திருப்பூர்- மதிக்கப்படாத கூலி ஒப்பந்தங்கள்

Sept 2nd 2016 Garment workers demonstration — file photo

மத்திய மாநில அரசுகள் மூன்று கூலி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களின் சார்பாக தொழிற்சங்கங்களும் முதலாளிகளின் சங்கமும் கையொப்பமிட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் ஒன்றும் உள்ளது. ஆனால், அரசு, நீதித்துறை, தொழிற்சங்கங்கள் என்று பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாத காரணத்தால், மேற்சொன்ன ஒப்பந்தங்களை விட குறைவான கூலியே தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் கூட்டுப் பேர வலிமையின் அடிப்படையில் அமைப்பான துறைகளில் கூட்டு கூலி ஒப்பந்தங்களைப் போட்டுவருகின்றனர். தேசிய குறைந்தபட்ச கூலியாக ரூபாய் 18, 000 வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, வலுப்பெற்று வரும் சூழலில் தொழிற்சங்கங்கள் சட்டப்பூர்வ குறைந்த பட்ச ஊதியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதாக இருக்கிறது.

எண்ணற்ற கூலி அறிவிக்கைகளும் சட்ட குழப்பமும்
இந்தியாவில் உள்ள பல்வேறு ஆயத்த ஆடை தயாரிப்பு மையங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால் தமிழ்நாட்டில்தான் கூலி மிகவும் குறைவானதாக இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. ஒரு பக்கம் தொழிற்சங்கம் பலவீனமாக உள்ளது. தொழிலுக்குள் உள்ள பல்வேறு துறைகளுக்கான குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்வதில் அரசு பாராமுகத்துடன் செயல்படுதகிறது. பல்வேறு துறைகளுக்கு இடையே ஒரே வேலைக்கு வேறு வேறு கூலிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் இத்துறைகளில் தொழில்நிறுவனங்களும் அரசும் கூலியின் மட்டம் குறைவானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1948ல் குறைந்தபட்ச கூலிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, அதன் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலுக்குமான குறைந்தபட்ச கூலியை அரசு நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. தொழிற்சங்கங்களும் வேலை அளிப்பவர்களும் தங்களின் ஆலோசனைகளை அல்லது ஆட்சேபணைகளை அரசுக்கு அளிக்கலாம். அல்லது, அரசு முத்தரப்பு துணை கமிட்டி ஒன்றை அமைக்கலாம். அந்த துணை குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச கூலியை, அரசு பிரகடனம் செய்யலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிலகங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்த தொழில்கள் குவிந்துள்ள திருப்பூரைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்களுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கும் (Tirupur Exporters Association -garment and knitwear) அல்லது தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் (South India Hosiery Manufacturer’s Association) இடையில் தனித்தனியான கூட்டுப்பேர ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

சமீபத்திய கூலி ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரலில் போடப்பட்டது. அதற்கு முன்பு பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. AITUC, CITU, LPF, INTUC, HMS, BMS மற்றும் MLF உள்ளிட்ட 8 சங்கங்கள், முதலாளிகள் சங்கத்துடன் நூற்பு மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழிலாளர்களுக்கான இரு தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Download (PDF, 316KB)

நான்கு ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் 11 வகையான வேலைகளை உள்ளடக்கியது. மடித்தல் மற்றும் கட்டுதலுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 211 (மாதத்திற்கு ரூபாய் 5486) முதல், தைப்பதற்கு நாளொன்றுக்கு ரூபாய் 345 (மாதத்திற்கு ரூபாய் 8970) வரை ஒப்பந்தம் ஏற்பட்டது. (முழு விவரங்களுக்குக் கீழே பார்க்கவும்) முதலாம் ஆண்டில் 18 சதம் கூலி உயர்வும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 5 சதம் கூலி உயர்வும் ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது.  உள்ளூருக்கான உற்பத்தி மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என்ற இரண்டு வகைப்பட்ட உள்ளாடைத் தொழில்களுக்கும் இந்த ஒப்பந்தம் பொருந்துவதாகும்.

தையல் தொழிலாளர்களுக்கான கூலி ஒப்பந்தப்படி கொடுக்கப்படுகிறது, திறன் தேவையற்ற பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அப்படியில்லை, அதனால் அவர்களுக்கு ஒப்பந்தத்தைவிட குறைவான கூலி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று பனியன் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் (AITUCயுடன் இணைக்கப்பட்டது) பொதுச்செயலாளர் தோழர் சேகர் சொல்கிறார். திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத் தொழிலாளர்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் 10 முதல் 15 சதம் வரை மட்டுமே என்பதால், தங்களால் கூலி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சொல்கின்றனர்.

export garment factory

இதற்கிடையில் ஜனவரி 2016ல் உள்ளாடைப் பிரிவுக்கான குறைந்தபட்ச கூலிக்கான அறிவிக்கையை தொழிலாளர் துறை வெளியிட்டது. இத்தொழில் பிரிவு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த பின்னர், இப்பிரிவுக்கான கூலி அறிவிப்பு செய்யப்படும் இரண்டாவது முறை இதுதான். ஒப்பந்தத்தில் தையல் தொழிலாளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கூலியை அறிவிக்கையில் தையல் தொழிலாளிக்கு குறிப்பிடப்பட்ட கூலியுடன் (Rs, 4248) ஒப்பிடும்போது, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கூலியை விட ஒப்பந்த கூலி இரண்டு மடங்கானதாக இருக்கிறது. உதவியாளர்கள் போன்ற திறன் தேவையற்ற வேலைகளுக்கும் அறிவிக்கையில் குறைவான கூலி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் திறன் தேவையற்ற தொழிலாளர்களுக்கான கூலி மாதம் ரூபாய் 5486 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்க, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கூலி கவனத்தை ஈர்க்கும் வகையில் குறைவாக, மாதம் ரூபாய் 1848 முதல் 1998 வரை என்று இருக்கிறது. எனவே, இந்த கூலி அறிவிக்கையை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். அரசு அறிவித்துள்ள இந்த கூலி திருப்பூரில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உண்மையான கூலியை விட குறைவானது என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

தையல் தொழிலைப் பொறுத்தவரை கூலி உயர்வைத் தடுத்து நிறுத்துவதில் கடந்த 30 ஆண்டுகளாக முதலாளிகள் வெற்றிபெற்று வந்திருக்கின்றனர். முதலில் 1983லும் பின்னர், 1991லும் தற்போது, ஏறக்குறைய 10 ஆண்டுகள் கடந்த நிலையில், 2004லிம் குறைந்தபட்ச கூலி (G.O No 59) உயர்த்தப்பட்டுள்ளது. கடைசி உயர்வு ஏறக்குறைய 3000 ரூபாய் என்பதாக இருந்தது. முதலாளிகள் தாங்கள் வழக்கமாக செய்வதுபோல, ‘தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை’ என்ற காரணம் காட்டி நீதிமன்றத்தில் தடை வாங்கி குறைந்தபட்ச கூலி அமுலாக்கத்தை தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.

சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயத்த ஆடை தொழிலில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் வேலை செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டு உருவான கார்மெண்ட்- பேஷன் தொழிலாளர்கள் சங்கம் (Garment and Fashion Workers Union-GAFWU) இந்த தடை ஆணைகளை விலக்கவும், குறைந்தபட்ச கூலி அறிவிக்கைகள் வெளிவரவும் செயல்பட்டது. இரண்டு ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்பு ஜூலை 13, 2016 அன்று, ஆயத்த ஆடைகள் பிரிவுக்கான குறைந்தபட்ச கூலி அறிவிக்கை சரியானதுதான் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒப்பந்தத்தின்படி திறன் வாய்ந்த பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2014 அறிவிக்கையை விட ஒப்பந்தங்களில் உள்ள கூலி ரூபாய் 500 அதிகமானதாக உள்ளது. ஆனால், உதவியாளர்களைப் பொறுத்தவரை அறிவிக்கை ரூபாய் 3000 வரை ஒப்பந்த்தத்தை விட அதிகமாக உள்ளது.

இதை எதிர்த்து இரண்டே வாரங்களில் திருப்பூர் முதலாளிகள் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்ற போது உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவை வழங்கியது. 2014 குறைந்தபட்ச ஊதியம் ஆயத்த ஆடை தையல் தொழிலுக்கு மட்டும் பொருந்தும் என்று அந்த ஆணை சொன்னது. இதற்கு முன்னதாக, ஆயத்த ஆடை பிரிவுக்கான 2014 அறிவிக்கைக்கு மாறாக 2016 அறிவிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் மார்ச் 17, 2016 உத்தரவையும் உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

உள்ளாடைகளுக்கும் தையலுக்கும் தனித்தனி அறிவிக்கைகள் வெளியிடுவது மனம்போன போக்கில் செயல்படுவதாகும், ஏனென்றால், இவ்விரண்டு தொழில்களிலும் ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது, அதுமட்டுமல்லாமல், இவ்விரண்டிற்கும் பல சமயங்களில் ஒரே தொழிற்சாலையில் உள்ள அதே சாதனங்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், 2014 அறிவிக்கை ஏற்றுமதி தொழிலகங்களையும் உள்ளடக்கியதாகும். ஏற்றுமதி தொழிலகங்களில் திருப்பூர் உற்பத்திக் கூடங்களும் உள்ளடங்கியவை. உள்ளாடை உற்பத்தி உற்பத்திக்கும் தையல் தொழிலகங்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டுவதற்கு நியாயமான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

மாதாந்திர கூலி (மாறுபடும் பஞ்சப்படியுடன்)

தையல் தொழிலுக்கான அறிவிக்கை ( TN G.O (2D) No. 59 Dated 10.10.2014)

உள்ளாடை தொழிலுக்கான அறிவிக்கை (G.O (2D) No 5, Dated 27.01.2016)

திருப்பூரின் இரு தரப்பு ஒப்பந்தம் (2016)

தையல் தொழிலாளி/ ஆபரேட்டர்

ரூபாய் 8170 – Rs 8340

ரூபாய் 7109

ரூபாய் 8970

வெட்டுபவர்

ரூபாய் 8340 – ரூபாய் 8490

ரூபாய் 7109

ரூபாய் 8970

துணி தேய்ப்பவர்

ரூபாய் 7957 – ரூபாய் 8063

ரூபாய் 7109

ரூபாய் 8970

சிப்பம் செய்பவர்

ரூபாய் 7957

ரூபாய் 7109

ரூபாய் 8970

சரி பார்ப்பவர்

ரூபாய் 8340 – ரூபாய் 8490

ரூபாய் 5309

ரூபாய் 6864

லேபிள் ஒட்டுபவர்

ரூபாய் 7957

ரூபாய் 5009

ரூபாய் 6604

கையால் மடிப்பவர்

ரூபாய் 7957

ரூபாய் 4859

ரூபாய் 6526

மடித்து கட்டுவதில் உதவியாள்

ரூபாய் 7957

ரூபாய் 4709

ரூபாய் 5486

பயிற்சி தொழிலாளி/ பயிற்சியாளர்

ரூபாய் 7957

சொல்லப்படவில்லை

சொல்லப்படவில்லை

பிற வகையினங்கள்

ரூபாய் 7957

சொல்லப்படவில்லை

சொல்லப்படவில்லை

2014 அறிவிக்கையிலிருந்து உள்ளாடை உற்பத்தியை விலக்கி வைத்த உயர் நீதிமன்ற ஆணையை (directive) எதிர்த்து வழக்குத் தொடுக்க தொழிலாளர் துறை திட்டமிட்டு வருவதாக GAFWUவின் தோழர் சுஜாதா மோடி தெரிவித்துள்ளார். உள்ளாடை தொழிலுக்கான கூலி அறிவிக்கை உள்நாட்டு உற்பத்திக்கானது என்றும் ஏற்றுமதி செய்யும் தொழிலகங்கள் 2014 அறிவிக்கையால் உள்ளடக்கப்படுகின்றன என்றும் தொழிலாளர் துறை தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

நீதிமன்றத்தின் ஆணை குறித்த வழக்கில் தொழிற்சங்கங்கள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் துறை விரும்புவதாகவும் சுஜாதா மோடி சொன்னார். கூட்டுப் பேர ஒப்பந்தத்தின் காரணமாகவும், நிர்வாகத்துடன் உள்ள உறவின் காரணமாகவும் இடது தொழிற்சங்கங்கள் இப்பிரச்சனைக்கு சட்டப் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பு தற்போது குறைவானதாக இருக்கிறது என்று AITUCயின் தோழர் சேகர் சொன்னார். கூட்டுப் பேர ஒப்பந்தத்தையும் குறைந்தபட்ச கூலி அறிவிக்கைகளையும் பயன்படுத்தி கூலியைக் குறைவாக வைத்துக்கொள்ள முதலாளிகள் முயல்வதாகத் தெரிகிறது. உதாரணமாக, குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான வழக்கொன்றில், குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் கூட்டுப் பேர ஒப்பந்தமே சிறந்தது என்று தொழில் நிறுவன அமைப்பொன்று வாதிட்டது. இருந்தபோதும், . 2016ல் சமீபத்திய குறைந்தபட்ச கூலி அறிவிக்கையை ஜவுளித் தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இறுதியாக, செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்திற்கு முன்பு, விவசாயம் அல்லாத வேலைகளுக்கு ரூபாய் 350 குறைந்தபட்ச ஒருநாள் கூலி என்று மத்திய அரசு நகல் அறிவிப்பு வெளியிட நேர்ந்தது.
இந்த கூலி இன்னமும் அறிவிக்கை செய்யப்படவில்லை என்றாலும், திறன் தேவைப்படாத வேலைகளைச் செய்யும் தொழிலாளிக்கான கூலி ரூபாய் 9100 என்றும் திறன் தேவைப்படும் வேலையைச் செய்யும் தொழிலாளிக்கு இன்னும் கூடுதலாகவும் குறைந்தபட்ச கூலி அமையும் என்று இது சுட்டுகிறது.

தொழிலாளர் சீர்திருத்தத்திற்கான சோதனைக் களமாக ஆயத்த ஆடைத் தொழில்

தொழிற்சங்கத்தின் வலு பலவீனமடையும்போது, தொழிற்சங்கங்கள் பங்குபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் பலன் தரும் பேரங்களாக இல்லை என்பதும் பட்டினி கிடக்கும் ஊதிய நிலைக்கு தொழிலாளர்களைத் தள்ளுகிறது என்பதும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரத்தில் தெரிய வருகிறது. மேலும், வலுவான கூலி பேரத் திறன் இருக்கிறது என்பதால் குறைந்தபட்ச கூலிக்கான தேவை விலக்கி வைக்கப்பட்டதாக ஆகிவிடாது. மாதம் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் குறைந்தபட்ச கூலியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய வேலை நிறுத்தத்தின் மூலம் முன்வைத்த காரணத்தால்தான் விவசாயம் அல்லாத வேலைகளுக்கு ரூபாய் 350 நாளொன்றுக்கான குறைந்தபட்ச கூலி என்று மத்திய அரசு முன்மொழிவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தேசிய ஜனநாயக முன்னணி அரசின் தொழிலாளர் சீர்திருத்தத்திற்கான சோதனைக் களமாக ஜவுளித் தொழில் இருக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு இரண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்கான வேலை என்பது அவற்றில் ஒன்று. இதன் மூலம் இத்துறையில் ஒப்பந்த தொழிலாளர் மயம் அனுமதிக்கப்பட்டதாகிறது. மற்றது PF விதிகள் தளர்த்தப்பட்டதாகும். இதன் மூலம் மிக முக்கியமான சமூகப்பாதுகாப்பு ஜவுளித் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. திருப்பூர் தொழிலாளர்கள் ஏற்கனவே, கால வரையறையுடன் கூடியதான நிரந்தர வேலையிலிருந்து, பீஸ் ரேட் அடிப்படையிலான ஒப்பந்த வேலைக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவையும், இவற்றுடன் முறையான குறைந்தபட்ச கூலி இல்லாது இருப்பதும் சேர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் திருப்பூர் தொழிலாளர்களை இன்னமும் மோசமான நிலையை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்ள தொழிற்சங்கங்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

for english click here

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Garment Industry, Women Workers, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.