தொடர்ந்து வாழ்வாதார நெருக்கடியை சந்திக்கும் மீன் வியாபார பெண் தொழிலாளர்கள்

வார்தா, ஜல்லிக்கட்டு, எண்ணெய் கசிவு எனத் தொடரும் பிரச்சனைகள் – கண்டு கொள்ளாத அரசு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடுக்குப்பம் பெண் மீன் வியாபாரத் தொழிலாளர்களின் மீன் சந்தை அனைத்துப் பொருட்களுடன் தீக்கரையாக்கப்பட்டது. காவல்துறையால் துரத்தப்பட்டு நடுக்குப்பம் பகுதியில் தஞ்சம் அடைந்த ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததனால் காவலர்களே நடுக்குப்பம் மக்கள் மீது கண்ணீர் புகையை வீசி மீன் சந்தையை தீக்கரையாக்கினர் என்பது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியது. இதில் மீன் சந்தையுடன் தொழிலாளர்கள் வைத்திருந்து உபகரணங்கள் மற்றும் ரூ10000 முதல் ரூ 50000 முதல் அவர்கள் வியாபாரம் செய்ய வைத்திருந்த மீன்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன.

இதை அடுத்து பிப்ரவரி 2 அன்று சுமார் 88 தற்காலிகக் கடைகளை தமிழ்நாடு அரசு நிறுவியது. இத்தற்காலிக கடைகள் திறந்து ஒரு வாரம் ஆகிய பின் பாதி கடைகள் காலியாகவே உள்ளன. ஆங்காகங்கே உள்ள கடைகளில் தொழிலாளர்கள் ஒரு சில மீன்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் மீன் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உபகரண மற்றும் மீன் இழப்புகளை பற்றி அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. தங்களுடைய முதலீட்டு இழப்பீட்டை ஈடுகட்ட அரசு முன்வர வில்லை என்று மீன் தொழிலாளர்கள் வேதனைப்படுகின்றனர். ‘வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு உடனடி உணவு மற்றும் செலவிற்காகக் கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை’ எனக் கூறினார் ஒரு பெண் தொழிலாளர். தங்களுக்கு உதவி செய்ய அமைப்புகளும் சமூக மக்களுமே முன்வந்ததாக கூறிய அவரகள் ஊரில் உள்ள ஆண்கள் பெண்கள் நேரடியாக உதவிகளை பெற தடை செய்கின்றனர் என்று கூறினர். இத்தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ முகாம்களை ஐடி தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தாங்கள் முன் இருந்த இடத்தில் நிரந்தரக் கடைகளை கட்டுவதற்காக தற்போது சாலையோரம் நடைபாதைகளில் ஒரு தகர தகடுகளை கொண்டு கடைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கே செல்லும் வாகனப் புகைகளாலும், வெப்பத்தினாலும் தாங்கள் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறினர். நிரந்தரக் கடைகளை அமைப்பதற்கு இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

ஒரு சில மீன் தொழிலாளர்கள் கடன் வாங்கி தற்காலிகக் குளிர் சாதனப் பெட்டிகளை வைத்து மீன்கள் வாங்கி விற்றாலும் தற்போது இரண்டு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் சிந்தியுள்ளதால் மீன்களும் விற்பனையாவதில்லை என்று தொழிலாளர்கள் கூறினர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இருந்து தங்களை தீவிரவாதிகளாகவே காவல்துறை பார்ப்பதாகவும், அவ்வப்போது வந்து கேமராக்களில் வீடியோக்கள் பதிவு செய்கின்றனர் என்றும், காவல்துறை இரவில் இங்குள்ள இளைஞர்களை பிடித்துச் செல்வதாகவும் மீனவப் பெண்கள் குற்றம் சாட்டினர்.

This entry was posted in Fish Workers, News, Street Vendors, Women Workers, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.