நீதிக்காக பல்வேறு கதவுகளைத் தட்டும் க்ரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள்? யார் இங்கு கேட்கின்றனர்?

சென்ற வாரத்தில் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்ட க்ரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள் ஒரு யாத்திரையில் சென்றனர். க்ரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலை சட்டவிரோதமாக மூடப்பட்டதால் பணி இழந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நீதி கோரி பல்வேறு அரசுத் துறைகளின் கதவுகளை தட்டினர். க்ரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலை சிப்காட்டில் உள்ளதால், தொழிற்சாலையை மூடிய நிறுவனத்திடம் இருந்து நிலத்தை மீட்க வேண்டும் என்று அவர்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் கண்காணிப்பாளர், தொழிற்சாலை ஆய்வாளர், சிப்காட் அதிகாரிகள் எனப் பலத் துறைகளும் சந்தித்தும் அவர்களுக்கு வெறும் தெளிவற்ற பதில்களே கிடைத்துள்ளன. தங்கள் பிரச்சனைகளை குறித்து அவர்கள் முதலமைச்சரை அணுக உள்ளனர். தொழிற்சாலையை மூடுவதாகக் கூறி தொழிலாளர்களை பணிநீக்கி இயந்திரங்களை நீக்கிய நிர்வாகம் இன்னும் ஆய்வு மற்றும வளர்ச்சி பிரிவையும், தரப் பரிசோதனை பிரிவையும் நடத்தி வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது வழக்கில் உள்ள இந்த பிரச்சனை தீரும் வரை தங்களுக்கு நிர்வாகம் ஊதியம் தர வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

Greaves Cotton workers in Protest – file photo from Aug 2016

 

 

 

 

 

 

 

 

 

சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலையை மூடுவதாக நிறுவனம் அறிவித்ததில் இருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சந்தையில் தேவை குறைந்துள்ளதால் உற்பத்தி குறைவினால் தொழிற்சாலையை மூடியதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தாங்கள் சங்கம் அமைத்து ஊதிய உயர்வு கோரியதனால் நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து வழக்குகள் தொழிலாளர் துறையின் முன் நிலுவையில் உள்ளன. தொழிற்சாலையை மூடிய போது சுமார 300 நிரந்தர, ஒப்பந்த, பயிற்சியாளர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். கடந்த 13 வருடங்களாக இத்தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை. நிர்வாகம் அறிவித்த நிவாரணத்தை தொழிலாளர்கள் மறுத்து வருகின்றனர்.

தற்போது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான அரசின் நடவடிக்கைகள் அரசு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே யார் பக்கத்தில் உள்ளது என்பதை தெளிவாக்குகின்றன. தொழிற்சாலையை மூடிய பின்னரும் சிப்காட்டிற்கு சொந்தமான நிலத்தை அரசு திரும்பக் கோரவில்லை. மாறாக நிர்வாகம் நிலத்திற்கான குத்தகையை வைத்துக் கொள்ள அரசு அனுமதித்து வருகிறது. மின்சாரம், நீர் போன்ற சேவைகளை துண்டித்து, நிலத்தை திரும்பப் பெற்று, இன்னொரு நிர்வாகத்திற்கு கொடுத்து மீண்டும் வேலை வாய்ப்புகளை ஏன் அரசு ஏற்படுத்த முன்வரவில்லை? வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கோரி தானே அரசு இந்த நிலங்களை விவசாயிகளிடம் இருந்தும் பொது நிலங்களையும் கையகப்படுத்தியது?

அதுமட்டுமல்லாமால் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த முயற்சியையும் அரசு காட்ட மறுக்கின்றது. அதே சமயம் உற்பத்தி பொருட்களை எடுக்கிறேன் என்ற பெயரில் நிர்வாகம் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி இயந்திரங்களையும் அப்புறப்படுத்தியுள்ளது. இதைத் தொழிலாளர்கள் தடுக்கும் முயற்சிகளுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. தொழிற்சாலை மூடப்ப்பட்டது குறித்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லாத நிலையில் அவர்கள் வேறு வேலையை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை முன் பேச்சுவார்த்தைக்கு வர நிர்வாகம் மறுக்கிறது. அதே சமயம் தொழிலாளர் நீதிமன்றம் முன்னர் உள்ள வழக்குகள் காலம் தள்ளிப் போய்க் கொண்டுள்ளன. தொழிலாளர்களை ஏழ்மைக்கு தள்ளி அவர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டால் போராட்டங்கள் கலைந்து விடும், அதனால் நிர்வாகத்திற்கு தான் பயன். இதற்கான வேலைகளைத் தான் அரசு செய்து கொண்டு வருகிறது.

தொழிற்சாலை மூடியதால் 90 நிரந்தரத் தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். இதில் 5ல் ஒரு பங்கு தொழிலாளர்கள் ஏற்கனவே நிர்வாகம் கொடுத்த நிவாரணத்தை ஒத்துக் கொண்டு பணியை ராஜினாமா செய்து விட்டனர். தங்கள் வேலைக்காக போராடி வரும் மற்ற தொழிலாளர்களுக்கு இ;ன்னொரு வேலை தேடுவது சிரமமாக உள்ளது. பலர் இங்குள்ள மற்ற சிறிய தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இத்தொழிற்சாலைகளின் இன்னும் குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. ‘இப்போதுள்ள வேலையில் தரையை பெறுக்குவதில் இருந்து இயந்திரங்களை இயக்குதல் வரை நாங்களே செய்ய வேண்டியதுள்ளது. இதைப் பற்றி சொல்வதற்கே வெட்கமாக உள்ளது’ என ஒரு தொழிலாளர் கூறினார். அவர் தற்போது இரும்பு ஷீட்டுகளை வடிவக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இன்னொருத் தொழிலாளர் ஒலா டாக்சி உரிமையாளரிடம் பணிபுரிகின்றார். முன்னர் கிடைத்த ஊதியத்தில் பாதிதான் அவருக்கு தற்போது வருமானம். பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிற்சாலை அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இருவரால் இவ்வழக்குகளுக்காக அலைவதனால் வேலை தேடக் கூட நேரம் இல்லை. அவர்களின் குடும்பங்களின் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். திருமணம், கல்வி, சுகாதாரம் போன்ற பல முக்கிய செலவுகளை தள்ளிப்போட்டு அவரகள் வாழ்ந்து வருகின்றனர்.
தொழிலாளர்களின் உணர்ச்சியையும் போராட்ட குணத்தையும் ஊக்குவிக்க தொழிற்சங்க தலைவர்கள் பலவழிகளை மேற்கொண்டும், வழக்கு தாமதங்கள், தீரவுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாதது, அரசுடன் மோதும் பணிகள், அரசின் பாராமுகத்தினால் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்கள், ஆகியவை தொழிலாளர்கள் மத்தியில் அயர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் அரசால் வன்முறை என்று வகைப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து மறுத்து வரும் அரசின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Lock out/Closure, தமிழ் and tagged , , . Bookmark the permalink.