் புறக்கணித்து வந்த நிலையில் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைய முடிவு செய்தனர். 2016 ஜனவரி 29 அன்று அவர்கள் ஏஐசிசிடியு உடன் இணைந்த செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயகத் தொழிற்சங்கத்தில் இணைந்து தங்களுடைய சங்கத்தை அங்கீகரிக்கவும், தங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கோரியும் 2016 பிப்ரவரி 26 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தனர். அதன் பிறகு ஒரு தொழிலாளரை வேலை விட்டு நீக்கியும், இன்னொரு தொழிலாளரை தற்காலிக வேலை நீக்கம் செய்தும், 5 தொழிலாளர்களை வடமாநில தொழிற்சாலைகளுக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மே 1 அன்று தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலின் முன் சங்கக் கொடியையும், சங்கப் பலகையையும் நிறுவியுள்ளனர். நிர்வாகம் முதலில் கொடி நடுவதை தடுத்ததாகவும் அதன் பின்னர் அவர்களை அனுமதித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் அன்று இரவே கொடியும் பலகையும் பிடுங்கி உடைக்கப்பட்டு வேறு இடத்தில் போடப்பட்டிருந்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர் கூடத்திடம் பேசிய மனித வள மேலாளர் தாங்கள் கொடிக்கம்பத்தை உடைக்கவில்லை என்றும், அது தொழிலாளர்களே செய்ததாக இருக்க வேண்டும் என்றும் கருதினார். 3 ஷிஃப்ட் வேலை மற்றும் 24 மணி நேர செக்யூரிட்டி உள்ள தொழிற்சாலையின் வாசலில் நடந்த இந்த சம்பவத்திற்கு எந்த சாட்சியும் இல்லை.

மே 1 கொடியேற்றத்திற்கு பிறகு மே 2 அன்று தொழிற்சங்க கிளைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு நிர்வாகம் வேலை மாற்று உத்தரவை கொடுத்துள்ளது. இந்த உத்தரவின் படி சம்பந்தபட்ட தொழிலாளர் சிஎம்ஆர் டயோட்சு நிறுவனத்தில் இருந்து வட மாநிலத்தில் உள்ள செஞ்சுரி மெட்டல் ரீசைக்லிங் நிறுவனத்திற்கு மாற்றப்படுவதாகவும், அவர் மாறுவதற்கு ஒரு வார காலம் அளிக்கப்படுவதாகவும், அவருடைய ஊதியம், ரூ1000 ஊதிய உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் அவர் அங்கு சென்ற பின்னர் கொடுக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளருடைய பிஎஃப் சலுகைகளும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்று உத்தரவு கூறுகிறது.

இது குறித்து பேசிய மனித வள மேலாளர் இடமாற்றுதல் என்பது நிர்வாகத்தின் நிலையான கொள்கை என்றும் தொழிலாளர்களுக்கு 2014ல் கொடுக்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் மொழி கூடத் தெரியாத இடத்திற்கு திடீர் என்று தாங்கள் ஏன் மாற்றப்படுகிறோம் என்றும் இது தொழிலாளர் விரோதப் போக்கு என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். மாற்று உத்தரவின் படி பார்த்தால் தொழிலாளர்களுக்கு போதுமான காரணங்கள், தொழிலாளர்கள் இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான போதுமான ஏற்பாடுகள், சலுகைகள் என்று எதுவுமே கொடுக்கப்படவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் தொழிலாளர்களை பழைய நிறுவனத்தில் இருந்து நீக்கி புதிய நிறுவனத்திற்கு வேலையையே மாற்றுவதாக உள்ளது. இடமாற்றம் அனைத்தும் தொழிலாளர்கள் சங்கம் அமைத்தபின்னர் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளுர் மக்கள் ஏற்கனவே இத்தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை குறித்து முறையிட்டு வருகின்றனர். தங்களுடைய விவசாய நிலங்களை சிப்காட் கையகப்படுத்தி இந்த தொழிற்சாலைக்கு கொடுத்தள்ளதாகவும் கையகப்படுத்திய போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் உள்ளுர் மக்கள் யாருக்கும் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்றும் தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதாக உள்ளுர் பிரதிநிதிகள் கூறுகின்றனர். தொழிற்சாலை நச்சுப்புகையை வெளியே விடுவதினால் மூச்சு பாதிப்பு ஏற்படுவதாகவும், நீர்நிலைகளில் கலக்கப்படும் நச்சுப் பொருட்களினால், அங்கிருக்கும் மாடுகள், நாய்களுக்கு வெந்த புண்கள் வருவதாகவும் உள்ளுர் மக்கள் கூறுகின்றனர். 2014ல் இது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு புகார் அளித்ததாகவும், அதன் விளைவாக காவல்துறை 14 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஐஐடி சென்னை குழுவினர் 2016ல் ஆய்வு நடத்திய பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைக்கு உரிமங்களை நீட்டியுள்ளதாகவும் நிர்வாகப் பிரதிநிதி கூறினார். ஆனால் இன்னும் சுற்றுச்சூழல் மாசு தொடர்வதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

2016 மார்ச் மாதத்தில் தொழிற்சங்கம் இப்பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் துறைக்கு மனு கொடுத்தும், இது வரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. அதன் விளைவாக அக்டோபர் 31 முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகவும், அவர்களில் சிலர் சங்கத்தில் சேர முன்வந்துள்ளதாகவும், ஆனால் அவர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கம் தொழிலாளர் துறையை அணுகியிருந்தாலும் தற்போது நிர்வாகம் தொழிலாளர்களின் இடமாற்றத்தை கைவிடக் கோரி போரட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 10 அன்று உள்ளுர் மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் ஹுண்டாய், நிப்பான் எக்ஸ்ப்ரஸ், லியர், ஏசியன் பெயின்ட்ஸ், டெனகோ எனப் பலத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உட்பட சுமார் 100 பேர் கூடி ஆதரவுப் போராட்டம் நடத்தினர், தோழர் இரணியப்பன், தோழர் பாரதி, தோழர் ராஜகுரு, தோழர் ராஜேஷ் கலந்து கொண்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்து பேசினர். உள்ளுர் பிரதிநிதிகள், உள்ளுர் இளைஞர் குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் பணம் மற்றும் பொருள் உதவி அளித்து தொழிலாளர்களுக்கு பெரும் ஆதரவைத் தெரிவித்தனர்.

nov-10-protest-cmr-toyotsu-5

Locals and workers extend financial and material support to striking workers

Locals and workers extend financial and material support to striking workers

This entry was posted in Agriculture, Factory Workers, News, Strikes, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.