ராஜஸ்தான் ஆல்வார் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி தொழிலாளர் மாநாடு

ராஜஸ்தான் அல்வார் மாநிலத்தில் உள்ள நீம்ரானா தொழிற்பேட்டை பகுதியில் பகுதிவாரியான தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் போராட்டக் குழு(ஆல்வார் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி)வின் முதல் தொழிலாளர் மாநாடு 18 டிசம்பர் அன்று நடைபெற்றது. அம்பேத்கர் பூங்காவில் நடைபெற்ற மாநாட்டில் நீம்ரானா பகுதியில் இருந்து டாய்கின் ஏர்கண்டிஷனர், டயோடா கோசாய், ருச்சி பீர் தொழிலாளர்களும், தாபகாரா பகுதியில் இருந்து ஹோண்டா இருசக்கர வாகனத் தொழிலாளர்களும், பிவாடியில் இருந்து ஸ்ரீராம் பிஸ்டன் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். கடந்த 3-4 வருடங்களாக இப்பகுதிகளில் தொழிலாளர் போராட்டங்கள் கடுமையாக வெடித்துள்ளன. இத்தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு பகுதிவாரியான அமைப்பை உருவாக்க முன்வந்துள்ளனர். இப்போராட்டத்திற்கு மாருதி சுசூகி, ஹீரோ கார்ப், மிகுனி. நிசின், பார்லே மற்றும் இதர தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு தந்துள்ளனர்.

mazdoor-sangharsh-samiti-2

ஹரியானா-ராஜஸ்தான் மற்றும் தில்லி-மும்பய் இன்டஸ்ட்ரியல் காரிடார் பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இம்முயற்சி முக்கிய பாதையாகும். தொழிலாளர்களின் போராட்டங்களின் மீதும் அவர்களின் வாழ்நிலைகளின் மீதும் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக டாய்கின் ஏசி தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி தோழர் மன்மோகன் மற்றும் ஹோண்டா தொழிலாளர்கள் போராட்டக் குழுவின் பிரதிநிதி தோழர் ராஜ்பால் கூறினர். நீம்ரானர்-பிவாடி-குஷ்கேரா-தாபுகாரா தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்களின் போராட்டங்களின் மீது நிர்வாக-அரசு ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. ஒப்பந்த முறை, குரூரமான பணி நிலைமைகள், குறைந்த ஊதியமே தொழிலாளர்களின் நிலைமை என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்ற அமைப்புகளை இங்கு உருவாக்க முடிவதில்லை. தொழிற்சாலைகளில் மட்டும் தொழிற்சங்கங்களை கட்டமைப்பது, மற்றும் போராட்ட முறைகள் ஆகியவற்றில் மத்திய தொழிற்சங்கங்களின் உத்திகள் தோல்வி அடைகின்றன அல்லது பேரளவுக்கு நின்று விடுகின்றன. இந்நிலையில் பகுதிவாரியாக தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மஸ்தூர் சமிதி வழிநடத்த முனைகிறது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் தற்காலிகக் குழு பிரதிநிதி தோழர் ராம்நிவாஸ், குர்காவ்-பவால் தொழிலாளர் ஆதரவு மையத்தின் பிரதிநிதி தோழர் அமித், ஷ்ரமிக் சங்க்ரம் குழுவின் பிரதிநிதி தோழர் சுபாஷ், ஹீரோ மோட்டோகார்ப் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரும் ஆன தோழர் பீம்ராவ் ஆகியோர் தொழிலாளர்களுக்கு அதரவு தெரிவித்தனர். 1998ல் தாருஹேராவில் நடைபெற்ற பசுபதி ஸ்பின்னிங் மில் தொழிலாளர்கள் போராட்டம், ஹோண்டா மாநேசர் போராட்;டம் (2005), ரீக்கோ குர்காவ் (2009), மாருதி சுசூகி (2011), ஹோண்டா தாபுகேரா (2016) போராட்டங்களின் தொடர்ச்சியாக நீம்ரானா தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று அவர்கள் வலியுறுத்தினர். தங்கள் போராட்ட அனுபவங்களின் வாயிலாக தொழிலாளர்களே எடுத்து செல்லும் முயற்சி என்பதால், இம்முயற்சியின் மேல் ஆளும் வர்க்கம் ஒடுக்குமுறை செலுத்துவதோ அதை மறைமுகமாக ஆட்கொள்வதோ கடினம் என்று அவர்கள் கூறினர்.

மாநாட்டின் முடிவில் தொழிலாளர் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கத்தின் வேலைகளை கட்டமைத்தனர்.

  • போராடியதற்காக ஹோண்டா, டாய்கின், ருச்சி பீர், டயோடா கோசாய் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக வேலையில் சேர்க்க வேண்டும்.
  • அனைத்து தொழிலாளர்களின் மீதும் உள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற்று, தொழிலாளர்கள் மீது செலுத்தும் ஒடுக்குமுறையை அரசு நிறுத்த வேண்டும்.
  • ஒப்பந்த தொழில் முறையை நிறுத்தி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உச்ச நீதி மன்றத்தின் சம வேலைக்கு சம ஊதிய கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
  • தொழிலாளர்களுக்கு முறையான பணி நிலைமைகளை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் கூட்டு பேர உரிமைகளை பறிக்கும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
    உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

For more details on Mazdoor Sangharsh Samiti (Alwar), contact: Sonu (Honda) – 7015517950; Manmohan (Daikin) – 9672100936; Anil (Toyoda Ghosai) – 9610812266 from the Samiti.

This entry was posted in Factory Workers, News, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.