வெளியாள் யார்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்தது சமூகப்  போராட்டம் என்கிறார்கள். அது சமூகப் போராட்டமா? தொழிலாளர் பிரச்சனையா?

 

Workers in Protest — file photo

சென்னையின் மெரினா, பழைய மகாபலிபுரம் சாலை, கோவை, மதுரை இன்னும் பிற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்களை, 2017 ஜனவரி 22 வரை ”போராட்டக்காரர்கள்” என்று நிர்வாகமும் ஊடகங்களும் சொல்லிவந்தனர். அதிகாரத்தில் இருந்தவர்கள், போராட்டக்காரர்களின் அமைதியான, நட்புறவு மிக்க அணுகுமுறையையும், கட்டுப்பாட்டையும் திரும்பத் திரும்பப் பாராட்டி வந்தனர். போராட்டக்காரர் ஒருவருக்கு போலீஸ்காரர் ஒருவர் குடிநீர் வழங்கும் படம் சமூக வலை தளங்களில் பிரபலமானது. ”தமிழன்டா” என்று அந்த படத்தினை  டேக் செய்திருந்தனர். சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்களுக்கும் போராடுபவர்களுக்கும் இடையில் நல்லுறவு இருந்ததைக்  காட்டும் சித்திரமாக அந்தப் படம் உலா வந்தது. (ஆதாரம்: https://www.quora.com/What-do-you-think-of-the-Tamil-Nadu-police-committing-arson-during-the-Jallikattu-protest)

ஆனால், ஜனவரி 22க்கும் ஜனவரி 24க்கும் இடையில் மாற்றம் நிகழ்ந்தது. இதுவரை ஒன்றாய் இருந்த போராட்டக்காரர்களை ”அமைதியாகப் போராடிய அப்பாவிகள்” என்றும், ”சமூக விரோத- தேச விரோத வெளி ஆட்கள்” என்றும் பெரிய ஊடகங்களின் துணையுடன் காவல் துறை பிரித்துப் பேச ஆரம்பித்தது. தமிழ் நாளேடுகளின் தலைப்புச் செய்திகள் நக்சலைட்டுகள்- மாவோயிஸ்டுகள்- ஐஎஸ் ஊடுருவல் என்று அலற ஆரம்பித்தன. ”ஒன்று கூடியிருந்தவர்கள் மத்தியில் சமூக விரோதிகளும் தேச விரோதிகளும் ஊடுருவிவிட்டார்கள் என்பது  எங்களுக்குத் தெரியவந்தது. எனவே, உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் நாங்கள் செயல்பட்டோம்”, என்று சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். அதன்பின், பின் லேடன் படம் இருந்த பைக் பற்றி முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மறைமுகமாகக் குறிப்பிட்டார். போராட்டத்தின் மையமாக இருந்த அலங்காநல்லூரில் ஜனவரி 22 அன்று ஜல்லிக்கட்டு நடத்த வந்திருந்த முதலமைச்சரை உள்ளே அனுமதிக்க  மக்கள் மறுத்துவிட்டனர். ஆனால், மறுநாளே கிராமத்தினர் ஓர்  தீர்மானம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கான தேதியை அறிவித்தனர். அத்துடன் ”வெளியாட்கள்” போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆதாரம்: Facebook

அதிகாரத்தில் உள்ளவர்கள் எழுதி வைத்திருந்தது போல நாடக் காட்சிகள்  மெரினாவிலும், அலங்காநல்லூரிலும் அரங்கேறாதது அவர்களின் துரதிர்ஷ்டமே. ”சமூக விரோதிகள்  தூண்டிவிட்டார்கள், அதன் விளைவாக கும்பல் கூடியது. காவல்துறையைக் கும்பல் தாக்கியது” என்று காவல்துறை ஆணையர் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்,  போராட்டக்காரர்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மெரினாவின் மீனவர்கள் மீதும், அலங்காநல்லூரில் பெண்கள் மீதும் காவல்துறைதான் வன்முறையைத் தொடுத்தது என்பதற்கான ஆதாரங்களை சாதாரண குடிமக்கள் அளித்தார்கள். அதனை அடுத்து, சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இளைஞர்களையும், சமூகத் தலைவர்களையும் காவல்துறை மனம் போன போக்கில் பிடித்து அழைத்துச் சென்றது. அவர்களைச் சிறையில் தள்ளியது, அடித்துத் துவைத்தது. சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில்  நடுக்குப்பத்தைச்  சேர்ந்த மீன் விற்கும் பெண்மணி சொன்னார், ”அவர்கள் (போலீஸ்காரர்கள்) தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தார்கள். நாங்கள் வாழும் பகுதியில் மனம் போன போக்கில் படம் எடுப்பார்கள். ஏதோ நாங்கள் பயங்கரவாதிகள் என்பது போல படம் எடுப்பார்கள். நாங்கள் இங்கே பலப் பத்தாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்”.

இதுபோன்ற கதைதான், மிகவும் நுணுக்கமாக இருந்தாலும் கூட, தொழிற்சாலை உழைப்பாளிகள், முதலாளிகள், அரசு என்ற விவகாரத்திலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய தொழிலாளர் சட்டங்களுக்கு தொடர்ந்து தொழிலாளர் விரோத திருத்தங்கள் பல செய்வதன் மூலம்  தொழில் முதலாளிகளுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு (the Industrial Relations Code).  தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில் தகராறு சட்டம் 1947, தொழிற்சாலை பணிகள் (நிலையாணை) 1946 என்ற தற்போதிருக்கும் சட்டங்களைத் திருத்தியும் தொகுத்தும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு  உருவாக்கப்படுகிறது. இந்தச் சட்டத் தொகுப்பின் மூலம் யாரெல்லாம் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்க முடியும் என்பதை மோடி அரசு மாற்றியமைக்க முயற்சி செய்கிறது. தற்போதைய சட்டத்தின்படி, ஒரு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் 50 சதம் பேர், தொழிலாளிகள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கறிஞர்களாக, தொழிற்சங்க செயல்பாட்டாளராக, அல்லது பிறராகவும் இருக்க முடியும்.  புதிய சட்டத் தொகுப்பின்படி , அமைப்பாக்கப்பட்டத் துறையில், தொழிலாளிகள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்க முடியும். அமைப்பாகத் துறையைப் பொறுத்தவரை, அந்தத் துறையில் பணியாற்றாத இரண்டு பேர் மட்டுமே தொழிற்சங்க நிர்வாகியாக இருக்க முடியும் என்றும் புதிய சட்டத் தொகுப்பு சொல்கிறது.

தொழிற்சங்க சூழலில்,  சுரண்டுபவர்கள் (முதலாளிகள்), சுரண்டப்படுபவர்களை (தொழிலாளர்கள்) தம்முடன் சேர்த்து, ஒரே முகாமைச் சேர்ந்தவர்களான ”நாம்” என்று  ஆக்கிக்கொண்டு, ”வெளியாள்” என்பவர்களுக்கு எதிராக தம்மை நிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிதான் இது!  யாரெல்லாம் ஆலையின் உற்பத்தியில் பங்கெடுக்கவில்லை என்று முதலாளிகளும், அரசும் சேர்ந்து கொண்டு,   ‘இனம்’ காண்கிறார்களோ அவர்களையெல்லாம் விலக்கி வைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தைதான் ‘வெளியாட்கள்’ என்பது. இப்படிச் செய்வதன் மூலம், தொழிலாளர்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் வெட்டிச் சுருக்குகிறார்கள். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அல்லது தேர்தல் மூலம் முடிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் வெளியாட்கள் ஆகிவிடுவார்கள் என்றால், அப்புறம், யார்தான் உள் ஆட்கள்? இவர்கள்தான்  உள் ஆட்கள்தான் என்று வரையறை செய்யப் போவது யார்?  உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். ஸ்ரீபெரும்புதூர் ஆசியன் பெயிண்ட் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, தொழிலாளர்களை வெளியில் நிறுத்த முரட்டுத் தடியன்களை (bouncers) அழைத்து வந்தது நிர்வாகம்.  எண்ணற்ற தொழிற்சாலைகளில், உதாரணத்துக்கு, SPEL, டைமண்ட் என்ஜினியரிங், கிரீவ்ஸ் காட்டன் போன்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது அவர்களை தொழிற்சாலைக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்குள் வருவதற்குக் கூட நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை.

தொழிற்சாலைக்குள் யாரை அனுமதிப்பது என்று தீர்மானிப்பதற்கு தொழிலாளர்களுக்கு ஒரு நாளும் வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், பெரிய தொழிற்சாலைகளில் வேலை நேரம் முடிந்த தொழிலாளர்கள் வளாகத்தின் உள்ளே இருக்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.  ஒரு தொழிலாளி மற்றொரு துறைக்குச் செல்வதைக் கூட இப்போது முதலாளிகள் நவீனமான மின்னணு சாதனங்களைக் கொண்டுக் கட்டுப்படுத்துகின்றனர். தொழிலாளி எப்போது நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், எப்போது குறைவான நேரம் வேலை செய்ய வேண்டும், உற்பத்தி இலக்கு என்ன, எப்போது ஓய்வு நேரம், என்ன செலவு இப்படி பலவற்றையும் முதலாளிகளே முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு தொழிலாளி தொழிற்சாலைக்கு வெளியே எந்த அடையாளத்துடன் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார் என்பதையும் கூட முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். தொழிற்சாலைக்கு வெளியே தொலைக்காட்சி ஒன்றுக்குப்  பேட்டி கொடுத்த காரணத்துக்காக தொழிலாளி ஒருவரை ஹுண்டாய் நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. தொழிற்சாலையிலிருந்து வெகு தூரத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் கம்பெனி சீருடையுடன் கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ரெனால்ட் நிர்வாகம் காரணம் கேட்கும் நோட்டீஸ் அளித்தது.

மற்றொரு பக்கம் பார்த்தால், எப்போது, யாரை தொழிற்சாலைக்குள் அனுமதிப்பது என்பதில் முழுக் கட்டுப்பாட்டையும் முதலாளிகள் கையில் வைத்துள்ளனர். வேலைசெய்யும் இடத்தில் ‘தொழிலக அமைதி’யை நிலை நாட்டுவதற்காக, முரட்டுத் தடியன்களை அல்லது செக்யூரிட்டிகளை முதலாளிகள் அழைத்துவருவதோடு, அரசின் அதிகாரிகள் எப்போது பணியிடத்துக்குள் நுழையலாம் என்பதையும்  தீர்மானிக்கிறார்கள். ரெனால்ட் ஆலைக்குள் பராமரிப்புத் தொழிலாளி ஒருவர் கோரமான முறையில் செத்தபோது, காவல்துறையை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேசமயம், அரசின் வெவ்வேறு துறைகள் தொழிற்சாலைகளைக் கண்காணிக்காமல் விலக்கிக்கொள்வதின் மூலம் முதலாளிகளின் முயற்சிகளுக்கு அரசும்  துணை போகிறது. விளைவாக,  தொழிலாளர் நிலைமை மிகவும் மோசமாகிறது, அவர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இப்படிச் செய்வதன் மூலமாக தொழிற்சாலைக்குள் உள்ள அதிகார உறவில், தொழிலாளர் சார்பில் சம நிலையை ஏற்படுத்தும் தன் பாத்திரத்திலிருந்து அரசு பின்வாங்குவது மட்டுமல்லாமல், இந்த அதிகாரச் சமனற்ற நிலையை கேள்வி  கேட்பதற்கான, தங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கான  வாய்ப்புகளைப் பறிப்பதன் மூலம், அரசு, தன் அதிகாரத்தைச் சாதாரண மக்களுக்கு எதிராகத் திருப்புவதாகவும் இருக்கிறது. தொழிலாளர்கள் ஒன்று சேர்வதற்கு எதிராக நிற்பதன் மூலமும், அவர்களுக்குள் தொடர்ச்சியான உறவு நிலவுவதைத் தடுப்பதன் மூலமும், அல்லது பிற சமூக சக்திகளுடன், அரசியல் கட்சிகளுடன், மாணவர்கள் அல்லது பிற குழுக்களுடன் உறவு கொள்வதைத் தடுப்பதன் மூலமும் அரசின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்தி, அதிகாரத்தில் உள்ள அரசியல் பொருளாதாரத்தை கேள்வி கேட்பதைத் தடுப்பதன் காரணமாக, அரசும் பலன் பெறுகிறது.

அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் தொழிலாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்ற வாதத்தை முதலாளிகள் முன் வைக்கிறார்கள். ஆனால், மற்றொரு பக்கம், அரசியல் நிதி அளித்தல், தமக்குச் சார்பாக செயல்பட வைத்தல், சங்கம் வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அரசின் பின் உள்ள அரசியல் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கட்டுப்படுத்தவும் முதலாளிகளால் முடிகிறது. இதுவரை, அரசு தன் மீது முதலாளிய சக்திகள் செலுத்தும் கட்டுப்பாட்டை வெட்டிக் குறைப்பதையும், கட்டுப்படுத்துவதையும் அரசு எதிர்த்து வருகிறது. இதன் காரணமாக, பிரச்சாரம் செய்வதற்காக அதானியின் ஜெட் விமானங்களில் மோடி பறக்க முடிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் மந்திரிகள் அதிகாரத்தில் இல்லாத போது, முதலாளிகளுக்குச்   சேவை செய்வதற்காக அவர்களின் நிறுவனங்களில் சேர முடிகிறது.

வேலை அளிக்கும் முதலாளி பணியிடத்தின் மீது முழுமையான அதிகாரம் செலுத்த, உற்பத்தி நிகழ்வு முறையின் மீதோ, அல்லது உற்பத்தியினால் கிடைக்கும் பலன்கள் மீதோ கட்டுப்பாடு அற்றவர்களாக தொழிலாளர்கள் இருப்பதினால், பணியிடம் என்பது அடிமைத்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. தொழிற்சங்கம் உள்ளிட்ட எந்தவொரு தொழிலாளர் அமைப்பும் இந்த நிகழ்வுப் போக்கை எதிர்த்தே நிற்கும்.  ”நம்மவர்” எதிர் ”வெளியாள்” என்ற கதையாடலை அரசு அனுமதிப்பதன் மூலம் இந்த நிகழ்வுப் போக்கைக் கட்டுப்படுத்த முதலாளிகளை அனுமதிக்கிறது. சட்டம் பற்றிய தகவல்கள், போராட்டத்தின் தந்திரங்கள், பல்வேறு துறைகளிடையேயும், பிராந்தியங்களிடையேயும் ஒருமைப்பாடு, அரசியல் கல்வி போன்றவற்றில் நிபுணர்களின் உதவி தொழிலாளர்களுக்குத் தேவையானதாக இருக்கலாம்.  இந்த உதவி தொழிலாளர்களுக்குக் கிடைக்காமல் தடுப்பது தொழிற்சாலைகளில் உழைப்பவர்களின் உரிமையை வெட்டிக் குறைக்கும். சமூகச் செயல்பாட்டாளர்களை நிர்வாகிகளாக வைத்திருப்பதன் பலன்கள் பற்றி விவாதித்து ஜனநாயக ரீதியாக முடிவெடுக்க வேண்டியது தொழிலாளர்கள் செய்ய வேண்டியது. தொழிலாளர்கள் இப்படியோ அல்லது அப்படியோ முடிவெடுக்கலாம். ஆனால், அது அவர்கள் தேர்ந்தெடுத்த  முடிவாக இருக்க வேண்டும்.

சாதி,  பாலினம், மதம் அல்லது உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூகத்தின் ஒரு பிரிவை ஒதுக்கி வைக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சியெடுக்கும்போது, அவர்கள் கூறும் கதைகளை மறுத்து ஒதுக்கி, அதிகார உறவு நிலையைத் தமக்குச் சாதகமாக மறு வரையறை செய்துகொள்வது சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜல்லிக்கட்டு விவகாரத்தைப் பொறுத்தவரை, சென்னையின் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு, இளைஞர்கள்- மாணவர்களுக்கு ஆதரவாக பெருநகரத்தை முடக்கியது. தேசிய ஜனநாயக முன்னணி அரசு, மேலே சொன்ன தனது முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல கடினமாக பாடுபடுகின்ற இந்த நிலைமையில், எந்த சந்தேகத்திற்கும் வாய்ப்பளிக்காமல், நம்மை பிளவுபடுத்துவதற்கான கதையாடல்களை  தொடர்ந்து பரப்பும் நிலைமையில், தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக நமது சண்டையைத் தொடர்வது மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.

மேலும் படிக்க:

http://www.india.com/news/india/jallikattu-ban-protests-in-chennai-calm-peaceful-clean-leave-many-impressed-1768260/

http://www.news18.com/news/india/anti-social-elements-infiltrated-jallikattu-protests-cm-panneerselvam-1341503.html

http://www.news18.com/news/india/police-crackdown-on-jallikattu-protests-and-the-movement-turning-violent-1339599.html

http://www.thehindu.com/news/national/tamil-nadu/Violence-breaks-out-in-Alanganallur-after-eviction-of-protesters/article17082336.ece

http://tnlabour.in/fish-workers/4657

http://tnlabour.in/fish-workers/4714

http://www.business-standard.com/article/economy-policy/modi-govt-takes-the-lead-in-labour-reforms-115042900871_1.html

http://tnlabour.in/factory-workers/2071

http://tnlabour.in/electronic-industry/2499

http://tnlabour.in/factory-workers/3856

http://tnlabour.in/factory-workers/2529

http://tnlabour.in/automobile-industry/3936

http://tnlabour.in/automobile-industry/3994

http://www.deccanchronicle.com/nation/current-affairs/070117/engineer-killed-at-renault-nissan-plant-in-oragadam.html

http://timesofindia.indiatimes.com/news/Fleet-of-3-aircraft-ensures-Modi-is-home-every-night-after-days-campaigning/articleshow/34069525.cms

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Labour Laws, labour reforms, Workers Struggles and tagged , . Bookmark the permalink.