நோபில்டெக் ஸ்டீல் தொழிற்சாலையில் தொடரும் தொழிலாளர் போராட்டம் – தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கல் நடவடிக்கை

Workers register complaint against Noble Tech management at local police station

200 நிரந்தரத் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கத்தை முறியடிக்கும் முயற்சியில் நோபில் டெக் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. உத்திரமேரூரில் உள்ள இத்தொழிற்சாலை குறித்து தொழிலாளர் கூடத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சிஐடியுவின் தலைமையில் தொழிலாளர்கள் ஏற்கனவே ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபின், தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக நிர்வாகம் கூறியது. ஆனால் தான் சொன்ன வார்த்தைக்கு புறம்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கி வருகிறது. கடந்த இரு மாதங்களாக தொழிலாளர்களை துன்புறுத்தியும் தற்காலிக பணிநீக்கம் செய்தும் மாநிலத்தை விட்டு மாற்றியும் வருகிறது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் பீஹார் மற்றும் மேற்கு வங்காளத்தை சார்ந்த இடம் பெயர் தொழிலாளர்களும் உள்ளுர் தொழிலாளர்களும் பங்கு பெற்றனர். தொழிலாளர் துணை ஆணையர் முனனர் போடபட்ட ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு, தற்காலிக பணிநீக்கம் மற்றும் தொழிலாளர்களை பணிமாற்றம் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்த ஒழுங்கீன நடவடிக்கை எடுக்காமல் அனைவரையும் பணியில் அமர்த்துவதாகவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆனால் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த மறுநாள் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சென்ற போது, சில பேரையே அனுமதித்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும் வேண்டும் போது பணிக்கு அமர்த்துவோம் இல்லை பணியில் நீக்குவோம் என நிர்வாகம் கூறியுள்ளது. ‘இதற்காகவே அவர்கள் இரண்டு ரெஜிஸ்டர்களை பராமரிக்கின்றனர். ஒன்று ஊழியர்களுக்காகவும் மற்றொன்று தினக்கூலி எனக் கூறுகின்றனர். ஆனால் ஊதியம், வேலை அல்லது பயன்கள் ஆகியவற்றில் எந்த வேறுபாடும் இல்லை’ என ஒருத் தொழிலாளர் கூறினார். இரண்டாவது ரெஜிஸ்டரில் உள்ள தொழிலாளரகளுக்கு மாத ஊதியம் பணமாகத் தரப்படுகிறது என அவர் கூறினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பல இடம் பெயர் தொழிலாளர்களை நிர்வாகம் பணியில் சேர்க்கவில்லை. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பணியில் சேரந்தும் அவர்களை நிர்வாகம் சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களுக்கு பணி மாற்றம் செய்துள்ளது.

வேலை நிறுத்தத்திற்கு முன்னரே நிர்வாகத்தின் தாக்குதல்களை சந்தித்து வந்த 4 வருட அனுபவமுள்ள ஒரு தொழிலாளர், தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கின்றனர் என்று தெரிந்தவுடனே, நிர்வாகம் தங்களை குறிவைத்ததாக கூறினார். சிசிஎம் அப்சர்வர் பணியில் உள்ள அவரை ஜனவரி மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திற்கு நிர்வாகம் பணிமாற்றம் செய்தது. ‘நான் அங்கு சென்ற போது, நோபில் டெக் நிறுவனத்திற்கு அங்கு அலுவலகம் இல்லை என்று தெரிந்தது. அங்கு கப்பலில் வரும் பொருட்களை இறக்கிவைக்கும் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் பணியை கொடுத்தனர். அங்கு என்னை வழிநடத்துவதற்கு யாரும் இல்லை. தங்கும் இடம், உணவு ஆகிய அனைத்து பிரச்சனைகளை நானே பார்க்க வேண்டியிருந்தது. சில நண்பர்களிடம் பணம் வாங்கி நான் சமாளித்தேன்’ என அவர் கூறினார்.

இரவு பகல் பாராமல் எப்போது கப்பல் வந்தாலும் தான் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது என்றும் சில சமயம் மிகுதி நேரப் பணியில் ஈடுபட்டு அதற்கு இதுவரை நிர்வாகம் இழப்பீடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். திரும்பவும் அவரை சென்னைக்கு எண்ணூர் துறைமுகத்திற்கு நிர்வாகம் மாற்றியது. அங்கு தங்கும் இடம் கிடைக்காமல் அவர் நடைபாதையில் இரு நாள் தங்க வேண்டியிருந்தது. நிர்வாகத்தின் அனைத்து உத்தரவுகளை மீறியும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என நிர்வாகம் அவர் மீது பொய் வழக்கு போட்டு அவரை தற்காலிக பணிநீக்கம் செய்தது. எண்ணூரை அடைவதற்கு தான் உத்திரமேரூரில் இருந்து செல்லும் போது ஒரு நாள் ஆகியது என்றும் அப்போது கண்காணிப்பாளரிடம் தான் எங்கிருக்கிறேன் என்று கூறியும் நிர்வாகம் இதை செய்ததாக அவர் கூறினார்.

தொழிலாளர்களை வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு மாற்றியும் பயிற்சி பெறாத பணிகளை செய்ய வைத்தும் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது துன்புறுத்தல்களையும் பழிவாங்கல் நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே வாங்கி வந்த குறைந்த ஊதியத்தில் பாதி அளவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். சட்டப்படி நிறுவனம் அதைக் கொடுக்க வேண்டும் என்றாலும் அவர்கள் பல தடவை மேலாளர்களுக்கு தொடர்பு கொண்டே இந்த ஊதியத்தை பெறுகின்றனர். ஆனால் நிர்வாகம் அத்துடன் நிற்கவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இடம் பெயர் தொழிலாளர்களையும் நிர்வாகம் அச்சுறுத்தி வருகிறது. அவர்களை கண்கட்டி ஒரு கண்காணாத இடத்திற்கு கொண்டு சென்று அவர்களை பயமுறுத்தி வீடுதிரும்ப சொல்லியுள்ளனர். இதனால் மற்ற இடம் பெயர் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அஞ்சுகின்றனர்.

மேலும் தொழிற்சங்க உறுப்பினர்களை உசுப்பேற்றுவதற்காக நிர்வாகம் தொழிற்சங்க பலகை மற்றும் கொடி முன்னர் தொழிற்சாலை கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் முத்துக்குமார் காவல்துறையிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்திடமும் வழக்கு கொடுத்துள்ளார். கழிவுகளை அகற்றவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் போராடுவர் என்று தோழர் முத்துக்குமார் தீக்கதிர் நிருபர் ஒருவருடன் சென்று மனிதவள மேலாளரிடம் கூறியுள்ளார்.

‘ஆளும் கட்சியிலும் எதிர்கட்சிகளிலும் இந்நிறுவனம் பல்வேறு தொடர்புகளை வைத்துள்ளது. உள்ளுர் கவுன்சிலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் போராட்டத்தை ஆதரிக்க மறுக்கின்றனர். அதனால் பேச்சுவார்த்தை சுமூகமான தீர்வை நோக்கி நகரவில்லை’ என ஒரு தொழிலாளர் கூறினார். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்கள் வந்திருந்தனர். ஆனால் தொழிலாளர் துறை முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக தோழர் முத்துக்குமார் கூறினார். நோபில் டெக் எந்த சட்டத்தையும் மதிப்பதாக தெரியவில்லை என்றும் அரசு பேச்சுவார்த்தை இதற்கு தீர்வாக இல்லை என அவர் கருதினார். நெடுவாசல் போராட்டம் போன்று தொழிற்சாலைக்கு வெளியே உட்கார வேண்டும் என்று அவர் கூறினார். தொழிற்சங்க தலைமையின் ஆலோசனை படி பேச்சுவார்த்தையோ அல்லது மற்ற போராட்ட வடிவிலோ தொழிலாளர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை நிறுத்துவதே தொழிற்சங்கத்தை தொழிற்சாலையில் நிலைநிறுத்தும் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

This entry was posted in Factory Workers, Migrant Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.