டைக்கின் தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டம் இறுதிக்கு முந்தைய கட்டத்துக்குள் நுழைகிறது!

ராஜஸ்தானின் நீம்ரனா ஆலையின் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்வதற்காக நடத்திவரும் விடாப்பிடியான போராட்டம் தொடர்ந்த அவர்களின் நிலைகுலையா உறுதியைக் காட்டிவருகிறது. நிர்வாகம் பலமுறைத் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இருந்தபோதும், நீம்ரனா சங்கர்ஸ் சமிதி என்ற பதாகையின் கீழ், ‘ஜப்பான் பிரதேச‘த்தில் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால், அதற்கு நிர்வாகம் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

டைக்கின் நிறுவனம் இந்தியாவில் மிக அதிக அளவில் ஏர் கண்டிஷனர்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். உலகில் உள்ள மிகப்பெரும் AC உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். 201-ல் டைக்கின் ஆலையின் 846 தொழிலாளர்கள் 41 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், சங்கம் அமைக்கும் முயற்சியை முன்னெடுத்த காரணத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 125 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் அந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

2013க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் AITUC பதாகையின் கீழ் தொழிற்சங்கம் அமைக்க தொழிலாளர்கள் முயற்சியெடுத்தனர். ஆனால், இடைக்கால தடையாணை, மிரட்டல், தொழிலாளர் தலைவர்களை இடைநீக்கம் செய்வது போன்ற முறைகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் முயற்சிகளை நிர்வாகம் முறியடித்து வந்தது. மேலும், ராஜஸ்தான் மாநில அரசு நாட்டில் உள்ள தொழிலாளர் விரோத அரசுகளில் ஒன்றாக இருப்பதும் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருந்தது.

2016ல் தொழிலாளர்களின் போராட்டம் ஓர் புதிய கட்டத்தை எட்டியது. புதிய, சுதந்திரமான சங்கம் ஒன்றைப் பதிவு செய்து, சங்கத்தைக் கட்டமைக்கத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதனை அடுத்து நிர்வாகம் தொழிலாளர்களை அச்சுறுத்த ஆரம்பித்தது. தொழிற்சங்கப் பதிவுக்காகக் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் தர்ஷன் பால் என்பவர். 2016 அக்டோபரில் கையெழுத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவருக்கு நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது. ஆனால் தர்ஷன் பால் பணியவில்லை. அன்றே அவரை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஷிப்டுகளைச் சேர்த்தத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்து ஆலைக்குள்ளேயே தங்கிவிட்டனர். இடை நீக்கம் செய்யப்பட்ட தர்ஷன் பாலையும், அதற்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையும் திரும்பவும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுமே சங்கம் அமைக்கும் முயற்சிக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள். தொழிற்சாலைக்குள் பெருமளவிற்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இருந்தபோதும், ஒரு நாள் முழுவதும் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் இருந்தனர். அதன்பின், உள்ளூர் நிர்வாகம் தலையிட்டு நிர்வாகத்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதிகொடுத்த பின்னர் ஆலையை விட்டு வெளியேறினர். முதலில், தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு நிர்வாகம் மறுத்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களையும், மனித உரிமை அமைப்புகளுக்கும் அழைப்பு விட்டு டெல்லியில் எதிர்ப்புப் பேரணி நடத்தப் போவதாகத் தொழிலாளர்கள் அறிவித்தனர். அதன்பின்னர் அரசு நிர்வாகம் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தது. 23 அக்டோபர் 2016 அன்று தொழிலாளர் நல அலுவலர்கள் முன்பு முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இடைநீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், சம்பவம் தொடர்பாகத் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தொழில் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் நிர்வாகம், அந்த ஒப்பந்தத்தில் உறுதி கூறியது.

இருந்தபோதும், நிர்வாகம் எதிர்காலத்தில் தாக்குதல் தொடுக்கும் என்ற சந்தேகம், அந்த சமயத்திலேயே தொழிலாளர்களுக்கு இருந்தது. மேலும், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தொழிலாளர்களுக்கு அவநம்பிக்கை இருந்தது. தொழிலாளர்களின் சந்தேகம் சரியானதுதான் என்பதை 2017 காட்டியது. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிர்வாகம் மீறியது.

2017, நவம்பர் 17 அன்று தௌலத் ராம் என்ற தொழிலாளரை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. தௌலத் ராம் துவங்கப்படவிருந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆவார். அநியாயமான முறையில் செய்யப்பட்ட இடைநீக்க அறிவிப்பில், 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கவில்லையென்றால் வேலைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று நிர்வாகம் தௌலத் ராமுக்கு அறிவித்திருந்தது. இரவு 2 மணிக்கு அவரை அலுவலகத்துக்கு அழைத்த நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது, மிரட்டியது. இது முறையற்ற தொழிலுறவு நடவடிக்கையாகும். தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் தொழிற்சங்கம் அமைப்பதைத் துவங்குவதற்கான முயற்சியை முறியடிக்கும் நோக்கம் கொண்டதாகும். முன்னர் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு விரோதமாக, ‘தவறான நடவடிக்கை‘ என்பதாக 14 தொழிலாளர்களுக்குக் குற்றப்பத்திரிகை அளித்த நிர்வாகம், விசாரணை நடத்துவதை நோக்கி முன்னேறியது. தௌலத் ராம் மீது குறிவைக்கப்பட்டது. கண்துடைப்புக்கு ஓர் விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் தன் தரப்புச் சாட்சியங்களை நிறுத்தக் கூட, குற்றம்சாட்டப்பட்ட தௌலத் ராமுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஏன் வேலைநீக்கம் செய்யப்படக் கூடாது என்று காரணம் காட்டச் சொல்லும் நோட்டீஸ் அவருக்குத் தரப்பட்டது. தொழிலாளர்கள் கடும் கோபம்கொண்டனர். அந்த நடவடிக்கைக்கு எதிராக உணவு மறுப்புப் போராட்டம் நடத்தினர். உணவு மறுப்புப் போராட்டம் 14 நாட்கள் நீடித்தது. ஆனால், நிர்வாகத்தின் மீதோ, தொழிலாளர் விரோத உள்ளூர் நிர்வாகத்தின் மீதோ போராட்டம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், 14 நாட்கள் கழித்து தௌலத்ராம் முறைப்படி வேலைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்து,தொழிலாளர்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான யாத்ராம்தான் நிர்வாகத்தின் குறி என்பது தொழிலாளர்களுக்கு உறுதியாகத் தெரிந்தது. யாத்ராம் மீது போலியான ஒரு புகார் கொடுங்கள் என்று அவரின் கண்காணிப்பாளருக்கு நிர்வாகம் நெருக்கடி கொடுக்க அந்தக் கண்காணிப்பாளர் அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். விளைவாக, அந்தக் கண்காணிப்பாளரையே நிர்வாகம் வேலைநீக்கம் செய்த கேலிக்கூத்தும் கம்பெனியில் நடந்தது!

உணவு மறுப்புப் போராட்டம் இரண்டாவது வாரத்தைத் தாண்டிய போது, தொழிலாளர் தலைவர்களைக் குறிவைத்து இரண்டாவது நோட்டீசை நிர்வாகம் ஒட்டியது. உணவை மறுத்துப் போராட்டம் செய்யும்படி தொழிலாளர்களைத் தூண்டியதாக அந்த நோட்டீஸ் குற்றம்சாட்டியது. உணவை மறுப்பவர்களுக்கு கம்பெனி வாசலில் ‘கார்டு-பன்ஞ்சிங்‘ செய்ய முடியாது என்று அறிவித்தது. ஆனால், தொழிலாளர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, போராட்டம் துவங்கிய 15வது நாளன்று, தொழிலாளர் அலுவலர்களும் நிர்வாகமும் தொழிலாளர் தரப்பையும் நிர்வாகத் தரப்பையும் சமரசக் கூட்டத்திற்கு அழைத்தனர். அந்தக் கூட்டம் மாலை வெகுநேரம் வரை நீடித்தது. ஆனால், கூட்டம் தோல்வியில் முடிந்தது.

அப்போது நிர்வாகம் தன் கையில் உள்ள மற்றொரு ஆயுதத்தை, மாநில அரசின் போலீசைப் பயன்படுத்தியது. மன்மோகன், தௌலத், ருக்முதீன், அனில் தத் மற்றும் அனைத்துத் தொழிலாளர் தலைவர்களுக்கும் போலீஸ் ஒரு நோட்டீஸ் கொடுத்தது. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 107 மற்றும் 116ன் கீழ் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸ் அடுத்த ஆறு மாதங்களுக்கு ‘அமைதியைக் குலைக்கக் கூடாது‘ என்றும் பேரணிக்கு அனுமதி கிடையாது என்றும் சொன்னது. அந்த நோட்டீசைப் பெற்றுக்கொள்ளவும் அதில் கையொப்பமிடவும் தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். நீம்ரனாவில் அமைந்துள்ள ‘ஜப்பான் பிராந்தியத்தில்‘ எதிர்ப்புப் பேரணி நடத்தத் தொழிலாளர்கள் தயார் ஆனார்கள். அந்த ‘ஜப்பான் பிராந்தியத்தில்‘ டைக்கின் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அப்பிராந்தியத்திற்குள் தயாரிப்புக் கூட்டங்கள் பல நடந்தன. டிசம்பர் 3 அன்று பேரணி நடத்துவதற்குத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். நீம்ரனா மற்றும் தப்புக்காரா- பாவெல் பிராந்தியத்தில் உள்ள பிற ஆலைகளின் தொழிலாளர்களுடன் இணைந்து, நீம்ரனா சங்கர்ஸ் சமிதி என்ற ஒருமைப்பாடு மேடையை டைக்கின் தொழிலாளர்கள் அமைத்திருந்தனர். எனவே, பிற ஆலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் பேரணியில் குவிந்தனர். நீம்ரனாவில் துவங்கியத் தொழிலாளர்கள் பேரணி ஜப்பான் பிராந்தியம் முழுமைக்கும் வீறுநடைபோட்டது.

தொழிலாளர் பேரணிக்கு எதிராக பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொழிலாளர்களும், தொழிலாளர் தலைவர்களும் உறுதியுடன் எதிர்கொண்டனர். தொழிலாளர்களின் மனவுறுதியும் போர்க்குணமும் உச்சத்தில் இருப்பதை அந்த நிகழ்வு காட்டியது. தொழிலாளர்கள் கோரிக்கைப் பட்டியல் ஒன்றை முன்வைத்தனர். அதில் பின்வருவனவும் மற்ற பல கோரிக்கைகளும் இருந்தன:

1. தௌலத்ராம் மன்மோகன் உள்ளிட்ட, வேலைநீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும்.

2. நிர்வாகம் ஒப்புக்கொண்ட 2016 முத்தரப்பு ஒப்பந்தத்தை நிர்வாகம் மதித்து நடக்க வேண்டும்.

3. டைக்கின் ஆலையில் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.

3. அனைத்துப் பெண் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்கள் இரவுப் பணியில் ஈடுபடும்போது அதற்கான போக்குவரத்து வசதி செய்துதரப்பட வேண்டும்.

4. குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 22 ஆயிரம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

இதுவரை எந்தக் கோரிக்கையையும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தௌலத் ராம் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலையளிக்கப்படவில்லை. ஏசி மெஷின்கள் தேவை குறைந்து விற்பனை குறையும் குளிர்காலத்துக்காக நிர்வாகம் காத்திருப்பதாகத் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள், அதனைப் பயன்படுத்தி அனைத்துத் தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்துவிட்டு ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தின்படி, தற்காலிகத் தொழிலாளர்களை வேலையில் வைத்துக்கொள்ளலாம் என்று டைக்கின் நிர்வாகம் காத்திருக்கிறது என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள். எனவே, தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். பிப்ரவரிக்குப் பின்பு உற்பத்தித் தேவை அதிகரிக்கும். அதன்பின் போராட்டத்தைத் திரும்பத் துவங்கலாம் என்று தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். டைக்கின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்குமுறை அரசு யந்திரத்திற்கும் இடையிலான இறுதி யுத்தத்தை 2018 நிச்சயம் சந்திக்கும்.

This entry was posted in Factory Workers, News and tagged , , , . Bookmark the permalink.