எதிர் காலம் நோக்கி நீளும் யுனிடெக்ஸ் இண்டர்நேஷனல் பெண் தொழிலாளர்களின் போராட்டம்

ஆலை மூடப்பட்டது மார்ச் 2016ல்! தொழிலாளர்களுக்குப் பாக்கிகளும், இழப்பீடும் இன்னமும் கிடைக்கவில்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவந்த யுனிடெக்ஸ் என்ற ஆயத்த ஆடை ஆலை மூடப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு மாதமும் தாமதமாகச் சம்பளம் வழங்கிவந்தது நிர்வாகம். தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் நிர்வாகத்தின் நோக்கம். மார்ச் 2016ல் பெரும்பாலான தொழிலாளர்கள் இராஜினாமா செய்துவிட்டிருந்தனர். தொழிலாளர்களின் எண்ணிக்கை 100க்குக் கீழே இருந்தால், ஆலையை மூடுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனைச் சாதிப்பதற்காகத்தான் நிர்வாகம் சம்பளம் வழங்குவதை இழுத்தடித்து வந்துகொண்டிருந்தது. இருந்தாலும், அந்த சமயத்தில் இன்னமும் 80 தொழிலாளர்கள் கம்பெனியில் இருந்தனர். கம்பெனி கதவை மூடிய பின்னரும், தொடர்ந்து தொழிலாளர்கள் தொழிலாளர் துறையின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தனர். நியாயமான இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

எதிர் காலம் நோக்கி நீளும் யுனிடெக்ஸ் இண்டர்நேஷனல் பெண் தொழிலாளர்களின் போராட்டம்

இந்த நிறுவனத்தின் முதலாளி பெயர் ஆர் கே ராதாகிருஷ்ணன். அம்பத்தூரிலும் திருவள்ளூரிலும் அவர் பல ஆயத்த ஆடை ஆலைகளை நடத்திக்கொண்டிருப்பவர். மேலே சொன்ன தந்திரத்தைப் பயன்படுத்தி ஆலையை மூடுவது அவரின் வழக்கம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பெரிய பிராண்ட் நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளைத் தயாரித்து அளித்துக்கொண்டிருந்த யுனி டெக்ஸ் என்ற பெயரில் அம்பத்தூரில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்த ஆலையை 2012ல் இதுபோன்ற முறையில்தான் அவர் மூடினார். கார்மெண்ட்- பாஷன் தொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் ஒன்றுபட்டிருந்த அத்தொழிலாளர்கள் மூன்று மாதங்கள் வரை ஆலையை ஆக்கிரமித்துத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்களுக்கு, மிகக் குறைவு என்றாலும், ஏதோ ஓர் இழப்பீடு கிடைத்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் வருங்கால வைப்பு நிதியை நிர்வாகம் கொள்ளையடித்துவிட்டது என்பது பற்றிய தகவல்கூட முன்னதாகத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய ESI, PF பணம் நிர்வாகத்தால் சுருட்டப்பட்டதைக் கம்பெனி மூடப்பட்ட பின்னர்தான் தொழிலாளர்கள் தெரிந்துகொண்டனர்.
ஐந்து ஆண்டுகள் கழித்த பின்னர், யுனிடெக்ஸ் இண்டர்நேஷனல் தொழிலாளர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. யுனிடெக்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தைப் போலவே, பெண்கள்தான் தொழிலாளர்களாகப் பணியாற்றினர். தையல், ஆபரேட்டர், உதவியாளர் போன்ற பணிகளில் பல ஆண்டுகளாகப் பெண்கள் பணியாற்றி வந்திருந்தனர். திருவள்ளூரின் செவ்வாய்பேட்டை என்ற கிராமப்புரப் பகுதியில் அந்த ஆலை அமைந்திருந்தது. அப்பகுதியில் வேலை கிடைக்காது திண்டாடும் பெண்களுக்கு வேலையளித்து வந்த ஒரு சில ஆலைகளில் ஒன்றாக யுனிடெக்ஸ் ஆலை இருந்தது.

அக்டோபர் 21 அன்று பெண் தொழிலாளர்களில் ஏறக்குறைய 15 பேர், தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்பு நடைபெற்ற விசாரணையில் பங்கெடுத்தனர். சென்னைக்கு வருவது இதுதான் முதல் முறை என்று பெண்களில் பலரும் சொன்னார்கள். தொழிற்சாலையில் கட்டிங் சூப்பர்வைசர்களாகப் பணியாற்றிய ஆண் தொழிலாளர்கள்தான் அவர்களை நகருக்குள் வழிகாட்டி அழைத்து வந்திருந்தனர். “இதுதான் எங்களுக்குத் தெரிந்த ஒரே வேலை. அங்கே வேலை செய்வது எங்களுக்கு வசதியாக இருந்தது. சம்பளம் குறைவுதான், என்றாலும், எங்கள் வீட்டுக்கு அருகே கம்பெனியிருந்தது வசதியாக இருந்தது“, என்று தொழிலாளர்கள் பலரும் சொன்னார்கள். செக்கராகப் பணியாற்றிய ஒரு பெண், கம்பெனியில் 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இருந்தபோதும், ஐந்தாண்டுகள் முடியும்போது, அவருக்கு அளிக்க வேண்டிய தொகையில் ஒரு சிறிய தொகையை கிராஜுவிடி என்று கொடுத்து ராஜினாமா செய்யும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்தது. அதன்பின், இன்னும் கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்துவிட்டு மறுபடியும் அவரை வேலைக்கு வைத்துக்கொண்டது. மார்ச் 2016ல் கம்பெனி மூடப்பட்டபோது, அவர் மாதம் 7500 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தார். தொழிலாளர்களில் பலரும் ஏறக்குறைய இந்தத் தொகையைத்தான் மாதச் சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருந்தனர். உதவியாளர்களுக்கு 4, 500 முதல் 5, 500 வரை மாதச் சம்பளம் அளிக்கப்பட்டுவந்தது.

இதுபோன்ற, கண்மூடித்தனமான சட்ட அத்துமீறல் ஆயத்த ஆடை ஆலைகளில் எங்கும் நடக்கிறது. பெண் தொழிலாளர்களின் பலவீனமான நிலைமையையும் பணியிடத்தில் அவர்களின் உரிமைகள் பற்றிய விவரம் தெரியாதிருப்பதையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் குறைத்துக்கொண்டு, லாபத்தை அதிகப்படுத்திக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். குறைவான கூலி, வலுக்கட்டாயமாக வேலையை விட்டு விலகச் செய்வது, கூலி கொடுக்கப்படாத மிகை நேர உழைப்பு என்பதெல்லாம் ஆயத்த ஆடை ஆலைகளில் சாதாரணமாக நடக்கும் விஷயங்கள். வீட்டிலும், பணியிடத்திலும் ஒடுக்கி வைக்கும் ஆணாதிக்கக் கட்டமைப்பின் காரணமாக, பெண்கள் தங்களின் பணியிட உரிமைகள் பற்றி அறியாதிருக்கிறார்கள். எனவே, அந்த உரிமைகளை நடைமுறையாக்குவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பின்றி இருக்கிறது. எனவே, பெண்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது, உடனடியாக அவர்கள் எடுக்கும் முடிவு, எதிர்த்து நிற்பது என்பதற்குப் பதிலாக, வேலையை உதறிவிட்டு ஓடிவிடுவது என்பதாகத்தான் இருக்கிறது.

யுனிடெக்சைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுப்பது தாமதமாகும்போது, கண்காணிப்பாளருடன் பெண் தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்வார்கள். அதன்பின் வேலைநிறுத்தம் செய்வார்கள். அதன்பின் சம்பளம் வரும். ஆனால், கையால் எழுதப்பட்ட கவரின் சம்பளம் இருக்கும். அச்சிடப்பட்ட சம்பள விவரத்துடன் கூடிய கவரில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அச்சிடப்பட்ட சம்பள விவரம் உள்ள கவர் அளிக்கப்பட்ட காலத்தில் கூட ‘பணியில் சேர்ந்த நாள்‘ என்ற விவரம் பூர்த்தி செய்யப்பட்டிருக்காது. ஒவ்வொரு மாதமும் சண்டைபோட்டு சம்பளம் வாங்குவதா என்று யோசிக்கும் பெண்கள் வேலையைவிட்டுப் போய்விடுவார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 80 தொழிலாளர்கள் மட்டுமே மீதம் இருந்தனர்.

 

(தொழிலாளியின் சம்பள விவரம்- வேலையில் சேர்ந்த நாள் காலியாக விடப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்- படத்திற்கான குறிப்பு)

கம்பெனி மூடப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், தொழிலாளர்களுக்கான பாக்கிகள் கொடுக்கப்படும் என்று நிர்வாகிகள் உறுதிகொடுத்தனர். சில மாதங்கள் கழிந்த பின்னர், தொழிலாளர்களுக்கு செக்குகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவை பணமில்லை என்று திரும்பிவந்துவிட்டன. தொழிலாளர்கள் கார்மெண்ட் அன்ட் பேஷன் யூனியனைத் தொழிலாளர்கள் இந்த கட்டத்தில்தான் அணுகினர். முதலாளியான ராதாகிருஷ்ணன் திவாலாகிவிட்டார் என்பதையும், பல வங்கிகளுக்கு அவர் கோடிக் கணக்கில் பாக்கி வைத்திருப்பதாக வங்கிகள் சொல்வதையும் யூனியன் தெரிந்துகொண்டது. ஆலை மூடப்பட்ட நாள் வரை, ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் வேலை செய்த தொழிலாளர்களுக்கு இது புரியாத புதிராக இருந்தது. மிகவும் தவறான முறையில் நிர்வாகம் நடத்தப்பட்டிருக்கிறது. பணம் கைமாற்றப்பட்டிருக்கிறது. எந்த அளவு தவறு நடந்தது என்பது ஒரு நாளும் வெளிவராத மர்மம் ஆகிப் போகலாம்.

(ஆலை மூடப்பட்ட சில மாதங்கள் கழித்து 2016 மேயில் அளிக்கப்பட்டு திரும்பி வந்த காசோலைகள்- படத்துக்கான குறிப்பு)

கொடுமைக்கு மேல் கொடுமை என்பது இதற்கப்புறம் நடந்தது. யூனியன் தொழிலாளர் துறையிடம் புகார் செய்தபோது அளித்த 90 தொழிலாளர்களின் பட்டியலை நிர்வாகம் ஒப்புக்கொள்ள மறுத்து, அவர்களெல்லாம் தங்களின் தொழிலாளர்கள் அல்ல என்று வாதிட்டது. கடந்த ஆண்டு நடந்த சமரசப் பேச்சுவார்த்தையின் போது, ஆலை மூடப்பட்டபோது 30 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர் என்று நிர்வாகம் சொன்னது. சம்பளம் அளிப்பதை நிர்வாகம் பதிவு செய்வதில்லை என்பதால், வேலை செய்தவர்கள் யார் என்ற விவரத்தை அழித்து விட்டிருந்தது. பேச்சுவார்த்தை எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்று GAFWUவின் தலைவர் சுஜாதா மோடி சொன்னார். கொடுக்கப்படாத சம்பளத்தைக் கொடுப்பது, பணிக்கொடை, மற்றும் பிற பாக்கிகளுக்காக தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொழிலாளர் உதவி ஆணையரைச் சந்தித்த அந்த நாளில் அனைத்துத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை அவரிடம் அளித்தனர்.

தொழிலாளர் துறையின் அதிகாரிகளைக் கையாளுவது என்ற நடவடிக்கையில் யூனியன் ஈடுபட்டிருக்க, தொழிலாளர்களைப் பொறுத்தவரை இது வெகு நீண்ட போராட்டமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழிலாளர்களில் பலர் வேறு ஆலைகளில் வேலை செய்யப்போய்விட்டனர். இனி, மிகவும் கவனமாக இருப்போம் என்று உறுதியாகச் சொல்கின்றனர். இருந்தாலும், பெண் தொழிலாளர்களின் பெரும்பகுதி, ஆண் தொழிலாளர்களை விட அதிகமான எண்ணிக்கையில், சங்கங்களுக்கு வெளியே இருக்கிறார்கள். தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். பெண்களை அமைப்பாக்குவது சாத்தியமில்லை என்ற கருத்தும், அவர்களால் போராட்டம் நடத்த முடியாது என்ற கருத்தும் வெளியே சொல்லாத கருத்தாகப் பல சங்கங்களின் மனதில் இருக்கிறது. ஆலை மூடப்படும்போது சங்கங்கள் உள்ளே வருவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. சம்பளம், பணி நிலைமைகள் போன்ற விஷயங்களைச் சங்கங்கள் எடுப்பதேயில்லை. ஆனால், பெண் தொழிலாளர்களின் பலப் பிரச்சனைகளை மெதுவாக, ஆனால், விடாப்பிடியாக தொழிலாளர் துறையின் கவனத்துக்கு, அதன் மூலம் அரசு யந்திரத்தின் கவனத்துக்கு GAFWU கொண்டுவந்துகொண்டிருக்கிறது. தங்களின் சின்னஞ்சிறு வெற்றிகளைப் பயன்படுத்தி தங்களின் அமைப்பாக்கும் முயற்சியை விரிவாக்குவதாக அந்த யூனியன் சொல்கிறது.

This entry was posted in Garment Industry, Labour Laws, News, Women Workers, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.