ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்

தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணிமுறைகள் அதிகரித்து வருகின்றன. அவர்களை ஒருங்கிணைப்பதில் தொழிற்சங்கங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தொழிற்சங்க உரிமை, தொழிற்தாவா மற்றும் முறையான பணிநிலைமைகள் போன்ற சட்டரீதியான பாதுகாப்புகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் நிலைமையில், ஏறக்குறைய 30 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்.தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டி வருகிறது. 1989ல் மாபெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் சங்கர் குஹா நியோகியின் தலைமையில் தொடங்கப்பட்டு தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்துதல், நிரந்தர வேலை, மற்றும் ஊதியம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்காக ஐஎன்டியுசி தொழிற்சங்கம் செயல்பட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதிய உயர்வு ஒப்பந்தத்தை இயற்றிய போது தங்கள் ஆதரவு இல்லாமல் செயல்பட்ட ஐஎன்டியுசியை எதிர்த்து மாற்று தொழிற்சங்கத்தை உருவாக்கி சிந்தி ஒப்பந்த தொழிலாளர்கள் மாபெரும் வெற்றி கண்ட வரலாறு இச்சங்கத்திற்கு உண்டு.

தமிழ்நாட்டிலும் சரி இந்திய அளவிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை கருத்தியல்ரீதியாகவோ அல்லது நடைமுறை காரணங்களுக்காகவோ ஒருங்கிணைக்க தயங்கி வருகின்றனர். குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களை தொழிற்சங்கங்களுக்குள் சேர்த்தால் எண்ணிக்கையில் பலமாக அவர்கள் உள்ள நிலையில் அவர்களை வைத்து தொழிற்சங்கத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் எனத் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர். அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கும் போது அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை தொழிற்சங்கம் உறுதி செய்ய முடிவதில்லை என அவர்கள் கருதுகின்றனர். இதற்கு மாறாக எவ்வாறு பிசிஎஸ்எஸ் தொழிற்சங்கத்தினால் ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முடிந்தது?

ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்த வரலாறு

பிசிஎஸ்எஸ், சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் ஒரு பகுதியான மஸ்தூர் கார்யகர்தா சமிதியின் ஒரு அமைப்பாகும். பிசிஎஸ்எஸ் ஏன் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்துகிறது என்பதற்கு சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் ஆரம்ப வரலாறு தான் காரணம். சத்தீஸ்கரின் தல்லி ராஜாரா பகுதிகளில் இருந்த நிலக்கரி சுரங்கங்ககளில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களின ஒருங்கிணைப்பில் இருந்தே சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் வரலாறு தொடங்குகிறது. இச்சுரங்கங்களில் ஒரு சில நிரந்தரத் தொழிலாளர்களை தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அப்போது அங்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கம் செயல்பட்டு வந்தது. நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் ஒருங்கிணைத்த இத்தொழிற்சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சேர்த்து கூட்டு பேர ஒப்பந்தத்தை போட்டு வந்தது. தங்கள் குரல் எதுவும் இல்லாமல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் மறுத்தனர். அவர்கள் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவில் சேர்ந்து, நிர்வாகத்தை தங்கள் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தனர். இதற்காக அவர்கள் பெரும் போராட்டத்தையும் நடத்தி ரத்தம் சிந்த வேண்டியிருந்நது. அவர்களால் தங்களுக்கு நிரந்தரப் பணியை வெல்லமுடியவில்லை என்றாலும் கூட்டு பேர உரிமையை நிலைநாட்ட முடிந்தது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். கூட்டு பேர உரிமையை பெற்றதன் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையே ஆன ஏற்றத்தாழ்வை அவர்களால் குறைக்க முடிந்தது.

இவ்வரலாற்றில் இருந்து வளர்ந்த பிசிஎஸ்எஸ் தொழிற்சங்கம் தொழிற்சாலையிலும் ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் ஆச்சரியமில்லை. இம்மாதிரியான தொழிற்சாலைகளில் ‘திறன் மிக்க’ தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவே. அதனால் பிசிஎஸ்எஸ் தொழிற்சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர்களையே தனது முதன்மை உறுப்பினர்களாக கருதுகின்றது. நிர்வாகத்தால் மிக எளிதாக விலைக்கு வாங்கக் கூடிய நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைமையிடமும் மிகவும் விசுவாசம் வைத்துள்ளனர். பிசிஎஸ்எஸ்சின் சிறப்பு ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒரே தொழிற்சங்கத்தில் ஒருங்கிணைப்பது தான். தொழிற்சங்கத்தில் துப்புரவு தொழிலாளர், காண்டின் தொழிலாளர், நீர் மற்றும் மின்சாரம் ஆகிய கட்டமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அனைவரும் உறுப்பினர்கள். இவர்கள் மற்ற ‘திறன் மிக்க’ உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இதன் மூலம் நிரந்தரம்-ஒப்பந்தம், திறன் மிகும்-திறன் அற்ற, உற்பத்தியில் ஈடுபடுபவர்-ஈடுபடாதவர் என எந்த பாகுபாடும் இன்றி ஒரு வர்க்க உணர்வை அவர்களால் கட்டி எழுப்ப முடிந்துள்ளது.

பிசிஎஸ்எஸ் தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுவது என்னவென்றால் நிர்வாகம் அமைக்கும் ஊதிய அமைப்பு நியாயமற்றது. ஏனென்றால் 29 வருட அனுபவம் மிக்க ஒருவர் 29 வயது தொழிலாளரை விட அதிகம் ஊதியம் வாங்கலாம். அதாவது ‘திறன் மிகுந்த’ தொழிலாளர்களுக்கும் ‘திறன் இல்லா’ தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள ஊதிய வித்தியாசம் மிகவும் பெரியது. ‘திறன் மிகுந்த’ மற்றும் திறன் அற்ற என்ற பாகுபாடு பிசிஎஸ்எஸ் பொருத்தவரை தவறான பாகுபாடுகள். ஒரு தொழிலாளர் பிட்டர் என்ற தகுதி மிக்க பணியை செய்வதும் இன்னொரு தொழிலாளர் துப்புரவு தொழிலுக்கு தள்ளப்படுவதும் தற்செயல் நிகழ்வுகளே. இதனால் ஒரு துப்புரவு தொழிலாளருக்கும் முறையான பணி நிலைமை உதாரணமாக ஓய்வூதியம் என்பது முக்கியம் என அவர்கள் கருதுகின்றனர்.

அனுபவமிக்க தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் படிநிலை

சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள ஜாமுல் எரியாவில் மாபெரும் ஏசிசி தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையில் இருந்து மாபெரும் சிம்னிகள் வானளாவி பரந்துள்ளன. இதன் நிழலில் உள்ளது பிசிஎஸ்எஸ் சங்க அலுவலகம். 1989ல் இருந்து சிமென்ட் தொழிற்சாலையிலும் இப்பகுதியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான ஊதியம், பணி நிலைமைகள் குறித்து கூட்டு பேர உரிமைகளை உறுதி செய்து வருகின்றது. கடந்த சில வருடங்களாக இங்குள்ள ஏசிசி தொழிற்சாலை வெகுவாக வளர்ந்தது. குறிப்பாக ஏசிசி நிறுவனம் 3வது தொழிற்சாலையை சமீபத்தில் பெரிதுபடுத்தியுள்ளது. இத்தொழிற்சாலை முற்றிலும் இயந்திரமாக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்த தொழிற்சாலையை விட 3 மடங்கு உற்பத்தி தரக்கூடிய இத்தொழிற்சாலைக்கு தேவை 80 தொழிலாளர்களே.

இதனால் தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிட்டது. இதை எதிர்த்து ஒரு வலுவான போராட்டத்தை பிசிஎஸ்எஸ் தொழிற்சங்கம் நடத்தியதில் ஏசிசி நிர்வாகமும் பின்னர் இதை விலைக்கு வாங்கிய ஸ்விட்சர்லாந்து நிறுவனம் ஹோல்சிமும் தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தினர். ஆனாலும் தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாகவும் இண்டஸ்ட்ரியால் போன்ற சர்வதேச தொழிற்சங்க நிர்வாகங்கள் உதவியினாலும் பிசிஎஸ்எஸ் 2016ல் போராட்டத்தில் வெற்றியடைந்தது. இதன் மூலம் 936 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி இழக்கும் நிலையில் இருந்து 536 ஒப்பந்த தொழிலளர்களின் பணிகளை தொழிற்சங்கம் பாதுகாக்க முடிந்தது.

ஹோல்சிம் தொழிற்தகராறில் பேச்சுவார்த்தையின் போது அவர்கள் 4 படிநிலை ஊதிய அமைப்பை கொண்டு வரப் போராடினார்கள். 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 300க்கும் மேல் பணி இழக்க நேரிடும் நிலையில் யார் பணியில் இருப்பது யார் செல்வது என்பதை தீர்மானிக்க அனுபவத்தை வைத்தே தொழிற்சங்க உறுப்பினர்கள் தீர்மானித்தனர். முதலில் 55 வயதிற்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் இழப்பீடு அவர்கள் இழக்கும் ஊதியத்திற்கு ஏற்ப இருந்ததால் அவர்கள் வேலையை விட்டு நிற்க வேண்டும் என தொழிற்சங்கம் கோரியது. பின்னர் 5 வருடத்திற்கு கீழ் உள்ளவர்கள் மற்ற தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து அனுபவத்தை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டனர். இந்த இருவயது குழுக்கள் சேர்ந்து 250 தொழிலாளர்கள் தொழிலாளர்கள் கூடி விவாதித்து பணியை துறந்தனர்.

உண்மையான கூட்டு பேர நடவடிக்கை

கூட்டு பேர நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சில தொழிற்சங்கத் தலைவர்களால் மட்டும் முடிவு செய்யப்படவில்லை. நிர்வாகத்தரப்பில் கூறப்பட்ட சலுகைகள் அனைத்தும் தொழிற்சங்கப் பொதுக்குழுவில் பேசப்படுகின்றன. தொழிற்சங்க அலுவலகத்தின் முன் இருந்த வெளிதளத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். சிலசமயங்களில் இவ்விவாதங்களில் அனல் பறக்கும். ஆனால் இவை அனைவரும் ஜனநாயகரீதியாக ஒரு ஒற்றுமொத்த கருத்தை கொண்டு செல்ல உதவின. இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் ஆண்-பெண், நிரந்தரம்-ஒப்பந்தம் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களின் நலனை பிரதிபலிக்கின்றன என்று அனைவரும் ஒத்துக்கொள்ளும் படியாக உள்ளன. இதனால் அனைவரும் கூட்டு பேர பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க முடிந்நது. மேலிருந்து கீழ் எடுக்கப்படும் முடிவுகளை விட இவை அதிக நேரம் எடுத்தாலும், தொழிலாளர்கள் பங்கு பெறுவதற்கும், வர்க்க ஒற்றுமையை பலப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

இன்று இயந்திரமயமாதல் அதிகரித்துவரும் நிலையில், பிசிஎஸ்எஸ் இரு கோரிக்கைகளை முன் நிறுத்துகிறது – வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 6 மணிக்கு குறைத்தல் மற்றும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஓய்வெடுக்க இரண்டு நாள் அதிக விடுமுறை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்க நலனுக்கு பாதகமாக இல்லை, மாறாக வர்க்க நலனுக்கு போராடக்கூடியவர்கள் என்பதை பிசிஎஸ்எஸ் நிருபித்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, தொழிற்சங்க எண்ணிக்கையை பலப்படுத்தி ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வளர்ப்பதே தொழிற்சங்கங்களுக்கு முன் இருக்கும் ஒரே புரட்சிகர வழி என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. தொழிற்சங்க இயக்கம் நிச்சயமற்ற பணி சூழலில் பின்வாங்காமல், வர்க்க பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்பதை பிசிஎஸ்எஸ் பறைசாற்றுகிறது.

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, Factory Workers, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.