பகத்சிங் நினைவு நாளில் சோசலிச சமூகத்தை நிறுவ தொழிலாளர்கள் உறுதியேற்பு

மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங் தூக்கிலடப்பட்ட நினைவு நாள் அன்று தொழிற்சாலைகள் மிகுந்த ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 750 தொழிலாளர்களும் இடதுசாரிகளும் சோசலிச சமூகத்தை நிறுவ உறுதியேற்றனர். இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இருந்து இளம் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் இடம்பெயர் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். புரட்சிகர இளைஞர் கழகம் ஒருங்கிணைத்த கூட்டத்தில் ஏஐசிசிடியு, அகில இந்திய கிராமப்புற விவசாயத் தொழிலாளர் சங்கம், யூஎல்எஃப் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். பேரணி மற்றும் பொதுக் கூட்ட நிகழ்வுக்கான செலவை ஈடுகட்ட ரெனால்ட் நிசான், ஹுண்டாய், ஏசியன் பெயிண்ட்ஸ், சான்மீனா, சி அண்ட் எஃப், டெனக்கோ, ஜிம்கானா க்ளப், மெட்ராஸ் க்ளப், பத்மா மெட்டல்ஸ், சௌந்தர்யா டெக்கரேட்டர்ஸ், டயமண்ட் என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிதி அளித்தனர். மாநாட்டிற்கு முன்னர் நடைபெற்ற பேரணியை அம்பேத்கர் நல மன்ற தோழர்கள் பறை இசைத்து வழி நடத்தினர்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய சன்மீனாவின் இளம் பெண் தொழிலாளர் ஒருவர் அடிமை விலங்கை எடுத்தெறிய பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறினார். சமீபத்தில் தான் ஒரு மனித வள மேலாளர் சக தொழிலாளரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் 5 நாட்கள் சன்மீனாவின் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிரு;நதனர். பகத் சிங் கூறியவாறு இத்தொழிற்சாலைகளில் வேலை அடிமைத்தனமாகவே உள்ளது என்று பலத் தொழிலாளர்கள் கருத்து கூறினர்.

நாட்டின் விடுதலை மட்டும் போதாது தொழிலாளர் வர்க்க விடுதலை வேண்டும் எனும் பகத் சிங்கின் கூற்றை ஏஐசிசிடியு தோழர் ராஜகுரு நினைவு கூர்ந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மாநேசர் வரை உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள நவீன கொத்தடிமை முறைகளை அவர் விவரித்தார்.

நிரந்தரம் – ஒப்பந்தம், ஆண் – பெண், மற்றும் சாதியரீதியான வேறுபாடுகளை கலைந்து சோசலிச சமூகத்தை நிறுவ உறுதியேற்பு மொழியை ஏசியன் பெயின்ட்ஸ்சின் தோழர் ராஜேஸ் எடுத்துரைக்க அனைத்து தொழிலாளர்களும் உறுதியேற்றனர்.

பிரிக்கால் தொழிற்சாலையில் நிலவிய தொழிலாளர்களின் பிளவை குறித்து இரட்டிப்பு ஆயுள்தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற தோழர் வேல்முருகன் எடுத்துரைத்தார். தொழிலாளர்கள் ஒன்றுபட்ட சங்கம் அமைத்து போராடியபோது நிர்வாகம் அதை மாவோயிஸ்ட் சங்கம் எனக் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஏஐசிசிடியு தேசிய தலைவர் தோழர் குமாரசாமி மாருதி மற்றும் பிரிக்கால் தொழிலாளர்களின் நெடிய போராட்டத்தை விவரித்தார். சமீபத்தில் தான் தில்லிக்கு சென்ற போது மாருதி தொழிலாளர்களை சந்தித்ததாகவும் அங்கு நிரந்தர, ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சங்கத்தில் இணைந்திருந்ததையும் சுட்டிக்காட்டிய அவர் ஸ்ரீபெரும்புதூரில் இம்மாதிரியான தொழிற்சங்கத்தை நிறுவ முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறினார். மாருதி தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு ஆதிக்க சக்திகளின் முதலாளித்துவ மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் அதற்கு பதிலாக அனைத்து மாருதி தொழிற்சாலைகளிலும் நடந்த ஒரு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை பாராட்டினார். மாருதி தொழிலாளர்களுக்கு தூக்கு தண்டனை கோரிய அரசு வக்கீலை அவர் சாடினார். மூன்று வருடங்கள் சிறையில் வாடி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள 118 தொழிலாளர்களுக்கு எவ்வாறு இச்சமூகம் நீதியை நிலைநாட்டப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

This entry was posted in Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.