சான்மீனா ஓரகடம் தொழிற்சாலையில் 5 நாள் உள்ளிருப்பு போராட்டம்

400க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களின் 5 நாள் உள்ளிருப்பு போராட்டம், ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டு உற்பத்தி, தொழிலாளர் துறையின் தலையீட்டிற்கு பின்னர் வேலை நிறுத்தம் வாபஸ்

மார்ச் மாதத்தில் அனைத்து தொழிலாளர் வர்க்க அமைப்புகளின் பார்வை மாருதி தொழிலாளர்கள் மீதான தீர்ப்பை நோக்கி திரும்பியிருந்த வேலையில், சென்னை அருகே உள்ள ஓரகடத்தின் சான்மீனா தொழிற்சாலையில் மாருதிக்கு ஈடான நிகழ்வுகள் அரங்கேறின. மாருதி தொழிற்சாலையில் எவ்வாறு ஒரு தொழிலாளரை கண்காணிப்பாளர் ஒருவர் சாதியரீதியாக சாடினாரோ அதே போல் சான்மீனா நிரந்தரத் தொழிலாளர் ஒருவரை மேலாளர் ஒருவர் சாதியரீதியாக திட்டினார் என்பதற்காக ஏஐசிசிடியுவின் தொழிற்சங்கத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தொழிற்சாலையிலேயே 5 நாட்கள் தங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

நிர்வாகம் 150 ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு உற்பத்தியை தொடர்ந்ததாக தொழிலாளர்கள் கூறினர். தொழிலாளர் போராட்டத்தை கைவிடக் கோரிய தொழிலாளர் துறை நிர்வாகத்தையும் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் முதல் பேச்சுவார்த்தையை நிர்வாகம் புறக்கணித்துள்ளது. மாவட்ட தாசில்தார் தலையீட்டிற்கு பின்னர் இரண்டாவது பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் கலந்து கொண்டது. தொழிலாளர் துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஓரகடத்தில் 2008ல் நிறுவப்பட்ட அமெரிக்க நிறுவனம் சான்மீனாவின் தொழிற்சாலை மருத்துவ மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரித்து வருகிறது. சான்மீனாவின் வாடிக்கையாளர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். அமெரிக்காவில் இந்த நிறுவனம் ‘பார்ச்சுன் 500’ நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனாலும் தனது தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தும் இதர சலுகைகளை மறுத்தும் வந்துள்ளது. 2013ல் ஏற்கனவே இத்தொழிலாளர்கள் சிஐடியுவின் கீழ் ஊதியம் மற்றும் இதர பிரச்சனைகளை முன்வைத்து போராடியுள்ளனர். இன்றும் இதே நிலைமைகள் நிலவுவதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல்வேறு சலுகைகளை பெற்றிருக்கும் இந்நிறுவனம் 4000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குவதாக கூறியிருந்தது, ஆனால் கடந்த 8 வருடங்களில் அசெம்பிளி லைன்கள் 2 லிருந்து 8 வரை பெருகியும், அங்கு வேலை செய்வது 480க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும் சுமார் 150 ஒப்பந்தத் தொழிலாளர்களும் தான். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் ரூ10500 – ரூ15000 வரை கொடுக்கப்படுகிறது. இது குறித்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பிய பின்னர் நிர்வாகம் பிப்ரவரியில் இருந்து 2000ரூ ஊதிய உயர்வு அறிவித்துள்ளது எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக நிலைமை சரியில்லை ஆதலால் முறையான ஊதிய உயர்வு கொடுக்க முடியாது என நிர்வாகம் கூறும் காரணத்தை தொழிலாளர்கள் மறுக்கின்றனர். மாறாக நிர்வாகம் நிரந்தரப் பணியாளர்களை நீக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து லாபத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு என்ஜினியரிங் கல்லூரியில் இருந்து தள்ளப்படும் லட்சக்கணக்கான என்ஜினியர்கள் வேறு எங்கும் வேலை கிடைக்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களாக இங்கு வந்து குறைவான ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக உள்ளனர். 10வது, 12வது, ஐடிஐ படித்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஏன் இவ்வளவு ஊதியம் தர வேண்டும் என நிர்வாகம் நினைக்கின்றது.

இதற்கான முயற்சிகளில் நிர்வாகம் ஏற்கனவே இறங்கிவிட்டது. கடந்த இரு வருடங்களாக ரூ1.5 முதல் ரூ3 லட்சம் சுயவிருப்பு ஓய்வு ஊதியத் திட்டத்தில் (ஏசுளு) நிரந்தரத் தொழிலாளர்களை வேலையை விட்டு விலக நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருகிறது. இதுவரை சுமார் 150 தொழிலாளர்கள் இவ்வாறு வேலையை விடடு நின்றுள்ளனர். நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டுவதனால் இன்றும் தொழிலாளர்கள் ஏவுளு வாங்கி சென்று விடுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெண் தொழிலாளர்கள் 20க்கும் குறைவாக குறைந்துள்ளனர். ஆனாலும் சுமார் 400 தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை, முறையான ஊதியம் கோரி ஊதியத் திட்டத்தை மறுத்து வருகின்றனர்.

தொழிற்சாலையில் மற்ற சலுகைகளும் சரியாக கொடுக்கப்படுவதில்லை எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். புழு, நத்தை, ஆணி ஆகியவை கொண்ட உணவு தங்களுக்கு அளிக்கப்படுவதாக தொழிலாளர்கள் குறை கூறினர். இது குறித்து என்ன புகார் கொடுத்தாலும் நிர்வாகம் கேட்பதில்லை என்று அவர்கள் கூறினர். அதே போல் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியும் வீடு வரை கொடுக்கப்படுவதில்லை. இதனால் தொழிலாளர்கள் பல மணி நேரம் வேலைக்கு வருவதற்கு நேரம் செலவிட வேண்டியுள்ளது.

இவ்வாறு பல பிரச்சனைகளை குறித்து அதிருப்தியுற்று வந்தத் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் நடந்த சம்பவம் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்தது. மார்ச் மாதம் முதல் வாரத்தி;ல் ஒரு நிரந்தரத் தொழிலாளர் அவர் எப்போதும் செய்யும் பணியில் இருந்து பேக்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டார். இத்தொழிலாளர் முன்னர் வேலை செய்து வந்த பகுதிக்கு மதிய உணவு இடைவேளை 12 முதல் 1 மணி வரையாகும். பேக்கிங் செக்ஷனில் இடைவேளை 12.30க்கு ஆரம்பிக்கும் என்பது அந்தத் தொழிலாளருக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர் எப்போதும் தான் எடுக்கும் மதிய உணவு இடைவேளையை முடித்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மேலாளர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரும் மற்றத் தொழிலாளர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களும் மேலாளர் இவ்வாறு பேசியது தவறு என்றும் அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆனால் நிர்வாகம் அனைவரையும் திரும்பவும் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. தன்னுடைய சகத் தொழிலாளரை சாதி ரீதியாக திட்டியதைக் கண்டித்து மார்ச் 7 முதல் 11 ஆம் தேதி வரை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டத் தொழிலாளர்களை வேலைக்கு திரும்புமாறு தொழிலாளர் துறை, தாசில்தார் மற்றும் காவல்துறை கோரியதாகத் தொழிலாளர்கள் கூறினர். தொழிலாளர் துறை அழைத்த முதல் சமரசப் பேச்சுவார்த்தையை நிர்வாகம் புறக்கணித்தது. தொழிலாளர்கள் போராட்டம் 5 நாட்கள் தொடர்ந்த நிலையில் தாசில்தார் நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்ப்பந்தித்து உள்ளார். இரண்டாவது பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகம் இன்றைய வர்த்தக நிலைமையில் லாபம் பெறுவது கடினம் என்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியதே தவிர மேலாளர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தொழிலாளர் துறையின் அறிவுறுத்தலால் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் இதுவரை நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். 5 நாள் வேலை நிறுத்தத்திற்காக 21 நாள் ஊதியத்தை நிர்வாகம் பிடித்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் ஏதாவது கோரிக்கைக்காக மனித வள நிர்வாகத்தை அணுகினால், தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் ஏற்கனவே உள்ள ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தை அணுகக் கோருகிறது எனத் தொழிலாளர்கள் கூறினர். நீங்கள் போராடினாலும் ஒன்றும் நடக்காது, இங்கு அரசு எங்களுக்காக தான் வேலை செய்யும், பேசாமல் ஏசுளு வாங்கி கிளம்புங்கள் என நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து மிரட்டுவதாகத் தொழிலாளர்கள் கூறினர். இதனால் இங்குள்ள நிரந்தரத் தொழிலாளர்களின் அதிருப்தி ஓங்கியுள்ளது.

This entry was posted in Electronics Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.