இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் தொழிற்சாலையில் பணி நிலைமைகளை தொடர உயர்நீதி மன்றம் உத்தரவு

இயந்திரங்களை அப்புறப்படுத்தக் கூடாது என கோர்ட் உத்தரவு, ஆனால் இயந்திரங்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியதை அடுத்து இன்டெக்ரா நிறுவனம் 2016ல் தனது வல்லார்புரம் தொழிற்சாலையில் கதவடைப்பு செய்தது. கதவடைப்பு செல்லாது என்றும் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தொழிலாளர் துறை அறிவுரை செய்தும் ஜனவரி 2017;ல் நிர்வாகம் தொழிற்சாலையை மூடி கிட்டத்தட்ட 100 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. இது குறித்து நடைபெற்ற வழக்கில் மார்ச் 24 அன்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தீரும் வரை தனது வல்லார்புரம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு இன்டெக்ரா நிறுவனம் பணி நிலைமைகளை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலையை மூட நிர்வாகம் எடுத்து வந்த நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கட்டுப்படுத்தியுள்ளது. தொழிற்தாவா வழக்கு தீரும் வரை தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை அப்புறப்படுத்தக்கூடாது எனக் கூறியுள்ளது.

2015ல் இருந்து இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ்சில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் தொழிற்சங்கம் அமைக்கப் போராடி வருகின்றனர். தொழிலாளர் சரியாக வேலை செய்யாததால் வருமானம் குறைந்துள்ளது எனக் கூறி நிர்வாகம் ஜுன் 2016ல் தொழிற்சாலையை கதவடைப்பு செய்தது. தொழிலாளர் துறைக்கு முன் எழுப்பப்படட வழக்கின் அடிப்படையில் 5 மாதங்களுக்கு பின்னர், தொழிலாளர் துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தொழிற்சாலையில் நிர்வாகம் மீண்டும் உற்பத்தியை துவங்கியது.

ஆனால் மீண்டும் ஜனவரி 2017ல் தொழிற்சாலையை மூடுவதாகவும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாகவும் நிர்வாகம் அறிவித்தது. அப்போது நிர்வாகம் இயந்திரங்களை தனது கோயம்பத்தூர் கிளைக்கு மாற்ற முற்படுகையில் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி தடுத்தனர். இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் இயந்திரங்களை அகற்றக்கூடாது என ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் நடந்த வழக்கு விசாரணையில் தொழிலாளர் துறையின் அனுமதி பெறாமல் தொழிற்சாலையில் இரண்டு இயந்திரங்களை நீக்கியதாக நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. இது தொழிற்தாவா சட்டத்தின் பகுதி 33(1)க்கு புறம்பாகும். இதை அடுத்து அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே அவர்கள் செய்து வந்த பணி நிலைமைகளை நிர்வாகம் நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணிநிலைமைகளை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் தொழிற்தாவா வழக்கு தீரும் வரை தொழிற்சாலையில் இந்த எந்த இயந்திரங்களையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் முக்கிய இயந்திரங்களை நிர்வாகம் ஏற்கனவே அகற்றிவிட்டதாக தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். அவர்களை தொழிற்சாலைக்கு உள்ளே விட நிர்வாகம் மறுத்துள்ளது. நிர்வாக கேட்டிற்கு 200 மீட்டருக்குள்ளே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. அதனால் நிர்வாகம் தற்போதைய உத்தரவை கடைபிடிக்கிறதா என்று தொழிலாளர்களால் உறுதிசெய்ய முடியவில்லை. நிர்வாகம் உத்தரவிற்கு புறம்பாக நடந்துள்ளதா என்று கண்காணிக்க கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் ஆனால் இது வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜனவரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 70 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தன்னிச்சையாக பணிநீக்க நிவாரணம் ஒன்றை அறிவித்தது. ஏற்கனவே 30 தொழிலாளர்களை பயிற்சியாளர்கள் எனக் கூறி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. தொழிலாளர்கள் நிவாரணத்தை மறுத்தும் அதற்கான காசோலையை தொழிலாளர்களின் முகவரிகளுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ளது. இந்நிவாரணத்தை இது வரை தர வேண்டிய ஊதிய பாக்கியாக எடுத்துக் கொள்வதாகவும் மீதமிருக்கும் தொகையை வழக்கு முடிவில் திருப்பிக் கொடுப்பதாகவும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு பதில் அனுப்பியுள்ளனர்.
நிவாரணத்தை எடுத்துக் கொண்டு வேலையை விட்டு செல்லுமாறு உள்ளுர் ரௌடிகளும் தங்களை மிரட்டுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். சிலத் தொழிலாளர்கள் தங்குவதற்கு நிர்வாகம் அம்பத்தூரில் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் தற்போது அறைகளை காலி செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதுவும் உயர்நீதி மன்ற உத்தரவிற்கு புறம்பானதாகும். தொழிலாளர்கள் காலி செய்ய மறுத்து வீட்டு உரிமையாளர்களுக்கும், உள்ளுர் காவல்துறைக்கும் உயர்நீதி மன்ற உத்தரவை கொடுத்துள்ளனர்.

நிர்வாகத்தின் சட்டமீறலும், நீண்டகால நீதிமன்ற வழக்கு விசாரணையும் தொழிலாளர்கள் போராட்டத்தை வலுவிலக்க செய்கின்றன. வருமானம் இன்றி தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வேறு வேலை தேடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள ஆட்;டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒப்பந்த வேலையே உள்ளது. இதனால் குறைந்த ஊதியத்திற்கும் பாதுகாப்பு இல்லாத பணிகளுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினாலும் அரசின் மெத்தனப் போக்கினாலும் தொழிலாளர்களே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நிர்வாகங்கள் மீதான பாதிப்பு குறைவே!

This entry was posted in Factory Workers, Lock out/Closure, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.