ரஷ்ய புரட்சி – நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்

A painting of the Bolshevik forces by Kustodiev

எப்போதும் போலவே, இவ்வருடமும் இந்தியாவின் சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15 அன்று, இஸ்ரேல், கனடா, கட்டார் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரான்சிலும், பிரெஞ்ச் புரட்சியை குறிக்கும் வகையில் பாஸ்தில் சிறைச்சாலையை புரட்சியாளர்கள் முற்றுகையிட்ட நாளன்று, பிரெஞ்ச் பிரதமரும், அமெரிக்க அதிபரும் ராணுவ அணிவகுப்பை கண்டு களித்தனர். இவ்வாறு சுதந்திர இயக்கங்களின் வெற்றிகளை அந்நாடுகள் மட்டும் கொண்டாடுவதில்லை. உலகளாவிய ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளும் இவற்றை முன்னேற்றத்தின் அடையாளமாக கொண்டாடுகின்றன.

ஆனால் உலகளாவிய மகத்தான புரட்சி ஒன்றை உலக ஆதிக்க சக்திகள் இருட்டடிப்பு செய்து வருகின்றன. ஏன், இப்புரட்சி நடந்த மண்ணில் கூட இதைப் பற்றி அந்த அரசு எதுவும் செய்யவில்லை. இப்புரட்சி நடந்து 100 வருடம் ஆகியும் இதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை அல்லது எதிர்மறையாகவே பதிவு செய்கின்றனர். காரணம் இது தொழிலாளர் வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட புரட்சியாகும்.

ஆம், உலகப் போரை நிறுத்தக் கோரி, ட்சார் மன்னர் ஆட்சியை கவிழ்த்து தொழிலாளர் வர்க்கத்திற்கான ஆட்சியை அமைக்கப் போராடி வெற்றி பெற்ற ரஷ்ய புரட்சி நடந்து 100 வருடம் ஆகிறது. ரஷ்யாவின் தொழிலாளர்கள்  இயக்கம் அரசராட்சி, ஏகாதிபத்தியம் ஆகிய ஆதிக்க சக்திகளில் இருந்து சுதந்திரம் பெற்று, பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களுடைய சமூக அமைப்பை தீவிரமாக மாற்றி அமைக்கப்  போராடினர். இப்போராட்டத்தை கைப்பற்ற முதலாளி வர்க்கம் பல வகைகளில் முயற்சித்தது. ஆனால்  சீர்திருத்தவாதத்தை முற்றிலும் நிராகரித்த போல்ஷவிக் புரட்சியாளர்கள் கட்சியுடன் இணைந்து, தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தை வழிநடத்தி வெற்றியும் கண்டது.

முதல் உலகப் போர் நடைபெற்ற கட்டத்தில் விஷேச பின்னணியில் ரஷ்ய புரட்சி வெற்றி கொண்டது என்றும் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்தாகும். ரஷ்யாவில் உலகளாவிய முதலாளித்துவம் எவ்வாறு நிலவுகிறது என்பதைப் பற்றி அன்றே லெனின் முதலாளித்துவ ஏகாதிபத்தியக் கட்டுரையில் குறிப்பிட்டார்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவின் தொழிற்மயத்தை அதிகரிக்க ஐரோப்பிய வங்கிகளின் உதவியை ட்சார் நாடினார். இந்தியாவைப் போலவே ரஷ்யாவிலும் சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சியே நடைபெற்றது. ரஷ்யாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தில் கூலித் தொழிலாளர்களாக பெரும் சுரண்டல் மிக்க சூழலில் வாழ்ந்தனர்.  கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு மக்கள் வேலை தேடி சென்றதனால் மாஸ்கோ, பிட்டர்ஸ்பர்க் நகரங்களில் தொழில்சார்ந்த தொழிலாளர் வர்க்கம் உருவாகியது. ரஷ்ய தொழிலாளர்கள் அங்குள்ளத் தொழிற்சாலைகளில் கடுமையான சுரண்டல்களையும், மோசமான பணி நிலைமைகளையும் அனுபவித்தனர்.

 

1905ன் முதல் புரட்சி

1917ன் புரட்சிக்கான விதை 1905லேயே விதைக்கப்பட்டது. ரஷ்யத் தொழிலாளர்களின் முதல் புரட்சி 1905ல் நடைபெற்றது. உலக சந்தையில் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிட, ஊழல் மிகுந்த கொடுங்கோல் ஆட்சியான ட்சார் அரசு தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் மறுத்து சுரண்டல்களை அதிகரித்தது (இன்று வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசும் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து தொழிலாளர்களை 1900 அரசியல் நிலைமைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது). வேலை நேரத்தை குறைக்கக் கோரியும், ஊதியத்தை உயர்த்தக் கோரியும், மாஸ்கோ அச்சுத் தொழிலாளர்கள் போராடினர். அச்சில் நிறுத்தல் குறியீடுகள் போட தங்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரினர்!

அச்சுத் தொழிலாளர்களின் போராட்டம் மாஸ்கோவின் மற்றத் தொழிற்சாலைகளுக்கும் பரவியது. அரசியல் போராளிகளின் தலைமையில், பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகள் கூடி, சோவியத் எனும் தொழிலாளர் பிரதிநிதித்துவத்தை உருவாக்கினர். தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள பகுதிவாரியாக 500 தொழிலாளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் பிரதிநிதித்துவ அமைப்பாக சோவியத் உருவாக்கப்பட்டது. 1905 இறுதிக்குள் 200 தொழிற்சாலைகள் மற்றும் 16 தொழிற்சங்கங்கள் உள்ளடக்கிய 562 பிரதிநிதிகள் சோவியத்தில் பங்கேற்றனர்.

மாஸ்கோவிலும் இதே போன்று சோவியத் அமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் மத்தியில் வேலை நிறுத்தங்களை ஒருங்கிணைக்கும் குழுவாக செயல்பட்டு, பின்னர் தொழிலாளர்களின் அரசியல் அமைப்பாக அரசை எதிரக்கும் சக்தியாக மாறியது. 1905 அக்டோபர் முதல் டிசம்பர் வரை அரசியல் நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கி வந்தது.  கருத்து சுதந்திரத்திற்காகவும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் சோவியத் மூலம் தொழிலாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

1905ல் நடைபெற்ற தொழிலாளர்கள் புரட்சி கிராமப்புற விவசாயிகள் மத்தியில் சென்றடையவில்லை. கிராமப்புற மக்களை அதிகம் கொண்ட ராணுவத்தின் மூலமாக அப்புரட்சி நசுக்கப்பட்டது. ஆனால் ரஷ்ய தொழிலாளர் வர்க்க வளர்ச்சிக்கான சோவியத்தை 1905 புரட்சி உருவாக்கியது.

 

1917 இரண்டாம் புரட்சியும் ஆட்சி மாற்றமும்

A painting of Lenin by Brodskiy

முதல் உலகப் போரின் அரம்ப கட்டத்தில்(1914-1915), ரஷ்யாவின் அறிவுஜீவிகள் பெரும்பாலோர் போரை ஆதரிக்கத் தொடங்கினர் (தற்போது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபிக்கு ஆதரவாக மத்திய வர்க்கம் வலதுசாரி கொள்கைகளை ஆதரிக்கின்றனர்). போருக்கு தேவையான இயந்திர உற்பத்திகூடங்களில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்தது. மற்ற துறைகளை அரசு புறக்கணி;க்க, அவை மூடப்பட்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது.

சமூகத்தில் உருவாகியிருந்தப் போருக்கு சாதகமான சூழ்நிலையில் இருந்து தொழிலாளர்கள் வேறுபட்டு நின்றனர். அவர்களுக்கு ஆதரவாக போல்ஷவிக் புரட்சியாளர்கள் துணை நின்றனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். குறிப்பாக பீட்டர்ஸ்பர்க் மெட்டல் தொழிற்சாலைகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

பீட்டர்ஸ்பர்க் பெண் தொழிலாளர்களால் வழிநடத்திய 10 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நூற்றாண்டுகளாக ஆண்டு வந்த ட்சார் மன்னர் ஆட்சியை 1917 பிப்ரவரி மாதத்தில் ஒழித்துக் கட்டியது.  ராணுவத்தில் சேர்ந்த விவசாயிகள் நகர்புறங்களில் உள்ள ராணுவத் தளங்களில் தங்கிய போது தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தொடர்பு இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இதனால் விவசாயிகள் மத்தியிலும் ராணுவ வீரர்கள் மத்தியிலும் இம்முறை புரட்சிக்கு ஆதரவு பெருகியது.

ட்சார் அரசு வீழ்ந்த பின்னர், முற்போக்கு தாராளவாதிகளால் அமைக்கப்பட்ட தற்காலிக அரசு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட ஆரம்பித்தது. தற்காலிக அரசின் போர் மற்றும் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்தது. மார்ச் மாதத்தில் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை உரிமையை வென்றெடுத்தனர்.

போரை நிறுத்தி சோவியத்துகளுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என லெனின் ‘ஏப்ரல் தீஸிஸ்’ எனும் கட்டுரையில் கோரினார். அதன் பின்னர் நடந்த பெரும் போராட்டங்கள் நடைபெற்று, தொழிலாளர் வர்க்கம் அக்டோபர் 25 1917(புதிய காலண்டரில் நவம்பர் 7), தொழிலாளர்களுக்கான கம்யூனிச ஆட்சியை நிறுவியது. இதுவே அக்டோபர் புரட்சி என அழைக்கப்படுகிறது.

அக்டோபர் புரட்சிக்கு பின்னர் நடந்த நிகழ்வுகளை பற்றி பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல சோசலிச புரட்சிக்கு எதிரானவர்களால் எழுதப்பட்டுள்ளது. முதலாளித்துவ சக்திகளை எதிர்ப்பதற்கும், புரட்சிகர சக்திகள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்பதற்கும். புரட்சிக்கு பின்னர் நடைபெற்ற ரஷ்யாவின் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ரஷ்ய புரட்சி ரஷ்யாவின் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி சென்றது. ட்சாரிசத்தை ஒரு அரசியல் அமைப்பு முறியடித்து, பின்னர் அவர்களை போல்ஷவிக் முறியடித்தார்கள் என்றில்லாமல், ஆட்சி அமைப்பு தொழிற்சாலை (தொழிலாளர்) குழுக்கள், சோவியத்துகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க முற்பட்டது.

தொழிலாளர்கள் கண்ணியமாக வாழ தொழிற்சாலைகளில் ஜனநாயக உரிமை என்பது இன்றியமையாதது. 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ தொழிலாளர்கள் தொழிற்சாலை நிர்வாக அதிகாரத்தை மற்றும் எதிர்க்கவில்லை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை மட்டுமே நடத்தி வந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் எதிர்த்தனர்.

சில சமயம், இதற்கான வழிமுறைகளில் வன்முறை இருந்தது. பீட்டர்ஸ்பர்கின் மெட்டல் தொழிற்சாலையில் பணிபுரிந்த 30000 தொழிலாளர்கள் தங்களை கொடுமைப்படுத்தி வந்த கண்காணிப்பாளர் தலையில் உருகிய ஈயத்தை ஊற்றியுள்ளனர். தொழிலாளர்களை இழிவுபடுத்திய தொழிற்சாலை விதிமுறைகள் கிழிக்கப்பட்டன. தொழிலாளர் குழுக்கள் அரசு தொழிற்சாலைகளை ஆக்கிரமிப்பு செய்தனர். ரஷ்ய புரட்சியின் எழுச்சி ஐரோப்பாவிற்கும் பரவி ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தொழிற்சங்கங்களை அப்புறப்படுத்தி சோவியத்துகளை நிறுவும் பணிகள் ஆரம்பித்தன.

 

இந்தியாவில் இன்று

ரஷ்யாவில் அன்று நிலவியது போல், இந்தியாவிலும் ஏகாதிபத்திய சக்திகளின் துணையோடு சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சியின் பின்னணியில், தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். எப்படி ரஷ்யாவின் தொழில் வளர்ச்சி மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் போன்ற சில நகரங்களில் குவிந்ததோ, அதே போல் இந்தியாவிலும் தொழிற்மயம் சில மாநிலங்களின் சில பகுதிகளில் அமைந்து வருகின்றன.

ஒரு பக்கம் பணக்கார நடுத்தர வர்க்கத்தின் மாளிகைகள் என்றால் இன்னொரு மூலையில் தொழிலாளர்களுக்கான குடிசைகளைக் கொண்டிருந்த அன்றைய பீட்டர்ஸ்பர்கைப் போல், இன்று தில்லி-மும்பை தொழில்வள நகரங்களில் வானளாவிய கட்டிடங்களில் வளர்ந்து வரும் மத்திய தர வர்க்கத்தை நோக்கி குடிசைகளில் தொழிலாளர்கள் இழிநிலைகளில் வாழ்கின்றனர்.

விவசாய நெருக்கடியினால் நகர்ப்புறங்களை நோக்கி நகரும் கூலித் தொழிலாளர்களினால், நகர்புறங்களில் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்;றது. 8 மணி நேர வேலை என்பது சட்டத்தில் இருந்தாலும், ஓவர்டைம், குறைந்த ஊதியம் எனத் தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாகவே பணிபுரிய நேரிடுகிறது. இன்னொரு பக்கம் இயந்திரமயத்தினாலும் குறைந்த ஊதியத்தை தேடி தொழிற்சாலைகள் நகர்வதாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தினமும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராட வேண்டியுள்ளது.

போர் மூலமாக ட்சார் அரசு ரஷ்யாவில் தேசிய பாசிசத்தை தூண்டி விட்டதைப் போல, நவீன தாராளமயத்துடன் துணை சேர்ந்து சமூகத்தின் பின்னடைவு சக்திகளை தூண்டி விட்டு, பாசிச சக்திகள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இச்சூழ்நிலையில் ரஷ்யப் புரட்சி இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பாடங்கள் ஏராளம்.

ரஷ்யப் புரட்சி தொழிற்சாலை கொடுமைகளில் இருந்து எழுந்த புரட்சியாகும். எழுச்சி பெற்ற தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து, தொழிற்சாலைகளில் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் கோரி எழுந்த இப்புரட்சி, சமத்துவம், நீதி மற்றும் சுரண்டலில் இருந்து விடுதலைகளுக்கான கோரிக்கைகளோடு சமூகத்திலும் பரவியது. ‘சுதந்திரத்தின் வெற்றி முழக்கமே ரஷ்ய புரட்சி. சமூகத்தின் படிநிலைமைகளை தொடர்ந்து, மக்களின் தொடர்ச்சியான முறையான வளர்ச்சிக்கான, புதுவகையான சமூக வாழ்விற்கான ஒவ்வொரு புதுக் கட்டமைப்புகளையும் அது உருவாக்கிக் கொண்டது’, என இத்தாலிய அறிவுஜீவி ஆண்டோனியோ க்ராம்சி பதிவு செய்கிறார்.

இம்மகத்தான ரஷ்ய புரட்சியின் 100வது ஆண்டில், சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளிலும் ஜனநாயக சோசலிசத்திற்கான பணிகளில் ஈடுபட இந்திய தொழிலாளர் வர்க்கம் சூளுரைப்போம்.

This entry was posted in Analysis & Opinions, Featured and tagged , , , , , . Bookmark the permalink.