தொழிற்சங்க உரிமை மற்றும் பணிநிரந்தரம் கோரி சுஜா சோயி தொழிலாளர்கள் போராட்டம் – காவல் துறை கெடுபிடி

நாகை மாவட்டத்தின் வில்லியநல்லூர் கிராமத்தில் உள்ள சுஜா சோயி நிறுவனத்தின் தொழிலாளர்களும் கிராம மக்களும் ஜனவரி 9 அன்று தொழிற்சாலையின் முன் சங்கக் கொடியை ஏற்றினர். ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தும் உள்ளுர் காவல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை அனுமதிக்கவில்லை. பின்னர் தொழிலாளர்கள் துணை காவல் ஆணையரின் அனுமதியுடன் கொடியை ஏற்றினர்.

கடந்த 13 வருடங்களாக இங்கு செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் ஹைட்ராலிக் பிரஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 200 ஆண் தொழிலாளர்களும் 200 பெண் தொழிலாளரகளும் பணி புரிகின்றனர். ஆண் தொழிலாளர்கள் ஐடிஐ மற்றும் இதர கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். பெண் தொழிலாளர்கள் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரிகின்றனர். கடந்த7 வருடங்களாக பணி செய்தும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு மாதம் ரூ7500 முதல் ரூ12000 வரை ஊதியம் கிடைக்கிறது.

ஏஐசிசிடியுவுடன் இணைந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் கீழ் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வருகின்றனர். தொழிலாளர்கள் இணைந்த சுஜா சோயி தொழிலாளர் நலச் சங்கத்துடன் 2010ஆம் ஆண்டில் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டதாகவும் தற்போது தொழிந்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். 2014 ல் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த கோரி 32 தொழிலாளர்கள் சட்டரீதியாக வழக்கு தொடுத்துள்ளனர். அதன் விளைவாக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாக அவர்கள் கூறினர். குறிப்பாக வழக்கு தொடுத்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ7500 தான் கொடுக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ12000 வரை கொடுக்கப்படுகிறது.

2014ல் ஒரு பெண் தொழிலாளருக்கு தொழிற்சாலையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 2010 ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் இருந்திருக்க வேண்டும் ஆனால் இதுவரை நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. இது குறித்து சிலத் தொழிலாளர்கள் நிர்வாகத்தை கேட்டபோது வாய்மொழித் தகராறு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு சாடி நிர்வாகம் 2016 ஜுலை முதல் மூன்றுத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

மேலும் தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தால் அவர்களை வேலை நீக்கம் செய்வோம் என்றுத் தொழிலாளர்களை நிர்வாகம் மிரட்டியுள்ளதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் 200 தொழிலாளர்கள் இருந்து சங்கத்தில் தற்போது 30 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆலை வாயிலில் கொடியேற்றியுள்ளது தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் முயற்சியாகும்.

தொழிலாளர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  • தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய தொழிற்சங்க முன்னணிகள் சுரேஷ், கணேசமூர்த்தி, சிரஞ்சீவி ஆகியோரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்.
  • தொழிலாளர் கோரிக்கைகளை தொழிற்சங்கத்துடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண்.
  • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தாதே.
  • தொழிலாளர், தொழிற்சாலைச் சட்டங்களை முறையாக அமல்படுத்து.
  • வேலைவாய்ப்பில் முந்தைய ஒப்பந்தத்தின்படி சாதி, மத பாகுபாடின்றி உள்ளுர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கு
  • இரட்டை சம்பள முறைக்கு முடிவு கட்டு. சமவேலைக்கு சம கூலி வழங்கு.
  • பெண் தொழிலாளர்களை கவுரவமாக நடத்து.
  • காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்டு.
This entry was posted in Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.