கார்மென்ட்ஸ் தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான சட்ட வழிகள் குறித்த கருத்தரங்கம்

தொழிலாளர்கள் குறைகளை தீர்ப்பதற்கான அமைப்புகளை கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள்
அணுகுவதற்கான வழிகள், தடைகள் மற்றும் சவால்கள் குறித்த கருத்தரங்கத்தை பெண்
தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். உலக தொழிலாளர் அமைப்பு(ஐஎல்ஓ)வுடன்
ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கம் ஜனவரி 20 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில்
தொழிலாளர்கள், அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் வழக்குறைஞர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்ய
கோரிய சட்டரீதியான போராட்டத்தை தொழிலாளர்கள் வென்றிருந்தனர். தொழிற்சங்கத்தில.
இணைந்து குறைந்த பட்ச ஊதியம் மற்றும் பல்வேறு உரிமைகளை கோரியதற்காகநிர்வாகங்கள்
தொழிலாளர்கள் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்காண்டு வருகின்றன.
குறைந்தபட்ச ஊதியத்தை கொடுக்க மறுத்தல், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்தல்
ஆகியவற்றை நிர்வாகங்கள் மேற்கொள்கின்றன. தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை
எதிர்த்து சட்டரீதியாக தொழிலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், வழக்குகள் கால
தாமதமாக தீர்வுகளை நோக்கி நகர்கின்றன. இதனால் தொழிலாளர்கள் சட்டரீதியாக
வழக்குகளை எதிர்கொள்வதற்கு சட்ட ஆதரவு குழு அமைப்பது தேவையாகி வருகின்றது.

ஆனால் சட்டரீதியான யுக்தி மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாகி விடாது.
தொழிலாளர்களின் பிரச்சனைகளை களைவதில் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை குறித்து
கூட்டத்தில் பேசிய பல வழக்குறைஞர்கள் கருத்துரைத்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை
தீர்ப்பதற்கு, சட்டரீதியான யுக்தி பிரதானமாக இருக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டங்கள் மூலமே இதற்கான தீர்வு என்பதை அவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.

கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரி
சட்டரீதியான போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக 2014ல் குறைந்தபட்ச ஊதியத்தை
உயர்த்தி அரசு ஆணையிட்டது. ஆனால் குறைந்த பட்ச ஊதியத்தை கொடுக்காமல் இருப்பதற்கு
நிர்வாகங்கள் பல யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக முன்னர்
தொழிலாளர்களுக்கு இலவசமாக அளித்த போக்குவரத்திற்காக இப்போது ஊதியத்தில் இருந்து
கட்டணத்தை குறைத்து கொள்கின்றனர். இது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை
தொழிற்சங்கம் பதிவு செய்தும், தொழிலாளர் துறை கண்டு கொள்வதில்லை என கார்மென்ட்ஸ்
மற்றும் பேஷன் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி தோழர் சுஜாதா கூறினார். தொழிலாளர்
துறையை பொருத்தவரை, இது பணி நிலைமைகளில் மாற்றம் இல்லை என்றும், அதனால்
தொழிற்தாவா சட்டம் பகுதி 9ஏ வின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற நிலைபாட்டை
அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்த நிலையில் குறைந்த பட்ச ஊதியம்
முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி
செய்வதற்கு கண்காணிப்பு குழுவை அமைக்க தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் கோரியது.
தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளையும் களைவதற்கான அமைப்பாக அது இருக்க
வேண்டும் என தொழிற்சங்கம் கோருகிறது. ஆனால் இது தேவையில்லை என்றும் ஏற்கனவே
இருக்கும் அரசு அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் சேர்ந்து குறைந்த பட்ச ஊதியத்தை
செயல்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. கண்காணிப்பு குழுவிற்கான
கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று கருத்தரங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறைந்த பட்ச ஊதியத்திற்கான 2014 அரசாணையை கொண்டு வருவதற்கான சட்டரீதியான
போராட்டத்தின் அனுபவத்தை வழக்குறைஞர் செல்வி பகிர்ந்தார். குறைந்த பட்ச ஊதிய
சட்டத்தின் கீழ் 5 வருடத்திற்கு ஒரு முறை குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஆனால்
கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் 15 வருடங்களுக்கு மேலாக
உயர்த்தப்படவில்லை. ஒவ்வொரு முறையும் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தும் சமயத்தில்
நிறுவனங்கள் தடையுத்தரவு வாங்கி வந்தனர். தொழிலாளர்களின் உரிமைகளை மறு;க்கும் சட்ட
நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு எளிதாக மேற்கொள்கின்றன என்பதை செல்வி
சுட்டிக்காட்டினார். உதாரணமாக தற்போது தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை
நீதிமன்றங்கள் தடைசெய்வதை அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சட்ட வழக்குகளை
வெல்வதற்கு வழக்குறைஞர்கள் தங்களுக்கு சாதகமான நீதிபதிகளின் கீழ் வழக்கை
மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செலிபிரிட்டி தொழிற்சாலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் அங்கு தாங்கள் சந்திக்கும்
பிரச்சனைகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். தொழிற்சங்கங்களில் இணையும்
தொழிலாளர்களை நிர்வாகம் பல்வேறு வகைகளில் பழிவாங்கி வருகிறது. அதே சமயம்,
தொழிற்சங்கத்தில் சேர்ந்துள்ளதால் தங்களுக்கு பல்வேறு உரிமைகளுக்கு போராட முடிந்தது
என்பதை தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக இஎஸ்ஐ, பிஎஃப், குறைந்த பட்ச ஊதியம்
ஆகியவை குறித்து தாங்கள் தொழிற்சங்கத்தில் சேர்ந்த பின்னரே அறிந்ததாக அவர்கள் கூறினர்.
செலிபிரிட்டி பேஷன்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளர் நோய்வுற்ற போது அவருக்கு
விடுமுறை ஊதியம் மறுக்கப்பட்டது. தொழிற்சங்கப் பிரதிநிதி தில்லி என்பவரின் குறுக்கீட்டால்,
நிர்வாகம் விடுமுறையும் மருத்துவ உதவியும் செய்ய நேர்ந்தது. தொழிற்சாலையில் உள்ள
உற்பத்தி இலக்குகள் குறித்தும் இதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் தொழிலாளர்கள் பகிர்ந்து
கெண்டனர். பட்டன் இயந்திரத்தில் ஒரு தொழிலாளர் காயமுற்ற போது நிர்வாகம் எந்த உதவியும்
செய்யவில்லை என ஒரு தொழிலாளர் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் போனஸ் கோரி போராட்டம் நடத்தியதற்காக 14 தொழிலாளர்கள்
தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இக்கருத்தரங்கத்திற்கு வந்திருந்தனர்(மற்ற
தொழிலாளர்களால் இம்மாதிரியான கருத்தரங்கத்திற்கு வரமுடிவதில்லை). கார்மென்ட்ஸ் மற்றும்
பேஷன் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த இத்தொழிலாளர்களுக்கு தங்கள் பணிநீக்கம் குறித்த
விசாரணை முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு
உள்விசாரணைக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களின் சட்ட வழக்கை மேற்கொள்ள
வழக்குறைஞர்கள் முன்வந்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை கோருவதில் சட்டத்தில் உள்ள சிக்கல்களை குறித்து
வழக்குறைஞர் கீதா விவரித்தார். ஒரு தொழிலாளர் தன் பணியை இழக்கும் பொருட்டு,
முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது, அவர் சமரசப் பேச்சுவார்த்தையை தான்
துவக்க முடியும். தொழிலாளர்கள் தங்கள் குறைகளை தீர்க்க நீதிமன்றத்திற்கு செல்லும்
உரிமையை கோர வேண்டும் என அவர் கூறினார்.

செலிபிரிட்டி பேஷன்ஸ் போன்ற தொழிலாளர்கள் சந்திக்கும் உள்விசாரணை சிக்கல்களையும்
அவர் விவரித்தார். உள்விசாரணைக்கு தொழிலாளர்கள் தங்கள் பிரதிநிதியாக வழக்குறைஞரை அழைக்க முடியாது. ஆனால் அங்கு அவர் கூறும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக
நிர்வாகம் பிரயோகிக்கலாம். உள்விசாரணை குறித்து தொழிலாளர்களுக்கு எந்த பயிற்சியும்
அளிக்கப்படுவதில்லை. மேலும், நிர்வாகம் தொழிலாளர்களிடம் இருந்து பல விவரங்களை
மறைக்கலாம். உதாரணமாக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு குற்றப்பத்திரிக்கையை கொடுக்க
வேண்டுமே தவிர புகார் மனுவை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால்
தொழிலாளர்களுக்கு அடிப்படை குற்றச்சாட்டு என்ன என்று தெரியாது. தனக்கு எதிராக
கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என்றால என்ன செய்ய முடியும் என்று தொழிலாளர்
தோழர் எலிசபத் ராணி கோருகையில், உள்விசாரணை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்
நிலையில் தொழிலாளர்கள் அங்கு நியாயம் தேடக்கூடாது என வழக்குறைஞர் கீதா கூறினார்.
அவர்கள் பணிநீக்கத்தை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நெடிய வழக்கு மூலமே இதற்கான தீர்வு
காண முடியும் என அவர் கருத்துரைத்தார்.

முன்னர் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போது, தொழிற்சங்கம் அவர்களுக்கு ஒரு
சிறிய நிதி உதவி அளிக்க முடிந்தது என்றும் இப்போது தொழிற்சங்கங்கள்
நிதிப்பற்றாக்குறையால் இவற்றை செய்ய முடியவில்லை என கீதா கூறினார். சட்டவிரோதமான
பணிநீக்கம் குறித்த வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால்
இந்த சமயத்தில் தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்றால், நிர்வாகம் அதை தனக்கு
சாதகமாக பயன்படுத்தும். இதனால் சட்டரீதியான நடவடிக்கைகளை தொழிலாளர்கள் நம்பக்
கூடாது என அவர் கருத்துரைத்தார். போராட்டங்கள் வாயிலாகவே தொழிலாளர்கள் தங்கள்
உரிமைகளை வெல்லமுடியும் என அவர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் வேலை நிறுத்தம்
செய்வதற்காக தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், இதனால் இம்மாதிரியான
நடவடிக்கைகளில் ஈடுபட தொழிலாளர்கள் தயங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சாலையில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக உள்ள சட்டரீதியான
பாதுகாப்புகள் குறித்து வழக்குறைஞர் பூங்குழலி விவரித்தார். பாலியல் துன்புறுத்தல் நடந்து 90
நாட்களுக்குள் தொழிலாளர் புகார் பதிவு செய்யவேண்டும். பின்னர் இதற்கான விதிமுறைகளின்
படி வழக்கு நடப்பதை அவர் உறுதி செய்யவேண்டும். பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளியே
கூறினால் தன்மீதே பழிசுமத்தப்படும் அல்லது குடும்ப வற்புறுத்தலால் பணியை விட்டு செல்ல
நேரிடும் என்ற பயத்தினால் பல பெண்கள் புகார் கொடுப்பதில்லை என பெண் தொழிலாளர்
சங்கப் பிரதிநிதி தோழர் சுமதி குறிப்பிட்டார்.

கார்மென்ட்ஸ் தொழிலாளர்களின் பிரச்சனைகளை களைவதற்கு ஊடகங்களின் வழியாக
பிரச்சனைகளை வெளியே கொண்டு செல்லவும், இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்களான
சர்வதேச பிராண்டுகளின் மேல் அழுத்தம் கொடுக்கவும் கருத்தரங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

This entry was posted in Garment Industry, News, Women Workers, தமிழ் and tagged , , . Bookmark the permalink.