வேலைக்கு செல்லும் போது வேனில் அடிபட்ட விஜய் கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு இழப்பீடு

தொழிற்சங்கம் மூலம் கிடைத்த வெற்றி, 4 மாத ஊதியமும் 5000ரூபாய் நிவாரணமும் கொடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது, நான்கு மாதங்களுக்கு பின்னர் அடிபட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினார்கள்

2016 டிசம்பர் 2 ஆம் தேதி காலையில் 12 பெண் தொழிலாளர்களையம் 2 குழந்தைகளையும் ஏற்றி சென்ற விஜய் கார்மென்ட்ஸ் வேன் படலம் அருகே கவிழ்ந்து விழுந்ததில் 6 பெண் தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து இஎஸ்ஐ பிடித்தும் கூட நிர்வாகம் இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களை பதிவு செய்யவில்லை. கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்த தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் மருத்துவ நிவாரணமும் இழப்பீடும் கோரி வந்தனர். நான்கு மாதங்களுக்கு பின்னர் அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற்றது. நிர்வாகம் நான்கு மாத ஊதியமும் மருத்துவ செலவிற்காக ரூ5000 கொடுக்க ஒப்புக் கொண்டது. இதற்கு பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

Garment Workers Won their Back Wages – 29th March

விபத்து

தொழிலாளர்களின் கூற்றுப்படி வாகன ஓட்டுனர் மிகவும் வேகமாக ஓட்டி வந்ததனால் இன்னொரு வாகனத்துடன் வேன் மோதி கவிழ்ந்துள்ளது. அமிர்தம் எனும் 33 வயது தொழிலாளருக்கு வாயில் இருந்து ரத்தம் வந்து முகம் வீங்கியுள்ளது. அவருடைய வலது கண் அடிபட்டு இன்றும் சரியாக தெரிவதில்லை. சங்கீதா எனும் தொழிலாளர் வண்டியில் இருந்து தூக்கி எரியப்பட்டு அவருடைய தாடை உடைந்துள்ளது. இரண்டு மாதங்களாக அவரால் பேச முடியவில்லை, நீர் ஆகாரம் தான் உணவு. பிரேமா எனும் 26 வயது தொழிலாளருக்கு வலது கை உடைந்துள்ளது.

Amurtham,

 

 

 

 

 

 

 

 

அடிபட்டத் தொழிலாளர்கள் ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சரியான சிகிச்னை அளிக்கப்படாததால் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்ற போது அவர்களிடம் இஎஸ்ஐ அட்டை இல்லாததால் அவர்களுக்கு மருத்துவம் பார்க்கமுடியாது என இஎஸ்ஐ மருத்துவமனை கூறிவிட்டது. இஎஸ்ஐ அட்டை இருந்திருந்தால் அவர்களுக்கு இலவச சிகிச்சையும் நோயுற்ற சமயத்தில் நிவாரணமும் கிடைத்திருக்கும்.

தொழிலாளர்களின் அனைத்து மருத்துவ செலவுகளுக்கும் பொறுப்பேற்பதாக கூறிய விஜய் கார்மென்ட்ஸ் நிர்வாகம் அவர்களுக்கு உடனடியாக எந்த நிவாரணமும் தரவில்லை. மாதம் ரூ6000-7000 ஊதியம் வாங்கும் இத்தொழிலாளரகள் கடன் வாங்கி தங்கள் மருத்துவத்திற்கு செலவளித்தனர். சங்கீதாவின் தாடையை சரி செய்ய ரூ50000 செலவாயிற்று. அமிர்தா சில மருத்துவ பிரச்சனைகளுக்கு வைத்தியம் பார்க்கவில்லை. அவருடைய கணவரை அவரை பார்த்துக் கொள்ள வேலைக்கு செல்ல முடியாததால் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யக் கூட கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். மனைவிக்கு விபத்து நேர்ந்த அதிர்ச்சியில் முனியம்மா என்பவரின் கணவர் தற்கொலை செய்ய முட்பட்டார்.

நிர்வாகம் அலைக்களிப்பு

டிபிஎஸ் ரெட்டி குழுமத்தைச் சார்ந்த விஜய் கார்மென்ட்ஸ் மெப்ஸ்சிலும் படலத்திலும் இரண்டு தொழிற்சாலைகளை செயல்படுத்தி வருகிறது. இங்கு கடந்த ஒரு வருடமாக இத்தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனம் பல பெரிய பிராண்டுகளுக்கு ஆடைகள் தயாரித்து வருகின்றனர். படலம் யூனிட்டில்Manda-as, Karen Scot, Jockey, Oliver,  Napawear பிராண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

Brands associated with Vijay Garments

இந்நிறுவனம் தன்னுடைய இணையதளத்தில் தன்னுடைய மூலதனமே 15000 உறுப்பினர்கள் என்றும் எல்லோரும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது. 15000 உறுப்பினர்கள் என்பது தொழிலாளர்களை குறிப்பிடுவதாகும். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் நலன்களில் தரமான போக்குவரத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தங்களை குடும்பத்தினர் போல நிறுவனம் நடத்தவில்லை என்று தொழிலாளர்கள் கருதிகின்றனர்.

நவம்பருக்கான தன்னுடைய ஊதியத்தை பெறுவதற்காக பிரேமா ஒரு வாரம் உடைந்த கையுடன் பேருந்தில் வீட்டிற்கும் தொழிற்சாலைக்கும் அலைய வேண்டியிருந்தது. ‘என்னுடைய மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பஸ் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு நான் சென்றேன். வலி நிறைய இருந்தாலும் எங்களுக்கு பணம் தேவையாக இருந்தது. பண மதிப்பு நீக்கம் காரணமாக எங்களுக்கு முழு ஊதியத்தையும் தர முடியாது எனக் கூறி விட்டனர். அதனால் நான் மூன்று நாட்கள் அலைந்து ஊதியத்தைப் பெற்றேன். எங்களைப் பற்றி நிர்வாகம் கவலை கூடப்படவில்லை’ என அவர் கூறுகிறார். வாடகை வீட்டிற்கு 3 மாதம் வாடகை தர முடியாமல், எப்போது தங்களை வெளியேற்றிவிடுவார்களோ என்று அவருக்கு கவலை வேறு.

தொழிற்சங்கத்தை நாடியதால் பழிவாங்கல்

கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிற்சங்கத்துடன் தொழிலாளர்கள் இணைந்த பின்னர் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுக்கு 3 மாத ஊதியமும் 15000ரூ நிவாரணமும் தருவதாக எழுத்துபூர்வமாக நிர்வாகம் ஒப்புக்கொண்;டது. ஆனால் அதற்கு பின்னர் தொழிலாளர்களின் வீடு தேடி வந்து குறைவான பணம் கொடுக்க மேலாளர் முயற்சித்துள்ளார். பணத்தை வாங்க மறுத்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்தப்படி தொழிற்சாலையில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர். மருத்தவ ரசீதுகள் இருந்தால் மட்டுமே நிவாரணம் கொடுப்போம் என்றும் புதிய நிபந்தனையை மேலாளர் கூறி நிவாரணத்தையும் தரவில்லை. பல மருத்துவமனைக்கு சென்றதால் அனைத்து செலவுகளுக்கான ரசீதுகள் தொழிலாளர்களிடம் கிடையாது. மேலும் அவர்கள் கோருவது குறைவான நிவாரணமே அதையும் தருவதற்கு நிர்வாகம் முன்வரவில்லை.

‘வெளியாட்கள்’ அவர்களை வந்து தூண்டி விடுவதாக நிர்வாகம் குற்றம் சாட்டியது எனத் தொழிலாளர் நித்யா கூறினார். தங்களுக்கு யாரும் இல்லாத போது தொழிற்சங்கம் வந்து போராடியது என்பதை மேலாளருக்கு தொழிலாளர்கள் நினைவூட்டியுள்ளனர். சென்னைக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யவும் மருத்துவ செலவுக்கு நன்கொடை வசூல் செய்து கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.

சட்டவிரோத செயல்பாடுகள்

தொழிற்சாலை சட்ட(1948)த்தின் படி தொழிற்சாலைக்கு செல்லும் போது நடக்கக்கூடடிய விபத்துகளும் தொழிற்சாலை விபத்துகளாக எடுத்துக் கொள்ளப்படும். தொழிலாளர் அரசுக் காப்பீடுச் சட்டமும்(இஎஸ்ஐ பகுதி 51சி) இதையே வலியுறுத்துகிறது. இதற்கான விதிமுறைகள் சரியாக வகுக்கப்படவில்லை எனத் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுஜாதா கூறுகிறார். ‘தொழிற்சாலை இதற்கான இழப்பீட்டை கொடுப்பதை காவல்துறை கண்காணிக்கவேண்டும். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். தொழிலாளர் துறை, இஎஸ்ஐ மற்றும் தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை ஆகியவை மத்தியில் ஒருங்கிணைந்த விதிமுறைகள் வேண்டும். உடனடி நிவாரணம் மற்றும் தண்டனை அளிக்கப்பட்டால் தான் தொழிலாளர்களுக்கு இம்மாதிரியான விபத்துகள் நடப்பதை தடுக்க முடியும்’ என அவர் கூறுகிறார். இப்பிரச்சனையில் காவல் துறை ஓட்டுனருக்கு எதிராக மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் பலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நாள் முதல் மருத்துவ சேவை பெற்றுக் கொள்ளலாம். இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களை பதிவு செய்வது நிர்வாகத்தின் கடமையாகும். அவர்களுக்கு நிரந்தர இஎஸ்ஐ அட்டை வரும் முன்னர் அவர்களுக்கு தற்காலிக அட்டைகளை நிர்வாகம் தர வேண்டும். இஎஸ்ஐ உள்ளுர் கிளையில் இவர்களை பதிவு செய்ய வேண்டும். விபத்து நடந்த பின்னர் தொழி;ற் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்கும் இஎஸ்ஐ அலுவலகத்திற்கும் தகவல் கூறவேண்டும். ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யவில்லை.

நிர்வாகம் பணிந்தது

தொழிலாளர் துறை துணை ஆணையர் முன் மார்ச் 29 அன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிலாளர்களுக்கு நீதி கிட்டியுள்ளது. நிர்வாகம் நான்கு மாத ஊதியத்தை தொழிலாளர்களுக்கு தந்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் கோரிய மருத்துவ நிவாரணம் ரூ15000ல் ரூ5000 கொடுக்க முன்வந்துள்ளது. தங்களுடைய இழப்பிற்கு முழு நிவாரணமும் கிடைக்கவில்லை என்றாலும் தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளினால் தான் நான்கு மாத ஊதியம் கிடைத்துள்ளது எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். தொழிற்சாலைக்கு வேலைக்கு திரும்பியத் தொழிலாளர்கள் இது குறித்து மற்றவர்களிடம் கூற உறுதியேற்றுள்ளனர். தொழிலாளர் துறை துணை ஆணையர் தொழிலாளர்களுக்கு (புதிய குறைந்த பட்ச ஊதிய ஆணைக்கு ஏற்ப) உரிய ஊதிய பாக்கியை கொடுத்து அதற்கான ஆதாரத்தை தொழிலாளர் துறைக்கு சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளார். அனைத்து தொழிலாளர்களையும் இஎஸ்ஐ கீழ் உடனடியாக பதிவு செய்யவும் அவர் கோரியுள்ளார்.

This entry was posted in Factory Workers, Garment Industry, News, Women Workers, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , . Bookmark the permalink.