பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்துகள் பதிவு – அரசுக்கு ஏஐசிசிடியு மனு அளிப்பு

ஏஐசிசிடியுவின் 10 லட்ச கையெழுத்து கோரிக்கை இயக்கம் பிப்ரவரி 6 அன்று முடிவுற்றது. 6ம் தேதி காலை அன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு பின்னர் ஏஐசிசிடியு பிரதிநிதிகளும், அகில இந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர்கள் சங்கப்(ஏஐஏஆர்எல்ஏ) பிரதிநிதிகளும் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலரை சந்தித்து 1 லட்சம் கையெழுத்துகளுடன் கூடிய மனுவை அளித்தனர். தற்போது உருவெடுத்துள்ள விவசாய நெருக்கடி, சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கைகளும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. பண மதிப்பு நீக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்கவும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் 25 ஜனவரி முதல் 31 ஜனவரி வரை ஏஐஏஆர்எல்ஏ அமைப்பு 200 கிராம சபைகளில் தீர்மானங்களை நிறைவேற்றும் இயக்கத்தை மேற்கொண்டது. கோரிக்கைகள் குறித்து இயற்றப்பட்ட கிராம சபை தீர்மானங்கள் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டது.

கையெழுத்து கோரிக்கைகளுக்கான பல்வேறு சமூகப் பொருளாதார காரணங்களை குறித்து ஏஐசிசிடியுவின் மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ்.குமார் பிப்ரவரி 4 அன்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவரித்தார். இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பில் நிலையற்ற வேலைவாய்ப்புகளே உருவாக்கப்படுகிறது என்று கூறிய அவர் பயிற்சியாளர்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசின் நிலையாணைச் சட்ட சீர்திருத்தங்களை உடனடியாக விதிமுறைகள் மூலம் அமலாக்கக் கோரினார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்கக் கொள்கையால் கட்டுமானத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை எனவும் அதனால் கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதி மூலம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு நிவாரணம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். இன்றைய தட்பவெப்ப நிலை மாறுதலில் ஒரு வருடம் வெள்ளம் என்றால் அடுத்த வருடம் வறட்சியை தமிழ்நாடு விவசாயிகள் சந்திக்கின்றனர். இப்பிரச்சனைகளை முறையாக தீர்ப்பதில் அரசு எந்த முயற்சியையும் காட்டுவதில்லை. வறட்சியினால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் நிவாரணமும், நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் ஊதியத்தை உடனடியாக கொடுக்கவும் ஏற்பாடு; செய்ய வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தில் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 200 பஞ்சாயத்துகளில் நூறு நாள் ஊரகத் திட்டத்தின் கீழ் கூடுதல் வேலை வாய்ப்புக் கோரி கிராம சபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றும் இயக்கம் ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்டதாக அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் கூறினார். பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப் புற மக்களுக்காக ஒவ்வொரு ஜன தான வங்கி கணக்குகளில் 1 லட்ச ரூபாய், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வருடந்தோறும் வேலை வாய்ப்பு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் குறைந்த பட்ச ஊதியம், பேரூராட்சிகளில் வேலைவாய்ப்பு திட்டம், நிலச் சீர்திருத்தம், நில உச்ச வரம்பு சட்டத்தை அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி; மக்கள் கோரிக்கை இயக்கம் நடத்தப்பட்டது.

திருவள்ளுர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி, கரூர் மாவட்டங்களில் இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளுர் மாவட்டத்தில் சோலவரம் மண்டலத்தில் நெற்குன்றம், அழிஞ்சிவாக்கம், எருமைவெட்டியபாளையம், நல்லூர், அளமாரி, சோலவரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஏஐஏஆர்எல்ஏ சங்கம் மனு கொடுத்துள்ளதாகவும், நெற்குன்றம், அழிஞ்சிவாக்கம் ஆகிய இரண்டு பஞ்சாயத்துகளில் கிராம சபை தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மற்ற பஞ்சாயத்துகளில் சங்கம் சார்பாக கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தோழர் ஜானகிராமன் கூறினார்.

முதலமைச்சர் தனிப் பிரிவு அலுவலர் கணேஷ் மூர்த்தியை சந்தித்து கையெழுத்துகளை கொண்ட மனுக்களை அளித்ததாகவும், அவர் ஒவ்வொரு துறைக்கு ஏற்ப கோரிக்கைகள் கொண்ட மனுக்களை சமர்ப்பிக்க கோரியதாக தோழர் ஏ.எஸ்.குமார் கூறினார். பணமதிப்பு நீக்கம், விவசாய நெருக்கடி, வார்தா புயல் எனப் பல இடையூறுகளில் தொழிற்சங்கம் வேலை செய்ய நேரிட்டதால் கையெழுத்து இயக்கத்தின் இன்னொரு குறிக்கோளான தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கைகளில் போதிய அளவை எட்டமுடியவில்லை என்று தோழர் முனுசாமி கூறினார்.

கையெழுத்து இயக்கத்தின் மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
1. விவசாயிகள் தற்கொலைகள், சாவுகளை தடுத்து நிறுத்து
2. வறட்சி நிவாரண அறிவிப்பு, வறட்சியாக இருக்கும் நிலைக்கு முடிவு கட்டு
3. உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு உடனடியாக 25 லட்சம் வழங்கு
4. விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் வழங்கு
5. நூறு நாள் வேலைத்திட்ட கூலி பாக்கிகளை உடனே வழங்கு
6. உழைப்பவர் எவரானாலும் ரூ. 21000 குறைந்தபட்ச கூலி வழங்கு
7. சம வேலைக்கு சம ஊதியம வழங்கு
8. வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனை வழங்கு
9. பயிற்சியாளர் நலன்காக்கும் நிலையாணைகள் திருத்துச் சட்டத்தை செயல்படுத்து
10. பொதுவினியோக திட்டத்தை சீர் குலைக்காதே

This entry was posted in Agriculture, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.