பாங்கார் போராட்டம்: நிலம் கையகப்படுத்துதல், நவ தாராளவாத வளர்ச்சி முறைக்கு எதிரான தளராது நீளும்போராட்டம்

மேற்கு வங்கத்தின் லால்கார் மாவட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கப் போராட்டம் ஒன்று நவம்பர் 2008ல் துவங்கியது. 2008 நவம்பர் 5 அன்று மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்திய மேற்கு வங்கக் காவல்துறையின் செயலுக்கான எதிர் வினையாக அது துவங்கியது. அதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. காவல்துறை தாக்குதலுக்கு முன்பு, ஸ்டீல் ஆலையொன்றை அமைப்பதற்காக ஜிந்தால் நிறுவனம் பலவந்தமாக நிலத்தைக் கையகப்படுத்தியதால் ஏற்பட்ட  கோபம் அந்த மக்களின் மனதில் கனன்று கொண்டிருந்தது. எனவே, லால்கார் போராட்டம் நிலப்பறிப்புக்கு எதிரான, அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான, காலங்காலமாக நடந்துவரும் கையறுநிலைக்கும் அவமதிப்புக்கும் எதிரான  இயக்கமாகும். [1]

அதுபோன்றதொரு இயக்கம் மீண்டும் மேற்கு வங்கத்தில் துவங்கியுள்ளது. இந்தமுறை பாங்கார் என்று சொல்லப்படும், பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில், இயக்கம் துவங்கியுள்ளது. இந்திய பவர்கிரிட் கார்ப்பரேஷன் (Powergrid Corporation of India -PGCIL) மேற்கொண்டுள்ள, துணை மின்நிலையம் கட்டும் திட்டத்திற்கு எதிராக இயக்கம் துவங்கியுள்ளது. துணை மின் நிலையம் 13 ஏக்கர் பரப்பில் கட்டப்படுகிறது. அதற்கான மின் கோபுரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏறக்குறைய 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. TMC அரசு பலவந்தமாக நிலத்தை விவசாயிகளிடமிருந்துக் கைப்பற்றிய விதமும், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்த்துவிட்டு வன்முறையைப் பயன்படுத்தி PGCIL திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் இந்த இயக்கத்தைத் துவக்கி வைத்தன.

தற்போது நடப்பில் இருக்கும் நகர்மயமான வளர்ச்சி முறையின் பயனாளிகளாக உழைக்கும் மக்கள் இருக்க முடியாது என்பதை பாங்கார் மக்கள் இந்த நூற்றாண்டில் துவக்கத்தில் இருந்தே உணர்ந்துவருகின்றனர். பாங்காரை அடுத்துள்ள ரஜர்ஹத்நியூடவுன் பகுதியில் சட்ட விரோத நிலப்பறிப்பும் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களின் அட்டகாசமும், கடந்த 20 ஆண்டுகளாக,அரங்கேறிவருகின்றனநிலப்பறிப்பை இடதுசாரி அரசாங்கம் முன்னின்று நடத்திவந்தது. விவசாய நிலங்களைக் கொள்ளையடிப்பது, அவற்றை முன்னேற்றம் என்ற பெயரில் நகர்களாக மாற்றியமைப்பதை பாங்காரின் மக்கள் மிக நெருக்கத்தில் இருந்து பார்த்து வந்திருக்கின்றனர். பவர் கிரிட் இடத்திலிருந்து 3.5 கி.மீ தொலைவில்வேத கிராமம்என்றொரு  பொழுதுபோக்கு விடுதி முளைத்து எழுந்ததை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இப்படியான வலுக்கட்டாய நகர்மயமாக்கம் அந்தப் பகுதியின் நீர் வடிகால் முறையையும் விவசாயத்தையும் எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை அவர்கள்  கண்முன்னே கண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இரவிலும் பல லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பிலான வெடிகளை வேத கிராமத்தின் விருந்துகளில் ஒரே சமயத்தில் வெடிக்கப்படும். ‘வளர்ச்சிஎன்றால் என்ன என்பதற்கு அந்த வெடி விருந்துகளே சாட்சி. பாங்கரின் உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் ஒவ்வொரு நாள் உணவும் போராட்டம்தான். சிதைந்துபோன சாலைகளும்பற்றாக்குறையான போக்குவரத்து முறையும்தான் அக்கிராம மக்களுக்குக் கிடைத்த வளர்ச்சி!  [3]

தற்போதைய போராட்டத்தின் துவக்கப் புள்ளி 2012ல் நிகழ்ந்தது. மின் நிலையம் ஒன்றைக் கட்டுவதற்காக அப்போதுதான் பல நிலத்துண்டுகள் கையகப்படுத்தப்பட்டன. அந்தக் கிராமத்தின்  மக்கள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். கிராமத்தினரைக்  கூட்டத்திற்கு  அழைத்திருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளூர் TMC தலைவர் அரபுல் இஸ்லாமையையும் அழைத்திருந்தார். அரபுல் இஸ்லாம் என்ற அந்த நபர் பங்காரின் பயங்கரவாதி“ என்று அறியப்படுபவர். கூட்டத்தில் நுழைந்துகொண்ட அரபுல் இஸ்லாமின் குண்டர்கள் கிராமத்தினரைப் பேசவிடவில்லை. கிராமத்தினர் தங்களின் ஒப்புதலை அளித்துவிட்டதாகக் குண்டர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் சொன்னார்கள். அரபுல் இஸ்லாம் கிராமத்தில் நடைபெற்ற அனைத்து நில விற்பனையையும் பேரம் பேசி முடித்தார். கிராமத்தினர் நிலத்தை விற்கும்படி வலுக்கட்டாயப்படுத்தப்பட்டனர். விற்றவர்களுக்குப் பதிவு செய்யப்பட்ட ஆவணப்படியான விலையில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவான தொகைதான் கையில் கிடைத்தது.

2012க்கும் 2014க்கும் இடையில் வரப்போகும் திட்டம் என்ன என்பது பற்றி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. அப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் பிரச்சனையை விவாதிப்பதற்காக பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். ஆனால், காவல்துறை அந்தக் கூட்டத்திற்கான அனுமதியைத் தொடர்ந்து மறுத்து வந்தது. நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிய சமயத்தில் உள்ளூர் TMC தலைவர் அடையாளக் கூட்டம் ஒன்றை அரை மணி நேரம் நடத்துவதற்கு அனுமதி கேட்டார். காவல்துறை கூட்டம் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில் சமூகத் தலைவர்கள் பவர் கிரிட் பிரச்சனையைப் பேசத் துவங்கியவுடன் கூட்டம் கலைக்கப்பட்டது.

பவர் கிரிட்டுக்கான பிரதான வேலை 2014ல் துவங்கியது. 2016ல் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் யந்திரங்கள் (transmission carriers) கொண்டுவரப்பட்டபோது, கிராமத்தினர் எதிர்த்து நிற்க முடிவு செய்தனர். விவசாய நிலத்தின் வழியே அந்த யந்திரங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அதனால், விவசாயம் செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. நவம்பர் 3 அன்று PGCIL நிறுவனத்தின் குழு ஒன்று, காவல்துறையின் பாதுகாப்புடன், மின்கோபுரம் ஒன்றை நிறுவிக்கொண்டிருந்தபோது, அந்த விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்காவல் படையினரால், பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய காவல் படையில் பெண் காவலர் யாரும் இல்லை என்பது கூடுதல் செய்தி.

அதன்பின் சில நாட்கள் சென்ற பின்னர் நிலம், வாழ்வாதாரம், உயிர்ச்சூழல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கமிட்டி அமைக்கப்பட்டது. போராட்டத்தைத் திட்டமிட்ட முறையில் நடத்துவதற்காக அந்தக் கமிட்டி உருவாக்கப்பட்டதுகமிட்டியின் கிளைகள் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள பல்வேறு ஜனநாயக சக்திகளையும் முற்போக்கு இயக்கங்களையும் அமைப்புகளையும், ஈவிரக்கமற்ற காவல்துறை ஒடுக்குமுறைக்கு இடையில், போராடும் விவசாயிகள்  தொடர்புகொண்டனர். இப்படியாக, மக்கள் திரள் அமைப்புகளின் பல்வேறு செயல்வீரர்கள் கமிட்டியின் செயல்பாட்டில் பங்கெடுத்தனர்.

மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள்  அமைப்பான முறையில் பங்கெடுத்தது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தது. அவர்கள் அமைப்பாகாத கிராம கும்பல்என்ற கட்டத்தை கடந்துவிட்டிருந்தனர். நூற்றுக் கணக்கானவர்கள் கமிட்டி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டிருந்தார்கள். [3]  முதலமைச்சர் உட்பட அதிகாரத்தில் உள்ள அனைவருக்கும் மக்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்த மனுக்களை அளித்தனர். 2016 நவம்பர் முதல் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கள் முயற்சி செய்தனர். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த நாள் வரை எந்தவொரு கூட்டத்திற்கும் PGCIL அதிகாரிகளோ, அல்லது அரசு அதிகாரிகளோ, கிராம மக்களின் பிரச்சனை என்னவென்று கேட்பதற்கு ஒரு கூட்டத்திற்குக்கூட அழைப்பு விடவில்லை என்ற உண்மையையும் நாம் கவனத்திலகொள்ள வேண்டும். நவ தாராளவாத யுகத்தின் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்கள்ஒடுக்கப்பட்ட மக்களின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டு ஒப்புக்கொள்ள வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் 2016 டிசம்பர் 19 அன்று அரபுல்லின் ஆயுதம் ஏந்திய குண்டர்கள், போராட்டத்தின் அடித்தளமாக இருந்த இரண்டு கிராமங்களின் மீது தாக்குதல் தொடுத்தனர். வளர்ந்துவரும் இயக்கத்தை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதே அந்தத் தாக்குதலின் நோக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக எதிர்த்து நின்றனர். அதன் காரணமாக, குண்டர்கள் தங்கள் திட்டத்தைக் கைவிட்டு கிராமங்களிலிருந்து தப்பித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் எதிர்ப்புக்கு முன்னால், TMC குண்டர்கள்  கோழைகளாகி தொடை நடுங்கி ஓடியது பாங்கார் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். [3]

மக்களின் ஜனநாயக விருப்பங்களும் அவற்றின் வெளிப்பாடும் மக்கள் தாங்களே கட்டமைத்த கமிட்டியின் வழியே வெளிப்பட்டன என்பதும், அவர்களின் நம்பிக்கைகளின் வெளிப்பாடாகக் கமிட்டி இருக்கிறது என்பதும் போராட்டம் தீவிரமடைந்தபோது தெளிவானது. டிசம்பர் 22 அன்று பலப் பத்தாயிரக் கணக்கான மக்கள் ஆளுநர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இயக்கம் குறித்த பொய் பிரச்சாரங்களையும் மாயைகளையும் பேரணி உடைத்தெறிந்தது. உண்மையான செய்தி என்னவென்பதை வெளிப்படுத்தியது. ஆனால், மக்களின் உண்மையான அதிருப்தி என்னவென்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு மாறாக, நிர்வாகமும், ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் மனுவைப் பெற்றுக்கொள்ளக் கூட மறுத்துவிட்டனர். பேரணிகள், கூட்டங்களைத் தடை செய்வதற்காக அந்தப் பகுதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியான நிலையில், நெடுஞ்சாலையை மறிப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. 11, ஜனவரி 2017 அன்று அவர்கள் நெடுஞ்சாலை மறியல் செய்தனர். [2]

ஏறக்குறைய 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்வரை ஹடோவா சாலையை மறித்தனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கான மிகப் பெரிய எண்ணிக்கையிலான காவல் படையும் காவல் படை அதிகாரிகளும்  அழைக்கப்பட்டனர். பவர்கிரிட்டின் முன்பு, இயக்கத்தின்  தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாலை 3 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் கமிட்டியை விரைவில் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நடக்கும் வரை பவர் கிரிட் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராம மக்களிடம் சொல்லப்பட்ட இரண்டு உறுதிமொழிகளும் மீறப்பட்டன.

இன்னும் சொல்லப்போனால், ஜனவரி 16 அன்று போராட்டத்தின் தலைவர்கள் இருவர் சாதாரண உடுப்பில் இருந்த போலீஸ்காரர்களால், எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் கைது செய்யப்பட்டனர். மிகப்பெரும் போராட்டம் வெடித்தது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரியதால், அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இருந்தபோதும், ஜனவரி 16 அன்று இரவே (தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மெரினா போராட்டக்காரர்கள் மீதும், மீனவர்கள் மீதும் தமிழ்நாடு காவல்துறை தாக்குதல் நடத்தியதற்குச் சரியாக ஒரு வாரம் முன்னால்..) போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கிராமம் கிராமமாகச் சென்ற காவல்துறை கண்ணில்பட்டவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியது. பெண்கள், முதிர் வயது பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் அடி உதைக்கு ஆளானார்கள். கழிப்பறையில் பதுங்கிய பெண்கள் கூட தப்பிக்க முடியவில்லை. ஆண் காவல் அதிகாரிகள் பெண்களை வெளியே இழுத்து ஆடைகளைக் களைந்து, மிருகத்தனமாக அடித்தனர். பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். பல குடும்பங்களுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டது. [3]

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அடுத்த நாள் காலையிலேயே ஹடாவா சாலையை மக்கள் மறுபடியும் மறித்தார்கள். மிகப் பெரும் அளவுக்குக் காவல் படை அங்கே குவிக்கப்பட்டது. பிரச்சனையை அமைதியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முந்தைய இரவு நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்பதற்கு மாறாககண்ணீர் புகைக் குண்டு வீசி தங்கள் பலத்தைக் காட்ட காவல்துறை தீர்மானித்தது. அரபுல்லின் குண்டர்கள், காவல் படையினருக்கு இடையே மறைந்து நின்று, கூட்டத்தைக் கலைப்பதற்காக  நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் சொன்னார்கள். ஆனால், போராட்டக்காரர்கள் இதற்கும் விட்டுக்கொடுக்க, பின்வாங்கத் தயாராக இல்லை. போலீஸ்காரர்களும் குண்டர்களும் இணைந்த கூட்டுப்படை மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அலாம்கிர் என்ற எம்எஸ்சி மாணவரும், தினசரி கூலி தொழிலாளர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் தியாகி ஆனார்கள். 2 சிறுவர்கள் உட்பட 12 பேரை காவல்துறை கைது செய்தது.

வெறும் 20 ஏக்கர்தான் பிரச்சனை. அப்படியானால், 52 குடும்பங்கள்தான் பாதிக்கப்படும். அப்படியிருக்க பத்தாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வது ஏன்? என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர். உண்மையென்னவென்றால், பாங்காரின் சமூக பொருளாதார நிலைமை மிகவும் கலவையானது. பவர் கிரிடின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், மீன் தொழிலாளர்களும் நேரடியாகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மீதமுள்ள மக்கள் அன்றாடக் கூலித் தொழிலாளர்களாக, குறிப்பாக, அருகாமைப் பகுதிகளில் கட்டுமானத் தொழிலாளர்களாக உழைத்துப் பிழைக்கின்றனர். அவர்கள் போராடுவதற்கு என்ன காரணம்?

TMC  குண்டர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தங்களின் அன்றாட வாழ்க்கையின் மீதும், சுற்றுச்சூழலின் மீதும் பவர் கிரிட் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களுக்கு இருந்தது. அதற்குச் சரியான பதில் சொல்வதற்கு மாறாக, நிர்வாகம், திமிரான வகையிலும் அடக்குமுறையின் மூலமும் மக்களின் அச்சங்களுக்குப் பதில் அளித்தது. ஒரு பக்கம் மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டது. மறுபக்கம் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. இப்படியான, மக்களை விலக்கி வைக்கின்ற, அரசியல் சட்டத்துக்கு விரோதமான வளர்ச்சி முறையைப் பாங்காரின் மக்கள் கேள்விக்குள்ளாக்கினர்.

போராட்டக்கார்கள் மீது பிணையில் விட முடியாத 25 குற்றங்களைக் காவல்துறை சாட்டியுள்ளது. இயக்கத்தை முடக்கிப் போடுவதற்காக, ஜனவரி 25 அன்று ஷர்மிஸ்த்தா செளத்ரி, பிரதாப் சிங் தக்கூர் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போதும் சிறையில் இருக்கின்றனர். முறையான விசாரணையின்றி நெடுங்காலம் மக்களைச் சிறையில் அடைப்பதற்காக UAPA போன்ற கொடூர சட்டங்களின்  கீழ் மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. ஷர்மிஸ்த்தா செளத்ரி, பிரதாப் சிங் தக்கூர் ஆகிய இருவரும் CPI(ML) Red-star கட்சியின் செயல்வீரர்கள். அக்கட்சி தடைசெய்யப்பட்ட கட்சி அல்ல. இருந்தபோதும், பிரதான ஊடகங்களும் அரசும் அவர்களை நக்சல் அமைப்பினர் என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். போராட்ட இயக்கத்தின் தலைவர்களின் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவதால் இயக்கதைப் ‘ பயங்கரவாத இயக்கம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது என்பதே பொருளாகும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுப்பவர்களை மட்டுமே, UAPA வின் கீழ் கைது செய்ய முடியும் என்பது  அனைவரும் அறிந்த ஒன்று. பலவந்தமாக நிலத்தைப் பறிப்பது, மக்களின் வாழ்வாதாரத்தைச்  சிதைப்பதற்கு எதிராகப் போராடியவர்களை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியெல்லாம் நடந்தபோதும், தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இயக்கத்தின் மனவுறுதியைக் குலைப்பதற்காக, பாங்காரிலும், கொல்கத்தாவிலும் காவல்துறை தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டன. போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காகக் கண்மூடித்தனமாக கைதுகள் நடந்தன. பாங்கார் போராட்டத்திற்கு ஆதரவாக, கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட ஒருமைப்பாடு கமிட்டியின் தலைவர்களான குஷால் தேப்நாத்தும், ஷங்கர் தாசும், பெருநகரின் மையத்தில், பட்டப் பகலில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மீது UAPA உள்ளிட்ட பல பொய் வழக்குகள் போடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்தைச்செய்தவர் என்ற காரணத்தால் அமிதாப் பட்டாச்சார்யா என்ற செயல்வீரரின் வீட்டில் அடிக்கடி  தேடுதல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாங்கார் போராட்டத்தின் அங்கமாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால், APDR  உறுப்பினர்கள் மீதும், மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது 15  பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குள், காவல்துறை மீது தாக்குதல் தொடுத்தல் ஆயுதச் சட்டத்தை மீறுதல் போன்ற, பிணையில் விட முடியாத வழக்குகள். கமிட்டியின் உள்ளூர்  அமைப்பாளர்களும், போராட்டம் துவங்கிய காலத்திலிருந்து அதில் அங்கம் வகிப்பவர்களுமான காலு ஷேக், அபுல் உசைன், ஆட் மோலா போன்றவர்கள் காவல்துறை நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தின் மற்றொரு தலைவரான அலீக் சௌத்ரியைக் கைது செய்ய காவல்துறை விடாப்பிடியாக முயற்சி செய்துகொண்டுள்ளது. இருந்தபோதும், கிராம  மக்கள் பின்வாங்கத் தயாராக இல்லை. இப்பகுதியின் மக்களில் 95 சதம் முஸ்லீம்கள் என்பதால், ரம்ஜான் மாதத்தில் சற்று தணிந்த பின்னர், அதற்குப் பின்பு பாங்கார் மக்கள் மீதான அரசு ஒடுக்குமுறை அதிகரிக்கும். எப்படியானாலும்இன்றைய நிலையில்  பாங்கார் மக்களின் மன உறுதியும், அவர்களின் அமைப்பு பலமும், கமிட்டியும் வலுவாக உள்ளன.

இதற்கு முந்தைய மக்கள் இயக்கங்கள் போலவே, தற்போதைய இயக்கம் அமைப்பாக்குவதற்கான புதிய வடிவங்களை வழங்கியுள்ளது. இயக்கத்தின் மிக முக்கியமான பலம் பெண்கள் ஆற்றும் பாத்திரம் ஆகும்.[3] ஜனவரி 17 கைதுகளுக்குப் பின்னர் போராட்டத்தின் தலைமையைத் திரும்பத் திரும்பப் பெண்கள் ஏற்றுள்ளனர். போலீஸ் பயங்கரத்தை எதிர்ப்பதற்காகப் பெண்கள் கொண்ட சிறப்புக் கமிட்டியைக் கிராமங்கள் தோறும் உருவாக்கியுள்ளனர். இந்த ஜனநாயக அமைப்பை ஆயுதம் தாங்கிய இளஞ்சிவப்பு கும்பல்என்று பிரதான ஊடகங்கள் கதைகட்டி எழுதுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால், நமது நாட்டின் இருண்ட காலம் இது. நமது நாட்டின் பாசிச ஆட்சியாளர்கள் நமது நாடு முன்னெப்போதும் இல்லாத  வகையில் முன்னேறுகிறதுஎன்று உரத்துக் கூச்சல் போடும் இருண்ட காலம் இது. இந்த புளுகைத் தோலுரித்துக்காட்டுவதாக பாங்கார் இயக்கம் இருக்கிறது. மிகக் கொடூரமான அரசு ஒடுக்குமுறையின் முன்பு, ஜனநாயக வெகுமக்கள் இயக்கமான பாங்கார் போன்ற போராட்டங்கள் சிறிய அலைகளை எழுப்புகின்றன. மேற்கு வங்கத்தில் தென்படுவது போல, குறிப்பாக, நிலத்தைப் பாதுகாப்பது என்ற பிரச்சனையை மையம்கொண்டு பல்வேறு போராட்டங்கள் எழுகின்றன. கோகத்தின் பாபடிகை கிராமத்தினர் தங்களின் சமூக குளத்தைக் காக்கப் போராடுகின்றனர். சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பலவந்தமாக நிலத்தைப் பறிப்பதற்கு எதிராக அம்டங்காவின் விவசாயிகள் போராடுகிறார்கள். பிர்பும் மாவட்டத்தின் ஷிப்பூர் விவசாயிகள், பர்துவானின் அன்டல் விவசாயிகள் வளர்ச்சி என்ற பெயரால் சட்ட விரோதமாக நிலத்தைப் பறிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

[1]https://southasiarev.wordpress.com/2010/01/02/amit-bhattacharyya-on-the-historic-importance-of-the-lalgarh-movement/

[2] WSS report on the Bhangor struggle: Towering resistance

[3] PDSF report on the Bhangor movement: Bhangor: An ongoing struggle against anti-development

This entry was posted in Agriculture, Construction Workers, Fish Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.