சான்மீனா தொழிலாளர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

  • கூலி உயர்வு வேண்டும்! சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்! தொழிலாளரை முறையாக நடத்த வேண்டும்!- என்று கோரிக்கை
  • நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின்னர் தொழிலாளர்கள் வெளியேற்றம்!
  • போராடும் தொழிலாளர்களைக் காவல்துறை துன்புறுத்துவது தொடர்கிறது!

சான்மீனா தொழிலாளர்கள் ஏறக்குறைய 280 பேர் நவம்பர் 21 இரவு 11 மணி முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அவர்களில் 30 தொழிலாளர்கள் ‘கட்டாய ஓய்வில்‘ இருந்தவர்கள். பல்வேறுவிதமான சஸ்பென்ஷன் தண்டனைக்கு ஆளானவர்கள். கூலி உயர்வு, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், இடை நீக்கங்களையும் கட்டாய ஓய்வையும் திரும்பப் பெறுவது ஆகியவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். கடந்த முறை நடைபெற்ற 4 நாள் வேலைநிறுத்தத்திற்காகப் பிடித்தம் செய்யப்பட்ட 21 நாள் சம்பளத்தைத் திரும்பத் தர வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரினர். தொழிலாளர்கள்நிர்வாகம்தொழிலாளர் துறை என்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் பற்பல நடந்தும், வெகு நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்காகத்தான் வேலைநிறுத்தம் துவங்கியது.

சான்மீனா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கோருகின்றனர்

சான்மீனா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கோருகின்றனர்

 

 

 

 

 

 

 

 

தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள தொழிலாளிக்கு 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. வேலைக்குச் சேரும்போது மின்னணுத் துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று கம்பெனி சொல்லியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஒரு தொழிலாளியின் அனுபவம் 13+ ஆண்டுகள் ஆகிறது. மிகத் திறமையானவர்களை வேலைக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 2008ல் கம்பெனி துவக்கப்பட்ட போது மற்ற (அப்போது பாக்ஸ்கான், நோக்கியா சீமென்ஸ்) கம்பெனிகளைவிட இரண்டு மடங்கு சம்பளத்தை சான்மீனா அறிவித்திருந்தது. தற்போது நோக்கிய சீமென்ஸ் தொழிலாளி ஒருவர் ரூபாய் 24 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். சான்மீனா அதில் பாதியைத்தான் சம்பளமாகத் தருகிறது.

வேலைநிறுத்தத்தை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்ற இரு தரப்புக் கடும் முயற்சியில், தொழிலாளர்களும் நிர்வாகமும் தொழிலாளர் துறைக்கு முன்பு சந்தித்தனர். தொழிலாளர்கள் 15 ஆயிரம் ரூபாய் கூலி அதிகரிப்பு கோரினர். நிர்வாகம் 3,500 ரூபாய் அதிகரிப்பு என்றது. நிர்வாகம் அறிவித்த கூலி உயர்வு வரலாறு காணாதது என்றும் ஏனென்றால் இதுவரை சில நூறுகள் மட்டும்தான் அதிகரிப்பு செய்யப்பட்டுவந்தது என்றும் நிர்வாகம் பீற்றிக்கொண்டதாகத் தொழிலாளர்கள் சொன்னார்கள். இருந்தபோதும், ஆகக் குறைந்தது ரூபாய் 8 ஆயிரம் உயர்த்திட வேண்டும் என்பதில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றார்கள். அப்படி உயர்த்தப்பட்டால், குறைந்தது 21 ஆயிரம் ஊதியம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்க இயக்கங்களின் கோரிக்கைக்கு சற்று கூடுதல் அல்லது குறைவு என்பதாக தொழிலாளர்களின் சம்பளம் அமையும். குறைவான ஊதியம் என்ற பிரச்சனையை நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கொண்டு சென்றபோது, ஒன்று OT செய்யுங்கள் அல்லது VRS வாங்கிக்கொள்ளுங்கள் என்று நிர்வாகம் சொல்லியிருக்கிறது.

கடந்த மார்ச் 27 அன்று, தங்களின் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கம்பெனிக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தியபோது, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாகத் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ‘கட்டாய ஓய்‘விற்கு அனுப்பப்பட்டனர். நிர்வாகம் அவர்களுக்கு முழு சம்பளத்தைக் கொடுத்த போதும், அத்தொழிலாளர்களை ஆலை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மற்ற தொழிலாளர்கள் பெறும் இன்சென்டீவ் உள்ளிட்ட இதர பணப் பலன்கள் அவர்களுக்குக் கிடைக்காது. இவையனைத்தும் முறையற்ற முறையில் தொழிலாளர்களை நடத்துவதாகும் (unfair labour practices) என்றபோதும், தொழில் தகராறு சட்டத்தின் 2 (K) பிரிவின் கீழ் அவர்கள் எழுப்பிய தொழில் தாவா எந்தத் தீர்வையும் கொண்டுவரவில்லை. நிர்வாகம் பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்திக்கொண்டேயிருந்தது. தொழிலாளர் துறை கூட்டங்களைத் தள்ளி வைத்துக்கொண்டேயிருந்தது. பல்வேறு தண்டனை நடவடிக்கையின் ஒரு பதியாக, நான்கு தொழிலாளர்களுக்கு 1 மாத சம்பளத்தை நிர்வாகம் பிடித்து வைத்துள்ளது.

மேலும், உற்பத்தியின் மையமான பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நிர்வாகம் புகுத்தியுள்ளது. தொழிற்சாலையில் 600க்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் கேந்திரமான உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத் துறையிடம் (Department of Industrial Safety and Health -DISH- முன்னதாக இதனை தொழிற்சாலை ஆய்வாளரகம்Factories Inspectorate என்று குறிப்பிடுவர்) தொழிலாளர்கள் புகார் அளித்திருப்பதாகச் சொன்னார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின்படி அத்துமீறல்கள் இருப்பதைக் கண்டுபிடித்த DISH இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட்டது. இருந்தபோதும், ஒப்பந்தத் தொழிலாளர் பணி இன்னமும் தொடர்கிறது என்றும் தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிறுவனங்களின் மனித வளத்துறையில் நிலவும் நிலப்பிரபுத்துவ அணுகுமுறையைத் தொழிலாளர்கள் கடுமையாகக் கண்டனம் செய்கின்றனர். “நீங்கள் எதனையும் கேட்கக் கூடாது. நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்வோம்“ என்ற பல்லவியை நிர்வாகம் அடிக்கடிப் பாடும் என்கின்றனர் தொழிலாளர்கள். இந்தக் கம்பெனியின் மூல நிறுவனம் (parent company) அமெரிக்காவின் சான்மீனா கார்ப்பரேஷன் ஆகும். தொழிலாளர்கள் தங்களின் பிரச்சனைகள் என்ன என்பதை மூல நிறுவனத்திற்குத் தெரிவிக்க முயற்சியெடுத்து இருக்கின்றனர். இச்செயலை உள்ளூர் நிர்வாகம் விரும்பவில்லை. தொழிலாளர்கள் போராடுவதையும் அவர்களின் பிரச்சனை என்ன என்பதையும் மூல நிறுவனமான அமெரிக்க சான்மீனாவிற்கு உள்ளூர் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். ‘அங்கீகரிக்கப்பட்ட‘ சங்கமான INTUCயைப் பயன்படுத்தி ‘அமைதியான தொழில் உறவு‘ நிலவுவதாக ஒரு பொய்த் தோற்றம் ஏற்படுத்த உள்ளூர் நிர்வாகம் முயற்சிப்பதாக தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். நடந்தவற்றின் காரணமாக, உள்ளூர் நிர்வாகத்தை அமெரிக்க நிர்வாகம் கேள்வி கேட்டிருப்பதாகத் தொழிலாளர்கள் நம்புகிறார்கள் என்றாலும், கம்பெனி நிர்வாகம் எவ்விதமான பதிலையும் அதிகாரப்பூர்வமாகத் தரவில்லை.

தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் துவக்கியிருக்க, தொழிலாளர்களுக்கு உணவோ நீரோ கொடுக்க முடியாது என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது வெளியில் இருந்து உணவுநீர் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியிருந்தது. இரண்டு நாட்கள் கழிந்த பின்னர், ACL தலையிட்டார். தொழிலாளர்களுக்கு உணவும் நீரும் வழங்க வேண்டும் என்று நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் தொழிலாளர்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை நிர்வாகம் பெற்று வந்தது. இதற்கு முன்னதாக, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டு தொழிலாளர்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தி வந்தனர்.

வெளியேற்றப்பட்ட பின்பு தொழிலாளர்கள் தொழிற்சாலை வாசல் அருகில் முகாமிட்டுத் தங்கியுள்ளனர். மழை பெய்து கொண்டிருக்கிறது. எந்த வசதியும் அவர்களுக்கு இல்லை. போராட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நிர்வாகம் எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் வரவில்லை எனத் தொழிலாளர்கள் தரப்புகள் கூறியுள்ளனர். அரசு அமைப்புகளை மதிக்கவில்லை, நீதிமன்றங்களை அவமதிப்பு செய்கிறோம் எனக் கூறி தொழிலாளர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்தி வரும் இவ்வமைப்புகள் முதலாளித்துவ கட்டமைப்புகள் அவர்கள் கூறுவதை மதிக்காத போது என்ன செய்வதாக உத்தேசம் என்று தெரியவில்லை. சட்டம் என்பது பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே என்பது தொழிலாளர்கள் போராட்டங்களை அரசு ஒடுக்குவதில் இருந்து உறுதியாகிறது.

 

This entry was posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.