ஸ்லாம் தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

மாநில அரசின் 2014 குறைந்த பட்ச ஊதிய ஆணை கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என உயர் நீதி மன்றம் கடந்த வருடம் முதலாளிகளுக்கு ஆணையிட்டது. இது வரை குறைந்த பட்ச ஊதியத்தில் தராத ஊதிய நிலுவைத் தொகையையும் தர வேண்டும் என உயர் நீதி மன்றம் கோரியிருந்தது. தங்களுக்கு தர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வு, சமூகப் பாதுகாப்பு நலன்கள் கோரி மஹீந்திரா சிட்டியில் உள்ள ஸ்லாம் தொழிற்சாலையின் சுமார் 300 தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். வேலை நிறுத்தம் மே 11 முதல் 15 வரை நீடித்தது.

போராட்டத்தின் போது நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்த நிலையில், கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கத்திற்கும்(GAFWU), நிர்வாகத்திற்கும் நடைபெற்ற பல்வேறு பேச்சு வார்த்தைகள் மூலம் நிர்வாகம் பணிந்துள்ளது. ஒரு வாரத்தில் ஊதியத்தை உயர்த்த உறுதி செய்வதாகவும், போராடியத் தொழிலாளர்களை வன்புறுத்திய கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், ஊதியம் கொடுக்காத 38 தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் கொடுக்கவும், பணிநீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பதாகவும் நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடித்து வேலைக்கு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்லாம் குழுமம் பல்வேறு சர்வதேச பிராண்டுகளுக்கு ஆடைகள் தயாரித்து வருகின்றனர். அவர்களது முக்கிய வாடிக்கையாளரான பிவிஹெச் சர்வதேச ஆயுத்த ஆடை நிறுவனம், கால்வின் க்ளெயின், வான் ஹுசேன் ஆகிய பிராண்டுகளுக்கு ஆடைகள் தயாரித்து வருகின்றனர். ஸ்லாம் குழுமம் பசிவிக் கோஸ்ட் அப்பரால்ஸ், மார்வெல்ஸ், ஜாரா போன்ற பன்னாட்டு விற்பனையாளர்களுக்கும் ஆடைகள் தயாரிக்கின்றனர். ஸ்லாம் நிறுவனம் தமிழ்நாட்டில் இரு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். போரூர் அருகே இருந்த தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது. செங்கல்பட்டு அருகே மஹீந்திரா சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 7 வருடங்களாக உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதைத் தவிர பல்கேரியாவிலும், டர்கியிலும் தொழிற்சாலைகள் உள்ளதாக தொழிற்சங்கம் கண்டுபிடித்துள்ளது.

பிஎஸ்சிஐ அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக நிர்வாகம் தன்னை காட்டிக்கொள்கிறது. இது குறித்து தொழிற்சாலை சுவர்களில் பல்வேறு போர்டுகள் வைத்துள்ளது. பிஎஸ்சிஐ அங்கீகாரம் பெற்ற ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என பிஎஸ்சிஐ நிறுவனம் வழிமுறைகளை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமை, முறையான ஊதியம், பாதுகாபபான வேலை ஆகியவற்றை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும் என பிஎஸ்சிஐ கூறுகிறது. ஆனால் தொழிலாளர்களின் கூற்றை ஆராய்ந்தால் நடைமுறையில் தொழிலாளர்களின் உரிமைகள் எதையும் ஸ்லாம் நிறுவனம் உறுதிபடுத்தவில்லை என்பது புலப்படுகிறது.

நிலையற்ற பணி, நியாயமில்லா ஊதியம்

ஸ்லாம் கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் டெய்லர், ஆப்பரேட்டர், செக்கர்ஸ், ஹெல்பர், ஹவுஸ்கீப்பீங் ஆகிய பணிகளில் சுமார் 300 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 25 ஆண்கள் தவிர மற்ற அனைவரும் பெண் தொழிலாளர்களே. இவர்களில் பலர் இளம் தொழிலாளர்கள். 60கிமீ தொலைவில் உள்ள வந்தவாசி போன்ற இடங்களில் இருந்து அவர்கள் கொண்டு வரப்படுகின்றனர். 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ள இவர்களுக்கு ஜனவரி வரை கொடுக்கப்பட்ட மாத ஊதியம் ரூ 4000 தான். அவர்களுடைய ஊதியத்தில் இருந்து இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டும் இது வரை அவர்களுடைய கணக்கில் செலுத்தப்படவில்லை. தொழிலாளர்கள் ஓவர்டைம் செய்தால் அதற்கு ஊதியம் தரப்படுவதில்லை. உற்பத்தி குறையும் போது விடுமுறை கொடுக்கப்பட்டு ஓவர்டைம் சரிகட்டப்படுகின்றது. தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தொழிற்சாலையில் கிரெச் வசதி செய்து தரப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியும் கேண்டின் வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.

ஜனவரியில் இருந்து ஹெல்பர்களுக்கு ரூ8000, ஆப்பரேட்டர்களுக்கு ரூ8200, செக்கர்களுக்கு ரூ 8400 என தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிற்சங்கம் சட்டரீதியாக தொடுத்தப் போராட்டத்தினால் வந்த மாற்றமாகும். 2014 குறைந்த பட்ச ஊதியத்தை கடந்த ஜுலை மாதம் உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. அப்போது ஆயுத்த ஆடை தொழிற்சாலைகள் 2014ல் இருந்து தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய நிலுவைத் தொகையைத் தர வேண்டும் என்று உயர் நீதி முதலாளிகளுக்கு ஆணையிட்டது. உயர்நீதி மன்ற ஆணையை நிறைவேற்றி தங்களுடைய ஊதிய பாக்கியை நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இதற்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

தற்போது நிர்வாகம் தங்களுடைய ஊதியத்தில் இருந்து போக்குவரத்து செலவு எனக் கூறி ரூ2600 வரை பிடிப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களுடைய ஊதியம் குறைந்த பட்ச ஊதியத்திற்கும் கீழே குறைந்துள்ளது. மேலும் தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடுகிறது எனக் கூறி உணவில் கூட நிர்வாகம் கைவைப்பதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக தேநீர் இடைவெளியில் டீ மட்டும் கொடுப்பது அல்லது பிஸ்கெட் மட்டும் கொடுப்பது எனும் செயல்களை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் ஒரு பெண் தொழிலாளர் தனது கணவரை இழந்து 10 நாட்கள் விடுமுறை எடுத்து திரும்பியுள்ளார். இத்தொழிலாளருக்கு இன்னும் ஊதியம் தரப்படவில்லை. அவ்வாறு தந்தாலும், 10 நாட்களுக்கான ஊதியத்தை குறைத்து தான் கொடுப்பார்கள் என தொழிற்சங்கத் தலைவர் சுஜாதா மோடி கருதுகிறார்.

தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமை மறுப்பு

தொழிற்சாலையில் 5 தொழிலாளர்களை கொண்ட தொழிலாளர்கள் குழு(Works Committee) இயங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், உயர்நீதி மன்ற ஆணையின் படி ஊதிய பாக்கி, வருடாந்திர ஊதிய உயர்வு, இஎஸ்ஐ, பிஎஃப் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் 20 அம்ச கோரிக்கையை நிர்வாகத்திற்கு அளித்தனர். இதற்காக ஏப்ரல் 8, 9 அன்று வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தினர். அப்போது உள்ளுர் பிரமுகர்களின் தலையீட்டால் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதற்கு பின்னர், நிர்வாகம் 50 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட நிர்வாகம் நிர்பந்தித்தாக ஹவுஸ்கீப்பிங் பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஆண் தொழிலாளர் கூறினார். பணியில் இருந்து விலகுவதற்கு 3 மாத ஊதியம் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அளித்ததாகவும் இது வரை தரவில்லை எனவும் அவர் கூறினார். தனக்கு தரப்பட வேண்டிய அலுவலக செலவுகளுக்கான பாக்கியையும், பிஎஃப் பணத்தையும் நிர்வாகம் தரவில்லை என அவர் முறையிட்டார்.

மே 11 அன்று, மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ‘இவ்வாறான கோரிக்கைகளை கேட்க நீங்கள் யார், வேண்டுமென்றால் வேலையை விட்டு செல்லுங்கள்’ என நிர்வாகத் தரப்பினர் கூறியுள்ளனர். அதனால் மே 11 அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மே 12 அன்று நிர்வாகம் போக்குவரத்து வாகனங்களை தொழிலாளர்கள் பகுதிகளுக்கு அனுப்பவில்லை. உடனே தொழிலாளர்கள் தங்கள் சொந்த செலவில் தொழிற்சாலை வாயில் முன் கூடினர். நிர்வாகம் அவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கவில்லை. குடிநீர், கழிப்பிட வசதி என எதையும் உபயோகிக்க நிர்வாகம் விடவில்லை. மஹிந்திரா சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ளே தொழிலாளர்களுக்காக வேறு எந்த வசதியும் கிடையாது. வெயிலில் வாடி வதங்கி அருகில் உள்ள புதர்களில் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அப்போது GAFWU தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த சிலத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அணுகினர். தொழிற்சங்கம் தொழிலாளர்கள் மத்தியில் கூட்டம் நடத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். இதன் பிறகு தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து நடந்த கூட்டத்தில், வாகனங்களை அனுப்புவதற்கு நிர்வாகத்தை ஆணையிடுவதாக கூறிய ஆணையர் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறும் மற்ற பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதாகவும் வாக்குறுதி அளித்தார் எனத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறினர்.

மே 13 அன்று நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு வாகனங்களை அனுப்பியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்த பின், நிர்வாகம் அவர்களை அழைத்து தொழிலாளர் துறைக்கு சென்ற 10 தொழிலாளர்கள் முன்வந்து அங்கு என்ன கூறினர்கள் என்று கூறுங்கள் எனக் கேட்டுள்ளது. அதற்கு அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் துறைக்கு சென்ற 10 தொழிலாளர்களை அடையாளம் காண மறுத்து விட்டு மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக குழந்தைகள் இருந்த கிரெச் பகுதியில் மின்விசிறிகளை அணைத்து விட்டது நிர்வாகம்.

GAFWU பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் மதிய வேளையில் நிர்வாகத்திடம் இது குறித்து பகார் செய்தனர். ஆனால் அங்கு இருந்த நிர்வாக மேலாளரும், உற்பத்தி மேலாளரும் இப்பணியில் சேர்ந்து சில மாதங்கள் ஆகிய நிலையில் அவர்களுக்கு தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியுற்றனர். தொழிற்சாலையில் நிர்வாகம் அடிக்கடி மாறுகின்றது என்றும் அதனால் எந்த பிரச்சனைகளும் தீரக்கப்படுவதில்லை எனத் தொழிலாளர்களும் கூறினர்.

மூலதனம் வெளியேறும் ஆபத்தின் பின்னணியில் தொழிலாளர்களின் கோரிக்கைகள்

போரூர் தொழிற்சாலையை ஸ்லாம் நிர்வாகம் மூடிய போது, சுமார 150 தொழிலாளர்கள் மஹீந்திரா சிட்டி தொழிற்சாலை வாயிலில் வந்து போராட்டம் நடத்தியதை தொழிலாளர்கள் நினைவு கூறுகின்றனர். அப்போது தொழிலாளர் துறை தலையிட்டு தொழிலாளர்களுக்கு ஆட்குறைப்பு நிவாரணம் பெற்றுத் தந்தது. தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடுவதாக நிர்வாகம் கூறி வரும் நிலையில், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு தொழிலாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மஹீந்திரா சிட்டி தொழிற்சாலையும் மூடிவிட்டு நிர்வாகம் ஜெர்மனி சென்று விட்டால் தங்களுடைய கதி எனன என்று தொழிலாளர்கள் எண்ணுகின்றனர். ‘போரூர் தொழிலாளர்களுக்காவது இங்கு வந்து போராடுவதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. நிர்வாகம் இத்தொழிற்சாலையை மூடினால் நாங்கள் ஜெர்மனி சென்று போராட முடியுமா?’ என்று ஒரு தொழிலாளர் கூறினார்.

இந்நிலையில் வேலை நிலைக்காவிட்டாலும் பரவாயில்லை தங்களுடைய ஊதிய நிiலுவைத் தொகை, பிஎஃப் தொகை மற்றும் ஆட்குறைப்பு நிவாரணத்தையும் நிர்வாகம’ தந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டனர். ‘ஒரு கிரெச்சில் மின்விசிறிகளை நிப்பாட்டும் நிர்வாகத்திடம் நான் என்ன எதிர்பார்க்க முடியும்?’ என ஒரு தொழிலாளர் குறிப்பிட்டார். தொழிலாளர்களை நிர்வாகம் நடத்திய விதம் படு மோசம் எனக் குறிப்பிட்ட தோழர் சுஜாதா, தொழிலாளர்களின் தற்போதைய மனநிலைமையை புரிந்தாலும், தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை தக்க வைத்து உரிமைகளுக்காக போராட தொழிற்சங்கம் பணி செய்யும் எனக் குறிப்பிட்டார்.

தற்காலிக சமரசம்

மே 15 அன்று தொழிலாளர் துறை முன்னர் தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நிர்வாகம் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளது என்பதை தொழிற்சங்கம் உறுதிபடுத்தினர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கும். ஊதியம் வழங்காத 38 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். தொழிலாளர்களை துன்புறுத்திய மேலாளர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். ஊதிய பாக்கி குறித்து உச்சநீதி மன்றத்தில் நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளதாகவும் வழக்கு நடக்கும் தருவாயில் பாதி நிலுகைத் தொகையை உச்ச நீதி மன்றத்தில் செலுத்தியுள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. தொழிற்சங்கம் இந்த வழக்கில் வாதாடுவதால் தொழிலாளர்களுக்கு ஊதிய பாக்கியை வழக்கு மூலம் பெற்று தர தொழிற்சங்கம் உறுதி அளித்துள்ளது. இதை அடுத்து தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை முடித்து வேலைக்கு திரும்பியுள்ளனர்.

This entry was posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.