கடற்கரைத் தமிழ்நாட்டுக்கு இருண்ட புத்தாண்டு பிறந்தது!

ஓக்கிப் புயலில் தொலைந்துபோன நூற்றுக்கணக்கான மீனவர்களை இன்னுமும் காணவில்லை!

ஒரு மாதத்துக்கு மேலாக நாட்கள் நகர்ந்தபோதும், தென்தமிழ்நாட்டின் மீனவக்கிராமங்களில் இன்னதும் துக்கம் நீடிக்கிறது. இந்தியக் கடற்கரையைத் தாக்கிச் சீரழித்த ஓக்கி புயல் அன்புக்குரியவர்களை ஆழ்கடலில் சிதற அடித்திருக்கிறது. வெல்லற்கரிய கடற்படையை வைத்திருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் இந்திய அரசு மிகப் பரிதாபகரமானத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது: புயல் வருவது பற்றிய முன்னெச்சரிக்கை அளிக்கப்படவில்லை; மீனவர்களைக் காக்கவும் இல்லை; தொலைந்துபோன மீன் தொழிலாளர்களை மீட்டுக்கொண்டுவரவும் முடியவில்லை. வேறுவழியின்றி மீனவர்கள் துணிவே துணை என்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள கடலுக்குச் சென்ற போதும், இன்னமும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்க முடியவில்லை. கடலுக்குச் சென்றவர்களின் குடும்பங்கள் துன்பக் கடலில் துடித்து வருகின்றனர்.

கிருத்துமஸ் அன்று வினவு என்ற சுதந்திரமான செய்தித்தளம் ஆவணப் படம் ஒன்றைத் திரையிட்டது. மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ப்போது நிகழ்ந்தது. ‘கண்ணீர் கடல்என்ற அந்த ஆவணப்படம், ஓக்கிப் புயலுக்குப் பின்பு மீனவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பத்தைப் படம்பிடித்துக் காட்டியது. மீனவ சமூகத்தினரின் பேட்டிகளும் பிரதான ஊடகத்தில் வெளிவந்த வீடியோ காட்சிகளும் ஆவணப்படத்தில் தொகுக்கப்பட்டிருந்தன. இயற்கைப் பேரழிவின்போது அதனைக் கையாளுவதில் அரசு நிறுவனங்கள் தோல்வியடைந்திருப்பதை ஆவணப்படம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.

ஆவணப்படத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

ஆவணப்படத்தைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலை மூத்தப் பத்திரிகையாளர் திருமிகு பாரதிதம்பி வழிநடத்தினார். ஓக்கிப் புயல் பாதிப்பு ஏற்படுத்திய சமயத்தில், பாரதி தம்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி செய்தி சேகரித்திருக்கிறார். வல்லவிளை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களான திருமிகு டிக்சனும், திருமிகு ஆல்பர்ட்டும் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேடுதல் பணிக்கு உதவுவதற்காக கடலோரக் காவல்படையின் கப்பலில் திருமிகு டிக்சன் படையினருடன் சென்றிருந்திருக்கிறார். கலந்துரையாடல் முழுமையையும் Vinavu.com தளத்தில் பார்க்கலாம்.

தன் மக்களை அரசு கைவிட்டது எவ்வாறு?

அரசு யந்திரம் கண்ட தோல்வியின் பல்வேறு மட்டங்களை கண்ணீர்க் கடல் ஆவணப்படம் தொகுத்து அளிக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை மிகவும் மோசமாக இருந்ததும், உள்ளூர் நிர்வாகத்தின் செயல்பாடும் கலந்துரையாடலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கன்னியாகுமரி கடற்கரைக்கு மிக அருகே ஓக்கி புயல் தீவிரமடைந்த காரணத்தால், எச்சரிக்கை விடுப்பதற்கு அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைத்தன. இருந்தபோதும், இந்திய வானிலை துறையின் எச்சரிக்கை மிகவும் தாமதமாக வந்தது. அதற்குள் மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்றுவிட்டார்கள். இருந்தபோதும், முன்னெச்சரிக்கை அளிக்கப்படவில்லை என்பதை விடவும் பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் பெரியதாகும்.

மாசுபாடு, துறைமுகங்கள் கட்டுவது, தீவிர மீன்பிடி போன்ற பல்வேறு காரணங்களால் கடற்கரைக்கு அருகே உள்ள மீன்வளம் தொடர்ந்து குறைந்துவருகிறது. எனவே, மீனவர்களின் பெரும்பகுதியினர்ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சர்வதேசக் கடலுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. மீன்பிடிப் பயணம் 5 முதல் 15 நாட்கள் வரை நீள்கிறது. சிலசமயம் ஒரு மாதம் வரை ஆழ்கடலுக்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேசப் பாதுகாப்பின் காரணமாக, ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் படகுகளில் செயற்கைகோள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசு தடைசெய்துள்ளது. ஆனால், கரையிலிருந்து கடலில் இருக்கும் மீன்பிடிக் களத்துக்குச் செய்தி அனுப்புவதைச் சாத்தியமாக்கும் Navtext என்ற முறையிருக்கிறது. நுன்னலை செய்தித் தொடர்பு ஏற்படுத்தலாம் என்ற முன்மொழிவும் இருக்கிறது. ஆனால், இவை எவற்றையும் அரசு ஏற்பாடு செய்து வைத்திருக்கவில்லை. மீன்பிடிக் கலங்களின் அபாய அறிவிப்பு முறை (distress alert system-DAS) ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. அதனைக் கண்காணிப்பதும், முயற்சிகளை ஒருங்கிணைப்பதும் மீன்வளத் துறையின் வேலையாகும். புயல் வந்தவுடனேயே தங்களை காப்பாற்றக் கோரி 120 படகுகள் DAS மூலம் சிக்னல்கள் கொடுத்துள்ளன என ஆல்பர்ட் சொல்கிறார். ஆனால், புயல் தாக்கி இரண்டு வாரங்கள் கடந்தபின்னர், டிசம்பர் 15 அன்றுதான் தங்களுக்கு அபாயம் குறித்த செய்திகள் வந்ததாக மீன்வளத் துறை சொல்கிறது. இந்திய வானிலைத் துறையின் எச்சரிக்கை சில மணி நேரங்கள் முன்னதாக வந்திருந்தாலும் கூட, ஆழ்கடலில் இருந்த மீனவர்களுக்கு தற்போதைய தகவல் கட்டமைப்பு முறையில் செய்தி கொடுத்திருப்பது சாத்தியமற்றது என்பதைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்வி காட்டுகிறது.

இப்படியான சூழலில் மற்றொரு வாய்ப்பு மட்டுமே சாத்தியம். இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் வியாபித்திருக்கும் கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையின் உதவி கொண்டு கண்காணிக்கவும் செய்தியைப் பரப்பவும், படகுகளை மீட்கவும் செய்திருக்கலாம். ஆனால், கடற்படையும் கடலோரக் காவலும் உடனடியாகச் செயல்படவில்லை என்றும், அவர்கள் களத்தில் இறங்கியபோது கூட கடற்கரையிலிருந்து 30 கடல் மைல்கள் (50 கி.மீ) வரை மட்டுமே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்றும் மீனவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தூரத்திற்குள்தான் பாரம்பரிய மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பவது வழக்கம். அவர்களை சாதாரண மொபைல் போன் மூலமே எச்சரிக்கை செய்துவிட முடியும். கடலோரக் காவல்படையினருடன் சென்றிருந்த டிக்சன் எந்த இடத்தில் தேட வேண்டும் என்பதற்கான புவியியல் அளவீடுகளை (GPS coordinates) அளித்திருக்கிறார். ஆனால், ஆழக்கடலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லையென்றம் அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றும் மறுத்திருக்கின்றனர். “அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடலோரக் காவல்படை நடவடிக்கை எடுக்கிறது என்று அறிவித்துக்கொண்டிருந்தபோது கூட, எங்களுக்கு உண்மையான உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாள் அளித்த தேடப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆயங்களை ( coordinates) நான் சொல்லியும் கூட படையினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், எனது பொழுது வெறுமனை கழிந்தது, என்று டிக்சன் சொன்னார்.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீனவர்களை மீட்டெடுக்கவில்லை என்பதால், எந்த இடத்தில் மீனவர்களைத் தேடினார்கள் என்ற விவரங்களை கடலோரக் காவல்படை அளிக்க வேண்டும், என்று ஆல்பர்ட்டும் கோரினார். “அவர்கள் மீனவர்கள் குழு ஒன்றைக் கண்டு மீட்டெடுத்து அதனைத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருந்தனர். மீட்கப்பட்ட மற்ற அனைவரும் மீனவர்களின் சொந்த முயற்சியில் மீட்கப்பட்டவர்களே. சிலர், அலைபாயும் கடலில் பல நாட்கள் நீந்தி தாங்களே கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களையும் காப்பாற்றிக்கொண்டுவந்தோம் என்று நிர்வாகம் சொல்லிக்கொள்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அரசின் கப்பல்கள் போதுமான அளவுக்கு ஆழக் கடலுக்குச் செல்லவில்லை, என்றும் ஆல்பர்ட் சொன்னார்.

விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்ட பல சம்பங்கங்களை ஆல்பர்ட் எடுத்துரைத்தார். “ஒவ்வொரு நிமிடம் காலதாமதம் ஆகும்போதும், ஒரு மீனவர் கடக்குப் பலியாகிவிடுவார். ஆனால், எங்களைக் காக்க வேண்டிய அரசு, நாங்கள் கட்டும் வரிப்பணத்தில் வாழும் அரசு, நேரத்தை வீணடித்தது. அது தன் முழு ஆற்றலைப் பயன்படுத்தவே இல்லை, என்ற ஆர்பர்ட் கூறினார்.

அரசு ஏன் தோல்வி கண்டது?

வானிலை அறிவியலின் இன்றைய நிலை காரணமாக, முன்கூட்டியே அறிவிப்புக் கொடுக்கத் தவறியதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்தை, நிவாரண நடவடிக்கையில் தாமதத்தை மன்னிக்கவே முடியாது. இந்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுத்தது என்பது இந்த சமூகப் பேரழிவு நிகழ்வதற்கான காரணமாக இருக்கிறது. இந்திய வானியல் துறை, மீன்வளத்துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையிலான மோசமான ஒருங்கிணைப்பு எப்படிப்பட்டது என்பதை முன்னெச்செரிக்கை விடப்பட்டது பற்றிய கூற்றுக்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆற்றல் உள்ள கடும் புயலாக ஓக்கி மாறிக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. புயல் தாக்குவதற்கு முன்பும், தாக்கிய பின்பும் கைவசமிருக்கும் கடற்படை வசதியைப் பணியில் இறக்குவதற்குக் காட்டிய தயக்கம் நம்மைத் திகைக்க வைக்கிறது. அரசும். பாதுகாப்புப் படைகளும் விரைவாகவும், காக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்பட்டிருந்தால் எத்தனை உயிர்களைக் காத்திருக்க முடியும் என்பது நமக்கு ஒரு நாளும் தெரியவராமலேயே போய்விடலாம்.

ஆனால், இது நிகழ்வதற்காகக் காத்திருந்த பேரழிவு என்பது மட்டும் உறுதி. சில பத்தாண்டுகளாகவே மீனவர்கள் ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், ஆழ்கடலுக்குள் செல்லும் படகுகளுடன் தகவல் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வசதிகளை அரசு தானே முன்வந்து இதுவரை செய்யவில்லை. செயற்கைக்கோள்கள் வழியாக பேரழிவு எச்சரிக்கை விடுப்பது குறித்து தேசிய ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்திருந்தபோதும், அவை எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மறைமுக வரிகளின் மூலமாக, அரசின் வருமானத்திற்கு மீனவ சமூகம் பெருமளவு பங்களிப்பு செய்கிறது என்று ஆல்பர்ட் சுட்டிக்காட்டினார். “எங்கள் பகுதிக்கும் கொச்சினுக்கும் இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் (ட்ராவலர்கள்) இருக்கின்றன. ஒவ்வொன்றும் பத்து லட்சம் மதிப்புள்ள டீசலையும் வேறு பிற பொருட்களையும் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றன. ரொம்ப சாதாரமாகக் கணக்குப் பார்த்தால் கூட GSTயாகவும் பிற வரிகளாகவும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 5 கோடியை மத்தியமாநில அரசுகளுக்கு அளிக்கிறோம். இருந்தபோதும் நாங்கள் கண்டுகொள்ளப்படாத சமூகமாகவே இருக்கிறோம், என்று சொல்கிறார் ஆல்பர்ட். இவ்வாறு சிறு நடுத்தர மீன் தொழிலைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் காரணமாக மீன் தொழிலாளர்கள் மரத்தின் பிடியில் தள்ளப்படுகிறார்கள்.

அதிக அளவு மூலதனம் கொண்ட தொழில்களின் இலக்காகக் கடற்கரைப்பகுதிகள் இருக்கின்றன. துறைமுகங்கள், அணு மின்சாரம், அனல் மின்சாரம் போன்ற அடிக்கட்டுமானத் தொழில்கள் அவற்றுடன் மாசுபடுத்தும் வேதி ஆலைகள் என்று பற்பல தொழில்களை கடற்கரை முழுவதும் கொண்டுவரும் வேலையை அரசு செய்துகொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கும் கொச்சினுக்கும் இடைப்பட்ட சில நூறு கிலோ மீட்டர்களில் விழிஞ்சம் மற்றும் இணையம் என்று இரண்டு துறைமுகங்களைக் கொண்டுவரும் திட்டம் இருக்கிறது. மேலும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டமும் இருக்கிறது. இதுபோன்றவளர்ச்சித்திட்டங்களின் பலியாடு மீனவ சமூகம்தான். மீனவர்கள் வாழும் இடமும், அவர்களின் வாழ்வாதாரமும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்ற அசிரத்தையும், மீன்பிடிக்கு ஆதரவானவற்றை அகற்றும் முயற்சியும் மீனவ சமூகத்தை மீன்பிடியிலிருந்து விரட்டுவதற்கான வழிகளில் ஒன்றாக இருக்கும் என்ற சாத்தியப்பாட்டை பேசிய பலரும் குறிப்பிட்டனர். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்பரேட்டுகளும், அரசும் கிடைக்கும் நிலத்தைக் கைப்பற்றிக்கொண்டு தங்களின் லாபத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த தீய திட்டத்தின் ஒரு பகுதிதான் அரசின்கவனக் குறைவோஎன்று மீனவ மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

கேரள அரசு அளிக்கும் இழப்பீட்டுக்கு இணையா, தமிழக இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவதற்குத் தமிழக அரசு மிகுந்த தயக்கம் காட்டியது. ஆனால், மீனவ சமூகத்தினர் சுட்டிக்காட்டுவது போல, எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும் கடலில் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியாது மட்டுமல்ல அரசின் மீதிருந்த நம்பிக்கையைத் திருப்பிக்கொண்டுவரவும் முடியாது. தேவையற்றக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, தகவல் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்துவது, உடனடி நடவடிக்கைகளுக்கான மீட்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமே உருவாக்கிக்கொண்ட இந்தப் பேரழிவிலிருந்து கற்றுக்கொள்வதற்காக, நாம் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள் பற்றியும் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தான் காப்பாற்றிய மீனவர்கள் பற்றியும் அவர்களைக் காப்பாற்றிய இடம் எது என்பது பற்றியும் அனைத்து விவரங்களையும் கடலோரக் காவல்படை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். உரையாடலின் போது, கடற்படை கப்பல்களில் உள்ள, பயண புள்ளிவிவரப் பதிவு கருவி (Voyage Data Recorder) பற்றி திருமிகு டிக்சன் குறிப்பிட்டார். அந்தக் கருவியின் பதிவுகளில் உள்ள தகவல்களை அளிப்பது பாதுகாப்புப் படைகள் எப்படி செயல்பட்டன என்பதை வெளிப்படையாகக் காட்டும்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்து வருகின்றன. ஓக்கி போன்ற கடும் புயல்கள் ஏற்படுவது சாதரணமான விஷயமாக ஆகப் போகிறது. இந்த நிலையில், மீனவ சமூகத்தை நிலைகுலைய வைக்கப் போகும் திட்டங்களைக் கொண்டுவருவதற்கு மாறாக, கடற்கரை மற்றும் கடல் சுற்றுச்சூழலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மாறாக, பாதுகாப்பான, பத்திரமான, நிலைத்த மீன்பிடியை உருவாக்கும் கொள்கைகளை அரசு பின்பற்ற வேண்டும்.

This entry was posted in Art & Life, Fish Workers, News and tagged , , , . Bookmark the permalink.