மேம்பட்ட கூலிக்காகவும், நல்ல பணி நிலைமைக்காகவும் நோபிள் டெக் ஸ்டீல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

உத்திரமேரூர் அருகில் உள்ள நோபிள் டெக் ஸ்டீல் தொழிற்சாலையின் 200க்கு மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மிகவும் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணி நிலைமைகளுக்கு எதிராகவும் குறைவான கூலிக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் இருந்தது. நிரந்தரத் தொழிலாளர்கள் CITU தலைமையின் கீழ் சங்கம் அமைத்திருந்தனர். அவர்களைப் பழிவாங்கும் வகையில், கடந்த ஆண்டுகளில் சங்க செயல் வீரர்களைத் துன்புறுத்துவதும், இடைக்கால நீக்கம் செய்வதும், பணி நீக்கமும் பணியிட மாற்றம் செய்வதும் நடைபெற்று வந்தன.

தொழிற்சாலையில் ஏறக்குறைய ஆயிரம் பேர் உழைக்கின்றனர். அவர்களில் பலர்,ஆண்டுகள் பலவாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். தொழிற்சாலை சட்டத்துக்கு சம்பந்தமில்லாத பகுதி போல இயங்கிவந்தது. கடந்த பத்தாண்டுகளில் பத்து தொழிலாளர்கள் படு ஆபத்தான பணி நிலையின் காரணமாக இறந்துபோனார்கள். சிறிய அளவிலான, ஆனால், ஒருங்கிணைந்த ஸ்டீல் தொழிற்சாலை என்று நோபிள் டெக்கைச் சொல்ல வேண்டும். இரும்பை உருக்குதல், தேனிரும்பு, எஃகு உருட்டாலை என்று பல பிரிவுகளைக் கொண்டதாக அந்த ஆலை இருக்கிறது. எஃகு ‘ப‘ சட்டங்கள் (steel channels), குறுக்கு விட்டங்கள் (beams) ஆகியவற்றை BHEL, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்,மத்திய அரசின் கொள்முதல் முகமையான ‘வழங்குதல் அகற்றுதலுக்கான தலைமை
இயக்குநரகம் (Director General of Supplies and Disposal) உள்ளிட்டவர்களுக்கும் லார்சன்டி யூப்ரோ, இந்தியா சிமெண்ட் உள்ளிட்ட தனியார் தொழிலகங்களுக்கும் உற்பத்தி செய்து அளிக்கிறது. நோபிள் டெக்கிற்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையமும் இருக்கிறது. அது 12 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதன் ஒரு பகுதியை அரசிற்கு விற்பனை செய்துவிட்டு தொழிற்சாலையை இயக்கவும் பயன்படுத்துகிறது.

எந்த விதிக்கும் கட்டுப்படாத நிர்வாகம்

தொழிலாளர் சட்டங்கள் குறித்துத் துளி கவலையும் இல்லாமல், சுரண்டல் மிக்க, ஒடுக்குமுறையான முறையில் நோபிள் டெக் நிர்வாகம் இயங்கிவருவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. எந்தத் தொழிலாளருக்கும் பணி நிரந்தரம் அளிக்கப்படவில்லை என்பதை விடுங்கள், பணி நியமன ஆணை கூட கொடுக்கப்படவில்லை. தகவல் அறியும் சட்டத்தின்படி மனு அனுப்பிய பின்னர்தான் 200 தொழிலாளர்கள் ‘நிரந்தரம்‘ என்று சங்கத்திற்குத் தெரியவந்தது. தொழிலாளர்கள் பலருக்கு சம்பள பில் அளிக்கப்படுவதில்லை. சிலருக்குச் சம்பள பில் கிடைத்தாலும், அதில் PF- ESI எண்கள், பணியில் சேர்ந்த தேதி போன்ற விவரங்கள் இல்லாது இருக்கும். இதனைப் பயன்படுத்தி,தொழிலாளர்கள் ஆலையில் ஆண்டுகள் பலவாக உழைத்து வருகிறார்கள் என்பதை நிர்வாகம் மறுத்து வந்தது. இரண்டு பதிவேடுகள் இருப்பதாகத் தொழிலாளர்கள் சொன்னார்கள். ஒன்று நிறுவனத்தின் பதிவேடு, மற்றது ஒப்பந்தக்காரரின் பதிவேடு. முதல் பதிவேட்டிலிருந்து இரண்டாவது பதிவேட்டிற்கு தொழிலாளர்களை மாற்றுவது ஒரு தண்டனை முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பீகாரைச் சேர்ந்த இளம் தொழிலாளி ஒருவரின் தாய் இறந்துபோனார். அதனால் அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் கிராமத்திற்குச் சென்றார். மூன்று வாரங்கள் கழித்து அவர் திரும்பிவந்தபோது, அவரை ஒப்பந்தத் தொழிலாளர் பட்டியலுக்கு மாற்றிவிட்டனர். நிறுவனத்தில் அவர் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இருந்தபோதும் அவர் சம்பாதிப்பது மாதம் ரூபாய் 9 ஆயிரம் மட்டுமே.

சம்பளம் அதல பாதாளத்தில் கிடக்கிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த- 12 அல்லது 13 ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளி கூட வெறும் 13 ஆயிரம்தான் பெறுகிறார். நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று சங்கம் எதிர்பார்த்திருக்கிறது. சம்பள உயர்வு வேண்டும் என்று கோரி வருகிறது. சம்பளப் பிரச்சனைக்கு அப்பால், ESI, PF பிடித்தமும் மனம் போல செய்யப்படுகிறது. சில தொழிலாளர்களுக்கு இரண்டின் கீழும் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமான நம்பர்கள் தரப்படவில்லை. “எந்த அரசுத் துறையும், தொழிலாளர் துறையாக இருந்தாலும் சரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமாக இருந்தாலும் சரி… கண்டுகொள்வதே இல்லை. நிர்வாகத்திற்கு ‘பெரிய‘ இடத்தில் தொடர்பு இருக்கும் போலிருக்கிறது“, என்று தொழிற்சங்க செயல் வீரர் ஒருவர் சொன்னார்.

உயிரைப் பறிக்கும் வேலை

பத்தாண்டுகளுக்கு முன்பு ஆலை செயல்படத் துவங்கியதிலிருந்து 10 தொழிலாளர்கள் செத்துப்போயிருக்கிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள். தொடர்ந்து விபத்து நடப்பதுதான் இங்கே உள்ள விதி. பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாத காரணத்தால் கிரேனிலிருந்து தொழிலாளர்கள் விழுந்து மிகக் கடுமையான எலும்பு முறிவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மோசமான கையுறைகளின் காரணமாகவும், பாதுகாப்புக் கவசங்களின் பரிதாப நிலையினாலும் தீக்காயம் ஏற்படுவது, விரல்கள் – கைகள் வெட்டுப்படுவது நிகழ்கிறது. மாசுக் கட்டுப்பாடு செய்யப்படுவதில்லை என்பதால், சில தொழிலாளர்களுக்கு சுவாச மண்டலப் பிரச்சனைகளும் இதய நோய்களும் ஏற்பட்டுள்ளன. இருங்காட்டுக் கோட்டையில் இருக்கும் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர்களை தொழிலாளர் கூடம் சந்தித்தது. பலரும் முன்வந்து தீக்காயங்களையும் வெட்டுக் காயங்களையும், எலும்பு முறிவுக்குச் செய்யப்பட்ட ரண சிகிச்சை தடயங்களையும் காட்டினர்.

2007 முதல் வெல்டிங் வேலை பார்த்து வந்த ஒருவர் இதயச் செயலிழப்பினால் இறந்துபோனார் என்று தொழிலாளி ஒருவர் சொன்னார். ஏறக்குறைய ஐம்பத்து ஐந்து வயதுள்ள அந்தத் தொழிலாளி பீகார்காரர். ஆலை வளாகத்துக்குள் தங்கியிருந்திருக்கிறார். தனக்கு உடல் ஒரு மாதிரி இருக்கிறது, விடுப்பு வேண்டும் என்று அந்த தொழிலாளி கேட்டபோதும், இரவு ஷிப்டுக்கு வர வேண்டும் என்று அவருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர் கேட்டைத் தாண்டியவுடன் சுருண்டு விழுந்துவிட்டார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு போய் சேர்த்த நேரத்தில் அவர் இறந்துவிட்டார். அத்தொழிலாளியின் மகன்கள் இரண்டுபேர் அதே தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். தங்கள் தந்தையின் மரணத்துக்கு நிர்வாகம்தான் காரணம்
என்கின்றனர். “எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் இந்த ஆலையில்தான் வேலை செய்தாக வேண்டும். எங்கள் ஊரில் இருக்கும் குடும்பத்தினரைக் காப்பாற்றியாக வேண்டும். எங்கள் தந்தை இறந்த பின்னர் தொழிலாளர்கள் நிதி திரட்டி கொடுத்தனர். வேறு பணம் எதுவும் கிடைக்கவில்லை“, என்று இறந்துபோனவரின் இளைய மகன் சொன்னார்.அவருக்கு வயது 22.

மற்றொரு தொழிலாளிக்கு மிகக் கடுமையான தீக்காயம். முகம், தலை கைகள், நடு உடல் எல்லாவற்றிலும் தீக்காயம். அவர் பராமரிப்புத் தொழிலாளி. மின்சார போர்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் மருந்து செலவுகளுக்கும், தொடர் சிகிச்சைக்கும் கூட நிர்வாகம் பணம் தரவில்லை. இருந்தாலும் அந்த தொழிலாளி மீண்டும் வேலைக்கு வந்துவிட்டார். அவருக்குக் கையில் இன்னமும் வலி இருக்கிறது.

This slideshow requires JavaScript.

துவக்கச் சிகிச்சைக்கு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது என்றாலும், பின்னர் மருத்துவச் செலவை கொடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் பலரும் சொன்னார்கள். மருத்துவர்கள் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னாலும், நிர்வாகம் பாதிப்புக்கு ஆளான தொழிலாளி வேலைக்கு வர வேண்டும் என்று நெருக்கடி கொடுக்குமாம். எலும்பு முறிவுக்கு ஆளான தொழிலாளர்கள் பலரும், முழுவதும் குணம் அடையவில்லை என்றாலும் வேலைக்குத் திரும்பி வந்திருக்கின்றனர்.

கண்ணை மூடிக்கொள்ளும் அரசு

தொழிலாளர்களின் சோகக் கதைகளைக் கேட்கும்போது, காவல் துறையும், தொழிற்சாலை சுகாதாரம்- பாதுகாப்பு மற்றும் தொழிலாளரை துறையும் கண்ணை மூடிக்கொண்டுவிட்டன என்பது தெரிகிறது. தொழிலாளர்கள் மரணம் அடைந்திருந்த போதும், விபத்துகள் தொடர்ந்து நடந்தபோதும், ஒரே ஒரு FIR கூடப் பதிவு செய்யப்படவில்லை என்று CITU தலைமை சொல்கிறது. அனைத்துத் துறைகளுக்கும் மனுக்கள் அனுப்பியிருந்தபோதும், எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை என்று சங்கத்தினர் சொல்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி தொடர்ந்து தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், இந்தத் தொழிற்சாலைக்குள் 16 அல்லது 17 வயதான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆபத்தான இடங்களில் வேலை செய்யும் புகைப்படங்களைத் தொழிலாளர் கூடத்திடம் தொழிலாளர்கள் காட்டினர். மிகவும் அடிப்படையான கட்டுப்பாடுகளைக் கூட நிர்வாகம் பின்பற்றாதது குறித்துக் கண்காணிப்பும் கிடையாது, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. இதைப்பற்றி இன்னமும் நிறைய எழுத வேண்டிய அளவுக்கு விஷயங்கள் கெட்டுக் கிடக்கின்றன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்தனர்

வேலைநிறுத்தப் போராட்டம் ஜூன் 1 அன்று துவங்கியது. நிரந்தரத் தொழிலாளர்களும் மற்றும் பீகார் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிலரும் போராட்டத்தில் இறங்கினர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் நிர்வாகம் ஏற்பாடு செய்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள். வேலைநிறுத்தம் துவங்கிய உடனேயே அந்த வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் வெளியே விரட்டப்பட்டனர். “மேலாளர் உள்ளே வந்தபோது, நாங்கள் இரவு சாப்பாடு தயார் செய்துகொண்டிருந்தோம். உடனே வெளியேற வேண்டும் என்று மேலாளர் கத்தினார். சாப்பிட்டுவிட்டு வெளியே போகிறோம் என்ற நாங்கள் கெஞ்சினோம். அவர் எங்கள் அறையைக் கலைத்துப் போட்டார். எங்களுடைய பொருட்களைத் தூக்கி வெளியே போட்டார். எங்களுக்குப் போக ஒரு இடமில்லை.

எங்களின் உள்ளூர் சகத் தொழிலாளர்கள் தற்காலிகமாக எங்களைத் தங்கவைத்துள்ளனர்”,என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர் சொன்னார். நன்றாக இந்தி பேசத் தெரிந்த உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தனர். தாங்களெல்லாம் அதேபோன்ற குறைவான கூலிதான் பெற்றாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசம் என்று ஒரு தொழிலாளி சொன்னார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நள்ளிரவில் தட்டியெழுப்பி ஷிப்ட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம். உடல் நலம் சரியில்லாத தொழிலாளர்கள் கூட தொடர்ந்து இரண்டு ஷிப்டுகள் செய்த சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. சங்கத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள், பிற தொழிலாளர்கள் மிகவும் பயந்து கிடப்பதாகவும் வேலைப் போய்விடும் என்று அஞ்சுவதாகவும் சங்கத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள் சொன்னார்கள்.

சுற்றுச்சூழல் பிரச்சனையைக் கையில் எடுத்த சங்கம்

தொழிற்சாலைக்குள் உள்ள பணி நிலைமைகள் பற்றி மட்டுமல்லாமல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் போராடும் தொழிலாளர்களும் சங்கமும் புகார் எழுப்பின. தொழிற்சாலை நச்சு வாயுக்களை வெளியிடுவதாகவும், புகையை வெளியிடுவதாகவும் மாசுபட்ட கழிவுகளைக் கால்வாய்க்குள் தள்ளுவதாகவும் புகார் செய்துள்ளனர். காற்று மாசுபாட்டின் காரணமாக ஆரோக்கியப் பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டுள்ளதாகவும் அருகாமை கிராமத்தில் வசிப்பவர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சங்கம் மனு கொடுத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், வாரியத்தின் ஒரகடம் அலுவலக வாயிலில் ஜூன் 7 அன்று சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

This slideshow requires JavaScript.

போராட்டம் குறித்து முன்னதாகவே காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருந்த காரணத்தால் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மனு அளிப்பதற்கு அலுவலகத்துக்குள் தொழிலாளர்கள் நுழைவதைக் காவல்துறை தடுத்துவிட்டது. விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்த பின்னர், வாரியத்தின் மூத்த அதிகாரிகள் வெளியே வந்து தொழிலாளர்களைச் சந்தித்து, மனுவைப் பெற்றுக்கொண்டனர். மாசுபாட்டின் அளவு கண்காணிக்கப்படும் என்றும் அதன் அளவு என்ன என்பதைத் தொழிலாளர்களை அடுத்த முறைச் சந்திக்கும்போது சங்கத்திடம் அறிவிப்போம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் நேருவும், உழைக்கும் பெண்கள் அணியைச் சேர்நத் தோழர் வசந்தாவும், மாநில பொதுச் செயலாளர் தோழர் கண்ணனும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது…

ஒரு வாரத்துக்கு மேல் நீண்ட வேலைநிறுத்தத்தின் பின் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு சங்கமும் நிர்வாகமும் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தன. பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று CITUவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தோழர் முத்துக்குமார் சொன்னார்:
1.இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சனை ஒரு மாதத்தில் முடித்து வைக்கப்படும்.
2. வேலை நீக்கம் செய்யப்பட்ட 14 தொழிலார்களுக்கு வேலை அளிக்கப்படும்.
3. போராட்டத்தில் பங்கெடுத்த தொழிலாளர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள்.
4. இடமாற்றம் நிரந்தரமான ஒன்றாக இருக்காது.

நிர்வாகம் சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டதால், போராட்டம் வெற்றி என்று தோழர் முத்துக்குமார் சொன்னார். சம்பளம் குறித்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இருந்தபோதும், மறுநாள் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது, அவர்களில் பாதிப்பேரை மட்டும் நிர்வாகம் உள்ளே அனுமதித்தது. மீதியுள்ளவர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். அவர்கள் தற்காலிகத் தொழிலாளர்கள் என்றும் அதனால், விரும்பும்போது அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வோம், வேண்டாம் என்றால் விரட்டிவிடுவோம் என்று நிர்வாகம் சொன்னது. நிரந்தரமான ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி உத்தரவை பெற்றுத் தருவதற்கான கவனத்தைச் சங்கம் செலுத்தி வருகிறது. ஆனால், வெளியே நிறுத்தப்பட்ட, போராட்டத்தில் உறுதியான நின்ற ‘தற்காலிக‘ தொழிலாளர்கள் இப்போது நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.

This entry was posted in Factory Workers, Migrant Workers, News, Strikes, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.