20சத போனஸ் கோரியதற்காக ஆயுத்த ஆடைத் (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்கள் தற்காலிக பணிநீக்கம்

செலிபிரிட்டி பேஷன்ஸ் தொழிற்சாலை தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. அக்டோபர் 14 அன்று இத்தொழிற்சாலை நிர்வாகம் 14 தொழிலாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக, தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்காகவும், குறைந்த பட்ச ஊதியம், இஎஸ்ஐ உள்ளிட்ட துறை சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்(GAFWU) தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். குறைந்த பட்ச ஊதியத்திற்கான உயர் நீதி மன்ற ஆணையின் படி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமும் அதற்கான அரியர்ஸ் தர வேண்டும் என செலிபிரிட்டி பேஷன்ஸ் நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை நிர்வாகம் ஏவி வருகிறது.

இத்தொழிற்சாலையில் கடந்த 10 வருடங்களாக பணிபுரியும் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் தோழர் எலிசபத்தை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. அக்டோபர் 13 அன்று, எலிசபத்தை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும், 20சத போனஸ் கோரியும் தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலின் முன்னர் திடீர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டதற்கு பதிலாக, 14 தொழிலாளர்களை நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது.

Celebrity Fashion Workers in Protest at MPEZ

செலிபிரிட்டி பேஷன்ஸ் பெரிய கார்மென்ட்ஸ் தொழிற்சாலையாகும். இங்கு 2000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் டிம்பர்லேண்ட், எல்எல் பீன் போன்ற புகழ் வாய்ந்த அமெரிக்கன் பிராண்டுகளுக்கும், இந்தியன் டெரயின் போன்ற இந்திய பிராண்டுகளுக்கும்; ஆடைகள் தயாரிக்கின்றனர். 2008ல் கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் நிறுவுவதற்கு இத்தொழிலாளர்களே முக்கிய பங்கு வகித்தனர். குறைந்த ஊதியம், கட்டாய ஓவர்டைம் பணி, விடுமுறை மறுப்பு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்த்து இத்தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். புயுகுறுர் தொழிற்சங்கத்தில் உள்ள பல தொழிலாளர் பிரதிநிதிகள் இத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். அவர்கள் இப்பகுதிகளில் உள்ள கார்மென்ட்ஸ் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். தொழிற்சாலையில் தொழிலாளர் தலைமையை வளர்த்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இத்தொழிலாளர்கள் நிர்வாகத்துடன் மோதி வருவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

GAFWUதொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் சுஜாதா மோடியின் கூற்றுப்படி, நிர்வாகத்தின் சமீபத்திய தாக்குதல் ஜுலையில் ஆரம்பித்தது. பல வருடங்களாக நீதிமன்ற தடையுத்தரவு மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்ய கார்மென்ட்ஸ் தொழிற்சாலை நிர்வாகங்கள் தடை செய்து வந்தனர். 2014 டிசம்பர் மாதத்தில் குறைந்த பட்ச ஊதிய உயர்வாக ரூ3000 அறிவித்த உயர்நீதி மன்ற உத்தரவை அப்போது இருந்து நிலுவைத் தொகையோடு கார்மென்ட்ஸ் தொழிற்சாலைகள் கொடுக்க வேண்டும் என மறுஆய்வு நீதிமன்ற தீர்ப்பு ஆணையிட்டது. செலிபிரிட்டி பேஷன்ஸ் நிர்வாகம் நிலுவைத் தொகையை செலுத்தியது ஆனால் குறைந்த பட்ச ஊதியத்தை கொடுக்கவில்லை. மாறாக போக்குவரத்து செலவு எனத் தொழிலாளர்களின் ஊதியத்தை பிடித்து குறைந்த பட்ச ஊதியத்திற்கு குறைவாக கொடுத்து வருகிறது. இது குறித்து தொழிலாளர் துறை துணை ஆணையருக்கு தொழிலாளர்கள் புகார் கொடுத்துள்ளனர் ஆனால் இது வரை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என சுஜாதா கூறுகிறார்.

தொழிற்சங்கம் ஆரம்பித்ததில் இருந்து நிர்வாகம் தன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர் எலிசபத் ராணி கூறுகிறார். அப்போது மேலாளர் ஒருவர் உடல்ரீதியாக தாக்கினார் என்றும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன மேலும்  துன்புறுத்தல்கள் நடைபெற்றன என அவர் கூறினார். ஆனால் தொழிலாளர்கள் அதை எதிர் கொண்டு தொழிற்சங்கப் பணியை செய்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் நிர்வாகம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு போக்குவரத்தை நிறுத்தியது. அதனால் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எலிசபத் இத்தொழிலாளர்கள் ஒருங்கிணைத்து தொழிலாளர் துறை முன் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தார்

செப்டம்பர் மாதத்தில் எலிசபத்திற்கு கண்புறை சிகிச்சை நடந்தது. 3 வார மருத்துவ விடுமுறைக்கு பின்னர் அவர் மீண்டும் பணிக்கு சென்றார். ‘ஆகஸ்ட் 16 அன்று நான் பணிக்கு திரும்பிய போது என்னை சிவப்பு இயந்திரத்தில் பணி செய்ய சொன்னார்கள். சில சமயம், அவர்கள் என்னை மடிக்கும் செக்ஷனில் பேன்டுகளுக்கு பெல்ட் போட சொல்வார்கள். எனக்கு முடியும் அளவில் எந்த பணியை கொடுத்தாலும் நான் செய்வேன். ஆனால் சூப்பர்வைசர் வேலை உற்பத்தியை அதிகப்படுத்துமாறு துன்புறுத்தி வந்தார். ஆகஸ்ட் 31 அன்று என்னை அவர் சத்தம் போட்டார். நான் என் தரப்பு வாதத்தை கூறினேன். நிர்வாக மேலதிகாரியும் வந்து அனைவர் முன்பு என்னை திட்டினார். பின்னர் அவர்கள் என்னை மேலாளர் அலுவலகத்திற்கு கூப்பிட்டு மேலதிகாரிகளிடம் நான் தரக்குறைவாக நடந்து  கொண்டேன் என்று குற்றம் சாட்டினர்’ என அவர் கூறினார். இதனால் அவர் 2 நாள் விடுமுறை எடுத்துவிட்டு செப்டம்பர் 4 அன்று மீண்டும் பணிக்கு திரும்பிய போது நிர்வாகம் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.

தொழிற்சங்கம் இது குறித்து நடவடிக்கை எடுத்து வந்த வேலையில், இவ்வருடத்திற்கு போனஸ் 8.33சதமே நிர்வாகம் கொடுக்க முடிவடுத்துள்ளதாக தொழிலாளர்கள் அறிந்தனர். நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் வங்கியில் பணம் செலுத்த நிர்வாகம் திட்டமிட்டதாக GAFWU தொழிற்சங்க துணை தலைவர் மற்றும் ஆப்பரேட்டர் தோழர் தில்லி கூறுகிறார். கடந்த வருடமும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நிலுவைத் தொகையை காரணம் காட்டி நிர்வாகம் குறைந்த பட்ச போனஸ் கொடுத்தாக அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை தொழிலாளர்கள் மௌனம் காக்காமல் அக்டோபர் முதல் வாரத்தில் துண்டறிக்கை விநியோகித்தனர்;. மேலும் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தக் கோரினர். நிதிநிலைமை சரியில்லை என்று நிர்வாகம் கூறியுள்ளது. நிர்வாகம் நிதி குறித்து எந்த தகவல்களையும் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் நிர்வாகம் நஷ்டத்தில் உள்ளதா என்பது தங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் எங்கள் உரிமையை தான் கோருகிறோம் என்றும் தில்லி கூறினார்.

அக்டோபர் 5 அன்று இன்னொரு தொழிற்சங்க உறுப்பினர் தோழர் கேசவன் எனும் தொழிலாளரையும் நிர்வாகம் மிரட்டியுள்ளது. ‘துண்டறிக்கைகளை கொடுப்பதற்காக நாங்கள் மெப்ஸ் கேட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். மனித வள மேலாளர் மற்றும் அடையாளம் தெரியாத மனிதர் ஒருவர் வந்து எங்களை உற்றுப் பார்த்;தனர். பின்னர் அந்த மனிதர் வந்து, நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொலை செய்யவும் தயாராக இருப்பதாக மிரட்டினார். நாங்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் பதிவு செய்தோம். இதனால் மேலாளர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க நேர்ந்தது. மேலும் எந்த தொழிற்சங்க உறுப்பினரும் தாக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்’ என கேசவன் கூறினார்.

அடுத்த நாள் தொழிற்சங்க உறுப்பினர்கள் துண்டறிக்கையை கொடுத்தனர். அதனால் தன்னை ஒரு காற்றாடி, விளக்கு எதுவும் இல்லாத ஒரு அறையில் அடைத்து வைத்து மன்னிப்பு கடிதம் எழுத வைத்தனர் என ஒரு பெண் தொழிலாளர் கூறினார். ‘என்னால் மூச்சு விடக் கூட முடியவில்லை; என்னை கழிப்பறை செல்லக் கூட அனுமதிக்கவில்லை’ என அவர் கூறினார். இது குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொழிலாளர் துறைக்கு புகார் கொடுத்த பின்னர், நிர்வாகம் அவரை மீண்டும் பணிக்கு அனுப்பியுள்ளனர். ‘நாங்கள் என்ன கொத்தடிமைகளா? எங்களுடைய ஊதியத்தை அவர்கள் ஏற்றவில்லை. இன்றைய விலைவாசியில் 20சத போனஸ் எங்களுடைய வாழ்க்கைக்கு முக்கியம்’ என்று அவர் கூறினார்.

Pamphlet

20சத போனஸ் கோரிக்கையை தொழிற்சாலையில் அனைத்து தொழிலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

அக்டோபர் 13 அன்று தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முற்பட்ட போது தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலிற்கு வந்த உடனேயே தொழிலாளர்களை கண்காணிப்பாளர்களும், செக்யூரிட்டி தொழிலாளர்களும் சுற்றி வளைத்து உள்ளே கூட்டி சென்றனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நிர்வாகம் தொழிற்சாலையை மூடி விடும் என்று கண்காணிப்பாளர்கள் தொழிலாளர்களை மிரட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சுமார் 30 தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து தொழிற்சாலை முன் போராட்டம் நடத்தியுள்ளனர். மெப்ஸ் தொழிற்சாலைகளில் போராட்டம் செய்ய அனுமதி இல்லை என்று மெப்ஸ் செக்யூரிட்டி தொழிலாளர்களும் போராடும் தொழிலாளர்களை துன்புறுத்தியுள்ளனர்.

அடுத்த நாள், தொழிற்சாலைக்குள் போராட்டத்தை தொடர முற்பட்ட போது, தொழிலாளர்களை நிர்வாகம் உள்ளே விட மறுத்து தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ய தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து வருவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சங்கமும் தொழிலாளர்களும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.

This entry was posted in Garment Industry, News, Women Workers, Workers Struggles and tagged , , , , . Bookmark the permalink.