வறட்சியினால் வாடும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி பொது வேலை நிறுத்தம் – தமிழ்நாட்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு

தொடரும் வறட்சி நிலைமையினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடன் தொல்லையினாலும் வேலையின்மையினாலும் வாடும் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏப்ரல் 25 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதில் அதிமுக, பிஜேபி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களும், மாநிலத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துப் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ40000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய கோரியும், தேசிய வங்கிகளில் உள்ள விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய கோரியும், தமிழ்நாடு விவசாயிகளுக்கு காவேரி நீர் ஒதுக்கீட்டை உறுதி செய்ய காவேரி நதி மேலாண்மைக் குழுவை நியமிக்கக் கோரியும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Anna Salai Blocked by Workers

சென்னையில் பல்வேறு கடைகள் நாள் முமுதும் மூடியிருந்தன. தொழிற்சங்கத்தில் இணைந்த மற்றும் அமைப்பாக்கப்படாத ஆட்டோ ஓட்டுனர்களும், டாக்சி ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து மாநகர போக்குவரத்து ஆணையம் ஒரு சில பேருந்துகளை இயக்கியது. ஐடி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்கின. அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அரசு பணி வெகுவாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் நடந்த பல்வேறு போராட்டங்களில் 60000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் சவுந்தரராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கானத் தொழிலாளர்கள் சென்னை அண்ணா சாலையை மறித்தனர். இப்போராட்டத்தில் சிஐடியு, எல்பிஎஃப், ஹெச்எம்எஸ் தொழிற்சங்கங்கள் பங்கெடுத்தனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக தொழிலாளர்களை முற்றுகையிட்ட காவல்துறை அனைவரையும் கைது செய்து அதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மாநிலப் போக்குவரத்து பேருந்துகளில் ஏற்றினர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் அவல நிலையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இப் போராட்டங்கள் நடைபெறுவதாக தோழர் சவுந்தரராஜன் கூறினார். இவ்வாறு வாழ்ந்து மடிவது தான் விவசாயிகளின் விதி என்றால் அரசாங்கம் என்று ஒன்று எதற்காக என அவர் கோரினார். ஒரு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விட்டு மக்களின் துயர் போக்க ஒன்றும் செய்யாமல் இருப்பது நியாயமற்றது என்று அவர் கூறினார். இந்தியை திணித்தல், ஜிஎஸ்டி வரி விதிப்பு, நீட் தேர்வு முறையை கட்டாயமாக்கல் ஆகிய மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை அவர் சாடினார்.

Workers from across Tamilnadu strike work and protest for Farmers

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், நந்தம்பாக்கம் கிராமம், திருப்போருர், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிஐடியு சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் எல்பிஎஃப், சிஐடியு, விசிக தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் பங்கேற்றதாக சிஐடியு காஞ்சிபுரம் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் கூறினார். ஏஐசிசிடியுவின் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் தெருமுனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரிக்கால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததை அடுத்து நிர்வாகம் அவர்களின் 8 நாள் ஊதியத்தை பிடிப்பதாக அறிவித்துள்ளது.

Pricol workers protest in support of farmers (Source: AICCTU)

மாலை 5 மணி அளவில் சென்னை பாரிஸ் கார்னர் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் வங்கி, அஞ்சல் மற்றும் பிஎஸ்என்எல் துறைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு(BEFI) மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய பிஜேபி அரசு விவசாயிகளை புறக்கணிக்கும் போக்கை சாடினர். தனியார் கார்ப்பரேட்டுகளின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்ய முன்வந்துள்ள மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு டெல்டா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தேசிய அவமானம் என அவர்கள் கூறினர். தில்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுத்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி கோஷங்களை போராளிகள் முழங்கினர்.

தோழர் ஜானகிராமன், தோழர் தாமஸ் பிரான்கோ, தோழர் கரியப்பன், தோழர் கன்னையா, தோழர் தமிழரசு மற்றும் தோழர் மனோகரன் போராட்டத்தில் உரையாடினர். தொழிலாளர் கூடத்துடன் பேசிய AIBOC தோழர் பிரான்கோ விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் தேசிய போராட்டங்களை அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் முன்னெடுத்துச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கு உள்ள உறவை பலப்படுத்த குரல் கொடுத்தும் தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 13 அன்று போராட்டம் நடத்தினர். ஏப்ரல் 21 அன்று சென்னை மற்றும் அருகே உள்ள பலத் தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டன. உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மய்யம் (WPTUC) ஒருங்கிணைத்த இக்கூட்டங்களில் கலந்து கொண்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Ashok Leyland United Emp Union, Hosur

Simpson Group Workers Union, Sembiam (2)

Simpson Group Workers Union, Sembiam (1)

Rane TRW Steering Systems Emp Union

Kanchipuram L&T Valves Emp Union

Ashok Leyland, Ennore

 

This entry was posted in Agriculture, Factory Workers, News, Strikes, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.