மாணவர்களை பாதுகாத்ததற்காக மீன் தொழிலாளர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறை

காவல் துறை வைத்த தீயினால் பல லட்ச மதிப்புள்ள மீன்களும் உபகரணங்களும் நாசம்

burnt fish market at Nadukuppam

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் நடந்த ஒரு வார ஜல்லிக்கட்டு போராட்டம் ஜனவரி 23 அன்று அரசின் அடக்குமுறையால் வன்முறை கொண்டு அடக்கப்பட்டது. நகர காவல்துறையின் நீதிக்குப் புறம்பான அத்துமீறலால், போராட்டகாரர்களோடு, மெரினாவை ஒட்டிய மீனவர் குப்பங்களும் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகினர். மெரினாவிற்கு செல்லும் பாதையில் அமைந்த நடுக்குப்ப மீனவர் குப்பத்தை காவல்துறை சூறையாடினர். காவல் துறை வைத்த தீயினால் பல லட்ச மதிப்புள்ள மீன்கள், தட்டுகள், குளிர் சாதனப் பெட்டிகள், தராசு அனைத்தும் முற்றிலும் சாம்பலாயின. போராட்ட மாணவர்கள் காவல் துறையிடம் இருந்து தப்பி ஓடிய போது அங்குள்ள மீனவ மக்கள் உதவி செய்ததால், காவல் துறை பெண் மீன் தொழிலாளர்களையும் மீனவ மக்களையும் விரட்டி அடித்தனர். போராட்டக்காரர்களை பிடிக்கஅவர்களின் வீடுகளில் புகுந்து பொருட்களை நாசமாக்கினர். அங்கிருந்த ஆட்டோக்களை காவல்துறை தீவைக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாகியுள்ளன. பலதர மக்கள் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க காவல்துறையின் தாக்குதல் மீனவ மக்களையும், தலித் மக்களையும் குறி வைத்துள்ளன.

லைட் ஹவுஸ் ரயில் நிலையத்தையும் மெரினா சாலையையும் இணைக்கு சாலையில் நடுக்குப்பத்தின் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு மீன் தொழிலாளர்களும் சில தலித் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். மீன் சந்தையில் பல கடைகள் கம்புகளினாலும் கொட்டாய்களினாலும் நிறுவப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பெண்கள் மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி இங்கு தினமும் விற்கின்றனர். இதற்கான ஒவ்வொரு நாளும் சுமார் 10000ரூபாயில் இருந்து 30000ரூபாய் வரை முதலீடு செய்கின்றனர். இதற்கான முதலீடு இங்குள்ள தனியார் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அதிக வட்டிக்கு வாங்கப்படுகிறது. மேலும் இவர்கள் குளிர் சாதனப் பெட்டி, மீன் அறுப்பதற்கான கத்திகள், தட்டுகள், தராசு எனப் பல உபகரணங்களை வாங்கி வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் அடித்த வார்தா புயலால் மீன் சந்தை சேதமடைந்து தற்போது தான் அதை மீண்டும் சீர்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்து காவல்துறை வைத்த தீயினால் சந்தை முழுவதும் சாம்பலாகி உள்ளன. ‘நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மீனை கழுவி வைக்கும் தட்டு கூட மிஞ்சவில்லை. குளிர் சாதனப் பெட்டி முழுவதுமாக சேதமடைந்து விட்டது. நாங்கள் திரும்ப மீன் வாங்கினால் கூட எப்படி வைத்து விற்பது? இதற்கான பணத்திற்கு நாங்கள் எங்கே போவது? திரும்பவும் விற்பனையை ஆரம்பிக்க வெகுநாளாகும். இதை எல்லாம் சீர் செய்ய நான் பணத்திற்கு எங்கே போவேன் என்று தெரியவில்லை. என் பெண் என்னுடன் இருக்கிறாள். அவளுடைய இரு குழந்தைகளை எப்படி கவனித்து கொள்வேன் என்று தெரியவில்லை’ என ஒரு பெண் தொழிலாளர் கூறினார். ஒவ்வொரு தொழிலாளரும் ரூ30000 முதல் ரூ50000 வரை இழந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களின் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களும் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன.

Burnt Refrigirator at fish market

Burnt Refrigirator at fish market

போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன் தீ வைத்ததனால், லத்தி அடி, கண்ணீர் புகை ஆகிய வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் பல போராட்டக்காராகளை கைது செய்வதற்கும் காரணமாக காவல்துறை கூறியுள்ளது. ஆனால் காவல்துறைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணற்ற வீடியோ பதிவுகளினால் காவல்துறையின் கூற்றை மக்கள் நம்பவில்லை. நடுக்குப்பத்திலும் காவல்துறையிடம் இருந்து தப்பிய போராட்டக்காரர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று அங்கு வாழும் மக்கள் ஆணித்தரமாக கூறினர். மாறாக அவர்கள் மீதும் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையின் அத்துமீறிய வன்முறைகளையே அவர்கள் கூறினர். ‘இங்கு வந்த போராட்ட மாணவர்கள் மீன் சந்தையை தீ வைத்ததாக எழுதிக் கொடுக்குமாறு காவல்துறை கேட்டதாகவும் அவ்வாறு கொடுத்தால் இழப்பீட்டிற்கு உடனடியாக ஏற்பாடு செய்வோம் என்று அவர்கள் கூறினர். ஆனால் ஒன்றும் செய்யாத மாணவர்களை நாங்கள் காட்டிக் கொடுக்கமாட்டோம்’ என்று பெண் மீன் தொழிலாளர் ஒருவர் கூறினார்.

Ice breaking machine burnt

போராட்டத்தில் தாங்கள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் ஆனால் பல வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்ததாக பகுதி மக்கள் கூறினர். அங்கு வந்த மாணவர்கள் தங்களை எந்த வகையிலும் இடையூறு செய்யவில்லை என்றும் பாதுகாப்பற்ற முறையில் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். ‘போராட்டம் நடக்கும் எந்த நாளிலும் எந்த பிரச்சனையும் இல்லை. காவல் துறையின் செயலுக்கு பின்னர் தான் வன்முறை வெடித்தது. நாங்கள் என்ன செய்வது? மாணவர்களை அடிவாங்கட்டும் என்று விட்டுவிடுவதா? அவர்கள் எங்கள் குழந்தை இல்லை ஆனால் நாங்களும் பெற்றோர் தானே. போராட்டக்காரர்கள் தான் ஓடினார்களே அதற்கப்புறமும் ஏன் காவல்துறை அவர்களை அடித்தனர்? ஏன் எங்களை சந்தையையும் வாகனங்களையும் அவர்கள் எரித்தார்கள்? நாங்கள் என்ன செய்தோம்? எங்களை அவர்கள் ‘தேவடியா’ என்று தரக்குறைவாக அழைத்தனர். எங்களை அடித்து விரட்டி விட்டு சந்தையை எரித்தனர். எங்களால் எதையும் மீட்க முடியவில்லை’ என ஒரு மீன் தொழிலாளர் கதறினார்.

மெரினாவில் உள்ள மற்றப் பகுதிகளிலும் இதைப் போன்ற வன்முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். மாட்டாங்குப்பம், அம்பேத்கர் பாலம் ஆகிய இரு தொழிலாளர் வர்க்கப் பகுதிகளிலும் காவல் துறை வாகனங்களை தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் ஒரு உண்மை அறியும் குழு ஒன்று நகரத்தின் பல பகுதிகளை பார்வையிட்டு செய்திகளை உறுதிசெய்துள்ளனர்.

முன்னாள் பல்கலை கழக வேந்தர் முனைவர் வசந்தி தேவியின் தலைமையில் சென்ற இன்னொரு குழு நடுக்குப்ப பெண்களை சந்தித்தனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இச்செயல்களுக்கு காரணமான அரசு அதிகாரகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை ஏற்படுத்திய சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் கோரியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மீன் தொழிலாளர்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பண மதிப்பு நீக்கத் திட்டம், புயல் ஆகியவற்றால பாதிப்படைந்த மீன் தொழிலாளர்கள் மேல் மேலும் வன்முறை செலுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசம் குடியரசு தினத்தை கொண்டாடும் வேலையில் அரசு ஒடுக்குமுறையின் சிதைவை சீர்செய்யும் பணி மீண்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்களின் சாட்சி – வீடியோ பதிவுகள்:

This entry was posted in Fish Workers, News, Press Releases, Women Workers, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.