மாருதி தீர்ப்பும் எதிர்வினை கருத்துகளும்

மாருதி மாநேசர் தொழிற்சாலைகளில் 2012 முதல் ஆரம்பித்த அரசு-முதலாளித்துவ தாக்குதல் மார்ச் 10 அன்று உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மாருதி தொழிற்சாலையில் நடந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் 546 நிரந்தரத் தொழிலாளர்களும், 1800 ஒப்பந்தத் தொழிலாளர்களும் நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள தீர்ப்பு நீதிக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. 117 தொழிலாளர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர். ஆனால் 31 தொழிலாளர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது செஷன்ஸ் கோர்ட். இதில் 13 பேர் மேல் ஐபிசி செக்ஷன் 302 மற்றும் 307 அதாவது கொலை, கொலை செய்வதற்கான முயற்சி, தீக்கிரையாக்கியது, சதித் திட்டம் தீட்டியது ஆகிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கும் தண்டனை மார்ச் 17 அன்று வழங்கப்படும். கொலை வழக்கு தண்டனை அளிக்கப்பட்ட 13 பேரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் மேல் கடினமான குற்றத்தை பிரயோகித்துள்ளது, தொழிற்சங்க வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவாகவே இது உள்ளது..

இதே போல் தான் டிசம்பர் 2015 அன்று தமிழ்நாட்டின் செஷன்ஸ் நீதிமன்றம் பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேர்களுக்கு இரட்டிப்பு ஆயுள் தண்டனை கொடுத்தது. நெடிய போராட்டங்களுக்கு பின்னர் உயர் நீதி மன்றம் 6 தொழிலாளர்களை விடுவித்தது.

இந்த வழக்கு மூலம் தொழிலாளர்களுக்கு பாடம் கற்பிக்க முயல்வதாக மாருதி சுசுகி தொழிற்சங்க உறுப்பினர்கள் இரண்டு நாள் முன்னர் தான் ஒரு அறிக்கையில் வெளியிட்டுருந்தனர். 2013ல் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிணை கொடுக்க மறுத்த உயர் நீதி மன்றம், இந்தியாவின் உலக மதிப்பை சீர்குலைக்கும் நிகழ்வு இது என்றும் இது போன்ற நிகழ்வுகள் அன்னிய முதலீட்டார்களை இந்தியாவில் இருந்து துரத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் நீதிமன்றம் முதலாளிகள் பக்கம் தான் இருக்கிறது என்று தெரிகிறது.

மாருதி வழக்கில் அரசு தரப்பின் வாதங்களை இந்த தீர்ப்பு வீழ்த்தியுள்ளதாக தொழிலாளர்களின் வழக்குறைஞர் விருந்தா க்ரோவர் கூறியுள்ளார். 117 தொழிலாளர்களை விடுதலை செய்துள்ளதோடு, 18 பேர்கள் மீது காயம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அத்துமீறி நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராக எந்த சாட்சிகளும் இல்லாத நிலையில் இந்த விசாரணையில் வந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவாக அரசும் நீதிமன்றமும் வர்க்க போரில் அரசியல் குற்றவாளிகளாக்கி உள்ளது.

ஆனால் இந்த போராட்டம் முடிந்து விட்டது என்று மாருதி நிர்வாகமும் நவீன தாராளமயவாத அரசும் யோசித்தால், தொழிலாளர் வர்க்கம் தங்கள் போராட்டங்களை வலுப்படுத்தி வருகிறது. மார்ச் 9 அன்று பல்வேறு மாருதி தொழிற்சாலைகளில் 25000 தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். மார்ச் 5 அன்று மாநேசர்-தாருஹேரா-பவால்-நீம்ரானா பகுதிகளில் இருந்து பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் கைது செய்யப்பட்ட மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவை உறுதி செய்தனர். மாருதி மாநேசர் பகுதிகளில் அரசு செக்ஷன் 144ஐ அமல் செய்தது. குர்காவ் உயர் நீதி மன்றத்தின் முன்னரும் மாநேசர் பகுதிகளிலும் காவல் துறை குவிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

மார்ச் 17 முதல் பல்வேறு போராட்டங்களை கையிலெடுக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. காவல்துறையை மீறி குர்காவ் பூங்காவில் கூடிய தொழிற்சங்கங்கள் மார்ச் 16ல் பவாலில் இருந்து குர்காவ் வரை உள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவும், இந்த வருடத்தில் ஹோலி பண்டிகையை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். மார்ச் 15 அன்று போராட்டத்தை குறித்து இன்னொரு கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக வந்துள்ள மூன்று தீர்ப்புகள் – உடலியக்க குறைபாடு உள்ள ஜி.என். சாய்பாபாவின் ஆயுள் தண்டனை, மசூதியில் குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் விடுதலை, மாருதி தொழிலாளர்களின் தண்டனை, தொழிலாளர் வர்க்கம் மேல் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை குறிக்கின்றன.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.