66 நாள் சான்மீனா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – 5 நாள் உண்ணாவிரதம் முடிவு

ஊதிய உயர்வு அதிகரிப்பு; 85 தொழிலாளர்களின் தற்காலிக பணிநீக்கம் வாபஸ்

தொழிலாளர்கள், நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை இடையே நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சமரசம் ஏற்பட்டதனால் ஜனவரி 25 அன்று சான்மீனா நிறுவனத் தொழிலாளர்கள் 66 நாள் தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். வேலை நிறுத்தத்தின் போது ஜனவரி 20 முதல் நித்தியானந்தம், தியாகராஜன், குணசீலன், சுரேஷ் மற்றும் சாரதி ஆகிய 5 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். 25 அன்று பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதன் விளைவாக தொழிலாளர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை ரு306ஆகக் கூட்டி மொத்த உயர்வாக ரூ3570 தருவதற்கும், 85 தொழிலாளர்களின் தற்காலிக பணிநீக்கத்தை வாபஸ் பெருவதற்கும் நிர்வாகம் ஒத்துக் கொண்டது. இந்த 85 தொழிலாளர்களின் உள்விசாரணை தொடரும். 3 பெண் தொழிலாளர்கள் உட்பட 5 தொழிலாளர்களுக்கு 1 மாத தற்காலிகப் பணிநீக்கம் தொடர உள்ளது. 1 மாத கால இடைவெளிக்குள் உள் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு முழு ஊதியம் தரப்பட வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஒட்டி நிர்வாகம் சான்மீனா தொழிலாளர்களின் 21 நாள் ஊதியத்தை பிடித்திருந்தது. இதில் தொழிலாளர் துறை அதிகாரியின் ஆணைப்படி நடப்பதாக சான்மீனா நிர்வாகம் ஒத்துக் கொண்டது. தற்போதைய வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க நிர்வாகம் மறுத்து விட்டது. தொழிற்தாவா சட்டத்தின் கீழ் முறையாக வேலை நிறுத்தத்தை நடத்தியதால், நிர்வாகத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என தொழிற்சங்கம் கூறியுள்ளது. இது குறித்து இன்னொரு தொழிற்தாவா வழக்கைத் தொடர தொழிற்சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த ஊதிய உயர்வை அடுத்து தொழிலாளர்களின் ஊதியம் அனுபவம் அடிப்படையில் ரூ14500 முதல் ரூ18000 வரை அமையும். தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாக நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதும், தொழிலாளர்களின் தொடர் போராட்டம் நிர்வாகத்தின் பிடிவாதத்தை உடைத்து தொழிற்சங்க அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிர்வாகத்தை நிர்ப்பந்தம் செய்துள்ளது. தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு தன்னுடைய இடத்தை தந்து போராட்டத்தை வெற்றி பெற செய்த விவசாயி பொன்ராஜ் அவர்களையும் தொழிலாளர்கள் வாழ்த்தினர்.

தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் 24 ஜனவரி இரவு அன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஜனவரி 25 அன்று தொழிலாளர் துறையின் அறிவுரையை வாசித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தை வழிநடத்திய ஏஐசிசிடியு பிரதிநிதி தோழர் பாரதி, ‘ஊதியத்தை விட தொழிலாளர்களின கண்ணியத்தை காப்பதற்காக நடைபெற்ற போராட்டம்’ எனக் குறிப்பிட்டார். தொழிற்சங்கத்துடன் பேச மறுத்த நிர்வாகத்தை போராட்டம் வழியாக தொழிலாளர்கள் பேசவைத்துள்ளதாக அவர் கூறினார். தொழிலாளர்களின் கூட்டமைப்பாக தொழிற்சங்கத்தை அங்கீகரித்து ஊதியம் மற்றும் பணிநிலைமைகளை முறையாக பேசுவதற்கு நிர்வாகத்தை நிர்ப்பந்திக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் இதுவரை பேச மறுத்ததையும், ஊதிய உயர்வை ரூ2500 லிருந்து ரூ 3264 ஆக உயர்த்தியபோது கூட தொழிலாளர்களை அழைத்து நிர்வாகம் பேச மறுத்ததை அவர் சுட்டிக்காட்டினார். வேலை நிறுத்தத்தின் போது ஒரு ரூபாய் கூட ஊதியத்தை உயர்த்த முடியாது என்று கூறிய நிர்வாகத்தின் பிடிவாதத்தை உடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக நிர்வாகம் ரூ306 ஊதிய உயர்வு அளித்துள்ளது. இது குறைவாக இருந்தாலும், இது தொழிலாளர்கள் போராடியதன் விளைவாக கிடைத்துள்ளதாக அவர் கருதினார்.

ஓரகடம் – ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீப காலங்களில் நடந்த போராட்டங்களில் சான்மீனா தொழிலாளர்களின் போராட்டம் மகத்தான போராட்டமாகும். போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும், நிரந்தரத் தொழிலாளர்களின் உற்சாகமும் பங்கேற்பும் குறையவில்லை. நிர்வாகத்தின் போக்கை மாற்றுவதற்கு தொழிலாளர் துறையை மட்டும் தொழிலாளர்கள் அணுகவில்லை. மாறாக தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் நிதி வசூலித்தனர். பல்வேறு இடங்களில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர். தொழிலாளர் துறை சென்னை அலுவலகத்தையும், தொழிலாளர் கண்காணிப்பகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தின் உச்சகட்டத்தில், சான்மீனா அமெரிக்க நிறுவனம் என்பதால் பாதுகாப்பு மிக்க அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஒரு அமெரிக்க நிறுவனம் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்று அமெரிக்க அரசு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இப்போராட்டங்களின் தன்மைகள் அரசின் கவனத்தை ஈர்த்ததன் விளைவாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் வரை தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனையை கொண்டு செல்ல முடிந்தது.

மாநில அரசின் வர்க்க நலன் முதலாளிகளை சார்ந்து இருந்தாலும், தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை அரசால் முற்றிலுமாக புறக்கணிக்க முடியவில்லை. எப்போதும் போல பேச்சுவார்த்தை முறிவு என்று வழக்கமாக பதிவு செய்யும் தொழிலாளர் துறையை பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நிர்ப்பந்தித்தது. பேச்சுவார்த்தை முறிவடைந்திருந்தால், வழக்கு தொழிலாளர் நீதி மன்றத்தில் நடக்கும் வரை வேலை நிறுத்தம் செய்ய வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மூலம் போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண தீவிர முயற்சி செய்தனர். நிர்வாகத்தின் மீதும் நிர்ப்பந்தம் அதிகரித்தது. ஆகையால் தான் தொழிற்சங்கத்தை அங்கீகரித்தத்தை முக்கிய வெற்றியாக தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

தங்களுடைய நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு, ஜனவரி 31 அன்று நடைபெற்ற ஏஐசிசிடியு பேரணியில் கலந்து கொள்ள நிர்வாகம் விடுமுறை தரவேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரினர். இன்னொரு விடுமுறை நாளில் பணி செய்தால் 31 அன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று நிர்வாகம் கூறியதை அடுத்து, தொழிலாளர்கள் 31 அன்று பெரிய அளவில் பேரணியில் பங்கேற்றனர். ஆனாலும், ஜனவரி 30 அன்று நடைபெற்ற தொழிலாளர் துறை கூட்டத்தை நிர்வாகம் புறக்கணித்தது. இப்பேச்சுவார்;தை 21 நாள் ஊதிய பிடித்தம் சம்பந்தமாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. மீண்டும் நிர்வாகம் தனது நடவடிக்கைகளை துவக்கியதை இது சுட்டிக்காட்டுகிறது. வேலை நிறுத்தத்தில் இருந்து தொழிலாளர்கள் பொருள்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பெற்ற பலன்களின் தன்மை போகக் போக தெரியும். ஆனால் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் உறுதியுடனும், உற்சாகத்துடனும் போராடுவார்கள் என்பதற்கான அடையாளமாக இப்போராட்டம் அமைந்தது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தொழிலாளர்கள் முன் பல்வேறு சவால்கள் வரவுள்ளன. நிர்வாகம் மேலும் மேலும் ஒப்பந்த தொழிலாளர்களை புகுத்த முயற்சிக்கும். சான்மீனாவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 10000ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நலன்கள் அளிக்கப்படுவதில்லை நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே ஊதிய வேறுபாடு அதிகரிக்க, பிளவுகளும் அதிகரிக்கும். இதை இன்று நாம் ஆட்டோமொபைல் துறைகளில் காண்கிறோம். தொழிற்சாலைக்குள் நிர்வாகத்திற்கு சாதகமான ஒரு தொழிற்சங்கமும் செயல்பட்டு வருகிறது. நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் நிர்வாகம் ஏற்படுத்தும் பிளவுகளை மீறி சான்மீனா தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தொழிலாளர்களையும் தொழிலாளர் தலைவர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும், தற்போதைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும் தொழிற்சங்கம் யுக்திகளை மேற்கொள்ள வேண்டும்.

This entry was posted in Contract Workers, Factory Workers, Strikes, Workers Struggles and tagged , . Bookmark the permalink.