அழிந்து வரும் கடற்கரை, மறைந்து வரும் மீனவக் குடியிருப்புகள்

நித்தியானந்த் ஜெயராமன்

காலங்கள் மாறியும் பாரம்பரியம் மாறாத கட்டுமரம் மீன்பிடித் தொழிலை செய்து வரும் மீனவர் சுலேரிகாட்டுக்குப்பத்தின் பி. ஜெகன் அதிகாலையில் தனது தேவைக்கேற்றவாறு கடலின் ஒரு பகுதியைத் தேர்ந்து அலைகளின் நடுவே தனது கட்டுமரத்தை செலுத்துவார். வாகை மரத்திலிருந்து வெட்டப்பட்ட ஜந்து மரத்துண்டுகளை கொண்டு கட்டியமைக்கப்பட்ட கட்டுமரங்கள் அலையின் மேல் மிதக்கும் ஆற்றல் படைத்தவை. இவற்றை கடற்கரையில் இருந்து எடுத்து மீண்டும் கடற்கரையிலேயே கரையேற்றலாம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரையிலுள்ள எண்ணற்ற மீனவக்குடியிருப்புகளுக்கு கட்டுமரமும் கடலும் காலங்காலமாக வாழ்வாதாரத்தை கொடுத்து வந்நது. கடலும் தனது பங்கிற்கு மீனவர்களுக்கு மீன்களை அள்ளி கொடுத்து வந்தது. கடலுக்கு அருகான்மையில் கட்டப்பட்டுள்ள ஜெகனுடைய கான்கிரிட் வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. வாஷிங் இயந்திரம், ஃபிரிட்ஜ், பெரிய தொலைக்காட்சி உள்ளிட்ட ஒரு நடுத்தர வாழ்வை இந்த மீனவரால் கட்டுமரத்தை வைத்து நன்றாக அமைக்க முடிந்தது.

ஆனால் இன்று ஜெகனுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவருடைய கிராமத்தில் உள்ள கடற்கரை மறைந்து வருகிறது. ‘கடல் குப்பத்திற்குள்ளே வந்து விட்டது’ என அவர் கூறுகிறார்.அவருடைய விட்டில் இருந்து பார்த்தால் அவர் கூறுவது புரியும். காட்டுகுப்பம் எனும் சுலேரிகாட்டுகுப்பம் கிராமத்தை சுற்றி கிரானைட் கல்சுவர் 2 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. கிராமத்தின் கடற்கரையை கடல் அரித்து வருகின்றது. தற்போது கிராமத்தின் வடக்கு முனையில் உள்ள கோவிலை ஒட்டி சின்ன கடற்கரை மட்டுமே பாக்கி. குப்பத்தின் இந்த நிலைக்கு காரணம் அருகான்மையில் கட்டப்படும் கடல்நீரில் இருந்து குடிநீர் உருவாக்கும் தொழிற்சாலை.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியமும் வி.ஏ டெக் வாபாக் எனும் தனியார் நிறுவனமும் சேர்ந்து இந்த தொழிற்சாலையை நிறுவி வருகின்றன. கிராமத்தின் தெற்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையினால், வடக்குப் பகுதிகளில் கடற்கரைகள் அழிந்து கொண்டு வருகின்றன. கடற்கரைகள் கடலினாலும் பருவங்களாலும் மாறி கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு கடற்கரைகள் இரண்டு மழைக்காலங்களில் மாறுகின்றன. வருடத்தில் 9 மாதங்களுக்கு தென்மேற்கு மழைக்காலங்களில், கடல் அலைகள் வடக்குப்புறமாக மண்களை கடற்கரையில் தள்ளுகிறது. மற்ற 3 மாதங்களில் வடகிழக்கு மழைப்பருவம் மண்ணை தெற்குபுறமாக தள்ளுகிறது. இவ்வாறு பெரிய தொழிற்சாலைகள் கடலோரம் கட்டும் போது, இயற்கையின் செயல்கள் தடைபெறுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் இருக்கும் கடற்கரைகள் சுருங்குவதோடு புயலின் சீற்றத்திலிருந்து ஏற்படும் இயற்கை பாதுகாப்பையும் அழிக்கின்றது. கிரானைட் கல்சுவர்களில் மோதும் அலைகளை சுவர் வடக்குபுறம் திருப்பி விடுவதால், சுலேரிகாட்டுகுப்பத்தின் கடற்கரை அழிந்து கொண்டு வருகிறது. ஒவ்வொரு அலையிலும் இந்த கிராமம் தன்னுடைய அடையாளத்தை தொலைந்து கொண்டு வருகிறது.

‘(2011ல் அடித்த) தானே புயலுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் 47 வலை படகுகள், 17 கட்டுமரங்கள் இருந்தன. புயலினால் பல படகுகள் சேதமடைந்த போது, பல மீனவர்கள் அப்படியே விட்டுவிட்டனர். இப்பொழுது இங்கே 24 படகுகளும் 14 கட்டுமரங்களும் உள்ளன. ஆனால் அதை நிறுத்துவதற்கு கூட கடற்கரை இல்லை. கடல் தொழில் முடிஞ்சிடுச்சு சார்’ எனக் கூறுகிறார் ஜெகன்.

மீனவர்களுக்கு கடற்கரைகள் பலவிதங்களில் பயன்படுகின்றன. ஒரு பக்கம் படகுகளையும், மற்ற உபகரணங்களை நிறுத்தி வைப்பதுடன், உபகரணங்களை தயாரிக்கும், சரிசெய்யும் வேலைகளும் கடற்கரைகளில் நடைபறுகின்றன. இன்னொரு பக்கம், கடற்கரைகளில் கரை வலைகளை கொண்டு மீன்பிடி வேலைகளும் நடக்கின்றன. இது ஒரு சமூகத் தொழிலாகும். கடற்கரைகளில் 10-15 மீனவர்கள் வலையின் ஒரு பக்கத்தை பிடித்து கொள்ள ஒரு படகு மூலம் வலை கடலுக்குள் இழுத்து கொண்டு செல்கின்றனர். அந்த படகு வலையுடன் வட்டமிட்டு கரைக்கு திரும்பும் போது வலைக்குள் மீன்கள் சிக்குகின்றன. படகிலிருந்து வரும் வலையின் பக்கத்தை இன்னொரு கூட்டமாக 10-15 மீனவர்கள் கரைக்கு இழுத்து மீன்களை பிடிக்கின்றனர். மீன்பிடி நன்றாக இருந்தால் ஒரு வலையில் பல லட்ச ரூபாய்க்கு நெத்திலி, இறால் போன்ற மீன்களை பிடிக்கலாம். கரை வலை மீன்பிடிப்பு வடகிழக்கு மழைக்காலத்திற்கு பிறகு டிசம்பரிலிருந்து 3 மாதங்களுக்கு நடைபெறுகிறது. அப்பொழுது தான் கடல் மிகவும் அமைதியாக ஒரு கண்ணாடி போல இருக்கும். ஆனால் இதற்கு நல்ல கடற்கரை இடம் தேவை. 2-3 அடிக்கு ஒரு மனிதர் என 15 பேர் நிற்கும் அளவிற்கு அகலமும், 100 மீட்டர் வலையை வட்டமிடும் நீளக் கடற்கரை வேண்டும். (கரை வலை கொண்டு தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கும் இணையதளப் படத்தை இங்கே காணலாம்.)

காட்டுக்குப்பத்தில் 8 கரை வலைகள் உள்ளன. ஆனால் அவைகளை உபயோகிப்பதற்கு கடற்கரைகள் இல்லை ‘இந்த வருஷம் வலை தண்ணிய ஒருதடவ கூட தொடாது. போன மாசம் ஒரு வலையை கரையில வச்சிருந்தோம் ஆனா அலை அடிச்சிட்டி போயிடிச்சு. அதனால இப்ப மத்த வலைய சவுக்கு காட்டில வச்சிருக்கோம். ஒரு வலை 2 லட்சத்துக்கும் மேல ஆகும்’ எனக் கவலைப்படுகிறார் ஜெகன்.

கடல்நீரிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே இங்குள்ள மீனவர்கள் எதிர்த்தனர். தொழிற்சாலைகளிலிருந்து வரும் உப்பு நீர் அங்குள்ள மீன்களை அழிக்கும் எனவும், தண்ணீரை உறுஞ்சும் இயந்திரங்களாலும், வெளியேற்றும் கருவிகளாலும், அரிப்பு ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் அரசும் வல்லுனர்களும் மீனவர்களின் கூற்றை புறக்கணித்தே வருகின்றனர். தொழிற்சாலை நிறுவதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடு அமைச்சகம் கூறியுள்ளது. தொழிற்சாலை நிறுவதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சகத்தின் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதற்கான கடலோர ஒழுங்குபடுத்தும் மண்டலத்தின்(சி.ஆர்.செட்) கீழ் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மறுபடியும் கடலோர மீனவர்கள் பாரம்பரிய அறிவு விஞ்ஞானத்தின் பெயரால் புறக்கணிக்கப்படுகின்றது.

போராட்டங்கள் காவல்துறையால் ஒடுக்கப்பட்டன. ஊரில் உள்ள சில மனிதர்களுக்கு ஒப்பந்த வேலைகள் கொடுக்கப்பட்டன. தொழிற் சாலையில் கிராம மக்களுக்கு வேலை தரப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.   ‘இவ்வளவு பெரிய சக்திகளுக்கு எதிராக சின்ன மீனவ கிராமம் என்ன செய்யமுடியும்?’ எனக் கேட்கிறார் ஜெகன். அணுமின் நிலையங்களோ உப்புநீரை குடிநீராக்கும் திட்டங்களோ, இவற்றை எதிர்க்கும் மக்களுக்கு எதிராக ஏவப்படும் யுக்திகள் இவை.

2010ல் தொழிற்சாலை கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் ஒரே வருடத்தில் இந்த பகுதிக்கு சென்ற போது பாதிப்பு விளைவுகள் ஆரம்பித்து விட்டன. 2011 ஜுன் மாதத்தில் பார்வையிட்ட போது கடல் அரிப்புகளினால் கடற்கரை குறைந்து தண்ணீர் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க மணல் மூட்டைகள் போடப்பட்டிருந்தன. ஜுன் 2011 பின்னர் 2 சூறாவளிகள் தானே நீலம் ஆகியவை கடற்கரையோரங்களை மிகவும் பாதித்துள்ளன. கடற்கரையில் ரோட்டரி சங்கத்தினால் கட்டப்பட்ட சமூகக் கூடத்திற்கு பக்கத்தில் கடல் வந்துவிட்டது. சுனாமியின் பின்னர் சுலேரிக்குப்பத்தை மாதிரி மீனவ கிராமமாக்குவதற்கு கூடம் கட்டப்பட்டதாக ஜெகன் கூறுகிறார். ‘அப்போது கடல் தூரத்தில் இருந்தது. இதெல்லாம் கடற்கரை’ என 20-50 மீட்டர் தண்ணீரை சுட்டிக்காட்டுகிறார். இந்த சமூகக் கூடத்தை வலைகளை வைப்பதற்கும் சரி செய்வதற்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர் தற்போது புயல்களினாலும் அரிப்புகளினாலும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு கூடம் பொழிவிழந்து போய் உள்ளது.

தற்போது 1.5 கிலோமீட்டர் தள்ளி உள்ள நெம்மெலிக்குப்பம் கிராம கடற்கரைகளில் அரிப்புகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து நெம்மெலிகுப்பம் மக்கள் அரசுக்கு மனு எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஜி.பி.எஸ் மூலமும கூகுள் எர்த் மேப்கள் மூலம் இதை ஆராய்ந்தோமானால் கிட்டத்தட்ட 2.5 ஏக்கரில் இருந்து 12 ஏக்கர் வரை கடற்கரைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

‘2010ல் கடலில் போடப்பட்ட தடுப்புசுவரை வரும் பிப்ரவரியில் நீக்கப்போவதாகவும் அதற்கப்புறம் இந்த பாதிப்புகள் குறைந்து விடும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆனால் நாங்கள் அதை நம்ப வில்லை. அவர்கள் உப்புநீர் எடுத்து செல்லும் பைப்களையும் கழிவு நீரை வெளியேற்றும் பைப்களையும் தாங்கிப்பிடிப்பதற்கு பெரிய கான்கிரிட் பாறைகளை கடலுக்குள் போட்டு வைத்துள்ளனர். இது கடலுக்குள்ளேயே ஒரு தடுப்புசுவர் போல மணலை தடுக்கிறது. அதையும் அவர்கள் அகற்றுவார்களா?’ எனக் கேட்கின்றனர் ஊர் மக்கள்.

ஜெகனின் மனைவி கவிதா எங்களுக்கு குடி தண்ணீர் கொண்டு வருகிறார். இந்த தண்ணீர் அருகில் உள்ள கைபம்பில் இருந்து வருவதாக கூறிய அவர் ‘இதுவும் கொஞ்ச நாளைக்கு தான். கடல் குப்பத்துக்குள்ள வரவர இந்த தண்ணீ உப்பாகி விடும் என்கிறார்’. உப்புநீரால் குடிநீராக்கும் திட்டத்தினால் இங்கு குடிநீர் உப்புநீராக்கி கொண்டிருக்கிறது. என்ன கொடுமை?

தொழிற்சாலையில் தற்போது கூலி வேலையில் 160 கிராம மக்கள் வேலை செய்கின்றனர். கூழாங்கள்ளை கழுவும் அவர்களுடைய வேலைக்கு ஆண்களுக்கு 300 ரூபாயும் பெண்களுக்கு 200 ரூபாயும் ஊதியம் கிடைக்கிறது. ‘என்னுடைய கணவரும் பணம் வேண்டும் போது அங்கு வேலை செய்வார். ஆனால் கூழாங்கள் கழுவதெறல்லாம் ஒரு பொழப்பா?’ என கவிதா விமர்சிக்கிறார் .

அடுத்த வருடத்தில் தொழிற்சாலையை முதலமைச்சர் ஜெயலலிதா திறக்கவுள்ளார். இதை விட 4 மடங்கு பெரிதாக இன்னொரு தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறப்பதற்கான திட்டங்கள் உருவாகிக் கொண்டுள்ளன. இங்கு வாழும் 217 குடும்பங்களின் கதியை பற்றி யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

This entry was posted in Environment and Working Class, Fish Workers, News, Unorganised sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.