எம்ஆர்எஃப் தொழிற்சங்கத்தின் சட்டவாதத்தின் விளைவுகள் குறித்து தொழிலாளர் விமரிசனம்

நவம்பர்  4 அன்று MRF தொழிலாளர்கள் மத்தியில் சங்க நடவடிக்கைகள் குறித்த மாறுபட்ட கருத்துகளை பதிவு செய்திருந்தோம். சங்கத்தின் சட்டவாத நடவடிக்கைகளை எதிர்த்து சில தொழிலாளர்கள் பொதுக் கூட்டம் ஒன்றில் விமரிசித்திருந்தனர். சட்டவாதத்தை ஆதரித்து சங்கச் செயலாளர் தோழர் பிரபாகரன் தன்னுடைய வாதத்தையும் வைத்தார். சங்கத்தின் வாதத்தை குறித்து குமுக விடுதலைத் தொழிலாளர்கள் தன்னுடைய கருத்துகளை இங்கே பதிவு செய்துள்ளனர். சட்டவாதத்தை பின்பற்றுவதால் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் ஒற்றுமையை தக்கவைப்பதில் அடைந்துள்ள பின்னடைவுகள் குறித்து அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

MRF திருவொற்றியூர் தொழிற்சங்கத்தை டி.எஸ்.இராமானுஜம், ஆர். ரங்கசாமி, மோகன் குமாரமங்கலம், கே.எம்.சுந்தரம், ஆர்.குசேலர், ப. சிதம்பரம், வி.ஆர்.சிந்தன், டபிள்யு. ஆர். வரதராஜன், ரங்கராஜன் குமாரமங்கலம், அ. சவுந்தரராஜன், வி.பிரகாஷ், தா. பாண்டியன் போன்ற தலைவர்கள் தலைமை பொறுப்பெடுத்து வழிநடத்தி வந்துள்ளார்கள். இவர்களில் பலர் வழக்கறிஞர்களாக இருந்த போதிலும் தொழிலாளர்களை ஈடுபடுத்திய சங்க நடவடிக்கைகளால் மட்டுமே கூட்டு பேர ஆற்றலை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் விதிவிலக்காக தோழர் வி.பிரகாஷ் அவர்கள் மட்டுமே சட்ட நடவடிக்கை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.

2009 ஒப்பந்தத்தில் தோழர் தா.பாண்டியன் தலைமையில் ரூ3680 ஊதிய உயர்வாக பெறப்பட்டது. இதில் சில வேலைகள் அவுட்சோர்ஸ், ஆட்குறைப்பு மேலும் உற்பத்தி உயர்வு ஆகியன இருந்தன. 2009 ஒப்பந்தம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் 7.7.2009 அன்று நிறைவேற்றப்பட்டது. 2009 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தோழர் வி.பிரகாஷ், பிரபாகரன் தலைமையிலான அணி வெற்றி பெற்று இன்று வரை தொடர்ந்து வெற்றி பெற்று சங்கப் பொறுப்பில் உள்ளார்கள்.

2009 ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட சில அவுட்சோர்ஸ் வேலைகளில் சங்கம் தனது கூட்டு பேர ஆற்றல் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் நிரந்தரத் தொழிலாளர்களை அந்த வேலைகளில் அமர்த்தியது.

தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அத்துமீறல் நிகழும் போதெல்லாம் வேலை நிறுத்தங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து அவற்றை வாபஸ் பெறச் செய்தனர். சங்கமும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது. நிர்வாகம் தனது தடையற்ற உற்பத்திக்கு தொழிலாளர் மீது எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை சங்கம் தொடர்ந்து எதிர்த்து வந்தது.

இந்நிலையில் 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கம் ஒப்பந்த கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்தது. அதிலிருந்து 6 மாதம் கழித்து நிர்வாகம் தனது கோரிக்கை பட்டியலை சங்கத்திடம் வழங்கியது. பின் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் தொடங்கின.

சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக,
1. 3 வருடத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம்
2. பழைய ஒப்பந்தம் முடிவடைந்த தேதியிலிருந்து (6.7.2013) புது ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்
3. கணிசமான ஊதிய உயர்வு
ஆகியன முன் வைக்கப்பட்டன.

நிர்வாக தரப்பில்
1. 5 வருடத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம்
2. அவுட்சோர்ஸ்
3. ஆட்குறைப்பு
4. ரேசனலைசேஷன்
5. உற்பத்தி உயர்வு
ஆகியன முன் வைக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை தொடங்கியதும் தலைவர் அவர்கள் ஒப்பந்தம் நிறைவேறும் வரை இடைக்கால நிவாரணம் கேட்டு நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தார். அதை மறுத்து நிர்வாகம் அவருக்கு கடிதம் அளித்தது.

10.8.13 அன்று நடைபெற்று முதல் பேச்சுவார்த்தையில் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை நிர்வாகம் மறுத்ததால் 19.8.2013 அன்று சங்கம் உதவி தொழிலாளர் நல அணையரிடம் தொழிற்தாவா எழுப்பியது. பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ரூ750 ஊதிய உயர்வாக அறிவித்தது. சங்கம் சார்பாக 0.24% உற்பத்தி உயர்வு தர ஒப்புக்கொள்ளப்பட்டது. சமரச பேச்சு வார்த்தையை காலதாமதம் செய்ய நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து 6 வார காலம் நீட்டிப்பு கேட்டது. இவ்வழக்கில் தலைவர் வாதாடி நிர்வாகத்திற்கு 3 வார கால அவகாசம் தரப்பட்டது. 3 வார காலம் முடிந்தவுடன் அரசு இருவார காலத்திற்குள் சமரச முறிவு அறிக்கையை தீர்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 21.1.14 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை முறிவு பெற்று தொழிலாளர் நல ஆணையரால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் நிர்வாகம் சங்கத்தை 12.2.14 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து, தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ரூ8250 ஐ ஊதிய உயர்வாகவும், பழைய ஒப்பந்தம் முடிந்த 6.7.2013 முதல் புதிய ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும் எனவும், 7 மாதங்களுக்கு 100 சதம் அரியர்ஸ் தருவதாகவும், ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவித்தது. நிர்வாகம் இறுதியாக அறிவிக்கும் தொகையை பொறுத்து ஒப்பந்த காலம் 4 ஆண்டா அல்லது 3 ஆண்டா என்பதை முடிவு செய்வோம் என சங்கம் தெரிவித்தது. மேலும் உற்பத்தி உயர்வாக 0.42சதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

நிர்வாகம் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் மேலும் அவுட்சோர்ஸ் கேட்டதால் ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சங்கம் சொல்கிறது. ஆனால் நிர்வாகம் கணிசமான தொகையை சொன்னபோது அதை மேலும் வளர்த்தெடுக்காமல் 21.1.2014 அன்று அறிவிக்கப்பட்ட சமரச முறிவு அறிக்கையை 15 நாட்களுக்குள் தொழிற்த் தீர்ப்பாயத்திற்கு அனுப்பவில்லை எனக் கூறி அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இதன் விளைவாக அரசு 21.3.2014 அன்று (டி)108 மற்றும் (டி) 109 என்ற இரு அரசாணைகளை பிறப்பித்தது.

(டி) 109 என்ற அரசாணையில் இடைக்கால நிவாரணக் கோரிக்கை விடுபட்டிருந்தது. இதற்கு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இந்தக் கோரிக்கையையும் தொழில் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என உத்தரவு பெறப்பட்டது. இதனடிப்படையில் தொழில் தீர்ப்பாயத்தில் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கு 28.4.14 அன்று முதல் விசாரணைக்கு வந்நது.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்ற நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டபின் நிர்வாகத்துடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் 1.4சதம் உற்பத்தி உயர்வு தர சங்கம் ஒப்புக் கொணடது. மேலும் சில துறைகளில் அவுட்சோர்ஸையும் ஆட்குறைப்பையும் ஒப்புக் கொண்டது.

ஆனால் நிர்வாகம் ஊதிய உயர்வு தொகையை ரூ8250 லிருந்து உயர்த்தவில்லை. மேலும் 12.2.14 அன்று ஒத்துக் கொண்ட 100சத அரியர்ஸ் மற்றும் பழைய ஒப்பந்தம் முடிந்த (6.7.2013) தேதியிலிருந்து புது ஒப்பந்தம் ஆரம்பம் ஆகியவற்றை தர மறுத்துவிட்டது.

சங்கத்தின் சட்ட நடவடிக்கைகளின் தொய்வை நிர்வாகம் தனக்கு சாதகமாக்கி கொண்டதாலும், தேர்தல் நேரத்தில் சங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிர்வாகம் மறுத்ததாலும் மீண்டும் சட்ட நடவடிக்கைகள் மூலம் தான் நமது கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து இடைக்கால நிவாரண வழக்குக்கு முக்கியத்துவம் அளித்து அதுவும் ஆகஸ்ட் 2015ல் இருந்து ரூ4000 இடைக்கால முன்பணமாக நிவாரணம் பெறமுடிந்தது, 42 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இடைக்கால முன்பணத் தொகையை உயர்த்தி பெறுவதிலேயே சங்கம் ஆர்வம் காட்டி வருகிறது.

நிர்வாகமும் சங்கத்தின் சட்ட நடவடிக்கைகளை தனக்கு சாதகமாக்கி தங்கு தடையற்ற உற்பத்தியை பெற்று வருகிறது. சங்கமே தொழிலாளர்களை சட்டப்படியான நிர்வாக ஒழுங்குக்கு மாற்றி வருகிறது. அதாவது தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலோ, வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பு தெரிவித்தால் வழக்குக்கு நெருக்கடி ஆகி விடும். வேலை நிறுத்தம் செய்யாதீர்கள் நாங்கள் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதன் விளைவு நிர்வாகம் தனது தடையற்ற உற்பத்திக்கு ஏற்றார் போல் பல வேலைகளில் பணி நிலைமைகளை மாற்றம் செய்கிறது. அதை சங்கத்தால் கேள்வி கூட கேட்க முடியாமல் வழக்கு தொடுக்கின்றனர். அதனால் வழக்குகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதே தவிர தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.

நீதி மன்றம் மூலம் இடைக்கால நிவாரணம் பெற்றதாலும் ஊதிய வெட்டினைத் திரும்ப பெற்றதாலும், இளைய தொழிலாளர்களிடம் வளர்ந்துள்ள நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி நிர்வாகம் தனது நிலையாணைகளையும் தொழிலாளருக்கு எதிரான சட்டங்களையும் சுலபமாக தொழிலாளர்களை கடைபிடிக்க வைக்கிறது.

தொழிற்சங்கத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நிர்வாகத்திற்கு எதிராக இருந்தாலும் அதன் விளைவுகள் நிர்வாகத்திற்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் தான் இருக்கின்றன.

அரக்கோணம் MRF தொழிற்சாலையில் நடைபெற்ற சட்ட நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. அரக்கோணத்தில் 2004ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது எனவும், பெரும்பான்மையான சங்கமான ULF சங்கத்தோடு தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தோழர் வி.பிரகாஷ அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் ஒரு ஐயுளு அதிகாரி முன்னிலையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பெற்ற சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவு பெற்றார். அதை எதிர்த்து நிர்வாகம் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு கீழ் நீதி மன்றம் சொன்ன உத்தரவை நடைமுறைபடுத்துவதாக கூறி வழக்கை வாபஸ் பெற்றது.

உயர்நீதி மன்ற உத்தரவின்படி ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் நிர்வாக ஆதரவு பெற்ற சங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து ULF சங்கம் சார்பாக தோழர் வி.பிரகாஷ் அவர்கள் மேல்முறையீடு சென்றுள்ளார். நிர்வாகம் கால நீட்டிப்பின் மூலம் தொழிலாளர்களை நசுக்கி தன்வசமாக்கி விட்டது.

இதே போல் 12 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வழக்கான மணலி MPL தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த வழக்கில் 2008-ம் ஆண்டு தொழிற் தீர்ப்பாயம் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய போதும், நிர்வாகம் மேல் முறையீடு சென்று 2016ஆம் ஆண்டு வரை வழக்கை இழுத்தடித்தது. இதன் விளைவு சங்கத்திலுள்ள பெரும்பான்மை தொழிலாளர்கள் நிர்வாகம் அறிவித்த தொகைக்கு கையெழுத்திட்டு சங்கத்திலிருந்து வெளியேறினர். கால நீட்டிப்பால் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி நிர்வாகம் சங்கத்தையே உடைத்தது.

2012ல் கோட்டயம் MRF தொழிற்சாலையில் 10 மாதம் நடைபெற்ற ஊதிய உயர்வு போராட்டம் தோல்வியுற்றதாக செயலாளர் பிரபாகரன் கூறியுள்ளர். ஆனால் அவர்களது போராட்டம் தோல்வியடையவில்லை, ஏனென்றால் எப்போதுமே தொழிலாளர் வர்க்கப் போராட்டம் தொழிலாளர்களுக்கு ஒரு படிப்பினையை தருவது போல் முதலாளிகளுக்கும் ஒரு படிப்பினையை தருகிறது. அதனால் தான் போராடிய கோட்டயம் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஊதிய உயர்வை விட (7800ரூ) போராட்டம் நடைபெறாத திருவொற்றியூர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வாக ரூ8250 ஐ அறிவிக்கச் செய்தது. மேலும் அவர்களின் போராட்டத்தினால் தான் 2016 ஒப்பந்தத்தில், கோட்டயம் தொழிலாளர்கள் ஊதிய உயர்வாக ரூ10000 ஐ பெறமுடிந்தது.

2007-ல் கதவடைப்பு சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் சொல்லவில்லை. தொழிலாளர் நலத்துறை தான் சட்டத்திற்கு புறம்பான கதவடைப்பு என அறிவித்து அரசானை வெளியிட்டது. மேலும் கதவடைப்பை எதிர்த்து போராட்டம் தொழிலாளர்களின் ஒற்றுமையாலும், பகுதி தொழிலாளர்கள், பகுதி மக்கள், வணிகர்கள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் துணையாலும் 63 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று சட்டமன்றத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அரசே ஆலையை ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பிற்கு பின் நிர்வாகம் கதவடைப்பை வாபஸ் பெற்றது. நீதிமன்றம் மூலம் கதவடைப்பின் போது பண்டிகை கால பணமாக ரூ6000 மட்டும் பெற்றோம்.

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தங்களால் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் வெல்ல முடியவில்லை என்றாலும் அந்த போராட்டங்கள் தான் அரசு மாற்ற நினைக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்தும், முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்தும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளை பாதுகாக்கிறது.

ஆ.சு.கு திருவொற்றியூர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தியுள்ளதாக செயலாளர் பிரபாகரன் கூறியுள்ளார். அதில் சங்கத்தின் பங்கு என்ன என்பதை சங்கப் பிரதிநிதிகள் தெளிவுபடுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை இன்று வரையிலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதற்காக சங்கத் தரப்பில் எந்த குரலும் எழுப்பப்படவில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் கூட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் சங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறியுள்ள செயலாளர் ஜனநாயக முறையில் சங்க செயற்குழுவை நடத்துவதில்லை. ஒப்பந்தம் முடிந்து 41 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் பற்றி தொழிலாளர்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய போதும் செயலாளர் அவர்கள் எதேச்சதிகாரமாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்கிறார். மேலும் இன்று வரை நிர்வாகத்தை எதிர்த்து தொடுத்துள்ள வழக்குகளின் விவரங்களை தொழிலாளர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தது கூட கிடையாது. வழக்குகளின் பட்டியல் இன்று வரை ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. இந்த செயல்கள் எப்படி ஜனநாயகமாகும்?

குமுக விடுதலைத் தொழிலாளர்

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.