தமிழ்நாட்டின் நூற்பாலைகள்: பலவந்த உழைப்பு நவீன அடிமைத்தனம் நெதர்லாந்தின் இந்தியா கமிட்டி அளித்த ஆய்வறிக்கையின் சுருக்கம்

2016 டிசம்பரில், சுதந்திரமான மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான, நெதர்லாந்தின் இந்தியா கமிட்டி (India Committee of the Netherlands -ICN) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (International Labour Organisation -ILO) பலவந்த உழைப்பு (‘Forced labour’) என்று சுட்டிக்காட்டப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று ஆடைத் தொழில் அடிமைகள் (Fabric of Slavery) என்ற தலைப்பிடப்பட்ட ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது. பலவந்த உழைப்பு குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 1930 ஆம் ஆண்டின் பொதுப்புரிதல் ஒப்பந்தத்தை ( ILO Forced Labour Convention of 1930 (29) இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ”எந்தவொரு தண்டனையும் கிடைக்கலாம் என்ற அச்சுறுத்தலின் காரணமாக, ஒருவர் தானாக முன்வந்து தன் உழைப்பை அளிக்கவில்லை என்றால், அந்த நபரிடமிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் உழைப்பு பலவந்த உழைப்பு எனப்படும்”, என்ற அந்தப் பொதுப்புரிதல் ஒப்பந்தம் பலவந்த உழைப்பை வரையறுக்கிறது. நெதர்லாந்து கமிட்டி (ICN) ILO கமிட்டி சொல்கின்ற 11 குறியீடுகளில் நூற்பாலைகளுக்குப் பொருந்தக் கூடிய 9 குறியீடுகளை அடிப்படைகளாக் கொண்டு தன் கண்டுபிடிப்புகளை முன் வைத்துள்ளது.

ஆய்வு

இந்த ஆய்வு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் அதிக அளவு பருத்தி நூல் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஆயத்த ஆடை வினியோகம் செய்பவர்கள் மற்றும் உற்பத்தி செய்பவர்களின் உலக உற்பத்தி மையங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு இருக்கிறது. இந்த மாநிலத்தில் 600 ஆலைகள் இருக்கின்றன. அவற்றில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலில் 30 சதம் தமிழ்நாட்டில் உள்ள ஏற்றுமதி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த ஏற்றுமதி ஆலைகள், அமெரிக்க ஐரோப்பிய வணிக முத்திரைகளுக்கு (பிராண்டுகளுக்கு) அல்லது சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் இந்த ஆலைகள், இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மையங்களுக்கும், அத்துடன், வங்கதேசத்திலும், சீனாவிலும் உள்ள மில்களுக்கும் நூலிழைகளை அனுப்பி வைக்கின்றன.

தமிழ்நாட்டின் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் 2015 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாதங்களில் ICN ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த மாவட்டங்களில் உள்ள 743 நூற்பாலைகளைச் சேர்ந்த 2,286 தொழிலாளர்களிடம் ஆய்வுக் குழு நேர்காணல் நடத்தியது. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகளில் ஏறக்குறைய பாதி எண்ணிக்கையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பலவந்த உழைப்பு நிலையை ஆய்வு செய்ய ICN பயன்படுத்திய குறியீடுகள் பின்வருவனவாகும்: 1. பாதிப்புக்கு ஆளாகும் நிலை (Abuse of Vulnerability); 2. ஏமாற்று (Deception); 3. சுதந்திரமான நடமாட்டம் மறுப்பு (Freedom of Movement); 4. தனிமை (Isolation) 5. உடல் மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறை (Physical and Sexual Violence); 6. மிரட்டலும் அச்சுறுத்தலும் (Intimidation and Threats); 7. சம்பளப் பிடித்தம் (Withholding of Wages); 8. மோசமான வேலை நிலைமையும், வாழும் நிலைமையும் (Abusive Working and Living Conditions); 9. அளவுக்கு அதிகமான மிகை நேரப் பணி (Excessive Overtime)

கண்டுபிடிப்புகள்

சுமங்கலித் திட்டம்: ஆய்வு செய்யப்பட்ட 743 ஆலைகளில், 351 ஆலைகளில் சுமங்கலித் திட்டம்தான் பணி நிலைமையாக இருந்தது. இந்தத் திட்டம் பலவந்த உழைப்பைத் தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. ‘இளம் பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு காலத்துக்கு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் கணிசமான பகுதியும், வருங்கால வைப்பு நிதி போன்ற அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பலன்களும் அவர்கள் ஒப்பந்தக் காலத்தை முடிக்கும் வரை பிடித்தம் செய்து வைக்கப்படுகின்றன‘. இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ள மில்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகமாக உள்ளன என்று இந்த ஆய்வு கண்டுபிடித்தது. 2016 ஜூலையில் சுமங்கலித் திட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முகாம் கூலி: ஆய்வு செய்யப்பட்ட 743 ஆலைகளில், 392 ஆலைகளில் முகாம் கூலி முறை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முறையாக இருந்தது. ‘கம்பெனியின்கட்டுப்பாட்டில் உள்ள, சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்பட்ட அல்லது ஓரளவு சுதந்திரம் உள்ள, விடுதிகளில் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதன் காரணமாக, அழைக்கும் போதெல்லாம் அவர்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மற்றொரு முதலாளியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் மிகக் குறைத்துவிடுகிறது. வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள ஆலைகளில் இந்த முறை நடப்பில் இருக்கிறது. திண்டுக்கல்லில் 67 சதம் மில்களில் முகாம் கூலி முறை உள்ளது.

குறைந்த பட்ச சட்டக் கூலி: தொழிற்சங்கங்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் வெகு நீண்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதால், ஜவுளித் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு என்று உறுதி செய்யப்பட்ட குறைந்த பட்ச சட்டக் கூலி என்று எதுவும் இல்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அப்பரண்டீஸ் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச சட்டக் கூலியை, அளவு கோலாக எடுத்துக்கொண்டு ICN ஆய்வாளர்கள் கூலி நிலைமையை மதிப்பிட்டனர். ஆய்வு செய்யப்பட்ட 743 ஆலைகளில், 39 மில்களில் மட்டும் அப்ரண்டீசுகளுக்குத் தர வேண்டிய குறைந்தபட்ச கூலியை வழங்குகிறார்கள் என்பது தெரியவந்தது. அந்த 39 ஆலைகளில் 37 ஆலைகள் ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்றன என்பது மற்றொரு சுவையான விஷயம்.

வேலை நேரம்: மூன்று வகையான வேலை நேர முறைகள் நடப்பில் இருக்கின்றன. 1. ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம் அல்லது குறைவு. 2. 48 முதல் 60 மணி நேரம் வரையிலான வேலை. 3. 60 மணி நேரத்துக்கும் மேற்பட்ட வேலை. 743 மில்களில் வெறும் 37 மில்களில் மட்டும், 48 மணி அல்லது அதைவிட குறைவான வேலை நேரம் இருக்கிறது. ; 706 மில்களில் 48 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. 367 மில்களில் வாரத்துக்கு 60 மணி நேரத்துக்கும் மேல் உழைப்பது கட்டாயமாக இருக்கிறது. மாவட்டங்களுக்கு இடையில் ஒரு வார வேலை நேரத்தில் வேறுபாடு இருக்கிறது. ஆனால், நாமக்கல்லில் உள்ள மில்களில் 93 சதம் மில்கள் வாரத்துக்கு 60 மணி நேரத்துக்கு மேல் உழைப்பை வாங்குகின்றன.

சமூகப் பாதுகாப்பு : 67 சதம் மில்கள் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்கின்றன. ஆனால், வெறும் 6 சதம் மில்கள் மட்டுமே அரசு காப்பீட்டு நிதி (ESI) அல்லது வேறு மருத்துவக் காப்பீடுகளை அளிக்கின்றன. 31 சதம் மில்கள் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் அளிப்பதில்லை.

தொழிலாளர் பிரதிநிதித்துவம் : 743 மில்களில் 10 மில்களில் மட்டும், தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. நூற்பாலை தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 33 மில்களில் ஏதோ ஒரு வகைப்பட்ட தொழிலாளர் கமிட்டி இருக்கிறது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லில் தொழிற்சங்கமும், தொழிலாளர் கமிட்டியும் இருக்கிறது. 94 சதம் மில்களில் எந்த வகையிலான தொழிலாளர் பிரதிநிதித்துவமும் இல்லை.

துன்புறுத்தல்கள்: தொழிலாளர்கள் (பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள்) துன்புறுத்தல்கள் பற்றி வெளியே சொல்வதில்லை. இருந்தபோதும் ICN ஆய்வாளர்கள், இந்த ஆய்வின் கீழ் வந்த மில்களில், 64ல் (பாலியல்) துன்புறுத்தல் நடந்தது பற்றிய ஊடக அறிக்கைகளைக் கண்டுபிடித்தனர். பேச்சின் மூலம் துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும், எங்கும் நிறைந்திருக்கிறது.

ஆய்வு செய்யப்பட்ட ஆலைகளில் 91 சதத்தில், பல்வகைப்பட்ட பலவந்த உழைப்பு இருப்பதை ICN ஆய்வின் ஒட்டுமொத்த முடிவுகள் காட்டுகின்றன. 67 ஆலைகளில் (9 சதம்) முகாம் கூலி முறையும், சுமங்கலித் திட்டமும் செயல்படுகின்றன. அத்துடன், அச்சுறுத்தலான நிலைமையும், பாலியல் துன்புறுத்தல்களும், மிக மோசமான பணி நிலைமையும், மிக அதிகமான மிகை நேரப் பணியும் ஏமாற்றுதலும் காணப்படுகின்றன.

ICN அறிக்கையைப் படிக்க www.indianet.nl/pb161221e.html

This entry was posted in Factory Workers, Garment Industry, News, Resources, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.