முதலில் போராடு, பின்னர் சமரசம் பேசு* : முதலாளிகளுக்கும் அரசுக்கும் எதிரான தென் கொரியா தொழிலாளர்கள் மக்கள் போராட்டம்

தென் கொரியாவின் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான கொரியன் கான்படரேஷன் ஆப் ட்ரேட் யூனியன்ஸ் (கேசிடியு) நவம்பர் மாதத்தில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே அங்கு ரயில் போக்குவரத்து மற்றும் பொதுத் துறைத் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பார்க் க்வென்-ஹ்வேயின் ஊழல் அரசை எதிர்த்து பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் பின்னணியில் முதலாளிகளின், அரசின் ஒடுக்குமுறை ஓங்கி உள்ளது. 2015 ஜுலை மாதத்தில் கேசிடியுவின் தொழிலாளர் தலைவர் ஹான் சாங்க-க்யூன் பொது வேலை நிறுத்தத்தை நடத்தியதற்காக பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு 5 வருட சிறை தண்டனையில் உள்ளார். நவம்பர் 12 அன்று தேசிய தொழிலாளர் தினத்தை தென் கொரிய தொழிலாளர்கள் கொண்டாடுகின்றனர். அன்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மக்கள் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். நவம்பர் 30 அன்று கேசிடியு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மும்பையில் நடந்த ஒரு மாநாட்டிற்கு வந்திருந்த கேசிடியு தோழர்களுடன் தொழிலாளர் கூடம் மக்கள் எழுச்சியை குறித்து உரையாடல் நடத்தினோம். ஹுண்டாய் ஆட்டோ கம்போனன்ட்ஸ் தொழிலாளர் சிக் ஹ்வா ஜங், கியா மோட்டர்ஸ் தொழிலாளர் சாங் சூ ஹா மற்றும் கேசிடியு கிளைப் பிரதிநிதி க்யூன் ஓக் வூ ஆகியோருடன் உரையாடல் நடத்தப்பட்டது.

kctu-comrades

கே: தென் கொரியாவில் தற்போது நடக்கும் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கான காரணம் என்ன?
தற்போது கொரியாவில் இரண்டு வகையான போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொழிற்சாலைகளுக்குள் முதலாளிகளின் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு வகை மற்றும் அரசிற்கு எதிரான தேசியப் போராட்டங்கள் இன்னொரு வகை.

தொழிற்சாலைகளுக்குள், உதிய அமைப்புகளை குறித்து நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. கொரியாவில் நாங்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை கூட்டு பேரங்களை நடத்துகிறோம். ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 10 மணி நேர வேலை என 2 ஷிஃப்டுகள் செய்கின்றோம். தற்போதைய ஊதியத்தில் 8 மணி நேர வேலையாக 2 ஷிஃப்டுகள் எனக் கோரி வருகிறோம். ஆனால் நிறுவனங்கள் தற்போதைய ஊதியத்தை தர மறுக்கின்றன. ஊதியத்தை குறைத்தால் எங்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. மேலும் நிறுவனங்கள் உச்சகட்ட ஊதிய நிர்ணயம் மற்றும் ஊதியத்தை செயல்திறன் அடிப்படையில் மாற்றுதல் ஆகியவற்றை உள்ளே புகுத்த முயற்சிக்கின்றன. நாங்கள் இதை எதிர்த்து வருகிறோம்.

தேசிய அளவில், தற்போதைய அதிபருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளும் அவருக்கு அருகில் உள்ளவர்களின் ஏதேச்சையான அதிகாரமும் அதிகரித்து வருகின்றன. அவருக்கு மிகவும் நெருங்கி உள்ள மதகுரு ஒருவர் அவருடைய தேவைகளை அதிகாரம் வழியாக அடைந்து வருகிறார். மக்களின் நலனுக்காக வேலை செய்வதை அதிபர் கைவிட்டு விட்டார். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர். இப்பொழுது நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொழிலாளர்களால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. பொது மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இப்போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளனர். 1987ல் 10லட்சம் மக்கள் கூடிப் போராடியதனால் கொரியா ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்தது. அதற்கு பின்னர் நடக்கும் மாபெரும் போராட்டம் இது தான்: இப்போராட்டத்தில் எங்களுடைய கோரிக்கை ஒன்று தான்: ‘அதிபர் பதவி விலகுங்கள்’.

கே: ஆசியாவில் தொழில்மயமான வளர்ச்சியாக தென் கொரியா அடையாளப்படுத்தப் படுகிறது. இந்த வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளதா? இந்த வெற்றியின் அடையாளத்தின் பிண்ணனியில் தற்போதைய போராட்டங்களை எவ்வாறு நாங்கள் பார்க்க வேண்டும்?

தென் கொரியாவின் தொழில்மயமாக்கத்தால், தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட்டது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு பயன்கள் இன்னும் அதிகம். நிரந்தரத் தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு வாங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வு கூட ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. ஆனால் விலைவாசி உயர்வு குறிப்பாக கல்வி கட்டண உயர்வுகள் இந்த வாழ்க்கை தரத்தை குறைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 70களிலும் 80களிலும் ஒருவர் ஊதியத்தில் ஒரு குடும்பம் நன்றாக வாழலாம். தற்போது இந்த நிலைமை இல்லை. கல்வி கட்டண அதிகரிப்பு அதற்கு முக்கிய காரணம். தனியார்மயக் கல்வி கொடுப்பதற்கு செலவு அதிகமாக உள்ளது ஆனால் தனியார் கல்வியில்லாமல் கல்லூரிகளுக்கு செல்வது கடினம். ஒரு மாணவருக்கு 1500டாலர்-3000டாலர் மாதம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அதனால் தான் கொரிய அதிபரின் ஊழல் குறித்து மக்கள் மிக்க கோபம் அடைந்துள்ளனர். அவருடைய மதகுரு கல்லூரியில் அவருக்கு வேண்டிய மக்களை பொறுப்பில் நியமித்து தன்னுடைய மகளுக்கு கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சாமானிய மக்களுக்கு தங்களுடைய குழந்தைகளை கல்லூரியில் சேர்ப்பது கடினமாக உள்ளது. அரசு அதிகாரத்தில் ஒரு ரகசிய நிர்வாகம் செயல்படுவதாக வதந்தி உலவுகிறது. மக்கள் ஜனநாயக ஆட்சியில்லாததால் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

கே: இப்போராட்டங்களில் கேசிடியுவின் பங்கு என்ன?
தொழிலாளர்களுக்காக இரண்டு பிரதானக் கோரிக்கைகளை முன்வைத்து கேசிடியு வேலை செய்கிறது: அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மணிநேரத்திற்கு10டாலர்(தோராயமாக ரூ680) குறைந்த பட்ச ஊதியம், கொரியாவில் புரட்சிகர முற்போக்கான தொழிலாளர் கொள்கைளை நிலைநாட்டுவது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் பல போராட்டங்களையும் பொது வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டு வருகிறோம். எங்களுடைய தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கடந்த சில மாதங்களாக காப்பீடுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். தற்போது ரயில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். இப்போராட்டங்களுக்கு ஆதரவாக கேசிடியு நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
நவம்பர் தொழிலாளர்களுக்கு முக்கிய மாதமாகும். 45 வருடங்களுக்கு முன்னர் ஒரு தொழிலாளர் நவம்பர் 12 அன்று அன்றைய பணிநிலைமைகளை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அவரின் நினைவாக நவம்பர் 12 அன்று தேசிய தொழிலாளர் தினத்தை அனுசரிக்கின்றோம். அன்று நாங்கள் அழைத்த தேசியப் பேரணியில் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதிலிருந்து பேரணிகளிலும் போராட்டங்களிலும் மக்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.

கே: இப்போராட்டங்கள் குறித்து அரசு மற்றும் முதலாளிகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர்?தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை அரசு அதிகரித்து வருகிறது. அவர்கள் தொழிற்சங்கங்களை எதிர்க்கின்றனர். முதலாளிகள் தொழிலாளர் எழுச்சியை விரும்பவில்லை அவர்கள் ஊதிய அமைப்பு, தொழிலாளர்களை வேலை விட்டு நீக்குதல் போன்ற பிரச்சனைகளை குறித்து தங்களுக்கு சாதகமான சங்கங்களுடன் பேசி வந்தனர். தற்போது தொழிலாளர் அதிருப்தியை கண்டு எங்களுடன் பேசி முடிவுக்கு வர முயற்சி செய்கின்றனர்.

* The title Strike first, bargain lateris taken from the articles which have documented Korean working class struggles of KCTU.

This entry was posted in Art & Life, Factory Workers, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.