ஷாஹீத் திவஸ் – 25 ஆண்டுகளுக்கு முன் உயிர் நீத்த தொழிலாளர் தியாகிகளுக்கு பிலாய் தொழிலாளர்கள் அஞ்சலி

Shaheed Diwas Workers at Public meeting

1992 ஜுலை 1 அன்று பிலாய் பவர்ஹவுஸ் ரயில் நிலையத் தண்டவாளத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் காவல் துறையினர் சுட்டதனால் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 1982ல் தொடங்கப்பட்ட சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா, தோழர் சங்கர் குஹா நியோகியின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த 25 வருடங்களாக ஷாஹித் திவஸ் அனுசரிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதே தண்டவாளத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பிலாய் ஜாமுல் தொழிலாளர் காம்பில் இருந்து ரயில் நிலையம் வரை தொழிலாளர்களும் தொழிலாளர் தலைவர்களும் உயிர்நீத்த தொழிலாளர்களின் குடும்பங்களும் 4கிமீ பேரணியில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

The Martyrs of 1st July

1992ல் பிலாய் தொழிற்பேட்டையில் உள்ள பிலாய் ஸ்டீல் மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப் பணி கோரியும் அதற்கேற்ற ஊதியம் கோரியும் ஒரு மாத காலப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கைகளுக்காக கடந்த 10 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைந்து போராடி வந்தனர். அரசு மற்றும் நிர்வாகங்களின் மெத்தனப்போக்கால் கடும் அதிருப்தியுற்ற தொழிலாளர்கள் பிலாய் பவர்ஹவுஸ் ரயில் நிலையத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முறியடிக்க மாநில அரசு வன்முறையை பிரயோகித்தனர். ஜுலை 1 அன்று காவல் துறை தொழிலாளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவ்வளவு தியாகம் செய்தும் தொழிலாளர்களால் நிரந்தரப் பணி கோரிக்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் தியாகம் வீண் போகவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களின் சங்கம் வெகுவாக பலம் பெற்று தொழிற்சங்கத்துடன் கூட்டு பேரம் நடத்தும் நிலைக்கு அங்குள்ள தொழிற்சாலைகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை இங்கு செயல்பாட்டில் உள்ளது. தொழிலாளர் வர்க்க நலனிற்காக தங்கள் உயிரையே நீத்த தொழிலாளர் தியாகிகளுக்காக வருடந்தோறும் தொழிலாளர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனியார் துறையாக இருந்தாலும் சரி, பொதுத் துறையாக இருந்தாலும் சரி பிலாய் பகுதிகளில் உள்ள ஸ்டீல், சுரங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும், ஒப்பந்தத் தொழில்துறை இருந்து கொண்டே தான் வருகிறது. மோசமான பணி நிலைமை, அதிக வேலை நேரம், குறைந்த ஊதியம் ஆகியவை ஒப்பந்தத் வேலை முறைக்கு உரித்தானவை. பலவீனமான சட்டம், நீர்த்துப் போகச் செய்த விதிமுறைகள், இவற்றையும் செயல்படுத்தாதது ஆகியவையே ஒப்பந்தத் தொழில்முறையை கட்டுப்படுத்துவதற்காக அரசின் நடைமுறைகள் ஆகும்.

தொழிலாளர்களின் பணிநிலைமையை மேம்படுத்துவதற்கும் ஒப்பந்த வேலைமுறையை ஒழிப்பதற்கும் 1977ல் தோழர் நியோகியின் தலைமையில் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராட ஆரம்பித்தனர். 1977 லேயே தல்லி-ராஜ்ஹரா பகுதியில் உள்ள இரும்பு தாது சுரங்கத் தொழிலாளர்கள் (பிலாய் ஸ்டீல் தொழிற்சாலைக்கு இங்கிருந்து தான் இரும்புத் தாது எடுக்கப்படுகிறது) போரட்டம் நடத்திய போது 11 தொழிலாளர்கள் இதே போல் கொல்லப்பட்டனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆதிவாசிகள் மீது வன்முறையை செலுத்துவதே நம் நாட்டின் வரலாறாகி விட்டது. தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கையை அரசு கையாளும் விதம் அரசு யார் பக்கம் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர்கள் வென்றெடுக்கும் ஒவ்வொரு உரிமைகளும் தொழிலாளர்கள் சிந்தும் ரத்தத்தினால் எழுதப்படுகின்றன. இதற்காக தொழிலாளர்கள் குடும்பங்கள் கொடுக்கும் தியாகம் பெரிது.

அதனால் தான் ஷாஹித் திவஸில் தொழிலாளர்களின் தியாகத்தை தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் கோஷமுழக்கமிட்டு போரட்டங்களை தொடர உறுதியேற்றனர். 2004-05 ஆம் ஆண்டுகளில் சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா பல்வேறு அமைப்புகளாக பிளவடைந்தது. ஆனாலும் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை குறிக்கும் வகையில் அனைத்து அமைப்புகளும் ஷாஹித் திவஸ் அன்று ஒன்று சேர்ந்தனர். மூத்தத் தொழிலாளர்களுடன் இளம் தொழிலாளர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். தொழிலாளர்கள் கலைக் குழு ‘ரேலா’ கலைநிகழ்வுகளை நடத்தினர். இந்தியாவில் இன்றுள்ள தொழிலாளர்களின் நிலைமைகளையும் அரசியல் சூழ்நிலைகளையும் குறித்து அமைப்புகள், தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கருத்துரையாற்றினர். தொழிலாளர் விரோதப் போக்கையும், கலாச்சார அடிப்படைவாதத்தையும் தூண்டி விடும் இன்றைய அரசை அனைவரும் சாடினர்.

This slideshow requires JavaScript.

This entry was posted in Contract Workers, Factory Workers, News, Political Economy, Workers Struggles and tagged , , , , , , , . Bookmark the permalink.