சமூகப் பாதுகாப்பிற்கான தொழிலாளர் சட்ட வரைவு: தொழிலாளர்களின் கவலைகள்- ரமாப்ரியா கோபாலகிருஷ்ணன்

This is a translation of Ramapriya’s article that appeared in Kafila. இந்த கட்டுரை ஆங்கிலத்தில் kafila இணையதளத்தில் வெளியிடப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தும் கொள்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் சென்ற மார்ச் மாதத்தில் மூன்றாவது சட்ட வரைவை வெளியிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புக்கான தொழிலாளர் சட்ட வரைவு பொதுமக்களின் கருத்திற்காக பொது தளத்தில் கொடுக்கப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் மிகவும் விஸ்தாரமானதாக உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சட்ட வரைவு இன்று நடைமுறையில் உள்ள 15 மத்திய தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இவை

 1. தொழிலாளர் அரசு காப்பீடு திட்டம் (இஎஸ்ஐ),
 2. தொழிலாளர் நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம்
 3. மகப்பேறு நலச் சட்டம்
 4. பணிக்கொடை செலுத்துதல் சட்டம்
 5. அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு சட்டம்
 6. கட்டிடம் மற்றும் இதரக் கட்டுமானத் தொழிலாளர்கள் நல (செஸ்) சட்டம்
 7. பீடித் தொழிலாளர்கள் நல செஸ் சட்டம்
 8. பீடித் தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம்
 9. இரும்புத் தாது சுரங்க, மாங்கனீஸ் தாது சுரங்க, க்ரோமிய தாது சுரங்க தொழிலாளர் நல செஸ் சட்டம்,
 10. இரும்புத் தாது சுரங்க, மாங்கனீஸ் தாது சுரங்க, க்ரோமிய தாது சுரங்க தொழிலாளர் நல நிதி சட்டம்,
 11. மைகா சுரங்கத் தொழிலாளர்கள் நல செஸ் சட்டம்
 12. சுண்ணாம்பு மற்றும் டோலோமைட் சுரங்க தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம்
 13. திரைப்படத் தொழிலாளர்கள் நல செஸ் சட்டம் மற்றும்
 14. திரைப்படத் தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம் ஆகியவை ஆகும்.

கூலித் தொழிலாளர்கள், பீஸ் ரேட் தொழிலாளர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள்(fixed term), ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுய தொழில் செய்யும் தொழிலாளர்கள், வீட்டிலேயே வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஏற்படுத்தும். இதில் ஓய்வூதியத் திட்டம், வைப்பு நிதி திட்டம், மகப்பேறு நலத் திட்டம், நோய்வாய்ப்பட்டவவர்களுக்கும் ஊனமுற்றோர்களுக்குமான திட்டம், மருத்துவ நலத் திட்டம், வேலையில்லா தொழிலாளர்களுக்கான பணப்பயன் திட்டம் ஆகியவை அடங்கும். இதைத் தவிர மாநில அரசுகளும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அறிவிக்கலாம். இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சமூகப் பாதுகாப்பு நிதி, பணிக்கொடை நிதி, பணப்பயன்கள் நிதி, சமூகப்பாதுகாப்பு இருப்பு நிதி, நிர்வாகத்திற்கான நிதி எனப் பல்வேறு நிதிகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் நிறுவ வேண்டும். கட்டுமானங்கள், பீடி தயாரிப்பு, சுரங்கம் மற்றும் திரைப்பட தயாரிப்புகள் மீதான செஸ் வரிகளை விதிப்பதற்கு சட்ட வரைவு இடம் கொடுக்கின்றது.

இந்த சட்ட வரைவின் படி தொழிலாளர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசு குழுவுடன் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாகும். பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும் விஸ்வகர்மா கார்மிக் சுரக்ஷா காதா(VIKAS) எனும் திட்டத்தின் கீழ் ஒரு சமூகப் பாதுகாப்பு எண் வழங்கப்படும். தொழிலாளர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் போது இந்த எண் மாறாது.

சமூகப் பாதுகாப்பை செயல்படுத்துவதற்கு பல்வேறு நிர்வாக அமைப்புகளை நிறுவ வேண்டும் என சட்ட வரைவு தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமரின் கீழே ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு கவுன்சில் நிறுவப்படும். மேலும் சமூகப் பாதுகாப்பிற்கான மத்திய குழு, மாநில குழுக்களும் அமைக்கப்படும். இது தவிர, தொழிலாளர்களை பதிவு செய்வதற்கும் தொழிலாளர்களின் பங்களிப்பை வசூலிப்பதற்கும் நிதிகளை பராமரிப்பதற்கும், பணப்பயன்களை கொடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரக அமைப்புகளை சட்ட வரைவு அனுமதிக்கின்றது.

இந்த சட்டம் அமலாக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டவுடன், தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் ஓய்வுதிய திட்டம், தொழிலாளர் வைப்பு சார்ந்த காப்பீடு திட்டம் மற்றும் தொழிலாளர் அரசுக் காப்பீடு திட்டத்தில் உள்ள அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்படும். அதே போல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நலத் திட்டங்களும் பணப்பயன் நிதிகளும் ரத்து செய்யப்படும். இதை நிர்வகிக்கும் அமைப்புகளும் படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்படும்.

தொழிற்சங்க விமரிசனங்கள்

தொழிலாளர்களின் பார்வையில் இருந்து சட்ட வரைவை அணுகும் போது பல கேள்விகளும் பிரச்சனைகளும் எழுகின்றன. தற்போது இயங்கி வரும் தொழிலாளர் வைப்பு நிதி திட்டங்களையும், தொழிலாளர் அரசுக் காப்பீடு திட்டங்களையும் நீக்கி விட்டு மத்திய அரசு முற்றிலும் புதிதான சட்டங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதை விட்டுவிட்டு ஏற்கனவே உள்ள திட்டங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. புதிய திட்டங்கள் என்னவென்று தெளிவாக்கப்படாத நிலையில் பழைய திட்டங்களை ஒழிப்பது சரியல்ல என்று அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக புதிய திட்டங்களில் இன்றைய திட்டங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் செயலப்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இன்றைய தொழிலாளர் வைப்பு நிதி அமைப்புகளும், தொழிலாளர் அரசுக் காப்பீடு நிறுவனமும் பணி செய்யும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட குழுக்களும் மாநில அளவிலான நிர்வாகமும் பணி செய்யுமா என்று தொழிற்சங்கங்கள் சந்தேகிக்கின்றனர். திட்ட நிர்வாகத்தில் இடைத்தரகர்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதையும் அவர்கள் எதிர்க்கின்றனர். இதனால் நிர்வாக கட்டணங்களும் பரிவர்த்தனை கட்டணங்களும் அதிகரிக்கும் எனத் தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு என்று சட்ட வரைவு பறைசாற்றிக் கொண்டாலும் வரைவில் உள்ள அம்சங்கள் இது பொய்யான கூற்று என்பதை காட்டுகின்றன. மத்திய அரசு நிர்ணயிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு மேல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களில் தான் தொழிலாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என சட்ட வரைவு கூறுகிறது. மேலும் தொழிலாளர்கள் இது போன்ற பயன்கள் வேறு வகையில் பெறுகிறார்கள் என்று மாநில அரசு முடிவு செய்தால் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது துறைக்கோ இந்த சட்டத்தில்; இருந்து விதிவிலக்கு அளிக்கலாம். அல்லது சில தொழிலாளர் வகைகளுக்கு சமூகப் பாதுகாப்பு கிடையாது என முடிவு செய்யலாம். குறிப்பாக இன்று பயிற்சியாளர்கள் ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களில் பணி செய்யும் நிலையில் பயிற்சியாளர்கள் தொழிலாளர்கள் அல்ல என்று நிலையாணைகளில் அவர்கள் புறக்கணிக்கப்படுவது சமூகப் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் என்பது முக்கிய பிரச்சனையாகும்.

சமூகப் பாதுகாப்பிற்கான தொழிலாளர் பங்களிப்பைப் பொருத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை சட்ட வரைவு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. பணி நிலைமைகளிலும் சரி வாழ்நிலைமைகளிலும் சரி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் பணி நிலையற்றது. அமைப்புசார்ந்த தொழிலாளர்களை விட அவர்களின் ஊதியம் மிகவும் குறைவு. அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக் கூட அவர்களின் ஊதியம் போதுமானதாக இல்லை. சமூகப் பாதுகாப்பிற்காக அவர்களால் பங்களிப்பு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் சமூகப் பாதுகாப்பிற்கான பங்களிப்பாக தங்கள் ஊதியத்தில் 12.5 சதவிகிதத்தை அனைத்து தொழிலாளர்களும் செலுத்த வேண்டும் எனக் கோருகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு இது 20சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதிகளில் அரசின் பங்கு என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை. நிறுவனங்களில் இருந்து சமூகப் பங்களிப்பிற்காக செஸ் வரி வசூலிப்பதற்காக விதிகள் இருந்தாலும் நிறுவனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. இந்த விதி விலக்கு பின்தேதியிட்டுக் கூட கொடுக்கப்படலாம்!(அதாவது ஒரு துறையில் உள்ள நிறுவனங்கள் செஸ் செலுத்தமால் இருந்தால் அரசு அதற்கு வரிவிலக்கு தரும் போது இது வரை கொடுக்கப்பட வேண்டிய தொகையை வசூலிக்க வேண்டியதில்லை).

முக்கியமாக வைப்பு நிதி, பணிக்கொடை மற்றும் இதர நலப் பயன்களுக்கு வசூலிக்கப்படும் தொகைகளை பங்கு சந்தையில் முதலீடு செய்ய சட்ட வரைவு வழிவகை செய்கிறது. அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்த வரம்பும் கிடையாது. பங்கு சந்தையில் முதலீடு செய்வதனால் ஒரு பக்கம் வருமானம் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் ஆனால் பங்கு சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்தை கொண்ட நிலையில் அது ஒரு சூதாட்டமே. அதனால் தான் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் வைப்பு நிதிகளை கூட பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொழிற்சங்கங்கள் அழுத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு கருத்துகள் எதுவும் சட்ட வரைவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சட்ட வரைவில் உள்ள விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்ற கண்காணிப்பு விதிகளும் தொழிலாளர்களுக்கு பாதகமாக உள்ளன. ஏற்கனவே கண்காணிப்பில் உள்ள தன்னிச்சை போக்கை களைகிறோம் என்ற பெயரில், தொழில் செய்வதற்கு ஏதுவாக அரசு கண்காணிப்பு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. குறிப்பாக இன்று கம்ப்யூட்டர் கணிப்பில் மீறல்கள் அதிகம் என்ற நிறுவனங்களை மட்டும் பரிசோதனை செய்யும் வகை புகுத்தப்பட்டுள்ளது. இதற்கும் மேலே ஒரு படி சென்று, ‘கண்காணிப்பிற்கான அளவுருகளையும் விதிமுறைகளையும் அவ்வப்போது மாற்றுவதற்கு ஆணையருக்குசட்ட வரைவு அதிகாரம் தருகிறது.

தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என மத்திய தொழிற்சங்க அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்ட வரைவு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Informal sector, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.