ஹேவொர்த் என்றொரு அமெரிக்க நிறுவனம்!! எஸ். கண்ணன்

ஹேவொர்த் என்ற அமெரிக்கத் தொழிற்சாலையில் காண்ராக்ட் தொழிலாளர்கள் புதிய வெடிப்பாக கிளம்பி, வெற்றிப் பாதைக்கு வழிவகுத்தனர். 6 மாதகாலமாகத் தொழிலாளர்கள் சங்கம் வைக்க சி.ஐ.டி.யு அலுவலகத்திற்கு வந்தாலும், அனைவரும் காண்ராக்ட் என்பதால், தொழிலாளர்களுக்கு வழங்கிய வேலை உத்தரவுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. எந்த ஒரு அடையாளமும் விட்டு வைக்காத திருடன் போல், கம்பெனித் தொழிலாளி என்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும், ஹேவொர்த் நிறுவனம் வழங்கி இருக்கவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டமே கை கொடுத்தது. எத்தனை நிரந்தரத் தொழிலாளர்கள்? என்ற கேள்வியும், காண்ராக்டர்கள் எத்தனை பேர்? அவர்கள் முகவரி, என்ன தொழிலுக்கான காண்ராக்ட்? ஆகிய விவரங்கள் கொண்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் அடிப்படையிலான கேள்விகள், தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனரிடம் அளிக்கப் பட்டது. அது நிறுவனத்திற்கு காட்டுத்தீயாகப் பரவியது. 3 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த தொழிலாளர்களே இதற்கு காரணமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்15 தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டனர்.
சி.ஐ.டி.யு தலைமையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். மூன்றுநாள்கள் நடந்த வேலை நிறுத்தம், நிர்வாகத்தையும், தொழிற்சாலைகள் ஆய்வகத்தையும் நிர்பந்தித்தது. டிஸ்மிஸ் செய்யப் பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் நிரந்தரம் செய்வதற்கான ஆணை வழங்க நிர்வாகம் சம்மதித்தது.
இதற்கு மிக முக்கிய காரணம், காண்ராக்டர்கள் யாரும் லைசென்ஸ் கூட வாங்கவில்லை என்பதாகும்.

நான் தான் லைசென்ஸ் வழங்க வேண்டிய அதிகாரி. ஆனால் லைசென்ஸ்க்காக விண்ணப்பிக்காமல், எப்படி கொடுப்பது என்கிறார் அந்த அதிகாரி. 3 ஆண்டுகாலம் லைசென்ஸ்க்காக விண்ணப்பம் செய்யாமலேயே, ஹேவொர்த் நிறுவனத்தில், SMS, IQMS, TSR ஆகிய காண்ராக்டர்கள் 100 தொழிலாளர்களை வைத்து வேலை வாங்க முடிந்துள்ளது. பிராவிடண்ட் ஃபண்ட் ஆணையர் இந்த காண்ராக்ட் தாரர்களிடம் இருந்து, பிராவிடண்ட் ஃபண்ட் பிடித்தம் செய்து வர சம்மதித்துள்ளார். இவை அனைத்துமே முறை கேடுகளின் உச்சம்.

அண்மையில் வருமான வரித்துறையினர் நடத்திய அசோதனையில் சில, பிரமுகர்கள் பிடிபட்டது போல், இந்த அதிகாரிகளின் செயலை சரிபார்க்கும் சமூக ஆடிட்டிங் தேவையாக உள்ளது. மேற்படி விவரங்கள் அனைத்தையும் சி.ஐ.டி.யு சேகரித்த நிலையிலேயே வேலை நிறுத்தம் வெற்றி பெற முடிந்தது. டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டு நிரந்தரத் தொழிலாளர் அந்தஸ்து பெற முடிந்தது. அமெரிக்காவின் அதிபராகக் தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவில் இருந்து வேலைகள் ஏற்றுமதியாகாது, என ஹேவொர்த் போன்ற அமெரிக்கவின் குட்டி முதலாளிகளை வைத்துக் கொண்டு கூட பேச முடியாது. வேலைகள் ஏற்றுமதியாவதால் இழப்பு அமெரிக்காவிற்கு அல்ல, என்பதுவும் தெரியும்.

எஞ்சினியரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் +2 என எந்த படிப்பு படித்தாலும், காண்ராக்ட் வேலை மட்டுமே கிடைக்கும். சம்பளமும் 8000 ஆயிரம் ரூபாய், இதுவே அதிகம் என்று பசப்பு வார்த்தைகள் பேசிடும், மனிதவள அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள். இதுவே இன்றைய இந்திய வேலைவாய்ப்பு சந்தையின் நிலை.

முதலாளித்துவ சமூக அமைப்பில், சுரண்டல் மற்றும் மூலதனக் குவிப்பிற்கான வாய்ப்பை, வேலையின்மையும், காண்ராக்ட் வேலை முறையும் வழங்கி வருகிறது. புதிய பெருந்தனக்காரர்களாக, பெருநகரங்களின் விரிவாக்கப் பகுதிகளில், காண்ராக்டர்கள் வளர்ந்து வருகிறார்கள். உழைப்பு சக்திக்கான விலையை மலிவாக்கிடும், முதலாளித்துவத்தின் லாபவெறி, அவிழ்த்து விட்டுள்ள எத்தனையோ கொடுமைகளில் ஒன்றாக, காண்ராக்ட் சுரண்டல் முறையைப் பார்க்கக் கூடாது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சமூக பாதுகாப்பின் மீதான தாக்குதலின் ஒரு பகுதி. அமர்த்து பின் துரத்து என்ற வகையில் வேலை வழங்கும் முறையின் நீட்சி. இது மூலதனக் குவிப்பிற்கும், அளவில்லாத வகையில் கூட்டு பேர உரிமையை முடக்குவதற்கும், பயன்படுகிற பேராயுதம். எனவே மனிதநேய உதவிகள் அடிப்படையில் காண்ராக்ட் தொழிலாளர்களைக் திரட்டுவதை விட, தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்கும் முதலாளித்துவத்தின் முயற்சியை முறியடிக்கும் நோக்கத்துடன் அணி திரட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

சட்டங்களை முடக்கும் அரசுகள்:

நவீன தாரளமயக் கொள்கைகள் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து வந்தது. பாஜக ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பிற்கு வந்த பின், பகிரங்கமாக தொழிலாளர் சட்டங்களை முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு சாதகமாக திருத்தி வருகிறது. குறிப்பாக அப்பரண்டிஷ் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், காண்ராக்ட் தொழிலாளர் நிரந்தரம் செய்தல் சட்டம், தொழிற்தகராறு சட்டம் ஆகியவை, மூலதனச் சுரண்டலைப் பாதுகாக்கும் வகையில் திருத்த முயற்சிக்கப் படுகிறது.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற பெயரில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகள் செயல்படுகின்றனர். தொழிலாளர் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்த துறை இயங்குகிறது. இந்த துறை முறையாகச் செயல்பட்டால், தமிழகத்தில் காண்ராக்ட் சுரண்டல் முறையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆலைகளை ஆய்வு செய்வது, காண்ராக்ட் லைசென்ஸை புதுப்பிக்காதவர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை மிக அவசியத் தேவையாக உள்ளது.

குறிப்பாக 240 நாள்கள் மற்றும் 480 நாள்கள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது என்ற அதிகாரத்தை, இந்த ஆய்வாளர்கள் முறையாக பயன்படுத்தியதில்லை. இவை அனைத்தும் நடைமுறையில் செயல்படுத்தப் படுவதில்லை. லைசென்ஸ் குறுக்கு வழியில் பெறப்படுகிறது. ஒரு முறை பெற்ற காண்ராக்ட் லைசென்ஸ் வருடக் கணக்கில் பயன் படுத்தப் படுகிறது. இது குறித்து சட்டமன்றத்தில் மார்க்ஸிஸ்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தாலும், மாநில அரசுகளின் கொள்கை மாற வில்லை. அதிமுக, திமுக இரண்டும் இந்த கொள்கை அமலாக்கத்தில், ஒன்றாகவே உள்ளன.

அதேபோல் 2014 நாடாளுமன்றத்தின் குளிர்காலத் கூட்டத் தொடரின் போது, பாஜக அரசு அப்பரண்டிஷிப் சட்டத்தை திருத்தியது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஒரு தொழிலாளியை அப்பரண்டிஷிப் அந்தஸ்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்பது திருத்தம். இதை கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்தனர். மற்ற அனைத்தும் கட்சியினரும் ஆதரித்தனர்.

சட்டங்களைப் போராட்டங்களே உருவாக்கின:

இன்று நடைமுறையில் உள்ள அனைத்து சட்டங்களும், தொழிலாளர்களின் போராட்டத்தில் விளைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே, இந்தியத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன்பின் விடுதலை இந்தியாவில் இடதுசாரித் தொழிற்சங்கங்களும், இடதுசாரி தலைவர்களும் தங்களின் போராட்ட நடவடிக்கைகளால், புதிய தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தனர் என்பது வரலாறு.

சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாகப் பட்ட போது, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கட்டாயப் படுத்தி சில திருத்தங்களைக் கொணர்ந்தனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் கூடாது, என்பதை திருத்தியது. தொழிற்தகராறு சட்டங்களை செயல்படுத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் கமிஷனர் என்ற பெயரில் நியமனம் செய்யப் பட்டாலும், தமிழகத்தில் போராட்டங்கள் மூலம், அதை மாற்ற முடிந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழிற்சங்கம் வைப்பது, போராடுவது, ஒப்பந்தம் செய்வது ஆகிய முன்னுதாரணங்களை நிகழ்த்த முடிந்தது.

ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமை குறித்து விவாதிக்கிற போது, தொழிலாளர் உரிமைகளை மனதில் வைப்பதில்லை. கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரித் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் உரிமைகளை ஜனநாயக வளர்ச்சிக்கான முதல் படியாகக் கருதுகின்றனர். காண்ராக்டர்களின் பணி கட்டிடங்களை மட்டும் சிதைப்பதில்லை. மனித உயிர்களையும், சமூகத்தையும் சிதைக்கும், என்பதை உணரவேண்டியுள்ளது.

எஸ். கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், சிஐடியு

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.