”அமைப்பாக்க முடியாதவர்களை”அமைப்பாக்குவது…

”குடும்பத்தின் காலத்தில், அவ்வப்போது சவுக்கைப் பயன்படுத்தி மனைவியை அடக்கி வைப்பதற்கு கணவனுக்கு உரிமை உண்டு. இப்போது முதலாளித்துவமோ, தேள் கொட்டுகளால் பெண்ணை அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது”

கிளாராஜெட்கின்

சர்வதேசப் பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் உள்ள பெண் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது. அவர்கள் தங்களின் பணி நிலைமைகள் மாற வேண்டும் என்பதற்காக மட்டும்  போராடவில்லை. முழு உழைக்கும் வர்க்கத்திற்காகவும் போராடினார்கள்.  பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் தனித்தன்மையை சோசலிச இயக்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை இனம் கண்டுகொண்டு அதற்கான பணிகளை மேற்கொண்டார்கள் பெண் தலைவர்கள். அதேசமயம், உழைக்கும் வர்க்கப் புரட்சியைக் கட்டமைப்பதற்காக ஆண் தோழர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து போராடுவதற்கான தங்களின் அர்ப்பணிப்பை மறுவுறுதி செய்த காலமாக அந்தக் காலம் இருந்தது.

பலப் பத்தாண்டுகள் கடந்து போக, மார்ச் 8 என்பது கொண்டாட்டத்திற்கான நாளாக மாறிவிட்டது. ஆனாலும், பெண்களின் நிலை மற்றும் அமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யக் கூடிய நாளாக நாம் கருத வேண்டும்.. பல முனைகளிலும் முன்னேற்றம் எட்டப்பட்டிருந்த போதும், மிகப் பெரும் எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் வாயிலாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை.. பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மேல் மட்டத் தலைமைக்கு வருவதில்லை. முக்கியமாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கிற ஆலைகளில் கூட, ஷாப் மட்டத்தில் உள்ள பெண்கள் தொழிற்சாலை மட்ட சங்கத்தில் கூட தலைமைக்கு வருவதில்லை. அதற்குப் பதிலாக, பெண்களின்  பிரத்யேக பிரச்சனைகளைப் பேசும் வேலைகளை மட்டுமே பெண்களை கொண்டு செய்யப்படுகின்றது.

ஆலைகளில் வேலை செய்யும் பெண்களை அமைப்பாக்குவது எவ்வளவு சிரமமான வேலை என்பதை, தனிப்பட்ட முறையில் பேசும்போது தொழிற்சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்துவார்கள். ”பெண்கள் தற்காலிகமாகத்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் இதனை நிரந்தர வேலையென்று கருதுவதில்லை. கல்யாணம் ஆகும் வரை அல்லது, பிள்ளை பெற்றுக்கொள்ளும்வரை மட்டும்தான் அவர்கள் வேலைக்கு வருவார்கள். அதன்பின் வெளியே போய்விடுவார்கள்”, என்று அவர்கள் சொல்வதை நாம் கேட்கலாம். வேறு சில தொழிற்சங்கத் தலைவர்கள் ”பெண்கள் பயப்படுகிறார்கள்”என்று சொல்வார்கள். ஆலையிலேயே  பல ஆண்டுகளாக வேலை செய்யும் பெண்கள், நிரந்தரத்  தொழிலாளியாக இருக்கும் பெண்கள், அதிலும் அவ்வளவு சீக்கிரம் வேலை நீக்கம் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் பெண் தொழிலாளிகள் கூட, எப்படியேனும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். பாதிப்புக்கு ஆளாகி விடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்த சவால்கள் எல்லாம் ஆணாதிக்கச் சமூகத்தின் யதார்த்தங்கள். வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் பெண், கணவனின் வருமானத்துக்குத் துணையாக, வீட்டுக்கு ஓர் இரண்டாவது வருமானத்தைக் கொண்டுவருவதற்காக வேலை செய்கிறாள் என்றும், தற்காலிகமாக வேலை செய்கிறாள் என்றும், எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிடலாம் என்றும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இப்பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்திப்பதை தொழிற்சங்கங்கள்  தவிர்த்துவிட முடியாது.

தொழிலாளியின் அடையாளத்தைக் கட்டமைப்பது

பெண்களை அமைப்பாக்குவதில் உள்ள மிக அடிப்படையான கடமை தொழிலாளி என்ற வகையின் அவரின் அடையாளத்தை விரிவாக்குவதுதான். பொதுவாகப் பெண்கள், தங்களின் குடும்ப நிலையில் இருந்துதான் தங்களின் அடையாளத்தைப் பெறுகிறார்கள். தாயாக, மனைவியாக.. இப்படியான ஒரு அடையாளத்தைப் பெறுகிறார்கள். ஆனால், தொழிலாளியாக தன் அடையாளத்தைக் காண்பது மிக அரிதாகவே நடைபெறுகிறது. நீங்கள் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணையோ, கட்டுமானத் தொழிலாளிப் பெண்ணையோ, வேலையுறுதித் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்ணையோ ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’என்று கேட்டுப்பாருங்கள். அவர் ”நான் சும்மாதான் இருக்கேன்”என்று பதில் சொல்வார். அல்லது, மிக எளிமையாக ‘கூலி வேலை செய்கிறேன்’, என்பார். இது, பெண்கள், குறிப்பாக அமைப்பாகத் துறையில் பணியாற்றும் பெண்கள் தங்களின் சொந்த உழைப்பையே இனம் காணவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்த சித்திரங்களை அரசு மேலும் வலுவாக்குகிறது. பெண்கள் அதிக அளவு  வேலை செய்யும் தொழில்களைப் பார்த்தீர்கள் என்றால், குறைந்த பட்ச கூலி மிகவும் குறைவாக இருப்பதைப் பார்க்க முடியும். பெண்கள் அதிகமாக வேலை செய்யும் தொழில்களுக்கான குறைந்த பட்ச கூலியையும், ஆண்கள் அதிகமாக வேலை செய்யும் தொழில்களுக்கான குறைந்தபட்ச கூலியையும் ஓர் வரைபடத்தில் பொருத்தி, மிக அடிப்படையான ஆய்வு ஒன்றை பெண் தொழிலாளர் சங்கம்   மேற்கொண்டது. இந்த சங்கம் சென்னையை மையமாகக் கொண்டு பெண் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும் சங்கமாகும். சங்கம்   மேற்கொண்ட ஆய்வு பெண் தொழிலாளர்களை விட, ஆண் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்  அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதைக்  காட்டியது. எனவே, ஆண்களின் உழைப்பை விட பெண்களின்  உழைப்பு குறைவான மதிப்புள்ளது என்ற கருத்திற்கு அரசே வலுவூட்டுகிறது என்பது தெரிகிறது.

2007ல்தான் வீட்டு வேலை செய்வதை ஒரு  தொழில் என்று தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது. வெகு நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அந்தத் தொழில் குறைந்தபட்ச கூலி பட்டியலில் சேர்க்கப்பட்டது. அப்போதுதான், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (வேலை மற்றும் வேலை நிலைமை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1984ல் வீட்டு  வேலையும் சேர்க்கப்பட்டது. மேலும், பல்வேறு சமூகப் பாதுகாப்புப் பலன்களை அளிப்பதற்காக முத்தரப்பு வாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வாரியம் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 10 ஆண்டுகள் கடந்த பின்னர் வீட்டு வேலைக்கான வாரியம் அமைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்கங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் வலுப் பெற்றிருந்த போதும் நிறைய மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வில்லை. பணி நிலைமைகளை மேம்படுத்துவது இன்னமும் தொலை தூரக் கனவாகவே இருக்கிறது.

பெண்கள் தொழிற்சங்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றால், உணர்வு நிலையைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியான முயற்சிகள் இருக்க வேண்டும்,  பொருள் உற்பத்தியிலும் லாபத்திற்கான சேவைகளிலும் பெண்களின் பாத்திரம் என்னவென்பதைப் பெண்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.   பெண்ணின் உழைப்பிற்கான மதிப்பு குறைத்துப் பார்க்கப்படுகிறது என்பதை மட்டுமல்லாமல், இனம் காணப்படுவது கூட இல்லை என்பதையும் நாம் மிகத் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். அரசு அளிக்கும் சித்திரத்தை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, இலவசங்களை  அள்ளி வழங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், வர்க்க உணர்வைக் கட்டியெழுப்புவதுதான், மிகவும் ஆழமாக, கட்டுக் குலையாத வகையில் கட்டியெழுப்புவது மிக முக்கியமான பணியாகிறது.

வேலையினால் சுதந்திரம், வேலையிடத்தில் ஒடுக்குமுறை

முதல் தலைமுறை பெண் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, வேலை செய்யும் இடம் அச்சுறுத்துவதாகவும், சிரமமானதாகவும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அதனைத் தாங்கி முன் செல்வது வேலை சுதந்திரத்திற்காகஏற்றுக் கொள்ளும் பாரமாக இருக்கும். அது, ஒரு பரந்த பொருளில் விடுதலை அளிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.

நோக்கியா ஆலை 2006ல் தனது உற்பத்தியைத் துவங்கியபோது, பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே தங்கியது அதுதான் முதன்முறை. அவர்கள் விடுதியில் வாழ்ந்தார்கள். அங்கிருந்த வசதிகளைப் பகிர்ந்துகொண்டார்கள். வேலைக்குச் சென்றார்கள், தங்கள் வயதொத்த பெண்களுடன் பழக ஆரம்பித்தனர். அந்த வேலைவாய்ப்பு புது அனுபவங்களையும் புது நட்புகளுக்கான  வாய்ப்பையும் அளித்தது. இந்த இளைய உழைக்கும் பட்டாளம் சுரண்டலின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் சங்கமாகவும் சில ஆண்டுகள் ஆகின. பெண்கள் சங்கத்தில்இணைந்தும் கூட, மொத்த தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 30 சதம் என்றாலும், சங்கம் பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

வயதான தொழிலாளர்களுக்கும் , அவர்களின் வழக்கமான அலுப்பூட்டும்குடும்ப வேலையிலிருந்தும், குடும்பப் பிரச்சனைகளிலிருந்தும் விலகியிருப்பதற்கு வெகுகாலம் கழித்து கிடைத்த வாய்ப்பாக இந்த வேலை வாய்ப்பு தோணுகிறது. ஒரு பெண் தொழிலாளி சம்பாதிக்கும் ஊதியம் அந்தப் பெண்ணுக்கு ஓரளவிலான சுயமுடிவெடுக்கும் உரிமையையும் குடும்பத்திற்குள் ஓரளவு அதிகாரத்தையும் கொண்டுவருகிறது என்பதை எந்தப் பெண்  தொழிலாளியும் மறுக்கமாட்டார். ஆயத்த ஆடை  தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் சிலர், தங்களின் நண்பர்கள்- சக தொழிலாளர்கள் தொடர்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மத்தியில்,  நொறுக்குத் தீனிகள் விற்பது, துணிகள் விற்பது போன்ற சிறிய உப தொழில்கள் செய்து தங்களின் வருமானத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

இருந்தபோதும், வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உற்பத்தி நடக்கும் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என்பதுதான் முதன்மையானதாக இருக்கும். இந்த இலக்கை ஒரு தரப்பாக நிர்வாகம் தான் தீர்மானிக்கும். அதுமட்டுமல்ல, தொடர்ச்சியாக இலக்கு அதிகப்படுத்தப்பட்டு வரும். நவீன பாணி கம்பெனிகளில், பெண்கள் தங்கள் மத்தியில் பேசிக்கொள்வதைத் தடுக்கும் வகையிலும், கூட்டாகச்  சேர்வதைத் தடுக்கும் வகையிலும் வேலை செய்யும் இடங்கள் வடிவமைக்கப்படுவதை நிர்வாகங்கள் உறுதி செய்து கொள்கின்றன. ஒரு லைனுக்கும் மற்றொரு லைனுக்கும் இடையில் உற்பத்தி இலக்கில் போட்டி வைக்கப்படுகிறது. கண்காணிப்பு நடக்கிறது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பல யுக்திகளை முதலாளிகள் பயன்படுத்துகின்றனர்.

மின்னணு கருவிகள், மோட்டார் வாகன  உதிரி பாகங்கள், ஆயத்த ஆடைகள், மருந்துப் பொருட்கள் உற்பத்தியாகும் உற்பத்திக் கூடங்களில் பெரும்பாலும் பெண்கள் பணி செய்யும் உற்பத்தி நடக்கும் வரிசையில், அவற்றுக்கான இடைநிலை கண்காணிப்பாளர்கள் ஆண்களாகத்தான் பெரும்பாலும்  இருக்கின்றனர். நிர்வாகத்தின் சார்பாக நின்று தொழிலாளிகளிடமிருந்து உறிஞ்சி எடுப்பதற்கான நேரடி பொறுப்பாளர்களாக ஆண் கண்காணிப்பாளர்கள்தான் இருக்கிறார்கள்.  ஆலையில் பற்பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோதும், பெண்கள் கண்காணிப்பாளர் ஆவதை வெகு சில பெண்களே சாதிக்கின்றனர். அதுவும் கூட, அவர்கள் ஆண் கண்காணிப்பாளர் போல நடந்துகொண்டால் மட்டுமே, ஆண் கண்காணிப்பாளரின் பாத்திரத்தை மேற்கொள்ளும்போது மட்டுமே அது சாத்தியமாகும்.

உற்பத்தி தளத்தில் ஆணாதிக்கத்தை மறுகட்டமைப்பு செய்வதன் காரணமாக,  மிக நுட்பமான, அல்லது சற்றே வெளிப்படையான துன்புறுத்தல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் பெண்கள் ஆளாகிறார்கள். அதிகாரமிக்கதொரு ஆண் ஒருவரை, பயத்தோடும் எச்சரிக்கையோடும் அணுகி தனிப்பட்ட முறையில் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதை தங்கள் வாழ்வில் பெண்கள் செய்வதுபோல,  ஆண்  கண்காணிப்பாளரை எதிர்கொள்வது பெண்ணுக்கு  இயல்பான ஒன்றாக இருக்கிறது. நெருக்கடி கடுமையானதாக மாறிவிட்டால், பொதுவாக பெண் தொழிலாளி கண்காணிப்பாளருடன் சண்டைபோட்டு விட்டு வேலையை விட்டு விலகிக்கொள்கிறார்.

வேலையிடத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் முறையைப் பார்க்கும்போது,  பெண்கள் பேசும் விதம் தன்னம்பிக்கை கொள்ளும்படி இருப்பதற்கான நடைமுறை திறன்களை பெண்களுக்கு அளிப்பது சங்கத்தின் கடமையாக இருக்கிறது. பொதுவாக, பணியிடத்தில் தமக்கான உரிமைகள் என்ன என்பது பெண்களுக்குத் தெரியாதிருக்கிறது என்பதால் அதனைக் கற்றுத் தருவது ”அறுதியிட்டுப் பேசச் ”செய்வதற்கான முதல் படியாக இருக்கக் கூடும்.  விடுமுறை வேண்டும் என்று கேட்பதாக இருந்தாலும், உற்பத்தி இலக்கு குறித்த பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அல்லது  கூலி உயர்வு பற்றிய பேச்சாக இருந்தாலும் தகவல் தெரிந்திருப்பதுதான் முதன்மையானது. சாதாரணமான ஒரு புகார் கடிதம் எழுதுவது, அல்லது வலுக்கட்டாயமாக வேலையை விட்டு விலகச் செய்வதை எதிர்ப்பது போன்றவை மிகச் சிறிய எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்த சிறிய வெற்றிகள் பெண்கள் தங்கள் மேல் கொண்டுள்ள சுய நம்பிக்கையை வளர்த்து கூட்டு நடவடிக்கைகளுக்குப் பாதை அமைத்துக்கொடுக்கும்.

பாலியல் துன்புறுத்தல் வெறுமனே பெண்களின் பிரச்சனை மட்டும் இல்லை

வேலை செய்யும் இடத்தின் ஒடுக்குமுறைக் கட்டமைப்பின் நிலையில், பாலியல் துன்புறுத்தல் பரவலாக நடைபெறுகிறது. ஆனால், மிகக் குறைவாகவே புகார் செய்யப்படுகிறது. இன்டியாஸ்பெண்ட்(India Spend) என்ற அமைப்பின் அறிக்கையின்படி  70 சதம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிப்பதில்லை. தொழில்நுட்ப கம்பெனிகளிலும் அலுவலகங்களிலும் கூட இது மிகக் குறைவாக இருக்கிறது. சட்டத்தின்படி  பதிவான புகார்கள் 2014ல் 249 ஆக இருந்தது, 2015 336 ஆக மட்டுமே அதிகரித்தது.

மற்ற பல சட்டங்கள் போலவே பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ம் மிக மோசமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான கோரிக்கைகளைத் தனிக் கோரிக்கையாக அளிப்பதற்குப் பதிலாக, தங்களின் பிரதான கோரிக்கைகளின் ஒரு அம்சமாக இப்பிரச்சனையைத் தொழிற்சங்கங்கள் எடுத்துக்கொண்டு மிகக் கூடுதலான முன்முயற்சியை இப்பிரச்சனையில் காட்ட வேண்டும். அதேசமயம், சட்டத்தைப் பற்றியும், அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் மீறி அது அளிக்கும் பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்குக் கல்வி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் சென்னை ஏற்றுமதி வளாகத்தில் (MEPZ-SEZ) உள்ள  வென்ட்சர் லைட்டிங் (Venture Lighting) என்ற ஆலையின் பெண் தொழிலாளர்களைத் தொழிலாளர் கூடம் சந்தித்தது. முறையற்ற விதத்தில் தொடுவது, அழைப்பது, பாலியல் வார்த்தைகளால் சீண்டுவது போன்ற கண்காணிப்பாளர்களின் பாலியல் கொடுமைகளை அந்த கம்பெனியின் பெண் தொழிலாளர்கள், ஆண்டுகள் பலவாக அனுபவித்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு பாலியல் கொடுமை சகத் தொழிலாளிக்கு ஏற்பட்டபோது, தன்னெழுச்சியாக ஒரு வேலை நிறுத்தம் நடத்தி, குற்றமிழைத்தவனுக்கு எதிராக நடவடிக்கை கோரினர். அதேபோன்றதொரு  சம்பவம் அம்பத்தூரில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனமான கலர் பிளஸ் ஆலையில் திடீர் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிற்று.

வென்ட்சர் லைட்டிங் கம்பெனியின் யூனியன் சிஐடியுஉடன்இணைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கமிட்டி ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த யூனியன் கோரியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தைப் பற்றி பெண் தொழிலாளர்களுக்குக் கல்வியளிக்கவும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆண்- பெண் தொழிலாளர்களுக்குப் புரிதல் ஏற்படுத்தவும், தொழிற்சங்கத்திற்குள்ளும் இப்பிரச்சனையை எடுத்துச் செல்லவும் கிடைத்த அரியதொரு வாய்ப்பு என்றே இதனைச் சொல்ல  வேண்டும்.

பெண் தொழிலாளர்களின் கோரிக்கையை முதன்மைப் படுத்துதல்

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ்  கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கே தொழிற்சங்கக் கூட்டங்கள் தடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. தொழிற்சங்க கூட்டங்களில் கலந்துகொள்வதில் பெண்களுக்குப் பல தடைகள்  இருக்கின்றன. முறைசாரா வகையிலான கலந்துரையாடல்கள் கூட அவர்களுக்குச் சாத்தியமில்லை. டீக்கடை, பூங்காக்கள் போன்றவற்றில் சென்று அமர்ந்து பேசும் சுதந்திரமும், நடமாட்டமும் பெண் தொழிலாளர்களுக்குச் சாத்தியமுமில்லை. எனவே, அவர்கள் தகவல் தொடர்பு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

ஒரே சமயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் காரணமாக, குறைவான முக்கியத்துவம் உள்ளதாக அவர்களின் பணியிட வாழ்க்கை ஆகிறது. இருந்தபோதும், சங்கங்கள் படைப்பூக்கத்துடன் செயல்பட்டால், பெண்களின் சிரமங்கள் குறித்த நுண்ணுணர்வு கொண்டவையாக இருக்குமானால், இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். பெண்களுக்கு வசதியான நேரத்தில் கூட்டங்களை நடத்துவது, அமைப்பாக்குவதில் முக்கியமான அம்சமாக பயிற்சிகளையும் கல்வியளித்தலையும் உள்ளிணைப்பு  செய்வது, அனைத்து மட்டங்களிலும் சங்க கோரிக்கைகளின் மைய அம்சமாகப் பெண்கள் பிரச்சனை இருப்பது  போன்றவை சிறப்பான தொடக்கமாக இருக்கும்.

எனவே, கூலி மட்டும்தான் பெண் தொழிலாளர்களின் ஒரே கவலையாக இருக்காது என்பதை உணர்ந்துகொள்வது முக்கியமானதாகும். ஆரோக்கியம்- பாதுகாப்பு, பேறுகாலம், விடுமுறை, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற அனைத்தும், கூடுதல் முக்கியத்துவம் உள்ளவை அல்ல என்றாலும் கூட சமமான முக்கியத்துவம் உள்ளவை. ஆலைக்குள் தன்னெழுச்சியான கூட்டுச் செயல்பாட்டுக்கான துவக்கப் புள்ளியாகவும் அவை இருக்கலாம். எனவே, இந்த உணர்வுகளை செயல் முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்,  ‘பெண்களின் பிரச்சனை’என்று அவற்றைத் தள்ளி வைக்காமல் ‘தொழிலாளர் பிரச்சனை’என்று அவற்றைக் கையாள வேண்டும்.

பிராவிடன்ட்பண்டு விதிகளில் செய்யப்படவிருந்த மாற்றங்களுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெங்களூருவில்  நிகழ்ந்த ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்களின் பெருந்திரளான போராட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போராட்டம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆகும். இப்பிரச்சனையின் முக்கியத்துவம் குறித்து சங்கத் தலைவர்கள் உணராமல் இருந்திருக்கலாம். மிகக் குறைவான சம்பளம் வாங்குபவர்கள் பெண்கள்தான் என்பதால், பிராவிடன்ட் பண்டை மிகவும் சார்ந்திருப்பவர்களாகப் பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

பெண்களின் இப்போராட்டம்  அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு  முக்கியமான வெற்றியை ஈட்டித் தந்தது. பல ஆலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக, பயிற்சியாளர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதால், ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகப் பெண் தொழிலாளர்களை நாம் கொள்ளவில்லை என்றால், மேற்சொன்னது போன்ற ஒரு தவறை நாம் செய்தவர்கள் ஆவோம்.

தாங்கள் அமைப்பாகி, சங்கத்தில்  சேர்ந்த பின்னர்தான், தங்களுக்கு அமைதி கிட்டியதாகவும், தங்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் பற்றி மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பேச முடிந்தது என்றும் வெண்சர் லைட்டிங் கம்பெனியின் பெண் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். பெண்கள் அமைப்பாகிவிட்டார்கள் என்றால், அவர்கள் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், செயல்படுவதற்குமான இடம் சங்கம்தான்  என்பதில் அவர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இனியும் பெண் தொழிலாளர்களின் ஆற்றலை தொழிற்சங்கங்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது.

 

This entry was posted in Analysis & Opinions, Garment Industry, Unorganised sector, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.