நரித் தந்திரத்தின் மூலம் உதய நட்சத்திரமான Foxconn

சுங்குவார் சத்திரத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிலகம், பிப்ரவரி 2015ல் தனது செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியது. அப்போதிருந்த 1300க்கு மேற்பட்ட தொழிலாளர்களில் 700 தொழிலாளர்கள், நிர்வாகத்தின்  நெருக்கடி காரணமாக ‘தன்னார்வ பணி மூப்பு‘ (VRS) பெற்றுக்கொண்டுவிட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள் நிர்வாகம் அளித்த பணிமூப்பு பலன்களைப் பெற மறுத்து, தங்களுக்கு வேலையைத் திருப்பித் தர வேண்டும் என்று நிலையெடுத்தனர்.

மிகச் சமீபத்தில், பாக்ஸ்கான் சுங்குவார் சத்திரம் தொழிலகத்தில் ‘உதய நட்சத்திரம்‘ (‘Rising Star’) என்ற பெயருள்ள நிறுவனம் செயல்படத் துவங்கியதைத் தொழிலாளர்கள் தெரிந்துகொண்டனர். Rising Star நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கமான நிறுவனம் என்பதாகவும் தெரியவருகிறது. மேற்படி நிறுவனத்தின் முகநூல் விவரங்கள்படி பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப்பின் ஓர் அங்கமாக அது இருக்கிறது.   Rising Star நிறுவனத்தின்  மனித வள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர், சுங்குவார் சத்திரத்தில் அமைந்த பாக்ஸ்கான் தொழிலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான் என்று போராடும் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். இரண்டு நிறுவனங்களின் முகவரிகளும் ஏறக்குறைய ஒன்றுதான். Rising star என்பதனை அடுத்து ‘DTA’ சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பின் சிப்காட் ஹைடெக் சிட்டி, சுங்குவார்சத்திரம் என்பதுதான் Rising Starநிறுவனத்தின் முகவரி. இதேதான் பாக்ஸ்கான் வளாகத்தின்  உணவக முகவரியாகவும் இருந்து வந்தது என்று தொழிலாளிகள் சொல்கின்றனர். இறுதியாக, இரண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் பட்டியலும் ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

இருந்தாலும், இப்பிரச்சனை இருங்காட்டுக்கோட்டையின் உதவி தொழிலாளர் ஆணையர் (ACL) வழியாக கேட்கப்பட்டபோது, தங்களுக்கும் பாக்ஸ்கானுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை என்று Rising Star தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராடும் பாக்ஸ்கான் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளவும் மறுத்துவிட்டது. தற்போதைய நிலையில் 500 தொழிலாளர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். தொழிலகத்தின் மூன்று ஷிப்டுகளில் 9 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை  Rising Star பயன்படுத்தியது என்று பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பெண்கள். அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளராகவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தங்களின் வேலையைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரியும், தமிழ்நாடு அரசுத் தலையிட வேண்டியும் ஏறக்குறைய 300 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சுங்குவார் சத்திரத்தில் 11 அக்டோபர் 2017 அன்று போராட்டம் நடத்தினர். தங்களுக்கு வேலையளிக்க வேண்டும் என்று இருங்காட்டுக்கோட்டை உதவி தொழிலாளர் அலுவலர் முன்பு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாக்ஸ்கானுக்கும் Rising Starக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய விவரங்களைக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தகவல் உரிமைச்  சட்டத்திற்கான பதிலை தொழிலாளர் அலுவலகம் அளித்தது. அத்தகவலில் Rising Star பற்றிய விவரங்கள் மட்டுமே இருந்தன. பாக்ஸ்கான் பற்றிய விவரம் ஏதும் தங்களிடம் இல்லை என்று தொழிலாளர் அலுவலகம் கை விரித்துவிட்டது. புகார் குறித்த கூட்டம் மிகவும் இழுத்தடிக்கப்பட்ட பின்பு 25 அக்டோபர் அன்று உதவி தொழிலாளர் ஆணையர் முன்பு கூட்டம் நடந்தது. Rising Star நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டார். பாக்ஸ்கான் தொழிலாளர்களை ஏன் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ACL கேட்டபோது, அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிலையில் தான் இல்லை என்று நிர்வாகத்தின் பிரதிநிதி கைவிரித்தார்! அடுத்த கூட்டம் நவம்பர் 7 நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை இப்பிரச்சனை பற்றி அரசு எதையும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் வரலாறு

நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிலகம் 2014ல் மூடப்பட்டதால் சுங்குவார் சத்திரம் தொழிலகமும்  தன் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது என்பதுதான் அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட காரணம். நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குள் இருந்த  பாக்ஸ்கான் தொழிலகமும், சுங்குவார் சத்திரத்தில் இருந்த தொழிலகமும் நோக்கியாவிற்கு உதிரிப் பாகங்களை வழங்கிவந்தன. உற்பத்தியை வாங்க யாரும் இல்லை என்று காரணம் கூறி இவ்விரண்டு தொழிலகங்களையும் பாக்ஸ்கான் மூடியது.

இருந்தபோதும், தொழிலாளர்கள் தங்களின் சங்கத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து, கூலி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்ததை அடுத்துத்தான் பாக்ஸ்கான் தொழிலகங்கள் மூடப்பட்டன. CITUவுடன் இணைக்கப்பட்ட பாக்ஸ்கான் இந்தியா தொழிலாளர் சங்கம் (Foxconn India Thozhilalar Sangam -FITS), தொழிலாளர்கள் நடத்திய வெகு நீண்ட போராட்டத்திற்குப் பின்பு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 2010ல், கூடுதல் கூலி, நல்ல பணி நிலைமை, சங்கத்தை அங்கீகரிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்து 58 நாட்கள் நீடித்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வெகு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பு சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. இறுதியில், பாக்ஸ்கானில் உள்ள பெரும்பான்மை சங்கம் எது என்று தீர்மானிக்க இரகசிய தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியானது. ஆனால், இதற்கிடையில் நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிலகத்தில் VRS அறிவித்திருந்தது. சுங்குவார் சத்திரம் தொழிலகத்தில் 2015 பிப்ரவரியில் VRS அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 700 தொழிலாளர்கள் VRS  பெற ஒப்புக்கொள்ளவில்லை. நிர்வாகம், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வலுக்கட்டாயமாக இழப்பீட்டு தொகையைத் தானே செலுத்திவிட்டது.

மூடலுக்குப் பிந்தைய தொழிலாளர்களின் வாழ்க்கை

ஆலையின் இயக்கம் தற்காலிகமாக நின்ற பின்னர், தொழிலாளர்களின் வாழ்க்கை சிரமத்திற்கு ஆளானது. பாக்ஸ்கானின் நிரந்தரத் தொழிலாளர்கள் 12 ஆண்டு அந்த தொழிலகத்தில் பணியாற்றியிருந்தனர். அவர்களில் பலர் ஏறக்குறைய 30+ வயது ஆனவர்களாக இருந்தனர். VRS வாங்கிக்கொண்ட தொழிலாளர்கள் மற்ற ஆலைகளில் வேலையில் சேர முயற்சி செய்தனர். ஆனால், அவர்களுக்கு வேலை இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஏனென்றால், 18-25 வயதுப் பிரிவில் உள்ளவர்களை மட்டுமே தொழிலகங்கள் வேலைக்கு எடுக்கின்றன. வேறு சில நிறுவனங்கள் பாக்ஸ்கான் தொழிலாளியை வேலைக்கு எடுப்பதில்லை என்று கை விரித்தன. எப்படியாவது, அடித்துப்பிடித்து  ஒரு தொழிலாளி வேலையில் சேர்ந்தால் அது ஒப்பந்த உழைப்பாகவும் மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஊதியம் கிடைப்பதாகவும் இருந்தது. 2014ல் பாக்ஸ்கானில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 19 ஆயிரம் பேசப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

VRS வாங்கிக் கொள்ளாதத் தொழிலாளர்கள் இன்னமும் சிக்கலான நிலையில் இருந்தனர். அதிகாரப்பூர்வமாகப் பார்த்தால் பாக்ஸ்கான் தொழிலகம் மூடப்படவில்லை. அவர்கள் தங்களின் இயக்கத்தை நிறுத்தியிருந்தார்கள்.. அவ்வளவுதான். அதனால், இந்தத் தொழிலாளர்கள் இன்னமும் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்தான். எனவே, வழக்கு நடக்கும் வரையில், மற்ற தொழிலகங்களில் வேலைக்குச் சேர முடியாத நிலை. தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாக பாக்ஸ்கானில் இருந்து விலகவில்லை என்பதால் அவர்களிடம் அனுபவச் சான்றும் இல்லை. மற்றதொரு நல்ல வேலையில் சேர அந்த சான்றிதழ் அவசியம். எனவே, உயிரோடு இருப்பதற்காக அன்றாடக் கூலிக்கு உழைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. தொழிலாளர்களில் சிலருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. மற்றவர்கள், வேலையில்லை என்ற காரணத்தால் கல்யாணம் செய்துகொள்ள வாய்ப்பின்றி போய்விட்டது. எங்களிடம் பேசிய தொழிலாளி ஒருவர், ‘வேலையில்லாமல் வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருப்பது கடும் மன நெருக்கடியை ஏற்படுத்துகிறது‘ என்று சொன்னார்.

பாக்ஸ்கானின் சதி வேலை

இதற்கிடையில் இந்தியாவில் பற்பல விரிவாக்கங்களை பாக்ஸ்கான் மேற்கொண்டது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ நகரத்தில் (Sri City) தொழிலகம் ஒன்றைத் துவக்கியது. அங்கே உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து, ஜியாமி (Xiaomi) போன்கள் உருவாக்கப்பட்டன. நேவி மும்பையிலும் போன் உற்பத்தி செய்யும் தொழிலகம் துவக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகள் கட்டுவதற்காக பழங்குடிகளின் நிலத்தைக் கையகப்படுத்தவும் மகாராஷ்டிரா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுபோன்ற விரைவான விரிவாக்கம் செய்யும் வாய்ப்புள்ள ஒரு நிறுவனம் நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் சுங்குவார் சத்திரத்திலும் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருந்தது ஆச்சரியமான ஒன்று. தொழிலகம் மூடப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் கூட ஏபிபி சுவிட்சிங் கம்பெனியிடமிருந்து (ABB switch company) வேலைக்கான ஆர்டர்களை பாக்ஸ்கான் பெற்றிருந்தது. மேலும், மூடப்பட வேண்டிய வேறுபல தொழிற்சாலைகளிலிருந்து ஆர்டர்களை இங்கே கொண்டுவந்திருப்பதும் கூட பாக்ஸ்கானுக்குச் சாத்தியமானதே- இதுபோன்ற கேள்விகளை 2015ல் தொழிலாளர்கள் எழுப்பினர்.

சுங்குவார் சத்திரம் பாக்ஸ்கான் தொழிலகம் உற்பத்தியை நிறுத்திய உடனே, மே 2015ல் ஆந்திரப் பிரதேசத்தில் Rising Star என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஜியாமி போன்களை சுங்குவார் சத்திரம் ஆலையில் அசெம்பிள் செய்வோம் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள். வெற்றிகரமாக தொழிற்சங்கத்தை உருவாக்கிவிட்ட  தொழிலாளர்களைக் கழற்றி விடுவதற்காகவே ஆலை மூடப்பட்டு (மற்றொரு நிர்வாகத்தின் பெயரில்) மறுபடியும் துவக்கப்பட்டது என்பதை மேற்சொன்ன உண்மைகள் காட்டுகின்றன.

மக்களையும் அரசாங்கங்களையும் உலக அளவில் ஏமாற்றும் பாக்ஸ்கான்

உலக அளவில் பார்த்தால் பல்வேறு நாடுகளில் பாக்ஸ்கான் கம்பெனிகளை நடத்துகிறது. ஏறக்குறைய 5 லட்சம் தொழிலாளர்கள் உலக அளவில் இந்நிறுவனத்தின் கீழ் உழைக்கிறார்கள்.  மொபைல் போன், மின்னணு விளையாட்டு சாதனங்கள் , LCD திரைகள் போன்ற பல்வகைப்பட்ட தயாரிப்புகளை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இந்த ஆலைகளை ‘ராணுவக் கட்டுப்பாட்டுடன்‘ நடத்துகிறது என்ற ‘புகழும்’ பாக்ஸ்கானுக்கு உண்டு. சீனாவில் உள்ள சென்ஜெனில் உள்ள தொழிலகத்தில் 93 ஆயிரம் தொழிலாளர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காக 11 மணி நேரம் உழைக்கின்றனர்.

உற்பத்தி போக்கின்போது கணக்கில்லாத விபத்துகள் நடப்பதும், காயங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடக்கும். 2010ல் சென்ஷென் தொழிலகத்தில் தொடர் தற்கொலைகள் நடந்து சர்வதேசக் கவனம் அதனை நோக்கித் திரும்பும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அதன் உற்பத்திக் கூடங்களிலும் மிகமோசமான பணி நிலைமை இருந்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.   2010ல் சுங்குவார் சத்திரம் ஆலையில் வாயுக் கசிவு ஒன்று நடந்தது. அதன் காரணமாக 250 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாக்ஸ்கானுக்கு எதிரான தொழிலாளர் போராட்டம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை.. 201ல் ஐ போன் (iPhone) 5 வெளியிடப்படுவதற்கு முன்பு ஜென்ஜூ, தாயுவான், போஷன் சிட்டியின் புலிஹுவா  ஆகிய ஆலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன.

இருந்தாலும், உலகத்தின் அனைத்து அரசுகளும் பாக்ஸ்கானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனமாக இருக்கின்றன. தங்களின் நாட்டில் ஆலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக சலுகைகள் பலவற்றை பாக்ஸ்கானுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிலகத்தை பாக்ஸ்கான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு விரும்பியது. மிகவும் அதிக அளவில் விலை குறைக்கப்பட்ட நிலத்தை அளிக்க அரசு தயாராக இருந்தது. தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், முன்னாள் தொழிலாளர்களை

வேலைக்கு எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் கூடுதல் நிபந்தனைகளை பாக்ஸ்கான் போட்டது. அந்த பேச்சுவார்த்தை இன்னமும் நிறைவுக்கு வரவில்லை. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு செய்த செலவு 645.4  கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது. இதேபோன்ற ஒப்பந்தங்களை வேறு இடங்களிலும் பாக்ஸ்கான் செய்துகொண்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தில் 3000 பேர்களுக்கு வேலை அளிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 200 முதல் 250 மில்லியன் டாலர்களை பாக்ஸ்கானுக்கு மான்யமாக அளிப்பதற்கு அந்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், தொழிலாளர்களை வேலையில் இருந்து வீசி எறிவதற்கு,  வெவ்வேறு கம்பெனி பெயர்களை பாக்ஸ்கான் பயன்படுத்தும்போது அரசுகள், வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுகின்றன.

This entry was posted in Contract Workers, Electronics Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.