சம வேலைக்கு சம ஊதியம் கோரி அனைத்து தொழிற்சங்க மாநாடு

(Tamil translation of “All trade union conference demands Equal Wages for Equal Work”)

சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்தக் கோரி சென்னை காமராஜர் அரங்கத்தில் பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க மாநாட்டில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பணிநிலைமைகளில் அதிகரித்து வரும் நிலையற்ற வேலை முறையை எதிர்த்து போராடுவதற்கு சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஹெச்எம்எஸ், எல்பிஎஃப், எம்எல்எஃப், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, மற்றும் டபுள்யுபிடியுசி உட்பட மத்திய மற்றும் கட்சிசார்பற்ற தொழிற்சங்க அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளன. இப்போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிப்பரந்தாமன், முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிதி அமைச்சர் சிதம்பரத்தை இயக்கம் சார்பில் அழைத்ததனால் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழில்துறைகளுக்கு ஏதுவாக தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் முயற்சியை விமரிசித்தனர். குறிப்பாக தொழில்துறைகளில் பயிற்சியாளர், ட்ரெயினி தொழிலாளர்கள் என்று புதுவகையான நிச்சயமற்ற வேலை முறைகள் அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஏஐடியுசியின் தோழர் மூர்த்தி மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்களை வெளியிட்டார். இதற்கு தொழிலாளர்கள் கைதட்டி தங்கள் வரவேற்பை பதிவு செய்தனர்.

  • சம வேலைக்கு சம ஊதியம்
  • குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ18000 மற்றும் அகவிலை படி
  • தொழிற்சாலையில் 10 சதத் தொழிலாளர்களே ஒப்பந்த முறையில் வேலையில் ஈடுபடுத்தப்படலாம்.
  • 480 நாள் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கண்டு முதலாளிகள் பயப்படுகின்றனர் என்றும் இதனால் தான் தொழிலாளர்கள் ஒன்று சேராமல் இருப்பதற்காக தொழிலாளர்களை பல்வேறு பணி நிலைமைகளை கொண்டு பிரிக்கின்றனர் என்று ஏஐயுடியுசி தோழர் அன்வர்தன் கூறினார். எதற்காக, எவ்வாறு, யாருக்காக தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்படுகின்றன என்பதை குறித்து தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று சிஐடியு தோழர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.

தொழிலாளர்களின் பணி நிலைமைகளில் முன்னோடியாக இருக்க வேண்டிய பொதுத் துறை நிறுவனங்கள் எவ்வாறு தொழிலாளர் உரிமைகளை பறிப்பதிலும் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை சுரண்டுவதிலும் முன்னோடியாக திகழ்கின்றன என்பது குறித்து பலத் தலைவர்கள் கருத்துரைத்தனர். குறிப்பாக போக்குவரத்து துறையில் மிகுந்துள்ள ஊழல் குறித்து விளக்கிய எல்பிஎஃப் தோழர் ஷண்முகம், தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர் தொகை ரூ50 லட்சத்தை இதுவரை நிறுவனம் தொழிற்சங்கங்களுக்கு தரவில்லை என்று குறிப்பிட்டார்.

ரயில்வே துறையில் குறைந்து வரும் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து ஹெச்எம்எஸ் தோழர் ராஜா ஸ்ரீதர் எடுத்துரைத்தார். ரயில்வே துறை குறித்து ஆய்வு செய்வதற்கு பிபேக் டெப்ராய் எனும் ஒரு முதலாளியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது என்றும் அவர் எவ்வாறு 4.6 லட்சத் தொழிலாளர்களின் வேலையை ஒப்பந்த முறைக்கு மாற்றி தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க முடியும் என்று பரிந்துரைத்துள்ளார் என்று தோழர் ராஜா ஸ்ரீதர் கூறினார்.

தொழிற்சாலைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகளை நிரந்தரத் தொழிலாளர்கள் கையில் எடுக்க முன் வர வேண்டும் என்று தோழர் ஸ்ரீதர் கூறினார். ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் ஊதியம் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட இருப்பதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். மணலியில் உள்ள பால்மர் லாவுரி தொழிற்சாலை இதற்கு ஒரு உதாரணம் என பால்மர் லாவுரி தொழிற்சங்கச் செயலாளர் தோழர் ரூபன் கூறினார். ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்துடன் இணைந்து இச்சங்கத்தின் 50 உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இத்தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பலர் 20 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தொழிற்சாலையின் லெதர் கெமிக்கல் துறையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளருக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ460 தினக் கூலி தரப்படுகிறது. இங்கு வேலை செய்யும் பெண் ஹவுஸ்கீப்பிங் தொழிலாளருக்கு ரூ374 தரப்படுகிறது என்று தோழர் ரூபன் கூறினார். தொழிற்சாலையில் சரியான பாதுகாப்பில்லாமல் ரசாயனங்கள் கையாளப்படுகிறது. என்று தொழிலாளர்கள் கூறினர். 20 வருடங்களாக தொழிற்சங்கம் வைத்து போராடி வரும் இத்தொழிலாளர்களுக்கு இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆனால் தொழிற்சங்கம் உள்ளதனால் நிர்வாகத்தால் தொழிலாளர்களை வேலை விட்டு நீக்க முடியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர்.

கோயம்பத்தூரில் உள்ள லட்சுமி மெஷின் வொர்கஸ் (எல்எம்டபிள்யு) தொழிற்சாலையின் இரண்டு யூனிட்டுகளில் 1700 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஜவுளித் துறைக்கு இயந்திரங்களை தயாரிக்கும் இத்தொழிற்சாலையில் வட மாநிலங்களில் இருந்து வரும் இடம் பெயர் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ400 ஆகும். எல்எம்டபிள்யு யூனிட் 2 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சங்கம் டபிள்யுபிடியுசியுடன் இணைந்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் குசேலரின் அழைப்பை ஏற்று தாங்கள் வந்துள்ளதாகவும், இத்தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளருக்கு ரூ45000 தரப்படுகிறது என்றும் ஆனால் தற்போது இவ்வேலைகளில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்தப்படுகின்றனர் அல்லது பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன என்று தொழிற்சங்க துணைத் தலைவர் தோழர் டி.ராஜேந்தரன் கூறினார். 2002க்குப் பின்னர் எல்எம்டபிள்யு வில் எந்த தொழிலாளரும் நிரந்தரப்படுத்தப்படவில்லை என்றும் இப்பிரச்சனைக்கு போராட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்றைய சமூக பொருளாதார அமைப்பு மூன்று குரங்குகள் போல் உள்ளது, ஒன்று மக்களின் குரலை கேட்க விரும்பாத அரசு, நீதியைப் பார்க்க விரும்பாத நீதித்துறை, எதையும் பேச விரும்பாத மக்கள் என்று ஏஐடியுசியின் தோழர் மஹாதேவன் கூறினார். 2016ன் உச்ச நீதி மன்ற தீரப்பு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிலைநாட்டுகிறது என்றும் தொழிலாளர்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் என்று அவர் கருதினார்.

கட்சி அடையாளத்தை மீறி தமிழ்நாட்டில் இருந்த தொழிற்சங்க தொழிலாளர் ஒற்றுமையைக் குறித்து எம்எல்எப் பிரதிநிதி அந்தோனி தாஸ் மற்றும் பிஎம்எஸ் துரைராஜ் பேசினர். டபிள்யுபிடியுசி தலைவர் தோழர் குசேலரின் பிரநிநிதியாக தோழர் சம்பத் உரையாடினார். மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கண்ட போராட்டமாகும், தொழிலாளர்களின் வாழ்வு ஜல்லிக்கட்டு போன்றது, அவர்கள் இக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பார்கள் என்று டபிள்யுபிடியுசி தோழர் துரைராஜ் கூறினார்.

தொழிற்சாலையில் உள்ள நிரந்தரத தொழிலாளர் – ஒப்பந்தத் தொழிலாளர் முறை வர்ணாஸ்திரத்தை புதிய வடிவத்தில் கொண்டு செல்கிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார். ஒப்பந்தத் தொழிலளார்கள் நிரந்தரத் தொழிலாளர்களின் கழிப்பறைகளை உபயோகிக்க முடியாது, அவர்கள் அனைவரும் ஒரே காண்டின்களில் சாப்பிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார் 1970ல் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் வடிவமைக்கப்பட்ட விதமே தொழிற்சங்கத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் என்று அவர் கருதினார். தொழிலாளர்களின் சார்பில் எழுதப்படும் தீர்ப்புகளை நம்பித் தொழிலாளர்கள் போராடக் கூடாது என்று நீதிபதி ஹரிப்பரந்தாமன் கூறினார். இதற்கு எடுத்துக் காட்டாக காவல், துப்புரவுத் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் தொழிற்சாலைகள் நியமிக்கக் கூடாது என 1976ல் ஒரு முக்கிய அரசு ஆணை வெளியிடப்பட்டது என்றும் ஆனால் 2001ல் உச்ச நீதி மன்றம் இதை மாற்றி இப்பணிகளில் ஒப்பந்த முறையை அனுமதித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

மாநாட்டில் கடைசியாகப் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொழிலாளர்கள் சுரண்டல்களுக்கு முதலாளித்துவ தாராளமயக் கொள்கை எனும் தொழிற்சங்கக் கூற்றை நிராகரித்தார். தாராளமயம் 30 ஆண்டுகளாக செயலாக்கப்படும் ஜெர்மனி போன்ற நாடுகளில் தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் அதே போல் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தாததற்கு காரணம் கட்சி மற்றும் அரசியல் அமைப்புகளே, தொழிலாளர் துறை ஆணையரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றும் பட்சத்தில் எவ்வாறு அவர்கள் செயல்பட முடியும் என்று அவர் கூறினார். தொழிலாளர் நலன்களை காக்க வேண்டிய துறைகளுக்கு போதிய அதிகாரம் தரப்படவில்லை என்று அவர் கூறினார். தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொழிலாளர் நலன்களை காக்கும் அதே சமயம் தொழிற்சாலைகள் லாப நோக்கத்தை இக்கோரிக்கைகள் மறுக்காத பட்சத்தில் தனக்கு இக்கோரிக்களில் உடன்பாடு இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் கூறினார். குறைந்த பட்ச அம்சத்தை குறித்து அவர் பேசுகையில் அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற அம்சம் இன்று அரசியல் தளங்களில் பேசப்படுகிறது என்றும் அதே போல் குறைந்த பட்ச ஊதியமும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கருதினார் ஆனால் இத்தொகை எவ்வளவு என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் என்று அவர் கூறினார். தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் தேவைப்படும் என்று கருதிய அவர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொத்தத் தொழிலாளர்களில் 10 சதத்தில் மேல் இருக்கக் கூடாது என்ற கருத்தில் உடன்படுவதாகக் கூறினார்.

மாநாட்டை புறக்கணித்தன் காரணம் குறித்து ஏஐசிசிடியு தோழர் ஏ.எஸ்.குமார் கூறுகையில், தாராளமயக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக சிதம்பரம் உள்ளார் என்றும் ஏஐசிசிடியு தாராளமயக் கொள்கைகளை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதாகவும் அதனால் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். தொழிற்சங்கக் கோரிக்கைகளை ஏஐசிசிடியு தொழிற்சங்கம் ஏகமனதாக ஆதரிப்பதாகவும், இது குறித்த எடுக்கப்படும் மற்ற நடவடிக்கைகளில் ஏஐசிசிடியு கலந்து கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

This entry was posted in Contract Workers, Factory Workers, News, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.